அத்தியாயம்: 15, பாடம்: 47, ஹதீஸ் எண்: 2259

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ أَبُو خَيْثَمَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ عُقْبَةَ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏كُرَيْبٌ: ‏

أَنَّهُ سَأَلَ ‏ ‏أُسَامَةَ بْنَ زَيْدٍ ‏ ‏كَيْفَ صَنَعْتُمْ حِينَ ‏ ‏رَدِفْتَ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَشِيَّةَ ‏ ‏عَرَفَةَ ‏ ‏فَقَالَ جِئْنَا ‏ ‏الشِّعْبَ ‏ ‏الَّذِي ‏ ‏يُنِيخُ ‏ ‏النَّاسُ فِيهِ لِلْمَغْرِبِ ‏ ‏فَأَنَاخَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَاقَتَهُ وَبَالَ وَمَا قَالَ ‏ ‏أَهَرَاقَ ‏ ‏الْمَاءَ ثُمَّ دَعَا بِالْوَضُوءِ فَتَوَضَّأَ وُضُوءًا لَيْسَ بِالْبَالِغِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ الصَّلَاةَ فَقَالَ ‏ ‏الصَّلَاةُ أَمَامَكَ فَرَكِبَ حَتَّى جِئْنَا ‏ ‏الْمُزْدَلِفَةَ ‏ ‏فَأَقَامَ الْمَغْرِبَ ثُمَّ أَنَاخَ النَّاسُ فِي مَنَازِلِهِمْ وَلَمْ ‏ ‏يَحُلُّوا ‏ ‏حَتَّى أَقَامَ الْعِشَاءَ الْآخِرَةَ فَصَلَّى ثُمَّ ‏ ‏حَلُّوا ‏ ‏قُلْتُ فَكَيْفَ فَعَلْتُمْ حِينَ أَصْبَحْتُمْ قَالَ ‏ ‏رَدِفَهُ ‏ ‏الْفَضْلُ بْنُ عَبَّاسٍ ‏ ‏وَانْطَلَقْتُ أَنَا فِي ‏ ‏سُبَّاقِ ‏ ‏قُرَيْشٍ ‏ ‏عَلَى رِجْلَيَّ

நான் உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) இருந்தபோது அரஃபா நாளின் மாலையில் என்ன செய்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு, “மக்கள் மஃக்ரிப் தொழுகைக்காக (தங்கள் ஒட்டகங்களை) படுக்கவைக்கும் பள்ளத்தாக்கிற்குச் சென்றோம். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது ஒட்டகத்தைப் படுக்க வைத்தார்கள். பிறகு சிறுநீர் கழித்தார்கள்$. பிறகு உளூச் செய்வதற்காகத் தண்ணீர் கேட்டார்கள். பிறகு உளூச் செய்தார்கள். அப்போது அவர்கள் அழகுற உளூச் செய்யவில்லை.

நான், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழுகை உமக்கு எதிரே (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) உள்ளது” என்றார்கள். பிறகு வாகனத்தில் ஏறிப் புறப்பட்டார்கள். நாங்கள் முஸ்தலிஃபாவிற்கு வந்து சேர்ந்ததும் மஃக்ரிப் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு மக்கள் தம் ஒட்டகங்களைத் தத்தமது கூடாரங்களில் படுக்கவைத்தார்கள்; இஷாத் தொழுகையை முடிக்கும்வரை அவற்றை அவிழ்த்துவிடவில்லை. இஷாத் தொழுத பிறகே ஒட்டகங்களை அவிழ்த்(துப் பயணத்தைத் தொடர்ந்)தனர்” என்று உஸாமா (ரலி) விடையளித்தார்கள்.

நான், “மறுநாள் காலையில் நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி) அமர்ந்தார்கள். நான் (மினாவிற்கு) முந்திச் சென்றுகொண்டிருந்த குறைஷியருடன் நடந்தேசென்றேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி) வழியாக குறைப் (ரஹ்)


குறிப்புகள் :

$சிறுநீர் கழித்தபின் “நீர் ஊற்றிக் கழுவிக்கொண்டார்கள்” என்பதை இந்த ஹதீஸில் அறிவிப்பாளர் உஸாமா (ரலி) குறிப்பிடவில்லை.

உளூவைச் சுருக்கமாகச் செய்வதென்பது ஒவ்வோர் உறுப்பையும் ஒரு முறை கழுவுவதாகும். அழகுற உளூச் செய்வதென்பது ஒவ்வோர் உறுப்பையும் மூன்று முறை நன்றாகக் கழுவுவதாகும்.

Share this Hadith: