அத்தியாயம்: 16, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2566

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَبَابَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏بِهِ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمِ بْنِ حَيَّانَ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَنَسٌ ‏ ‏قَالَ: ‏

صَارَتْ ‏ ‏صَفِيَّةُ ‏ ‏لِدِحْيَةَ ‏ ‏فِي مَقْسَمِهِ وَجَعَلُوا يَمْدَحُونَهَا عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ وَيَقُولُونَ مَا رَأَيْنَا فِي ‏ ‏السَّبْيِ ‏ ‏مِثْلَهَا قَالَ فَبَعَثَ إِلَى ‏ ‏دِحْيَةَ ‏ ‏فَأَعْطَاهُ بِهَا مَا أَرَادَ ثُمَّ دَفَعَهَا إِلَى أُمِّي فَقَالَ ‏ ‏أَصْلِحِيهَا ‏ ‏قَالَ ثُمَّ خَرَجَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ ‏ ‏خَيْبَرَ ‏ ‏حَتَّى إِذَا جَعَلَهَا فِي ظَهْرِهِ نَزَلَ ثُمَّ ضَرَبَ عَلَيْهَا ‏ ‏الْقُبَّةَ ‏ ‏فَلَمَّا أَصْبَحَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ كَانَ عِنْدَهُ ‏ ‏فَضْلُ ‏ ‏زَادٍ ‏ ‏فَلْيَأْتِنَا بِهِ قَالَ فَجَعَلَ الرَّجُلُ يَجِيءُ ‏ ‏بِفَضْلِ ‏ ‏التَّمْرِ ‏ ‏وَفَضْلِ ‏ ‏السَّوِيقِ ‏ ‏حَتَّى جَعَلُوا مِنْ ذَلِكَ ‏ ‏سَوَادًا ‏ ‏حَيْسًا ‏ ‏فَجَعَلُوا يَأْكُلُونَ مِنْ ذَلِكَ ‏ ‏الْحَيْسِ ‏ ‏وَيَشْرَبُونَ مِنْ حِيَاضٍ إِلَى جَنْبِهِمْ مِنْ مَاءِ السَّمَاءِ قَالَ فَقَالَ ‏ ‏أَنَسٌ ‏ ‏فَكَانَتْ تِلْكَ ‏ ‏وَلِيمَةَ ‏ ‏رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَيْهَا قَالَ فَانْطَلَقْنَا حَتَّى إِذَا رَأَيْنَا جُدُرَ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏هَشِشْنَا ‏ ‏إِلَيْهَا ‏ ‏فَرَفَعْنَا ‏ ‏مَطِيَّنَا ‏ ‏وَرَفَعَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَطِيَّتَهُ ‏ ‏قَالَ ‏ ‏وَصَفِيَّةُ ‏ ‏خَلْفَهُ قَدْ ‏ ‏أَرْدَفَهَا ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَعَثَرَتْ ‏ ‏مَطِيَّةُ ‏ ‏رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَصُرِعَ ‏ ‏وَصُرِعَتْ قَالَ فَلَيْسَ أَحَدٌ مِنْ النَّاسِ يَنْظُرُ إِلَيْهِ وَلَا إِلَيْهَا حَتَّى قَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَتَرَهَا قَالَ فَأَتَيْنَاهُ فَقَالَ لَمْ نُضَرَّ قَالَ فَدَخَلْنَا ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏فَخَرَجَ ‏ ‏جَوَارِي ‏ ‏نِسَائِهِ يَتَرَاءَيْنَهَا وَيَشْمَتْنَ ‏ ‏بِصَرْعَتِهَا

ஸஃபிய்யா, திஹ்யா அல் கல்பீ (ரலி) அவர்களது (கைபர் போர்ச் செல்வத்தின்) பங்கில் சேர்ந்துவிட்டிருந்தார்கள். மக்கள் ஸஃபிய்யா அவர்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பாராட்டிப் பேசினர். “கைதிகளில் அவரைப் போன்று (அழகான) வேறெவரையும் நாங்கள் பார்க்கவில்லை” என்று (கூறி, அவரை மணந்துகொள்ளுமாறு) கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), திஹ்யா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி (அவர்களை வரவழைத்து) ஸஃபிய்யாவுக்குப் பகரமாக திஹ்யா (ரலி) விரும்பியவற்றைக் கொடுத்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸஃபிய்யா அவர்களை என் தாயாரிடம் ஒப்படைத்து, “இவரை அலங்காரம் செய்க” என்றார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கைபரிலிருந்து (மதீனாவுக்குப்) புறப்பட்டார்கள். கைபரைக் கடந்துவந்ததும் (ஓரிடத்தில்) இறங்கி, ஸஃபிய்யாவுக்காகக் கூடாரம் அமைத்தார்கள். (அங்கு இரவில் தங்கினார்கள்) விடிந்ததும், “உணவுப் பொருட்களில் ஏதேனும் எஞ்சியவற்றை வைத்திருப்பவர், அவற்றை நம்மிடம் கொண்டுவரவும்” என்றார்கள்.

அப்போது ஒருவர் தமது தேவைக்கு எஞ்சிய பேரீச்சம் பழங்களையும் மாவையும் கொண்டுவந்தார். (மற்றவர்கள் அவரவரிடமிருந்த உணவுப் பொருட்களைக் கொண்டுவந்தனர்.) அதில் ‘ஹைஸ்’ உணவின் ஒரு குவியலையே உருவாக்கி, அதிலிருந்து உண்ணத் தொடங்கினர். பிறகு அவர்களுக்கு அருகிலிருந்த மழை நீர் குட்டையிலிருந்து நீர் அருந்தினர். அதுவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணந்ததற்காக அளித்த மண விருந்தாக அமைந்தது.

பிறகு நாங்கள் பயணத்தைத் தொடர்ந்து, மதீனாவின் சுவர்களைக் கண்டு குதூகலித்தோம். நாங்கள் எங்கள் வாகனத்தை விரைவாகச் செலுத்தினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தமது வாகனத்தை விரைவாகச் செலுத்தினார்கள். அப்போது ஸஃபிய்யா (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் இருந்தார்கள். தமக்குப் பின்னால் (இருக்கையமைத்து) அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அமரவைத்திருந்தார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஒட்டகம் கால் இடறி விழுந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஸஃபிய்யா (ரலி) அவர்களும் ஒட்டகத்திலிருந்து விழுந்துவிட்டனர். மக்களில் யாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையோ ஸஃபிய்யா (ரலி) அவர்களையோ பார்க்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தாமே எழுந்து, ஸஃபிய்யா (ரலி) அவர்களை (திரையிட்டு) மறைத்தார்கள். பிறகு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நமக்கு எந்தப் பாதிப்பும் நேரவில்லை” என்றார்கள். பின்னர் நாங்கள் மதீனாவுக்குள் நுழைந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இளம் துணைவியர் புதுமணப் பெண்ணைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டு வந்து, அவர் கீழே விழுந்ததை அறிந்து உள்ளுக்குள் மகிழ்ந்தனர்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2565

‏قَالَ ‏ ‏أَنَسٌ: ‏

وَشَهِدْتُ ‏ ‏وَلِيمَةَ ‏ ‏زَيْنَبَ ‏ ‏فَأَشْبَعَ النَّاسَ خُبْزًا وَلَحْمًا وَكَانَ يَبْعَثُنِي ‏ ‏فَأَدْعُو النَّاسَ فَلَمَّا فَرَغَ قَامَ وَتَبِعْتُهُ فَتَخَلَّفَ رَجُلَانِ اسْتَأْنَسَ بِهِمَا الْحَدِيثُ لَمْ يَخْرُجَا فَجَعَلَ يَمُرُّ عَلَى نِسَائِهِ فَيُسَلِّمُ عَلَى كُلِّ وَاحِدَةٍ مِنْهُنَّ ‏ ‏سَلَامٌ عَلَيْكُمْ كَيْفَ أَنْتُمْ يَا أَهْلَ الْبَيْتِ فَيَقُولُونَ بِخَيْرٍ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ وَجَدْتَ أَهْلَكَ فَيَقُولُ بِخَيْرٍ فَلَمَّا فَرَغَ رَجَعَ وَرَجَعْتُ مَعَهُ فَلَمَّا بَلَغَ الْبَابَ إِذَا هُوَ بِالرَّجُلَيْنِ قَدْ اسْتَأْنَسَ بِهِمَا الْحَدِيثُ فَلَمَّا رَأَيَاهُ قَدْ رَجَعَ قَامَا فَخَرَجَا فَوَاللَّهِ مَا أَدْرِي أَنَا أَخْبَرْتُهُ أَمْ أُنْزِلَ عَلَيْهِ الْوَحْيُ بِأَنَّهُمَا قَدْ خَرَجَا فَرَجَعَ وَرَجَعْتُ مَعَهُ فَلَمَّا وَضَعَ رِجْلَهُ فِي ‏ ‏أُسْكُفَّةِ ‏ ‏الْبَابِ أَرْخَى الْحِجَابَ بَيْنِي وَبَيْنَهُ وَأَنْزَلَ اللَّهُ تَعَالَى هَذِهِ الْآيَةَ ‏ ” ‏لَا تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَنْ يُؤْذَنَ لَكُمْ ‏‏ “ الْآيَةَ

ஸைனப் (ரலி) அவர்களின் மணவிருந்திலும் நான் கலந்துகொண்டிருக்கின்றேன். அவ்விருந்தில் ரொட்டியையும் இறைச்சியையும் வயிறு நிரம்ப உண்ணக் கொடுத்தார்கள். (முன்னதாக) மக்களை அழைப்பதற்காக என்னை அனுப்பிக்கொண்டிருந்தார்கள். (விருந்து) முடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எழுந்து செல்ல, நானும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். (வந்த விருந்தினருள்) இருவர் எழுந்து செல்லாமல் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் (மற்ற) துணைவியரிடம் சென்று, அவர்களில் ஒவ்வொருவருக்கும் “ஸலாமுன் அலைக்கும்” என முகமன் சொல்லிவிட்டு, “வீட்டாரே! எப்படி இருக்கிறீர்கள்?” என (குசலம்) விசாரிக்கலானார்கள். அதற்கு அவர்கள் “நலமுடன் உள்ளோம், அல்லாஹ்வின் தூதரே! தங்களின் (புதிய) துணைவி எப்படி?” என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நன்று” என்றார்கள்.

பேசி முடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) திரும்பிச் செல்ல, அவர்களுடன் நானும் திரும்பினேன். (புது மணப்பெண் தங்கியிருந்த வீட்டின்) வாசலை எட்டிவிட்டபோதும் அவ்விருவரும் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) திரும்பிச் செல்ல, அதைக் கண்ட அவ்விருவரும் எழுந்து வெளியேறிவிட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த இருவரும் வெளியேறிவிட்டார்கள் என்று நான் அவர்களுக்குத் தெரிவித்தேனா அல்லது இறையறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டதா என்று எனக்குத் தெரியவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) திரும்பிவந்தார்கள். அவர்களுடன் நானும் வந்தேன். அவர்கள் தமது காலை வாசற்படியில் வைத்ததும் எனக்கும் தமக்குமிடையே திரையைத் தொங்கவிட்டார்கள். உயர்ந்தோன் அல்லாஹ், “நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப்பட்டால் தவிர (உணவுண்ணச்) செல்லாதீர்கள்…” எனும் இந்த (33:53ஆவது) வசனத்தை அருளினான்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2564

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَفَّانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ثَابِتٌ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ: ‏

كُنْتُ ‏ ‏رِدْفَ ‏ ‏أَبِي طَلْحَةَ ‏ ‏يَوْمَ ‏ ‏خَيْبَرَ ‏ ‏وَقَدَمِي تَمَسُّ قَدَمَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَأَتَيْنَاهُمْ حِينَ ‏ ‏بَزَغَتْ ‏ ‏الشَّمْسُ وَقَدْ أَخْرَجُوا مَوَاشِيَهُمْ وَخَرَجُوا بِفُؤُوسِهِمْ ‏ ‏وَمَكَاتِلِهِمْ ‏ ‏وَمُرُورِهِمْ ‏ ‏فَقَالُوا ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏وَالْخَمِيسُ ‏ ‏قَالَ وَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَرِبَتْ ‏ ‏خَيْبَرُ ‏ ‏إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ  ” فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ ‏“‏

‏‏قَالَ وَهَزَمَهُمْ اللَّهُ عَزَّ وَجَلَّ وَوَقَعَتْ فِي ‏ ‏سَهْمِ ‏ ‏دِحْيَةَ ‏ ‏جَارِيَةٌ ‏ ‏جَمِيلَةٌ فَاشْتَرَاهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِسَبْعَةِ أَرْؤُسٍ ثُمَّ دَفَعَهَا إِلَى ‏ ‏أُمِّ سُلَيْمٍ ‏ ‏تُصَنِّعُهَا ‏ ‏لَهُ وَتُهَيِّئُهَا قَالَ وَأَحْسِبُهُ قَالَ ‏ ‏وَتَعْتَدُّ ‏ ‏فِي بَيْتِهَا وَهِيَ ‏ ‏صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ ‏ ‏قَالَ وَجَعَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلِيمَتَهَا ‏ ‏التَّمْرَ ‏ ‏وَالْأَقِطَ ‏ ‏وَالسَّمْنَ ‏ ‏فُحِصَتْ ‏ ‏الْأَرْضُ أَفَاحِيصَ وَجِيءَ ‏ ‏بِالْأَنْطَاعِ ‏ ‏فَوُضِعَتْ فِيهَا وَجِيءَ ‏ ‏بِالْأَقِطِ ‏ ‏وَالسَّمْنِ فَشَبِعَ النَّاسُ قَالَ وَقَالَ النَّاسُ لَا نَدْرِي أَتَزَوَّجَهَا أَمْ اتَّخَذَهَا ‏ ‏أُمَّ وَلَدٍ ‏ ‏قَالُوا إِنْ حَجَبَهَا فَهِيَ امْرَأَتُهُ وَإِنْ لَمْ يَحْجُبْهَا فَهِيَ ‏ ‏أُمُّ وَلَدٍ ‏ ‏فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَبَ حَجَبَهَا فَقَعَدَتْ عَلَى ‏ ‏عَجُزِ ‏ ‏الْبَعِيرِ فَعَرَفُوا أَنَّهُ قَدْ تَزَوَّجَهَا فَلَمَّا دَنَوْا مِنْ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏دَفَعَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَدَفَعْنَا قَالَ فَعَثَرَتْ النَّاقَةُ ‏ ‏الْعَضْبَاءُ ‏ ‏وَنَدَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَنَدَرَتْ ‏ ‏فَقَامَ فَسَتَرَهَا وَقَدْ ‏ ‏أَشْرَفَتْ ‏ ‏النِّسَاءُ فَقُلْنَ أَبْعَدَ اللَّهُ الْيَهُودِيَّةَ


قَالَ قُلْتُ يَا ‏ ‏أَبَا حَمْزَةَ ‏ ‏أَوَقَعَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ إِي وَاللَّهِ لَقَدْ وَقَعَ

நான் கைபர் போர் நாளில் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்திருந்தேன். எனது பாதம், (பக்கத்து ஒட்டகத்தில் பயணம் செய்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பாதத்தைத் தொட்டது. சூரியன் உதிக்கத் துவங்கிய நேரத்தில் நாங்கள் கைபர்வாசிகளிடம் சென்றடைந்தோம். அப்போது அவர்கள் தம் கால்நடைகளை ஓட்டிக்கொண்டு கோடாரிகள், பேரீச்சங் கூடைகள் மற்றும் மண்வெட்டிகளுடன் (தோட்டங்களை நோக்கிப்) புறப்பட்டுவந்தனர். (எங்களைக் கண்டதும்) “முஹம்மதும் (அவருடைய) ஐந்து அணிகள் கொண்ட படையினரும் (வந்து விட்டனர்)” என்று பதறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “கைபர் பாழா(வது உறுதியா)கிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தாரின் களத்தில் இறங்கிவிட்டோமாயின் எச்சரிக்கப்பட்ட அம்மக்களுக்கு அது கெட்ட காலையாகவே அமையும்” என்று கூறினார்கள்.

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கைபர்வாசிகளைத் தோற்கடித்தான். (போர்ச் செல்வங்களில்) திஹ்யா அல்கல்பீ (ரலி) அவர்களது பங்கில் அழகிய இளம் பெண் ஒருவர் போய்ச்சேர்ந்துவிட்டிருந்தார். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஏழு அடிமைகளைக் கொடுத்து அப் பெண்ணை  (திஹ்யா (ரலி) அவர்களிடமிருந்து) வாங்கிக்கொண்டார்கள். பிறகு அப் பெண்ணை (என் தாயார்) உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்து, தமக்காக அலங்காரமும் ஆயத்தமும் செய்யவைத்தார்கள்.

ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களே அப்பெண் ஆவார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் ஆகியவற்றை(க் கலந்து தயாரித்த ‘ஹைஸ்’ எனும் உணவை மணவிருந்தாக ஆக்கினார்கள். (முன்னதாக) நிலத்தில் நன்கு மண்ணைப் பறித்து (குழியாக்கி), தோல் விரிப்பொன்று கொண்டுவரப்பட்டு, அதனுள் அவ்விரிப்பு (விரித்து) வைக்கப்பட்டது. பாலாடைக் கட்டியும் நெய்யும் கொண்டுவரப்(பட்டு, அதில் கொட்டப்)பட்டது. மக்கள் அதிலிருந்து எடுத்து வயிராற உண்டனர். மக்கள், “அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மணந்து மனைவியாக்கிக்கொண்டார்களா, அல்லது குழந்தை பெற்றுத்தரும் அடிமைப் பெண்ணாக (உம்முல் வலத்) ஆக்கிக்கொண்டார்களா என்று எங்களுக்கு(உறுதியாக)த் தெரியவில்லை. அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) திரையிட்டு மறைத்தால், அவர், அவர்களின் மனைவி ஆவார். திரையிட்டு மறைக்காவிட்டால், அவர் அடிமைப் பெண் (உம்முல் வலத்) ஆவார்” என்று மக்கள் பேசிக்கொண்டனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வாகனத்தில் ஏறிப் புறப்பட நாடியபோது, அவருக்குத் திரையிட்டு மறைத்தார்கள். அவர் ஒட்டகத்தின் கடைக்கோடியில் அமர்ந்திருந்தார். அப்போது மக்கள் ‘அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியே’ என்று அறிந்துகொண்டனர். அவர்கள் மதீனாவை நெருங்கியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது வாகனத்தை விரைவாகச் செலுத்தினார்கள்; நாங்களும் (எங்கள் வாகனங்களை) விரைவாகச் செலுத்தினோம். அப்போது (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பயணித்த) ‘அல்அள்பா’ எனும் அந்த ஒட்டகத்திற்குக் கால் இடறியது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒட்டகத்திலிருந்து) விழுந்துவிட்டார்கள்; ஸஃபிய்யா (ரலி) அவர்களும் விழுந்துவிட்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்), எழுந்து ஸஃபிய்யா (ரலி) அவர்களை (திரையிட்டு) மறைத்தார்கள். அப்போது பெண்கள் எட்டிப் பார்த்து, “அந்த யூதப் பெண்ணை அல்லாஹ் (தனது அருளிலிருந்து) அப்புறப்படுத்துவானாக!” என்று கூறினர்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

அறிவிப்பாளர் ஸாபித் அல்புனானீ (ரஹ்) கூறுகின்றார்:

நான் (அனஸ் (ரலி) அவர்களிடம்), “அபூ ஹம்ஸா! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விழுந்துவிட்டார்களா?” என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்), விழுந்துவிட்டார்கள்” என விடையளித்தார்கள்.

அனஸ் (ரலி), “உம்மு ஸுலைம் (ரலி) அவர்களது இல்லத்திலேயே அப்பெண்ணைக் காத்திருப்புக் காலத்தில் (இத்தா) தங்கவைத்(துப் பரிசோதித்)தார்கள்” என்று கூறினார்கள் என நான் கருதுகின்றேன் என்று அறிவிப்பாளர் ஸாபித் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 16, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2563

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏مُطَرِّفٍ ‏ ‏عَنْ ‏ ‏عَامِرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بُرْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏قَالَ: ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الَّذِي يُعْتِقُ ‏ ‏جَارِيَتَهُ ‏ ‏ثُمَّ يَتَزَوَّجُهَا ‏ ‏لَهُ أَجْرَانِ

“தம்முடைய அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, தாமே அவளை மணந்துகொண்டவருக்கு இரட்டை நன்மைகள் உண்டு” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2562

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏وَعَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏وَشُعَيْبِ بْنِ حَبْحَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏وَعَبْدِ الْعَزِيزِ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏شُعَيْبِ بْنِ الْحَبْحَابِ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏وَعُمَرُ بْنُ سَعْدٍ ‏ ‏وَعَبْدُ الرَّزَّاقِ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏يُونُسَ بْنِ عُبَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏شُعَيْبِ بْنِ الْحَبْحَابِ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏كُلُّهُمْ: ‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ ‏ ‏أَعْتَقَ ‏ ‏صَفِيَّةَ ‏ ‏وَجَعَلَ عِتْقَهَا ‏ ‏صَدَاقَهَا ‏


وَفِي حَدِيثِ ‏ ‏مُعَاذٍ ‏ ‏عَنْ أَبِيهِ تَزَوَّجَ ‏ ‏صَفِيَّةَ ‏ ‏وَأَصْدَقَهَا ‏ ‏عِتْقَهَا

“நபி (ஸல்), (போர்க் கைதியான) ஸஃபிய்யாவை விடுதலை (செய்து திருமணம்) செய்தார்கள்; மேலும், அவரது விடுதலையையே மணக்கொடையாக ஆக்கினார்கள்”.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

ஹிஷாம் பின் அபீஅப்தில்லாஹ் (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்), ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள்; அவரது விடுதலையையே மஹ்ராக ஆக்கினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 16, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2561

‏حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ يَعْنِي ابْنَ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ: ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏غَزَا ‏ ‏خَيْبَرَ ‏ ‏قَالَ فَصَلَّيْنَا عِنْدَهَا صَلَاةَ ‏ ‏الْغَدَاةِ ‏ ‏بِغَلَسٍ ‏ ‏فَرَكِبَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَرَكِبَ ‏ ‏أَبُو طَلْحَةَ ‏ ‏وَأَنَا ‏ ‏رَدِيفُ ‏ ‏أَبِي طَلْحَةَ ‏ ‏فَأَجْرَى ‏ ‏نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ‏ ‏زُقَاقِ ‏ ‏خَيْبَرَ ‏ ‏وَإِنَّ رُكْبَتِي لَتَمَسُّ فَخِذَ نَبِيِّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَانْحَسَرَ ‏ ‏الْإِزَارُ ‏ ‏عَنْ فَخِذِ نَبِيِّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِنِّي لَأَرَى بَيَاضَ فَخِذِ نَبِيِّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلَمَّا دَخَلَ الْقَرْيَةَ قَالَ ‏ ‏اللَّهُ أَكْبَرُ خَرِبَتْ ‏ ‏خَيْبَرُ ‏ ‏إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ ”‏ ‏فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ “‏

‏قَالَهَا ثَلَاثَ مَرَّاتٍ قَالَ وَقَدْ خَرَجَ الْقَوْمُ إِلَى أَعْمَالِهِمْ فَقَالُوا ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏وَاللَّهِ قَالَ ‏ ‏عَبْدُ الْعَزِيزِ ‏ ‏وَقَالَ بَعْضُ أَصْحَابِنَا ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏وَالْخَمِيسُ ‏ ‏قَالَ وَأَصَبْنَاهَا ‏ ‏عَنْوَةً ‏ ‏وَجُمِعَ ‏ ‏السَّبْيُ ‏ ‏فَجَاءَهُ ‏ ‏دِحْيَةُ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَعْطِنِي ‏ ‏جَارِيَةً ‏ ‏مِنْ ‏ ‏السَّبْيِ ‏ ‏فَقَالَ اذْهَبْ فَخُذْ ‏ ‏جَارِيَةً ‏ ‏فَأَخَذَ ‏ ‏صَفِيَّةَ بِنْتَ حُيَيٍّ ‏ ‏فَجَاءَ رَجُلٌ إِلَى نَبِيِّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ أَعْطَيْتَ ‏ ‏دِحْيَةَ ‏ ‏صَفِيَّةَ بِنْتَ حُيَيٍّ ‏ ‏سَيِّدِ ‏ ‏قُرَيْظَةَ ‏ ‏وَالنَّضِيرِ ‏ ‏مَا تَصْلُحُ إِلَّا لَكَ قَالَ ادْعُوهُ بِهَا قَالَ فَجَاءَ بِهَا فَلَمَّا نَظَرَ إِلَيْهَا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ خُذْ ‏ ‏جَارِيَةً ‏ ‏مِنْ ‏ ‏السَّبْيِ ‏ ‏غَيْرَهَا قَالَ وَأَعْتَقَهَا وَتَزَوَّجَهَا فَقَالَ لَهُ ‏ ‏ثَابِتٌ ‏ ‏يَا ‏ ‏أَبَا حَمْزَةَ ‏ ‏مَا ‏ ‏أَصْدَقَهَا ‏ ‏قَالَ نَفْسَهَا أَعْتَقَهَا وَتَزَوَّجَهَا حَتَّى إِذَا كَانَ بِالطَّرِيقِ جَهَّزَتْهَا لَهُ ‏ ‏أُمُّ سُلَيْمٍ ‏ ‏فَأَهْدَتْهَا ‏ ‏لَهُ مِنْ اللَّيْلِ فَأَصْبَحَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَرُوسًا فَقَالَ مَنْ كَانَ عِنْدَهُ شَيْءٌ فَلْيَجِئْ بِهِ قَالَ وَبَسَطَ ‏ ‏نِطَعًا ‏ ‏قَالَ فَجَعَلَ الرَّجُلُ يَجِيءُ ‏ ‏بِالْأَقِطِ ‏ ‏وَجَعَلَ الرَّجُلُ يَجِيءُ بِالتَّمْرِ وَجَعَلَ الرَّجُلُ يَجِيءُ بِالسَّمْنِ ‏ ‏فَحَاسُوا ‏ ‏حَيْسًا ‏ ‏فَكَانَتْ ‏ ‏وَلِيمَةَ ‏ ‏رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கைபர்மீது (ஹிஜ்ரீ ஏழில்) போர் தொடுத்தார்கள். அப்போது கைபருக்கு அருகில் (ஓரிடத்தில்) நாங்கள் (இரவின்) இருட்டிலேயே வைகறைத் தொழுகையைத் தொழுதோம்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது வாகனத்தில் ஏறிப் பயணமானார்கள். (என் வளர்ப்புத் தந்தை) அபூதல்ஹா (ரலி) அவர்களும் வாகனத்தில் ஏறிப் பயணமானார்கள். நான் அபூதல்ஹா அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்துகொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), கைபர் பாதையில் (தமது வாகனத்தைச்) செலுத்தினார்கள். அப்போது எனது முழங்கால், (அருகில் சென்றுகொண்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொடையைத் தொட்டுக் கொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கீழாடை சற்று விலகியபோது நான் அவர்களது தொடையின் வெண்மையைக் கண்டேன்.

அந்த (கைபர்) ஊருக்குள் அவர்கள் பிரவேசித்தபோது, “அல்லாஹு அக்பர்; கைபர் பாழா(வது உறுதியா)கிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தாரின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின், எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாகவே அமையும்” என்று மூன்று முறை கூறினார்கள். (அந்த ஊர்) மக்கள் தங்கள் அலுவல்களுக்காகக் கிளம்பி வந்தபோது (எங்களைக் கண்டதும்), “அல்லாஹ்வின் மீதாணையாக, முஹம்மது (வந்துவிட்டார்)” என்று கூறினர்$.

பிறகு கைபரைத் தாக்கிக் கைப்பற்றினோம். (போருக்குப் பின்) போர்க் கைதிகள் திரட்டப்பட்டபோது, திஹ்யா (அல்கல்பீ-ரலி) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! கைதிகளில் ஓர் அடிமைப் பெண்ணை எனக்கு(ப் போர்ச் செல்வமாக)த் தாருங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீங்கள் சென்று ஓர் அடிமைப் பெண்ணைத் தேர்ந்து கொள்ளுங்கள்” என்றார்கள். திஹ்யா (ரலி), (கணவனை இழந்திருந்த) ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களைத் தேர்ந்து கொண்டார்கள்.

இந்நிலையில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! குறைழா, நளீர் குலத்தாரின் தலைவரான ஹுயையின் மகள் ஸஃபிய்யாவை திஹ்யாவுக்கு வழங்கி விட்டீர்களே! ஸஃபிய்யா, உங்களுக்குத் தவிர வேறெவருக்கும் பொருத்தமாகமாட்டார்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “திஹ்யாவையும் அப்பெண்ணையும் அழைத்து வாருங்கள்” என்றார்கள். ஸஃபிய்யாவுடன் திஹ்யா (ரலி) வந்தார்கள். ஸஃபிய்யாவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பார்த்துவிட்டு, (திஹ்யா (ரலி) அவர்களிடம்), “கைதிகளில் இவரல்லாத மற்றோர் அடிமைப் பெண்ணை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். பிறகு நபி (ஸல்), ஸஃபிய்யாவை விடுதலை செய்து தாமே மணந்துகொண்டார்கள்&.

பிறகு, நாங்கள் (கைபரிலிருந்து திரும்பி வரும்) வழியில் (‘ஸத்துஸ் ஸஹ்பா’ எனுமிடத்தில்) தங்கி இருந்தபோது, (புது மணப்பெண்) ஸஃபிய்யா (ரலி) அவர்களை (என் தாயார்) உம்மு ஸுலைம் (ரலி) (அலங்கரித்துத்) தயார்படுத்தி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார்கள். காலையில் புது மாப்பிள்ளையாக இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “தம்மிடம் ஏதேனும் (உணவுப் பொருட்கள்) வைத்திருப்பவர், அதை (நம்மிடம்) கொண்டுவாருங்கள்” என்று கூறி, தோல் விரிப்பொன்றையும் விரித்தார்கள். அப்போது ஒருவர் பாலாடைக் கட்டியைக் கொண்டுவந்தார்; மற்றொருவர் பேரீச்சம் பழங்களைக் கொண்டுவந்தார்; இன்னொருவர் நெய்யைக் கொண்டுவந்தார். அவற்றை ஒன்றாகக் கலந்து ‘ஹைஸ்’ எனும் ஒரு வகை உணவைத் தயார் செய்தனர். அதுவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அளித்த மணவிருந்தாக அமைந்தது.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

$ “முஹம்மதும் (அவருடைய) ஐந்து அணிகள் கொண்ட படையும் (வந்துவிட்டனர்) என்று அந்த மக்கள் கூறினர்” என்று எம்முடைய நண்பர்களில் சிலர் அறிவித்ததாக இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) கூறுகின்றார்.

& அனஸ் (ரலி) அவர்களிடம் ஸாபித் பின் அஸ்லம் அல்புனானீ (ரஹ்), “அபூ ஹம்ஸா! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மணக் கொடையாக என்ன கொடுத்தார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரலி), “அவரை விடுதலை செய்து (அதையே மணக்கொடையாக ஆக்கி) அவரை மணந்துகொண்டார்கள்” என்று அனஸ் (ரலி) பதிலளித்தார்கள்.