அத்தியாயம்: 16, பாடம்: 15, ஹதீஸ் எண்: 2572

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَعْفَرٌ يَعْنِي ابْنَ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏الْجَعْدِ أَبِي عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ: ‏

تَزَوَّجَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَدَخَلَ بِأَهْلِهِ قَالَ فَصَنَعَتْ أُمِّي ‏ ‏أُمُّ سُلَيْمٍ ‏ ‏حَيْسًا ‏ ‏فَجَعَلَتْهُ فِي ‏ ‏تَوْرٍ ‏ ‏فَقَالَتْ يَا ‏ ‏أَنَسُ ‏ ‏اذْهَبْ بِهَذَا إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقُلْ بَعَثَتْ بِهَذَا إِلَيْكَ أُمِّي وَهِيَ تُقْرِئُكَ السَّلَامَ وَتَقُولُ إِنَّ هَذَا لَكَ مِنَّا قَلِيلٌ يَا رَسُولَ اللَّهِ قَالَ فَذَهَبْتُ بِهَا إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقُلْتُ إِنَّ أُمِّي تُقْرِئُكَ السَّلَامَ وَتَقُولُ إِنَّ هَذَا لَكَ مِنَّا قَلِيلٌ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ ‏ ‏ضَعْهُ ثُمَّ قَالَ اذْهَبْ فَادْعُ لِي فُلَانًا وَفُلَانًا وَفُلَانًا وَمَنْ لَقِيتَ وَسَمَّى رِجَالًا قَالَ فَدَعَوْتُ مَنْ سَمَّى وَمَنْ لَقِيتُ قَالَ قُلْتُ ‏ ‏لِأَنَسٍ ‏ ‏عَدَدَ كَمْ كَانُوا قَالَ ‏ ‏زُهَاءَ ‏ ‏ثَلَاثِ مِائَةٍ وَقَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا ‏ ‏أَنَسُ ‏ ‏هَاتِ ‏ ‏التَّوْرَ ‏ ‏قَالَ فَدَخَلُوا حَتَّى امْتَلَأَتْ ‏ ‏الصُّفَّةُ ‏ ‏وَالْحُجْرَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِيَتَحَلَّقْ عَشَرَةٌ عَشَرَةٌ وَلْيَأْكُلْ كُلُّ إِنْسَانٍ مِمَّا يَلِيهِ قَالَ فَأَكَلُوا حَتَّى شَبِعُوا قَالَ فَخَرَجَتْ طَائِفَةٌ وَدَخَلَتْ طَائِفَةٌ حَتَّى أَكَلُوا كُلُّهُمْ فَقَالَ لِي يَا ‏ ‏أَنَسُ ‏ ‏ارْفَعْ قَالَ فَرَفَعْتُ فَمَا أَدْرِي حِينَ وَضَعْتُ كَانَ أَكْثَرَ أَمْ حِينَ رَفَعْتُ قَالَ وَجَلَسَ طَوَائِفُ مِنْهُمْ يَتَحَدَّثُونَ فِي بَيْتِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏جَالِسٌ وَزَوْجَتُهُ مُوَلِّيَةٌ وَجْهَهَا إِلَى الْحَائِطِ فَثَقُلُوا عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَخَرَجَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَلَّمَ عَلَى نِسَائِهِ ثُمَّ رَجَعَ فَلَمَّا رَأَوْا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدْ رَجَعَ ظَنُّوا أَنَّهُمْ قَدْ ثَقُلُوا عَلَيْهِ قَالَ فَابْتَدَرُوا الْبَابَ فَخَرَجُوا كُلُّهُمْ وَجَاءَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى أَرْخَى السِّتْرَ وَدَخَلَ وَأَنَا جَالِسٌ فِي الْحُجْرَةِ فَلَمْ يَلْبَثْ إِلَّا يَسِيرًا حَتَّى خَرَجَ عَلَيَّ وَأُنْزِلَتْ هَذِهِ الْآيَةُ فَخَرَجَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَرَأَهُنَّ عَلَى النَّاسِ ”‏يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَنْ يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ ‏ ‏إِنَاهُ ‏ ‏وَلَكِنْ إِذَا دُعِيتُمْ فَادْخُلُوا فَإِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوا وَلَا مُسْتَأْنِسِينَ لِحَدِيثٍ إِنَّ ذَلِكُمْ كَانَ يُؤْذِي النَّبِيَّ“ ‏  ‏‏إِلَى آخِرِ الْآيَةِ ‏


قَالَ ‏ ‏الْجَعْدُ ‏ ‏قَالَ ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ ‏ ‏أَنَا أَحْدَثُ النَّاسِ عَهْدًا بِهَذِهِ الْآيَاتِ وَحُجِبْنَ نِسَاءُ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) அவர்களை) மணமுடித்து, மண வாழ்வைத் தொடங்கிய நாளில் என் தாயார் உம்மு ஸுலைம் (ரலி) ‘ஹைஸ்’ எனும் பலகாரத்தைச் செய்து, அதை ஒரு (கல்) பாத்திரத்தில் வைத்து, “அனஸே! இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று, இதை என் தாயார் உங்களுக்காகக் கொடுத்தனுப்பியுள்ளார். அவர் உங்களுக்கு ஸலாம் சொல்லச் சொன்னார்; அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்கு எங்களின் சிறியதளவு (அன்பளிப்பு) ஆகும் என்றும் கூறினார் எனச் சொல்” என்றார்கள்.

அவ்வாறே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டுசென்று, “என் தாயார் உங்களுக்கு ஸலாம் கூறினார். அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்கு எங்களால் முடிந்த சிறிதளவு (அன்பளிப்பு) ஆகும் என்று கூறினார்” என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அதை (ஓரிடத்தில்) வை” என்று கூறிவிட்டு, “நீ சென்று எனக்காக இன்னாரையும் இன்னாரையும் இன்னாரையும் மற்றும் நீ சந்திப்பவர்களையும் அழைத்து வா!” என்று கூறி, சிலரது பெயர்களைக் குறிப்பிட்டார்கள். அவ்வாறே அவர்கள் பெயர் குறிப்பிட்டவர்களையும் நான் சந்தித்தவர்களையும் அழைத்துவிட்டு வந்தேன்.

என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அனஸ்! அந்தப் பாத்திரத்தை எடு” என்றார்கள். அப்போது மக்கள் வந்து நுழைந்தனர். (வீட்டின்) திண்ணையும் அறையும் நிரம்பியது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “பத்துப் பத்துப் பேராக வட்டமாக அமர்ந்து, ஒவ்வொருவரும் தமது கைக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து (எடுத்து) உண்ணட்டும்” என்றார்கள். அவ்வாறே அவர்கள் (பத்துப் பேர் வந்து) வயிறு நிரம்ப உண்டனர். ஒரு குழுவினர் சாப்பிட்டுவிட்டுச் சென்றதும் மற்றொரு குழுவினர் வந்தனர். இவ்வாறு அவர்கள் அனைவரும் உண்டனர்.

அப்போது, “அனஸ்! அந்தப் பாத்திரத்தைத் தூக்கு” என்றார்கள். நான் அந்தப் பாத்திரத்தைத் தூக்கியபோது, நான் அதைக் கீழே வைத்தபோது அதிகமாக இருந்ததா, அல்லது தூக்கியபோது அதிகமாக இருந்ததா என எனக்குத் தெரியவில்லை.

மக்கள் (புறப்பட்டுச் சென்ற பிறகு) ஒரு சிலர் மட்டும் (எழுந்து செல்லாமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார் (ஸைனப் (ரலி)) தமது முகத்தைச் சுவர் பக்கம் திருப்பிக்கொண்டிருந்தார். அ(ங்கு அமர்ந்திருந்த)வர்கள் (எழுந்து செல்லாமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடையூறாக இருந்தனர்.

எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புறப்பட்டுத் தம்முடைய மற்றத் துணைவியரிடம் சென்று ஸலாம் சொல்லி (நலம் விசாரித்து)விட்டுத் திரும்பிவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) திரும்பிவந்துவிட்டததைக் கண்டபோது, அக்குழுவினர் நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடையூறாக இருந்துவிட்டோம் என்று எண்ணினர். ஆகவே, வீட்டு வாசலை நோக்கி விரைந்துவந்து அனைவரும் வெளியேறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்து திரையைத் தொங்க விட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைந்துகொண்டார்கள். நான் அந்த அறையில் அமர்ந்திருந்தேன். சிறிது நேரம்தான் (வீட்டுக்குள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இருந்திருப்பார்கள். அதற்குள் வெளியேறி என்னிடம் வந்தார்கள். அப்போது (அவர்களுக்கு) இந்த (33:53ஆவது) வசனம் அருளப்பெற்றிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்து மக்களுக்கு அவ்வசனங்களை ஓதிக் காட்டினார்கள். “இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (அங்கு நடக்கும்) விருந்திற்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும்கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இருக்க வேண்டாம். மாறாக, நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்து விடாதீர்கள். நிச்சயமாக, உங்களது இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கிறது” என்பதே அந்த வசனமாகும்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

குறிப்பு :

“இந்த வசனம் இறங்கிய பின்னணியையும் நபி (ஸல்) அவர்களின் துணைவியர் ஹிஜாபில் இருந்ததையும் மக்களிலேயே நன்கறிந்திருந்தவன் நானாவேன்” என்று அனஸ் பின் மாலிக் (ரலி) கூறினார்கள் என்றும் “விருந்துக்கு வந்தவர்கள் . எத்தனை பேர்?” என நான் வினவியதற்கு, “ஏறக்குறைய முன்னூறு பேர் இருந்தார்கள்” என அனஸ் (ரலி) விடையளித்தார்கள் என்றும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அபூஉஸ்மான் அல்ஜஅத் பின் தீனார் (ரஹ்) கூறுகின்றார்.