அத்தியாயம்: 15, பாடம்: 82, ஹதீஸ் எண்: 2415

‏حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏شَيْبَانَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ: ‏

إِنَّ ‏ ‏خُزَاعَةَ ‏ ‏قَتَلُوا رَجُلًا مِنْ ‏ ‏بَنِي لَيْثٍ ‏ ‏عَامَ فَتْحِ ‏ ‏مَكَّةَ ‏ ‏بِقَتِيلٍ مِنْهُمْ قَتَلُوهُ فَأُخْبِرَ بِذَلِكَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَرَكِبَ ‏ ‏رَاحِلَتَهُ ‏ ‏فَخَطَبَ فَقَالَ ‏ ‏إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَبَسَ عَنْ ‏ ‏مَكَّةَ ‏ ‏الْفِيلَ وَسَلَّطَ عَلَيْهَا رَسُولَهُ وَالْمُؤْمِنِينَ أَلَا وَإِنَّهَا لَمْ تَحِلَّ لِأَحَدٍ قَبْلِي وَلَنْ تَحِلَّ لِأَحَدٍ بَعْدِي أَلَا وَإِنَّهَا أُحِلَّتْ لِي سَاعَةً مِنْ النَّهَارِ أَلَا وَإِنَّهَا سَاعَتِي هَذِهِ حَرَامٌ لَا ‏ ‏يُخْبَطُ ‏ ‏شَوْكُهَا وَلَا ‏ ‏يُعْضَدُ ‏ ‏شَجَرُهَا وَلَا يَلْتَقِطُ ‏ ‏سَاقِطَتَهَا ‏ ‏إِلَّا مُنْشِدٌ وَمَنْ قُتِلَ لَهُ قَتِيلٌ فَهُوَ بِخَيْرِ النَّظَرَيْنِ إِمَّا أَنْ يُعْطَى ‏ ‏يَعْنِي ‏ ‏الدِّيَةَ ‏ ‏وَإِمَّا أَنْ ‏ ‏يُقَادَ ‏ ‏أَهْلُ الْقَتِيلِ قَالَ فَجَاءَ رَجُلٌ مِنْ أَهْلِ ‏ ‏الْيَمَنِ ‏ ‏يُقَالُ لَهُ ‏ ‏أَبُو شَاهٍ ‏ ‏فَقَالَ اكْتُبْ لِي يَا رَسُولَ اللَّهِ فَقَالَ اكْتُبُوا ‏ ‏لِأَبِي شَاهٍ ‏ ‏فَقَالَ رَجُلٌ مِنْ ‏ ‏قُرَيْشٍ ‏ ‏إِلَّا ‏ ‏الْإِذْخِرَ ‏ ‏فَإِنَّا نَجْعَلُهُ فِي بُيُوتِنَا وَقُبُورِنَا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَّا ‏ ‏الْإِذْخِرَ

மக்கா வெற்றி ஆண்டில் ‘குஸாஆ’ குலத்தார், ‘பனூ லைஸ்’ குலத்தாரில் ஒருவரைக் கொலை செய்துவிட்டனர். (அறியாமைக் காலத்தில்) தங்களில் ஒருவரை பனூ லைஸ் குலத்தார் கொலை செய்ததற்குப் பதிலாகவே குஸாஆ குலத்தார் இதைச் செய்தனர். இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் தமது வாகனத்தின் மீதேறி,

“வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் இந்த(ப் புனித) மக்கா நகரை விட்டும் யானைப் படையைத் தடுத்து நிறுத்தினான். மக்காவின் மீது தன் தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் அல்லாஹ் ஆதிக்கம் அளித்தான். எச்சரிக்கை! மக்காவினுள் போர் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை. எனக்குப் பின்னரும் எவருக்கும் ஒருபோதும் அனுமதிக்கப்படப்போவதில்லை. கவனத்தில் கொள்க! எனக்குக்கூட பகலில் சிறிது நேரம் போரிடவே அனுமதிக்கப்பட்டது. எச்சரிக்கை! (இங்குப்) போர் செய்வது, இந்த நேரத்திலிருந்து (முற்றாகத்) தடை செய்யப்பட்டுவிட்டது. இங்குள்ள முட்கள் பிடுங்கப்படக் கூடாது. இதன் மரங்கள் வெட்டப்படக் கூடாது. இங்கே கீழே விழுந்து கிடக்கும் பொருட்களை (அவற்றைப் பற்றி) மக்களுக்கு அறிவிப்புச் செய்பவரைத் தவிர வேறு யாரும் எடுக்கக் கூடாது. ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட்டால், அவருடைய உறவினர்கள் இழப்பீடு பெறுதல், அல்லது பழிவாங்குதல் ஆகிய இரண்டு முடிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்” என்று உரையாற்றினார்கள்.

அப்போது யமன்வாசிகளில் அபூஷாஹ் எனப்படும் ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (இந்த உரையை) எனக்கு எழுதித் தரச் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அபூஷாஹிற்கு (என் உரையை) எழுதிக் கொடுங்கள்” என்று சொன்னார்கள்.

அப்போது குறைஷியரில் ஒருவர், “(மக்காவின் செடிகொடிகளை வெட்டக் கூடாது என்பதிலிருந்து) ‘இத்கிர்’ புல்லிற்கு விலக்கு அளியுங்கள். ஏனெனில், நாங்கள் அதை எங்கள் வீடுகளி(ன் கூரைகளி)லும் எங்கள் சவக் குழிகளிலும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “இத்கிர் புல்லைத் தவிர” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 82, ஹதீஸ் எண்: 2414

‏حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الْوَلِيدِ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ هُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏قَالَ: ‏

لَمَّا فَتَحَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَكَّةَ ‏ ‏قَامَ فِي النَّاسِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ ‏ ‏إِنَّ اللَّهَ حَبَسَ عَنْ ‏ ‏مَكَّةَ ‏ ‏الْفِيلَ وَسَلَّطَ عَلَيْهَا رَسُولَهُ وَالْمُؤْمِنِينَ وَإِنَّهَا لَنْ تَحِلَّ لِأَحَدٍ كَانَ قَبْلِي وَإِنَّهَا أُحِلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ وَإِنَّهَا لَنْ تَحِلَّ لِأَحَدٍ بَعْدِي فَلَا يُنَفَّرُ صَيْدُهَا وَلَا ‏ ‏يُخْتَلَى ‏ ‏شَوْكُهَا وَلَا تَحِلُّ ‏ ‏سَاقِطَتُهَا ‏ ‏إِلَّا ‏ ‏لِمُنْشِدٍ ‏ ‏وَمَنْ قُتِلَ لَهُ قَتِيلٌ فَهُوَ بِخَيْرِ النَّظَرَيْنِ إِمَّا أَنْ يُفْدَى وَإِمَّا أَنْ يُقْتَلَ فَقَالَ ‏ ‏الْعَبَّاسُ ‏ ‏إِلَّا ‏ ‏الْإِذْخِرَ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ فَإِنَّا نَجْعَلُهُ فِي قُبُورِنَا وَبُيُوتِنَا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَّا ‏ ‏الْإِذْخِرَ ‏ ‏فَقَامَ ‏ ‏أَبُو شَاهٍ ‏ ‏رَجُلٌ مِنْ أَهْلِ ‏ ‏الْيَمَنِ ‏ ‏فَقَالَ اكْتُبُوا لِي يَا رَسُولَ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اكْتُبُوا ‏ ‏لِأَبِي شَاهٍ ‏

قَالَ ‏ ‏الْوَلِيدُ ‏ ‏فَقُلْتُ ‏ ‏لِلْأَوْزَاعِيِّ ‏ ‏مَا قَوْلُهُ اكْتُبُوا لِي يَا رَسُولَ اللَّهِ قَالَ هَذِهِ الْخُطْبَةَ الَّتِي سَمِعَهَا مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு மக்கா நகர வெற்றியை அளித்தபோது, மக்கள் மத்தியில் அவர்கள் நின்று அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, “அல்லாஹ் மக்காவை (துவம்சம் செய்வதை)விட்டும் யானைப் படையைத் தடுத்தான். அதன் மீது (தற்போது) தன் தூதருக்கும் ஓரிறைநம்பிக்கையாளர்களுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளான். இந்த மக்கா நகரில் எனக்கு முன்பு எவருக்கும் போரிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டதில்லை. எனக்கும்கூட பகலின் சிறிது நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்குப் பின்பும் அது எவருக்கும் ஒருபோதும் அனுமதிக்கப்படாது. ஆகவே, இதன் வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது. இதன் முட்கள் வெட்டப்படக் கூடாது. இங்குக் கீழே விழுந்து கிடக்கும் பொருள், அதை அறிவிப்புச் செய்பவருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்படாது. எவர், கொல்லப்பட்ட தன் உறவினர் தொடர்பான உரிமை பெற்றிருக்கிறாரோ அவர் இரண்டு முடிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஒன்று, (சட்டப்படி) இழப்பீட்டுத் தொகை பெற்றுக்கொள்ளலாம்; அல்லது பழிவாங்கிக்கொள்ளலாம்” என்று கூறினார்கள்.

அப்பாஸ் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! (செடிகொடிகள் பிடுங்கப்படாது என்பதில்) இத்கிர் புல்லைத் தவிரவா? ஏனெனில், அதை நாங்கள் எங்கள் சவக் குழிகளுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்துகிறோமே?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இத்கிர் புல்லைத் தவிர” என்று விடையளித்தார்கள். அப்போது யமன்வாசிகளில் ஒருவரான அபூஷாஹ் (ரலி) என்பவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! (இதை) எனக்கு எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அபூஷாஹுக்கு எழுதிக் கொடுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

“எனக்கு (இதை) எழுதிக் கொடுங்கள் அல்லாஹ்வின் தூதரே! எனும் அபூஷாஹ் (ரலி) அவர்களது வேண்டுகோள் எதைக் குறிக்கிறது?” என்று (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அவ்ஸாயீ (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அவர் கேட்ட இந்த உரையை(எழுதிக் கொடுக்கச் சொன்னதை)யே குறிக்கிறது” என்று பதிலளித்தார்கள் என்பதாக (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) வலீத் பின் முஸ்லிம் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 15, பாடம்: 82, ஹதீஸ் எண்: 2413

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي شُرَيْحٍ الْعَدَوِيِّ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏لِعَمْرِو بْنِ سَعِيدٍ: ‏

وَهُوَ يَبْعَثُ الْبُعُوثَ إِلَى ‏ ‏مَكَّةَ ‏ ‏ائْذَنْ لِي أَيُّهَا الْأَمِيرُ أُحَدِّثْكَ قَوْلًا قَامَ بِهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْغَدَ مِنْ يَوْمِ الْفَتْحِ سَمِعَتْهُ أُذُنَايَ وَوَعَاهُ قَلْبِي وَأَبْصَرَتْهُ عَيْنَايَ حِينَ تَكَلَّمَ بِهِ أَنَّهُ حَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ ‏ ‏إِنَّ ‏ ‏مَكَّةَ ‏ ‏حَرَّمَهَا اللَّهُ وَلَمْ يُحَرِّمْهَا النَّاسُ فَلَا يَحِلُّ لِامْرِئٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ يَسْفِكَ بِهَا دَمًا وَلَا ‏ ‏يَعْضِدَ ‏ ‏بِهَا شَجَرَةً فَإِنْ أَحَدٌ ‏ ‏تَرَخَّصَ ‏ ‏بِقِتَالِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِيهَا فَقُولُوا لَهُ إِنَّ اللَّهَ أَذِنَ لِرَسُولِهِ وَلَمْ يَأْذَنْ لَكُمْ وَإِنَّمَا أَذِنَ لِي فِيهَا سَاعَةً مِنْ نَهَارٍ وَقَدْ عَادَتْ حُرْمَتُهَا الْيَوْمَ كَحُرْمَتِهَا بِالْأَمْسِ وَلْيُبَلِّغْ الشَّاهِدُ الْغَائِبَ ‏
‏فَقِيلَ ‏ ‏لِأَبِي شُرَيْحٍ ‏ ‏مَا قَالَ لَكَ ‏ ‏عَمْرٌو ‏ ‏قَالَ ‏ ‏أَنَا أَعْلَمُ بِذَلِكَ مِنْكَ يَا ‏ ‏أَبَا شُرَيْحٍ ‏ ‏إِنَّ الْحَرَمَ لَا يُعِيذُ عَاصِيًا وَلَا ‏ ‏فَارًّا ‏ ‏بِدَمٍ وَلَا ‏ ‏فَارًّا ‏ ‏بِخَرْبَةٍ

அம்ரு பின் ஸயீத், (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக) மக்காவை நோக்கிப் படைப் பிரிவுகளை அனுப்பியபோது அவரிடம் அபூ ஷுரைஹ் அல்அதவீ (ரலி) கூறினார்கள்:

தலைவரே! எனக்கு அனுமதி தாருங்கள்! மக்கா வெற்றிக்கு மறு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிய செய்தியை உங்களுக்கு நான் அறிவிக்கின்றேன். என் காதுகள் அதைக் கேட்டிருக்கின்றன. எனது உள்ளம் அதை நினைவில் வைத்துள்ளது. அதை அவர்கள் கூறியபோது என் கண்கள் அவர்களைப் பார்த்திருக்கின்றன.

அவ்வுரையின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, “அல்லாஹ்தான் மக்கா நகருக்குப் புனிதத்தை வழங்கினான். அதற்குப் புனிதத்தை வழங்கியவர்கள் மனிதர்களல்லர். எனவே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் இங்கு (சண்டையிட்டு) இரத்தத்தைச் சிந்துவதற்கோ, இங்குள்ள மரம் செடிகொடிகளை வெட்டுவதற்கோ அனுமதி இல்லை. அல்லாஹ்வின் தூதர் (மக்கா வெற்றி நாளில் ஒரு பகற்பொழுது மட்டும்) இங்குப் போரிட்டதால் (அதைக் காரணமாகக் காட்டி) இதைப் பொது அனுமதி என்று யாரேனும் கருதினால், ‘அல்லாஹ் தன் தூதருக்கு மட்டும்தான் அனுமதியளித்தான், உங்களுக்கு அவன் அனுமதி வழங்கவில்லை’ என்று சொல்லிவிடுங்கள். எனக்குக்கூட (நேற்றைய) பகலில் சிறிது நேரம் மட்டுமே அல்லாஹ் அனுமதியளித்தான். இன்று அதன் முந்தைய புனிதத் தன்மைக்கு அது மீண்டு வந்துவிட்டது. (நான் சொன்ன விஷயங்கள் யாவற்றையும் இங்கு) வந்திருப்பவர்கள் வராதவர்களுக்குச் சொல்லிவிடுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அப்போது “அதற்கு அம்ரு பின் ஸயீத் என்ன பதிலளித்தார்?” என்று அபூஷுரைஹ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு “அபூஷுரைஹே! உம்மைவிட இதைப் பற்றி நான் நன்கறிவேன். நிச்சயமாக (புனித நகரமான) மக்கா, குற்றவாளிக்கும் மரண தண்டனைக்குப் பயந்து (மக்காவிற்குள்) ஓடிவந்த(கொலைக் குற்றம் புரிந்த)வனுக்கும், திருட்டுக் குற்றம் புரிந்துவிட்டு ஓடிவந்தவனுக்கும் பாதுகாப்பளிக்காது என்று அம்ரு கூறினார்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஷுரைஹ் அல்அதவீ (ரலி) வழியாக ஸயீத் பின் அபீஸயீத் (ரஹ்)


குறிப்பு :

அம்ரு பின் ஸயீத் என்பவர், யஸீதின் ஆட்சியின்கீழ் மதீனாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அத்தியாயம்: 15, பாடம்: 82, ஹதீஸ் எண்: 2412

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏مُجَاهِدٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ: ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَ الْفَتْحِ فَتْحِ ‏ ‏مَكَّةَ ‏ ‏لَا هِجْرَةَ وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ وَإِذَا ‏ ‏اسْتُنْفِرْتُمْ ‏ ‏فَانْفِرُوا ‏ ‏وَقَالَ يَوْمَ الْفَتْحِ فَتْحِ ‏ ‏مَكَّةَ ‏ ‏إِنَّ هَذَا ‏ ‏الْبَلَدَ ‏ ‏حَرَّمَهُ اللَّهُ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فَهُوَ حَرَامٌ بِحُرْمَةِ اللَّهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَإِنَّهُ لَمْ يَحِلَّ الْقِتَالُ فِيهِ لِأَحَدٍ قَبْلِي وَلَمْ يَحِلَّ لِي إِلَّا سَاعَةً مِنْ نَهَارٍ فَهُوَ حَرَامٌ بِحُرْمَةِ اللَّهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَا ‏ ‏يُعْضَدُ ‏ ‏شَوْكُهُ وَلَا يُنَفَّرُ صَيْدُهُ وَلَا يَلْتَقِطُ إِلَّا مَنْ ‏ ‏عَرَّفَهَا ‏ ‏وَلَا ‏ ‏يُخْتَلَى ‏ ‏خَلَاهَا ‏ ‏فَقَالَ ‏ ‏الْعَبَّاسُ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ إِلَّا ‏ ‏الْإِذْخِرَ ‏ ‏فَإِنَّهُ ‏ ‏لِقَيْنِهِمْ ‏ ‏وَلِبُيُوتِهِمْ فَقَالَ إِلَّا ‏ ‏الْإِذْخِرَ ‏

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُفَضَّلٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏بِمِثْلِهِ وَلَمْ يَذْكُرْ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَقَالَ بَدَلَ الْقِتَالِ الْقَتْلَ وَقَالَ لَا يَلْتَقِطُ ‏ ‏لُقَطَتَهُ ‏ ‏إِلَّا مَنْ ‏ ‏عَرَّفَهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்கா வெற்றி நிகழ்ந்த நாளில், “இனி ஹிஜ்ரத் (மக்காவைத் துறப்பது) என்பது கிடையாது. ஆயினும், அறப்போர் புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும்தான் உள்ளது. நீங்கள் போருக்குப் புறப்படும்படி அழைக்கப்பட்டால் போருக்குச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். மேலும் (அதே) மக்கா வெற்றி நாளில், “அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதலாய் இந்த நகரத்தைப் புனிதமாக்கியுள்ளான். அல்லாஹ் புனிதமாக்கிய காரணத்தால் இது மறுமை நாள் வரை புனிதமானதாகவே இருக்கும். மேலும், எனக்கு முன்னர் (வாழ்ந்த) யாருக்கும் இங்குப் போர் புரிய அனுமதி தரப்படவில்லை. எனக்கும்கூட (இந்த மக்கா வெற்றி நாளில்) பகலில் சிறிது நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அல்லாஹ் இந்த நகரத்தைப் புனிதமாக்கியுள்ள காரணத்தால் இது, மறுமை நாள்வரை புனிதமானதாகவே திகழும். இங்கு அதன் முட்கள் வெட்டப்படக் கூடாது. அதன் வேட்டைப் பிராணி விரட்டப்படக் கூடாது. இங்கே கீழே விழுந்து கிடக்கும் பொருளை, அதை அறிவிப்புச் செய்(து உரியவரிடம் சேர்ப்)பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைப் பறிக்கக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

உடனே (என் தந்தை) அப்பாஸ் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! இத்கிர் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது அவர்களுடைய உலோகத் தொழிலாளர்களுக்கு(உலை மூட்டவு)ம், அவர்களுடைய வீடுக(ளின் மேல்கூரை)களுக்கும் பயன்படுகிறதே?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(ஆம்) இத்கிரைத் தவிர” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

குறிப்பு :

முஃபள்ளல் (ரஹ்) வழி அறிவிப்பில், “வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதலாய் …” எனும் குறிப்பு இடம்பெறவில்லை. “போர் புரிய” என்பதற்குப் பகரமாக “உயிர்ச் சேதம் விளைவிக்க” என்று காணப்படுகிறது. “இங்குக் கீழே விழுந்து கிடக்கும் பொருளை, அதை அறிவிப்புச் செய்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது” என்பதைக் குறிக்க, ‘லா யல்தகிது லுக்தத்தஹு இல்லா மன் அர்ரஃபஹா’ எனும் சொற்றொடர் இடம் பெற்றுள்ளது.