அத்தியாயம்: 16, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2565

‏قَالَ ‏ ‏أَنَسٌ: ‏

وَشَهِدْتُ ‏ ‏وَلِيمَةَ ‏ ‏زَيْنَبَ ‏ ‏فَأَشْبَعَ النَّاسَ خُبْزًا وَلَحْمًا وَكَانَ يَبْعَثُنِي ‏ ‏فَأَدْعُو النَّاسَ فَلَمَّا فَرَغَ قَامَ وَتَبِعْتُهُ فَتَخَلَّفَ رَجُلَانِ اسْتَأْنَسَ بِهِمَا الْحَدِيثُ لَمْ يَخْرُجَا فَجَعَلَ يَمُرُّ عَلَى نِسَائِهِ فَيُسَلِّمُ عَلَى كُلِّ وَاحِدَةٍ مِنْهُنَّ ‏ ‏سَلَامٌ عَلَيْكُمْ كَيْفَ أَنْتُمْ يَا أَهْلَ الْبَيْتِ فَيَقُولُونَ بِخَيْرٍ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ وَجَدْتَ أَهْلَكَ فَيَقُولُ بِخَيْرٍ فَلَمَّا فَرَغَ رَجَعَ وَرَجَعْتُ مَعَهُ فَلَمَّا بَلَغَ الْبَابَ إِذَا هُوَ بِالرَّجُلَيْنِ قَدْ اسْتَأْنَسَ بِهِمَا الْحَدِيثُ فَلَمَّا رَأَيَاهُ قَدْ رَجَعَ قَامَا فَخَرَجَا فَوَاللَّهِ مَا أَدْرِي أَنَا أَخْبَرْتُهُ أَمْ أُنْزِلَ عَلَيْهِ الْوَحْيُ بِأَنَّهُمَا قَدْ خَرَجَا فَرَجَعَ وَرَجَعْتُ مَعَهُ فَلَمَّا وَضَعَ رِجْلَهُ فِي ‏ ‏أُسْكُفَّةِ ‏ ‏الْبَابِ أَرْخَى الْحِجَابَ بَيْنِي وَبَيْنَهُ وَأَنْزَلَ اللَّهُ تَعَالَى هَذِهِ الْآيَةَ ‏ ” ‏لَا تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَنْ يُؤْذَنَ لَكُمْ ‏‏ “ الْآيَةَ

ஸைனப் (ரலி) அவர்களின் மணவிருந்திலும் நான் கலந்துகொண்டிருக்கின்றேன். அவ்விருந்தில் ரொட்டியையும் இறைச்சியையும் வயிறு நிரம்ப உண்ணக் கொடுத்தார்கள். (முன்னதாக) மக்களை அழைப்பதற்காக என்னை அனுப்பிக்கொண்டிருந்தார்கள். (விருந்து) முடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எழுந்து செல்ல, நானும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். (வந்த விருந்தினருள்) இருவர் எழுந்து செல்லாமல் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் (மற்ற) துணைவியரிடம் சென்று, அவர்களில் ஒவ்வொருவருக்கும் “ஸலாமுன் அலைக்கும்” என முகமன் சொல்லிவிட்டு, “வீட்டாரே! எப்படி இருக்கிறீர்கள்?” என (குசலம்) விசாரிக்கலானார்கள். அதற்கு அவர்கள் “நலமுடன் உள்ளோம், அல்லாஹ்வின் தூதரே! தங்களின் (புதிய) துணைவி எப்படி?” என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நன்று” என்றார்கள்.

பேசி முடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) திரும்பிச் செல்ல, அவர்களுடன் நானும் திரும்பினேன். (புது மணப்பெண் தங்கியிருந்த வீட்டின்) வாசலை எட்டிவிட்டபோதும் அவ்விருவரும் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) திரும்பிச் செல்ல, அதைக் கண்ட அவ்விருவரும் எழுந்து வெளியேறிவிட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த இருவரும் வெளியேறிவிட்டார்கள் என்று நான் அவர்களுக்குத் தெரிவித்தேனா அல்லது இறையறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டதா என்று எனக்குத் தெரியவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) திரும்பிவந்தார்கள். அவர்களுடன் நானும் வந்தேன். அவர்கள் தமது காலை வாசற்படியில் வைத்ததும் எனக்கும் தமக்குமிடையே திரையைத் தொங்கவிட்டார்கள். உயர்ந்தோன் அல்லாஹ், “நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப்பட்டால் தவிர (உணவுண்ணச்) செல்லாதீர்கள்…” எனும் இந்த (33:53ஆவது) வசனத்தை அருளினான்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)