அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2117

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَفْلَحَ بْنِ حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُهِلِّينَ بِالْحَجِّ ‏ ‏فِي أَشْهُرِ الْحَجِّ وَفِي ‏ ‏حُرُمِ الْحَجِّ ‏ ‏وَلَيَالِي الْحَجِّ حَتَّى نَزَلْنَا ‏ ‏بِسَرِفَ ‏ ‏فَخَرَجَ إِلَى أَصْحَابِهِ فَقَالَ ‏ ‏مَنْ لَمْ يَكُنْ مَعَهُ مِنْكُمْ ‏ ‏هَدْيٌ ‏ ‏فَأَحَبَّ أَنْ يَجْعَلَهَا عُمْرَةً فَلْيَفْعَلْ وَمَنْ كَانَ مَعَهُ هَدْيٌ فَلَا فَمِنْهُمْ الْآخِذُ بِهَا وَالتَّارِكُ لَهَا مِمَّنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْيٌ فَأَمَّا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَكَانَ مَعَهُ ‏ ‏الْهَدْيُ ‏ ‏وَمَعَ رِجَالٍ مِنْ أَصْحَابِهِ لَهُمْ ‏ ‏قُوَّةٌ ‏ ‏فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَنَا أَبْكِي فَقَالَ مَا يُبْكِيكِ قُلْتُ سَمِعْتُ كَلَامَكَ مَعَ أَصْحَابِكَ فَسَمِعْتُ بِالْعُمْرَةِ قَالَ وَمَا لَكِ قُلْتُ لَا أُصَلِّي قَالَ فَلَا يَضُرُّكِ فَكُونِي فِي حَجِّكِ فَعَسَى اللَّهُ أَنْ ‏ ‏يَرْزُقَكِيهَا وَإِنَّمَا أَنْتِ مِنْ بَنَاتِ ‏ ‏آدَمَ ‏ ‏كَتَبَ اللَّهُ عَلَيْكِ مَا كَتَبَ عَلَيْهِنَّ قَالَتْ فَخَرَجْتُ فِي حَجَّتِي حَتَّى نَزَلْنَا ‏ ‏مِنًى ‏ ‏فَتَطَهَّرْتُ ثُمَّ طُفْنَا ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَنَزَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْمُحَصَّبَ ‏ ‏فَدَعَا ‏ ‏عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ ‏ ‏فَقَالَ اخْرُجْ بِأُخْتِكَ مِنْ الْحَرَمِ فَلْتُهِلَّ بِعُمْرَةٍ ثُمَّ لِتَطُفْ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏فَإِنِّي أَنْتَظِرُكُمَا هَا هُنَا قَالَتْ فَخَرَجْنَا فَأَهْلَلْتُ ثُمَّ طُفْتُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبِالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏فَجِئْنَا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ فِي مَنْزِلِهِ مِنْ جَوْفِ اللَّيْلِ فَقَالَ هَلْ فَرَغْتِ قُلْتُ نَعَمْ ‏ ‏فَآذَنَ ‏ ‏فِي أَصْحَابِهِ بِالرَّحِيلِ فَخَرَجَ فَمَرَّ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏فَطَافَ بِهِ قَبْلَ صَلَاةِ الصُّبْحِ ثُمَّ خَرَجَ إِلَى ‏ ‏الْمَدِينَةِ

நாங்கள் ஹஜ்ஜுக்கு தல்பியா கூறியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜின் மாதங்களில், ஹஜ்ஜின் புனிதக் கடமைச் செயல்களில், ஹஜ்ஜின் இரவு(பகல்)களில் (பங்கேற்கப்) புறப்பட்டோம். நாங்கள் ‘ஸரிஃப்’ எனுமிடத்தில் இறங்கித் தங்கினோம்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (கூடாரத்திலிருந்து புறப்பட்டு) தம் தோழர்களிடம் வந்து, “உங்களில் எவரிடம் பலிப் பிராணி இல்லையோ அவர் தமது இஹ்ராமை உம்ராவிற்காக ஆக்கிக் கொள்ள விரும்பினால், அவர் அவ்வாறே செய்து கொள்ளட்டும்; எவரிடம் பலிப் பிராணி உள்ளதோ (அவர் இவ்வாறு செய்ய) வேண்டாம்” என்றார்கள். தம்மிடம் பலிப் பிராணி இல்லாத நபித்தோழர்களில் சிலர் அவ்வாறு செய்தனர். வேறுசிலர் அவ்வாறு செய்யவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமும் அவர்களுடனிருந்த வசதி படைத்த தோழர்கள் சிலரிடமும் பலிப் பிராணிகள் இருந்தன. (எனவே அவர்களால் உம்ரா மட்டும் செய்து இஹ்ராமிலிருந்து விடுபட முடியவில்லை). இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நானிருந்த இடத்திற்கு வந்தார்கள்.

அப்போது நான் அழுது கொண்டிருந்தேன். என்னிடம், “உன் அழுகைக்குக் காரணம் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “நீங்கள் உங்கள் தோழர்களிடம் பேசியதைச் செவியுற்றேன். உம்ராவைப் பற்றித் தாங்கள் கூறியதையும் நான் கேட்டேன். என்னால் உம்ராச் செய்ய முடியாமல் போய்விட்டதே!” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உனக்கு என்னவாயிற்று?” என்று கேட்டார்கள். “நான் தொழுகை இல்லாமல் இருக்கிறேன்” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அதனால் உனக்கு ஒரு பாதிப்புமில்லை. ஆதமின் பெண்மக்களுள் நீயும் ஒருத்தி. எனவே, அவர்களுக்கு அல்லாஹ் விதியாக்கியதை உனக்கும் விதியாக்கியுள்ளான். நீ ஹஜ் செய்துகொள். அல்லாஹ் உனக்கு உம்ராச் செய்யும் வாய்ப்பையும் தரலாம்” என்று கூறினார்கள்.

ஆகவே, நான் ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டு மினாவில் தங்கியிருந்தபோது, நான் (மாதவிடாயிலிருந்து) தூய்மையானேன். பிறகு நாங்கள் (மினாவிலிருந்து சென்று) இறையில்லத்தைச் சுற்றி(தவாஃப் செய்யலா)னோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘முஹஸ்ஸப்’ எனுமிடத்தில் தங்கியிருந்தார்கள். (அவர்களிடம் நான் சென்றபோது) அவர்கள் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரு (ரலி) அவர்களை அழைத்து, “உன் சகோதரியை ஹரமுக்கு வெளியே (தன்யீமுக்கு) அழைத்துச் செல். அவர் உம்ராவிற்குத் தல்பியா கூறி முஹ்ரிமாகி வந்து, இறையில்லம் கஅபாவைச் சுற்றி (உம்ராச் செய்து) முடிக்கட்டும்! நான் இங்கேயே உங்கள் இருவரையும் எதிர்பார்த்துக் காத்திருப்பேன்” என்றார்கள்.

உடனே நாங்கள் புறப்பட்டு (தன்யீமுக்கு)ச் சென்றோம். நான் (அங்கு) முஹ்ரிமாகி (வந்து) இறையில்லத்தைச் சுற்றி வந்தேன். ஸஃபா-மர்வாவில் சுற்றிவந்தேன். பிறகு (உம்ராவை முடித்து) நாங்கள் நடுநிசி நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தோம். அப்போது நபி (ஸல்) தமது கூடாரத்தில் தங்கியிருந்தார்கள். “(உம்ராவை) முடித்துவிட்டாயா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் தோழர்கள் புறப்பட அனுமதியளித்தார்கள்; பின்னர் இறையில்லத்திற்குச் சென்று ஸுப்ஹுத் தொழுகைக்கு முன் அதைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். பிறகு மதீனாவை நோக்கிப் புறப்பட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

Share this Hadith:

Leave a Comment