அத்தியாயம்: 1, பாடம்: 84, ஹதீஸ் எண்: 287

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏وَاتَّفَقَا فِي سِيَاقِ الْحَدِيثِ إِلَّا مَا يَزِيدُ أَحَدُهُمَا مِنْ الْحَرْفِ بَعْدَ الْحَرْفِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بِشْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو حَيَّانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي زُرْعَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏أُتِيَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمًا بِلَحْمٍ فَرُفِعَ إِلَيْهِ الذِّرَاعُ وَكَانَتْ تُعْجِبُهُ فَنَهَسَ مِنْهَا نَهْسَةً فَقَالَ ‏ ‏أَنَا سَيِّدُ النَّاسِ يَوْمَ الْقِيَامَةِ وَهَلْ تَدْرُونَ بِمَ ذَاكَ يَجْمَعُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ فِي ‏ ‏صَعِيدٍ ‏ ‏وَاحِدٍ فَيُسْمِعُهُمْ الدَّاعِي ‏ ‏وَيَنْفُذُهُمْ الْبَصَرُ ‏ ‏وَتَدْنُو الشَّمْسُ فَيَبْلُغُ النَّاسَ مِنْ الْغَمِّ ‏ ‏وَالْكَرْبِ ‏ ‏مَا لَا يُطِيقُونَ وَمَا لَا يَحْتَمِلُونَ فَيَقُولُ بَعْضُ النَّاسِ لِبَعْضٍ أَلَا تَرَوْنَ مَا أَنْتُمْ فِيهِ أَلَا تَرَوْنَ مَا قَدْ بَلَغَكُمْ أَلَا تَنْظُرُونَ مَنْ يَشْفَعُ لَكُمْ إِلَى رَبِّكُمْ فَيَقُولُ بَعْضُ النَّاسِ لِبَعْضٍ ائْتُوا ‏ ‏آدَمَ ‏ ‏فَيَأْتُونَ ‏ ‏آدَمَ ‏ ‏فَيَقُولُونَ يَا ‏ ‏آدَمُ ‏ ‏أَنْتَ أَبُو الْبَشَرِ خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ وَنَفَخَ فِيكَ مِنْ رُوحِهِ وَأَمَرَ الْمَلَائِكَةَ فَسَجَدُوا لَكَ اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلَا ‏ ‏تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ أَلَا ‏ ‏تَرَى إِلَى مَا قَدْ بَلَغَنَا فَيَقُولُ ‏ ‏آدَمُ ‏ ‏إِنَّ رَبِّي غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ وَإِنَّهُ نَهَانِي عَنْ الشَّجَرَةِ فَعَصَيْتُهُ نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى غَيْرِي اذْهَبُوا إِلَى ‏ ‏نُوحٍ ‏ ‏فَيَأْتُونَ ‏ ‏نُوحًا ‏ ‏فَيَقُولُونَ يَا ‏ ‏نُوحُ ‏ ‏أَنْتَ أَوَّلُ الرُّسُلِ إِلَى الْأَرْضِ وَسَمَّاكَ اللَّهُ عَبْدًا شَكُورًا اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلَا ‏ ‏تَرَى مَا نَحْنُ فِيهِ أَلَا ‏ ‏تَرَى مَا قَدْ بَلَغَنَا فَيَقُولُ لَهُمْ إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ وَإِنَّهُ قَدْ كَانَتْ لِي دَعْوَةٌ دَعَوْتُ بِهَا عَلَى قَوْمِي نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَيَأْتُونَ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏فَيَقُولُونَ أَنْتَ نَبِيُّ اللَّهِ ‏ ‏وَخَلِيلُهُ ‏ ‏مِنْ أَهْلِ الْأَرْضِ اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلَا ‏ ‏تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ أَلَا ‏ ‏تَرَى إِلَى مَا قَدْ بَلَغَنَا فَيَقُولُ لَهُمْ ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَا يَغْضَبُ بَعْدَهُ مِثْلَهُ وَذَكَرَ كَذَبَاتِهِ نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى غَيْرِي اذْهَبُوا إِلَى ‏ ‏مُوسَى ‏ ‏فَيَأْتُونَ ‏ ‏مُوسَى ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَيَقُولُونَ يَا ‏ ‏مُوسَى ‏ ‏أَنْتَ رَسُولُ اللَّهِ فَضَّلَكَ اللَّهُ بِرِسَالَاتِهِ وَبِتَكْلِيمِهِ عَلَى النَّاسِ اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلَا ‏ ‏تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ أَلَا ‏ ‏تَرَى مَا قَدْ بَلَغَنَا فَيَقُولُ لَهُمْ ‏ ‏مُوسَى ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ وَإِنِّي قَتَلْتُ نَفْسًا لَمْ أُومَرْ بِقَتْلِهَا نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى ‏ ‏عِيسَى ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَيَأْتُونَ ‏ ‏عِيسَى ‏ ‏فَيَقُولُونَ يَا ‏ ‏عِيسَى ‏ ‏أَنْتَ رَسُولُ اللَّهِ وَكَلَّمْتَ النَّاسَ فِي الْمَهْدِ وَكَلِمَةٌ مِنْهُ أَلْقَاهَا إِلَى ‏ ‏مَرْيَمَ ‏ ‏وَرُوحٌ مِنْهُ فَاشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلَا ‏ ‏تَرَى مَا نَحْنُ فِيهِ أَلَا ‏ ‏تَرَى مَا قَدْ بَلَغَنَا فَيَقُولُ لَهُمْ ‏ ‏عِيسَى ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ وَلَمْ يَذْكُرْ لَهُ ذَنْبًا نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى غَيْرِي اذْهَبُوا إِلَى ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَيَأْتُونِّي فَيَقُولُونَ يَا ‏ ‏مُحَمَّدُ ‏ ‏أَنْتَ رَسُولُ اللَّهِ وَخَاتَمُ الْأَنْبِيَاءِ وَغَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلَا ‏ ‏تَرَى مَا نَحْنُ فِيهِ أَلَا ‏ ‏تَرَى مَا قَدْ بَلَغَنَا فَأَنْطَلِقُ فَآتِي تَحْتَ الْعَرْشِ فَأَقَعُ سَاجِدًا لِرَبِّي ثُمَّ يَفْتَحُ اللَّهُ عَلَيَّ وَيُلْهِمُنِي مِنْ مَحَامِدِهِ وَحُسْنِ الثَّنَاءِ عَلَيْهِ شَيْئًا لَمْ يَفْتَحْهُ لِأَحَدٍ قَبْلِي ثُمَّ يُقَالُ يَا ‏ ‏مُحَمَّدُ ‏ ‏ارْفَعْ رَأْسَكَ سَلْ ‏ ‏تُعْطَهْ اشْفَعْ تُشَفَّعْ فَأَرْفَعُ رَأْسِي فَأَقُولُ يَا رَبِّ أُمَّتِي أُمَّتِي فَيُقَالُ يَا ‏ ‏مُحَمَّدُ ‏ ‏أَدْخِلْ الْجَنَّةَ مِنْ أُمَّتِكَ مَنْ لَا حِسَابَ عَلَيْهِ مِنْ الْبَابِ الْأَيْمَنِ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ وَهُمْ شُرَكَاءُ النَّاسِ فِيمَا سِوَى ذَلِكَ مِنْ الْأَبْوَابِ وَالَّذِي نَفْسُ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏بِيَدِهِ إِنَّ مَا بَيْنَ الْمِصْرَاعَيْنِ مِنْ ‏ ‏مَصَارِيعِ ‏ ‏الْجَنَّةِ لَكَمَا بَيْنَ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَهَجَرٍ ‏ ‏أَوْ كَمَا بَيْنَ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَبُصْرَى ‏
‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي زُرْعَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏وُضِعَتْ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَصْعَةٌ مِنْ ثَرِيدٍ وَلَحْمٍ فَتَنَاوَلَ الذِّرَاعَ وَكَانَتْ أَحَبَّ الشَّاةِ إِلَيْهِ فَنَهَسَ نَهْسَةً فَقَالَ أَنَا سَيِّدُ النَّاسِ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ نَهَسَ أُخْرَى فَقَالَ أَنَا سَيِّدُ النَّاسِ يَوْمَ الْقِيَامَةِ فَلَمَّا رَأَى أَصْحَابَهُ لَا يَسْأَلُونَهُ قَالَ أَلَا تَقُولُونَ ‏ ‏كَيْفَهْ قَالُوا ‏ ‏كَيْفَهْ يَا رَسُولَ اللَّهِ قَالَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ وَسَاقَ الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ ‏ ‏أَبِي حَيَّانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي زُرْعَةَ ‏ ‏وَزَادَ فِي قِصَّةِ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏فَقَالَ وَذَكَرَ قَوْلَهُ فِي الْكَوْكَبِ ‏
‏هَذَا رَبِّي ‏ و قَوْله ‏ ‏لِآلِهَتِهِمْ ‏بَلْ فَعَلَهُ كَبِيرُهُمْ هَذَا ‏ و قَوْله ‏‏إِنِّي سَقِيمٌ ‏

‏قَالَ وَالَّذِي نَفْسُ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏بِيَدِهِ إِنَّ مَا بَيْنَ الْمِصْرَاعَيْنِ مِنْ مَصَارِيعِ الْجَنَّةِ إِلَى عِضَادَتَيْ الْبَابِ لَكَمَا بَيْنَ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَهَجَرٍ ‏ ‏أَوْ ‏ ‏هَجَرٍ ‏ ‏وَمَكَّةَ ‏ ‏قَالَ لَا أَدْرِي أَيَّ ذَلِكَ قَالَ ‏

ஒருநாள் (விருந்தொன்றில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைச்சி பரிமாறப்பட்டது. அப்போது அவர்களுக்கு மிகவும் விருப்பமான முன்கால் சப்பை ஒன்று அவர்களிடம் வழங்கப்பட்டது. அவர்கள் தம் பற்களால் கடித்து, அதிலிருந்து சிறிது உண்டார்கள். பிறகு, “நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆக இருப்பேன். அது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா? (அந்நாளில்) அல்லாஹ் (மனிதர்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் ஒன்று திரட்டுவான். எவரேனும் அவர்களை அழைப்பாராயின் அதை அவர்கள் செவியேற்க முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை ஊடுருவிச் செல்லும். சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மனிதர்களால் தாங்கிக் கொள்ளவோ சகித்துக் கொள்ளவோ இயலாத துன்பங்களும் துயரங்களும் அவர்களுக்கு ஏற்படும். அப்போது, ‘நீங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையைப் பார்த்தீர்களா? உங்களுக்கு எத்தகைய (கடினமான) நிலை நேர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் உணரவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரைப்பவரை(த் தேடி)ப் பார்க்கமாட்டீர்களா?’ என்று தங்களுக்குள் கேட்டுக் கொள்வார்கள். அப்போது, ‘(ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள் (அவர் உங்களுக்காகப் பரிந்து பேசக்கூடும்)’ என்று சிலர் கூறுவர்.

ஆகவே, மக்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, ‘ஆதமே! நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள்; அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்தான். தன்(ன்னிலிருந்து) உயிரை உங்களுக்குள் அவன் ஊதினான். மேலும், தன் வானவர்களுக்கு அவன் கட்டளையிட, அவர்கள் உங்களுக்குச் சிரம் பணிந்தனர். (அத்தகைய சிறப்புகளுக்கு உரிய) நீங்கள் இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்கள் இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் பார்க்கின்றீர்களல்லவா?’ என்று கேட்பார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், ‘(நான் செய்த தவற்றின்காரணத்தால்) என் இறைவன் என்மீது இன்று (கடுங்)கோபம் கொண்டிருக்கிறான். இதற்குமுன் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போன்று ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (நான் நெருங்கக்கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னை அவன் தடுத்தான். நான் அவனுக்கு மாறு செய்தேன். (இந்நாளில்) என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது; என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) நூஹ் இடம் செல்லுங்கள்’ என்று சொல்லி விடுவார்கள்.

மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று, ‘நூஹே! நீங்கள் பூமி(யில் வசிப்பவர்களு)க்கு (அனுப்பப்பட்ட) முதலாவது இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள்ளான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் பார்க்கின்றீர்களல்லவா?’ என்று கேட்பார்கள். அதற்கு நூஹ் (அலை) அவர்கள், ‘என் இறைவன் இன்று (என்மீது) கடுங்கோபம் கொண்டுள்ளான். இதற்குமுன் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போன்று ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (எல்லா நபிமார்களுக்கும் இருப்பதைப் போன்று விசேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது. அதை நான் என் சமுதாயத்தாருக்கு எதிராகப் பயன்படுத்தி விட்டேன். நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது; நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறிவிடுவார்கள்.

அவ்வாறே மக்களும் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று, ‘நீங்கள் இறைத்தூதரும் பூமியில் வசித்தவர்களில் இறைவனின் உற்ற நண்பரும் ஆவீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரையுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் பார்க்கின்றீர்களல்லவா?’ என்று கேட்பார்கள். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘என் இறைவன் இன்று (என்மீது) கடுங்கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போன்று ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை’ என்று கூறிவிட்டுத் தாம் சொன்ன (மூன்று) பொய்களை நினைவு கூர்வார்கள். பிறகு, ‘நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது; நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. (ஆகவே) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத்தூதர்) மூஸாவிடம் செல்லுங்கள்’ என்று கூறி விடுவார்கள்.

மக்கள் மூஸா (அலை) அவர்களிடம் சென்று, ‘மூஸாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். தன்னுடைய தூதுத்துவத்தை வழங்கியும் உங்களிடம் உரையாடியும் மக்கள் அனைவரையும்விட உங்களை அல்லாஹ் மேன்மைபடுத்தியுள்ளான். (ஆகவே) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் பார்க்கின்றீர்களல்லவா?’ என்று கூறுவார்கள். அதற்கு மூஸா (அலை) அவர்கள், ‘என் இறைவன் இன்று (என்மீது) கடுங்கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போன்று ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்படாமலேயே நான் ஒரு மனித உயிரைக் கொலை செய்தேன். நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது; நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. (ஆகவே) நீங்கள் (இறைத்தூதர்) ஈஸா (அலை) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறிவிடுவார்கள்.

மக்கள் ஈஸா (அலை) அவர்களிடம் சென்று, ‘ஈஸாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். நீங்கள் (குழந்தையாய்) தொட்டிலில் இருந்தபோதே மக்களிடம் பேசினீர்கள். மர்யமிடம் இறைவன் இட்ட அவனது சொல்லும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். ஆகவே, எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் பார்க்கின்றீர்களல்லவா?’ என்று கேட்பார்கள். அதற்கு ஈஸா (அலை) அவர்கள், ‘என் இறைவன் இன்று (என்மீது) கடுங்கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போன்று ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை – (தாம் புரிந்துவிட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல் – நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது; நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள்; நீங்கள் (இறைத்தூதர்) முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறிவிடுவார்கள்.

அப்போது மக்கள் என்னிடம் வந்து, “முஹம்மதே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர்; இறைத்தூதர்களில் இறுதி முத்திரையுமாவீர்கள். உங்களது முன்-பின் பாவங்களை இறைவன் மன்னித்து விட்டான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்துள்ள (துன்ப) நிலையையும் நீங்கள் பார்க்கின்றீர்களல்லவா?’ என்று கூறுவர்.

அப்போது நான் இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே சென்று என் இறைவனுக்கு(ப் பணிந்து) சஜ்தாவில் விழுவேன். பிறகு இறைவன் எனக்கு முன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறை புகழ்மாலைகளையும் அழகிய போற்றல்களையும் எனக்கு உதிக்கச் செய்வான். பிறகு, ‘முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரையுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்’ என்று சொல்லப்படும். அப்போது நான் என் தலையை உயர்த்தி, ‘இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்!’ என்பேன். அதற்கு, ‘முஹம்மதே! சொர்க்கவாசல்களில் வலப்பக்க வாசல் வழியாக எந்தவிதக் கேள்விக் கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள்; அவர்கள் மற்ற வாசல்கள்வழியாக நுழையும் மக்களுடனும் இணைந்து நுழைந்து கொள்ளலாம்’ என்று கூறப்படும்.

முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசலின் இரு பக்கங்களுக்கிடையேயான தூரம் மக்காவிற்கும் (பஹ்ரைனிலுள்ள) ஹஜர் எனும் ஊருக்கும்/மக்காவுக்கும் (சிரியாவிலுள்ள) புஸ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ள தூரமாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரல்).

குறிப்பு:

இதே ஹதீஸ் உமாரதிப்னுல் கஃகாஃ (ரஹ்) வழி அறிவிப்பில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப் படுகிறது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தக்கடி (ஸரீத்) எனும் உணவும் (சமைக்கப்பட்ட) இறைச்சியும் ஒரு தட்டில் வைத்து வழங்கப்பட்டது. அப்போது அதிலிருந்து முன்கால் சப்பை ஒன்றை எடுத்துக் கடித்துச் சிறிது உண்டார்கள். ஆட்டிறைச்சிப் பகுதிகளில் அதுதான் அவர்களுக்கு விருப்பமான பகுதியாகும். பிறகு, “நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவனாக இருப்பேன்” என்று கூறினார்கள். பிறகு இன்னொரு முறை கடித்து விட்டு, “நான் மறுமை நாளில் மக்களின் தலைவனாக இருப்பேன்” என்று (மீண்டும்) கூறினார்கள். தம் தோழர்கள் அது குறித்து எவ்வாறு என்று வினவாததைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது எவ்வாறு என்று நீங்கள் வினவமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். உடனே தோழர்கள், “அது எவ்வாறு, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(மறுமை நாளில்) மக்கள் அகிலத்தின் அதிபதிக்கு முன்னால் நின்று கொண்டிருப்பார்கள் …” என்று தொடங்கி, மேற்கண்ட ஹதீஸிலுள்ளதைப் போன்றே கூறினார்கள்.

மேலும், இப்ராஹீம் (அலை) அவர்கள் (மக்களுக்காகத் தம்மால் பரிந்து பேச முடியாது என்று கூறிவிட்டு), தாம் (உலகில்) நட்சத்திரத்தைப் பார்த்து “இதுதான் என் இறைவன்” என்று கூறியது; அவரது ஊர்மக்களின் கடவுள் சிலைகளை (தாமே உடைத்துவிட்டு) “இவற்றில் பெரியதுதான் உடைத்தது” என்று கூறியது; (நோயில்லாமலேயே) “நான் நோயுற்றிருக்கிறேன்” என்று (மூன்று பொய்களைக்) கூறியது ஆகியவற்றை நினைவு கூர்ந்தார்கள் என்று இபுராஹீம் (அலை) பற்றியும்

“முஹம்மதின் உயிர் யார் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்க வாயிலின் இரு பக்கத் தூண்களுக்கிடையேயான தூரம் மக்காவிற்கும் (பஹ்ரைனிலுள்ள) ஹஜர் எனும் ஊருக்கும்/ஹஜர் எனும் ஊருக்கும் மக்காவிற்கும் இடையிலுள்ள தூரமாகும்” என்று சொர்க்கவாசலின் தூணைப் பற்றியும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அதில் “மக்கா-ஹஜர்” அல்லது “ஹஜர்-மக்கா” இரண்டில் எதை முன்-பின்னாகச் சொன்னார்கள் என்று எனக்குத் தெரியவில்லை என்று அறிவிப்பாளர் கூறுகிறார்.

Share this Hadith:

Leave a Comment