அத்தியாயம்: 18, பாடம்: 5, ஹதீஸ் எண்: 2707

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ ‏ ‏وَتَقَارَبَا فِي لَفْظِ الْحَدِيثِ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏و قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي ثَوْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ: ‏

‏لَمْ أَزَلْ حَرِيصًا أَنْ أَسْأَلَ ‏ ‏عُمَرَ ‏ ‏عَنْ الْمَرْأَتَيْنِ مِنْ أَزْوَاجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اللَّتَيْنِ قَالَ اللَّهُ تَعَالَى” ‏إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ ‏ ‏صَغَتْ ‏ ‏قُلُوبُكُمَا “‏ ‏حَتَّى حَجَّ ‏ ‏عُمَرُ ‏ ‏وَحَجَجْتُ مَعَهُ فَلَمَّا كُنَّا بِبَعْضِ الطَّرِيقِ عَدَلَ ‏ ‏عُمَرُ ‏ ‏وَعَدَلْتُ ‏ ‏مَعَهُ ‏ ‏بِالْإِدَاوَةِ ‏ ‏فَتَبَرَّزَ ثُمَّ أَتَانِي فَسَكَبْتُ عَلَى يَدَيْهِ فَتَوَضَّأَ فَقُلْتُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ ‏ ‏مَنْ الْمَرْأَتَانِ مِنْ أَزْوَاجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اللَّتَانِ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُمَا : ‏ ‏إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ ‏ ‏صَغَتْ قُلُوبُكُمَا

‏قَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏وَاعَجَبًا لَكَ يَا ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏كَرِهَ وَاللَّهِ مَا سَأَلَهُ عَنْهُ وَلَمْ يَكْتُمْهُ قَالَ هِيَ ‏ ‏حَفْصَةُ ‏ ‏وَعَائِشَةُ ‏ ‏ثُمَّ أَخَذَ يَسُوقُ الْحَدِيثَ قَالَ كُنَّا مَعْشَرَ ‏ ‏قُرَيْشٍ ‏ ‏قَوْمًا نَغْلِبُ النِّسَاءَ فَلَمَّا قَدِمْنَا ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏وَجَدْنَا قَوْمًا تَغْلِبُهُمْ نِسَاؤُهُمْ ‏ ‏فَطَفِقَ ‏ ‏نِسَاؤُنَا يَتَعَلَّمْنَ مِنْ نِسَائِهِمْ قَالَ وَكَانَ مَنْزِلِي فِي ‏ ‏بَنِي أُمَيَّةَ بْنِ زَيْدٍ ‏ ‏بِالْعَوَالِي ‏ ‏فَتَغَضَّبْتُ يَوْمًا عَلَى امْرَأَتِي فَإِذَا هِيَ ‏ ‏تُرَاجِعُنِي ‏ ‏فَأَنْكَرْتُ أَنْ ‏ ‏تُرَاجِعَنِي ‏ ‏فَقَالَتْ مَا تُنْكِرُ أَنْ أُرَاجِعَكَ فَوَاللَّهِ إِنَّ أَزْوَاجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيُرَاجِعْنَهُ ‏ ‏وَتَهْجُرُهُ إِحْدَاهُنَّ الْيَوْمَ إِلَى اللَّيْلِ فَانْطَلَقْتُ فَدَخَلْتُ عَلَى ‏ ‏حَفْصَةَ ‏ ‏فَقُلْتُ أَتُرَاجِعِينَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ نَعَمْ فَقُلْتُ أَتَهْجُرُهُ إِحْدَاكُنَّ الْيَوْمَ إِلَى اللَّيْلِ قَالَتْ نَعَمْ قُلْتُ قَدْ خَابَ مَنْ فَعَلَ ذَلِكَ مِنْكُنَّ وَخَسِرَ أَفَتَأْمَنُ إِحْدَاكُنَّ أَنْ يَغْضَبَ اللَّهُ عَلَيْهَا لِغَضَبِ رَسُولِهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِذَا هِيَ قَدْ هَلَكَتْ لَا تُرَاجِعِي رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلَا تَسْأَلِيهِ شَيْئًا وَسَلِينِي مَا بَدَا لَكِ وَلَا يَغُرَّنَّكِ أَنْ كَانَتْ جَارَتُكِ هِيَ أَوْسَمَ وَأَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْكِ يُرِيدُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَ وَكَانَ لِي ‏ ‏جَارٌ ‏ ‏مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏فَكُنَّا نَتَنَاوَبُ النُّزُولَ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَيَنْزِلُ يَوْمًا وَأَنْزِلُ يَوْمًا فَيَأْتِينِي بِخَبَرِ الْوَحْيِ وَغَيْرِهِ وَآتِيهِ بِمِثْلِ ذَلِكَ وَكُنَّا نَتَحَدَّثُ أَنَّ ‏ ‏غَسَّانَ ‏ ‏تُنْعِلُ الْخَيْلَ لِتَغْزُوَنَا فَنَزَلَ صَاحِبِي ثُمَّ أَتَانِي عِشَاءً فَضَرَبَ بَابِي ثُمَّ نَادَانِي فَخَرَجْتُ إِلَيْهِ فَقَالَ حَدَثَ أَمْرٌ عَظِيمٌ قُلْتُ مَاذَا أَجَاءَتْ ‏ ‏غَسَّانُ ‏ ‏قَالَ لَا بَلْ أَعْظَمُ مِنْ ذَلِكَ وَأَطْوَلُ طَلَّقَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نِسَاءَهُ فَقُلْتُ قَدْ خَابَتْ ‏ ‏حَفْصَةُ ‏ ‏وَخَسِرَتْ قَدْ كُنْتُ أَظُنُّ هَذَا كَائِنًا حَتَّى إِذَا صَلَّيْتُ الصُّبْحَ شَدَدْتُ عَلَيَّ ثِيَابِي ثُمَّ نَزَلْتُ فَدَخَلْتُ عَلَى ‏ ‏حَفْصَةَ ‏ ‏وَهِيَ تَبْكِي فَقُلْتُ أَطَلَّقَكُنَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ لَا أَدْرِي هَا هُوَ ذَا مُعْتَزِلٌ فِي هَذِهِ ‏ ‏الْمَشْرُبَةِ ‏ ‏فَأَتَيْتُ غُلَامًا لَهُ أَسْوَدَ فَقُلْتُ اسْتَأْذِنْ ‏ ‏لِعُمَرَ ‏ ‏فَدَخَلَ ثُمَّ خَرَجَ إِلَيَّ فَقَالَ قَدْ ذَكَرْتُكَ لَهُ فَصَمَتَ فَانْطَلَقْتُ حَتَّى انْتَهَيْتُ إِلَى الْمِنْبَرِ فَجَلَسْتُ فَإِذَا عِنْدَهُ ‏ ‏رَهْطٌ ‏ ‏جُلُوسٌ يَبْكِي بَعْضُهُمْ فَجَلَسْتُ قَلِيلًا ثُمَّ غَلَبَنِي مَا أَجِدُ ثُمَّ أَتَيْتُ الْغُلَامَ فَقُلْتُ اسْتَأْذِنْ ‏ ‏لِعُمَرَ ‏ ‏فَدَخَلَ ثُمَّ خَرَجَ إِلَيَّ فَقَالَ قَدْ ذَكَرْتُكَ لَهُ فَصَمَتَ فَوَلَّيْتُ ‏ ‏مُدْبِرًا ‏ ‏فَإِذَا الْغُلَامُ يَدْعُونِي فَقَالَ ادْخُلْ فَقَدْ أَذِنَ لَكَ فَدَخَلْتُ فَسَلَّمْتُ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِذَا هُوَ مُتَّكِئٌ عَلَى ‏ ‏رَمْلِ ‏ ‏حَصِيرٍ قَدْ أَثَّرَ فِي جَنْبِهِ فَقُلْتُ أَطَلَّقْتَ يَا رَسُولَ اللَّهِ نِسَاءَكَ فَرَفَعَ رَأْسَهُ إِلَيَّ وَقَالَ لَا فَقُلْتُ اللَّهُ أَكْبَرُ لَوْ رَأَيْتَنَا يَا رَسُولَ اللَّهِ وَكُنَّا مَعْشَرَ ‏ ‏قُرَيْشٍ ‏ ‏قَوْمًا نَغْلِبُ النِّسَاءَ فَلَمَّا قَدِمْنَا ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏وَجَدْنَا قَوْمًا تَغْلِبُهُمْ نِسَاؤُهُمْ فَطَفِقَ نِسَاؤُنَا يَتَعَلَّمْنَ مِنْ نِسَائِهِمْ فَتَغَضَّبْتُ عَلَى امْرَأَتِي يَوْمًا فَإِذَا هِيَ ‏ ‏تُرَاجِعُنِي ‏ ‏فَأَنْكَرْتُ أَنْ ‏ ‏تُرَاجِعَنِي ‏ ‏فَقَالَتْ مَا تُنْكِرُ أَنْ أُرَاجِعَكَ فَوَاللَّهِ إِنَّ أَزْوَاجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيُرَاجِعْنَهُ ‏ ‏وَتَهْجُرُهُ إِحْدَاهُنَّ الْيَوْمَ إِلَى اللَّيْلِ فَقُلْتُ قَدْ خَابَ مَنْ فَعَلَ ذَلِكِ مِنْهُنَّ وَخَسِرَ أَفَتَأْمَنُ إِحْدَاهُنَّ أَنْ يَغْضَبَ اللَّهُ عَلَيْهَا لِغَضَبِ رَسُولِهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِذَا هِيَ قَدْ هَلَكَتْ فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ قَدْ دَخَلْتُ عَلَى ‏ ‏حَفْصَةَ ‏ ‏فَقُلْتُ لَا يَغُرَّنَّكِ أَنْ كَانَتْ جَارَتُكِ هِيَ أَوْسَمُ مِنْكِ وَأَحَبُّ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْكِ فَتَبَسَّمَ أُخْرَى فَقُلْتُ أَسْتَأْنِسُ يَا رَسُولَ اللَّهِ قَالَ نَعَمْ فَجَلَسْتُ فَرَفَعْتُ رَأْسِي فِي الْبَيْتِ فَوَاللَّهِ مَا رَأَيْتُ فِيهِ شَيْئًا يَرُدُّ الْبَصَرَ إِلَّا أُهَبًا ثَلَاثَةً فَقُلْتُ ادْعُ اللَّهَ يَا رَسُولَ اللَّهِ أَنْ يُوَسِّعَ عَلَى أُمَّتِكَ فَقَدْ وَسَّعَ عَلَى ‏ ‏فَارِسَ ‏ ‏وَالرُّومِ ‏ ‏وَهُمْ لَا يَعْبُدُونَ اللَّهَ فَاسْتَوَى جَالِسًا ثُمَّ قَالَ أَفِي شَكٍّ أَنْتَ يَا ‏ ‏ابْنَ الْخَطَّابِ ‏ ‏أُولَئِكَ قَوْمٌ عُجِّلَتْ لَهُمْ طَيِّبَاتُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا فَقُلْتُ اسْتَغْفِرْ لِي يَا رَسُولَ اللَّهِ وَكَانَ أَقْسَمَ أَنْ لَا يَدْخُلَ عَلَيْهِنَّ شَهْرًا مِنْ شِدَّةِ ‏ ‏مَوْجِدَتِهِ ‏ ‏عَلَيْهِنَّ حَتَّى عَاتَبَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ

நான் நீண்ட நாட்களாக நபி (ஸல்) அவர்களுடைய மனைவியருள் இருவரைப் பற்றி உமர் (ரலி) அவர்களிடம் கேட்க வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தேன். (ஏனெனில், அவ்விருவரைப் பற்றித்தான்) உயர்ந்தோன் அல்லாஹ் (குர்ஆனில்), “நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கு) நல்லது. உங்கள் இருவரின் உள்ளங்களும் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்துவிட்டிருக்கின்றன” (66:4) என்று கூறியிருந்தான்.

உமர் (ரலி) ஹஜ்ஜுக்குச் சென்றபோது நானும் அவர்களுடன் ஹஜ் செய்தேன். (ஹஜ்ஜை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில்) உமர் (ரலி) (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக) ஒதுங்கினார்கள். அவர்களுடன் நானும் நீர்குவளையுடன் சென்றேன். அவர்கள் இயற்கைக் கடனை முடித்துவிட்டு என்னிடம் திரும்பிவந்தார்கள். நான் அவர்களின் கைகளில் (குவளையிலிருந்த) தண்ணீரை ஊற்றினேன். அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது நான் அவர்களிடம் “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நபி (ஸல்) அவர்களுடைய மனைவியருள் இருவரைக் குறித்து, ‘நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கு) நல்லது. உங்கள் இருவரின் உள்ளங்களும் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்துவிட்டிருக்கின்றன’ (66:4) என்று அல்லாஹ் கூறியுள்ளானே, அந்த இருவர் யாவர்?” என்று கேட்டேன். அதற்கு உமர் (ரலி), “இப்னு அப்பாஸே! உங்களை எண்ணி நான் வியப்படைகின்றேன்@. ஹஃப்ஸாவும் ஆயிஷாவும்தாம் அந்த இருவர்” என்று விடையளித்தார்கள்.

பிறகு உமர் (ரலி) நடந்த நிகழ்ச்சி முழுவதையும் கூறலானார்கள்:

குறைஷிக் குலத்தாராகிய நாங்கள் (மக்காவில் இருந்தபோது) பெண்களை மிகைத்தவர்களாகவே இருந்துவந்தோம். (எங்களை எதிர்த்துப் பேசாத அளவிற்கு அவர்களை அடக்கிவைத்திருந்தோம்.) நாங்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவிற்கு வந்தபோது, அங்கு ஆண்களைப் பெண்கள் மிகைக்கக்கூடியவர்களாக இருந்ததைக் கண்டோம். இதை எங்களுடைய பெண்களும் மதீனத்துப் பெண்களிடமிருந்து கற்றுக்கொள்ளத் தொடங்கினர்.

எனது வீடு (மதீனாவின்) மேட்டுப் பகுதி கிராமங்களில் பனூ உமய்யா பின் ஸைத் குலத்தாரிடையே இருந்தது. (ஒரு நாள்) நான் என் மனைவிமீது கோபப்பட்டேன். அவர் என்னை எதிர்த்துப் பேசினார். அவர் என்னை எதிர்த்துப் பேசிய(து எனக்குப் பிடிக்கவில்லை; அ)தை நான் வெறுத்தேன். அப்போது அவர், “நான் உங்களை எதிர்த்துப் பேசியதற்காக நீங்கள் ஏன் (என்னை) வெறுக்கின்றீர்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களுடைய மனைவியர்கூட (சிலபோது) எதிர்ப்பேச்சு பேசத்தான் செய்கிறார்கள். அவர்களில் சிலர் நபியவர்களிடம் பகலில் இருந்து இரவுவரை பேசுவதில்லை (தெரியுமா?)” என்று கூறினார்.

உடனே நான் அங்கிருந்து புறப்பட்டு (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்று, “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசுவதுண்டா?” என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா “ஆம்”  என்று பதிலளித்தார். நான், “உங்களில் சிலர் அல்லாஹ்வின் தூதரிடம் பகலில் இருந்து இரவுவரை கோபமாக இருப்பதுண்டா?” என்று கேட்டேன். அதற்கும் ஹஃப்ஸா “ஆம்” என்றார். நான், “அவர்களில் இப்படிச் செய்தவர் இழப்புக்குள்ளாகி விட்டார். உங்களில் ஒருவர்மீது இறைத்தூதருக்குக் கோபம் ஏற்பட்டால் அவர்மீது அல்லாஹ்வும் கோபமடைந்துவிடுவான் எனும் அச்சம் இல்லாவிட்டால் அவர் அழிந்துபோய்விடுவார். (எனவே,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நீ எதிர்த்துப் பேசாதே! அவர்களிடம் (அதிகமாக உன் தேவைகள்) எதையும் கேட்டுக்கொண்டிராதே! உனக்கு(அவசியத் தேவையென)த் தோன்றியதை என்னிடம் கேள். உன் அண்டை வீட்டுக்காரர் (ஆயிஷா) உன்னை விட அழகு மிக்கவராகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிரியமானவராகவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களிடம் நடந்துகொள்வதைப் பார்த்து) நீ ஏமாறி (அவரைப் போல நடந்துகொள்ளத் துணிந்து)விடாதே!” என்று நான் (என் மகளுக்கு அறிவுரை) கூறினேன்.

எனக்கு அன்ஸாரிகளில் அண்டை வீட்டார் ஒருவர் இருந்தார். நாங்கள் இருவரும் (மேட்டுப் பாங்கான எங்கள் கிராமத்திலிருந்து) முறை வைத்துக்கொண்டு (அங்கிருந்து) இறங்கிவந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருப்போம். அவர் ஒரு நாள் நபியவர்களுடன் இருப்பார். நான் மறுநாள் நபியவர்களுடன் இருப்பேன். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருக்கும் அன்றைய நாளின் வேத அறிவிப்புகள் (நபியவர்களின் சொல், செயல்) முதலானவற்றை என்னிடம் வந்து தெரிவிப்பார். அதைப் போன்றே நானும் செய்வேன்.

அந்தக் கால கட்டத்தில் நாங்கள் (சிரியா நாட்டில் வாழும்) ‘ஃகஸ்ஸான்’ குலத்தார் எங்கள் (மதீனா) மீது போர் தொடுப்பதற்காக (தங்கள்) குதிரைகளுக்கு லாடம் அடித்து(த் தயாராகி)க்கொண்டிருக்கின்றனர் என்று ஒரு செய்தியைப் பேசிக்கொண்டிருந்தோம். (அவ்வாறிருக்க ஒரு நாள்) என் நண்பர் (தமது முறை நாளில் எங்கள் பகுதியிலிருந்து) இறங்கி (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றுவிட்டு) இஷா நேரத்தில் என்னிடம் வந்து என் வீட்டுக் கதவை (பலமாகத்) தட்டி, என்னை அழைத்தார். நான் வெளியே வந்தபோது “(இன்று) மிகப்பெரிய சம்பவமொன்று நடந்துவிட்டது” என்று கூறினார். நான், “என்ன அது? ஃகஸ்ஸானியர் (படையெடுத்து) வந்துவிட்டனரா?” என்று கேட்டேன். “இல்லை; அதைவிடப் பெரிய, அதைவிடக் கடுமையான சம்பவம் நடந்துவிட்டது; நபி (ஸல்) தம் மனைவியரை மணவிலக்குச் செய்துவிட்டார்கள்” என்று சொன்னார்.

உடனே நான் “(என் மகள்) ஹஃப்ஸா இழப்புக்குள்ளாகிவிட்டார். (கூடிய விரைவில்) இப்படி நடக்கத்தான்போகிறது என்று நான் எண்ணியிருந்தேன்” என்று கூறிவிட்டு, சுப்ஹுத் தொழுகை தொழுததும் எனது மேலங்கியை எடுத்து அணிந்துகொண்டு (அங்கிருந்து) இறங்கி என் மகள் ஹஃப்ஸாவிடம் சென்றேன்; அவர் அழுதுகொண்டிருந்தார். அவரிடம் நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உங்களை மணவிலக்குச் செய்து விட்டார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர் “எனக்குத் தெரியாது; அதோ அவர்கள் அந்த மாடி அறையில் தனியாக இருக்கின்றார்கள்” என்று கூறினார். உடனே நான் (அங்கு இருந்த) நபியவர்களின் பணியாளரான கருப்பரிடம் சென்று, “உமருக்காக (நபியவர்களின் அறைக்குள் வர) அனுமதி கேள்” என்றேன்.அவர் உள்ளே சென்றுவிட்டு என்னிடம் வந்து, “அவர்களிடம் உங்களைப் பற்றிச் சொன்னேன். அவர்கள் மௌனமாக இருந்துவிட்டார்கள்” என்று கூறினார்.

உடனே நான் அங்கிருந்து அகன்று சொற்பொழிவு மேடை (மிம்பர்) அருகே சென்று அமர்ந்துவிட்டேன். அங்கு ஒரு கூட்டத்தார் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் சிலர் (கேள்விப்பட்ட செய்தியை எண்ணி) அழுதுகொண்டிருந்தனர். நான் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். பிறகு துக்கம் தாளாமல் (மீண்டும்) அந்தப் பணியாளரிடம் நான் வந்து, “உமருக்காக (நபியவர்களின் அறைக்குள் வர) அனுமதி கேள்” என்று சொன்னேன். அவர் உள்ளே சென்றுவிட்டுப் பிறகு என்னிடம் வந்து “நான் நபியவர்களிடம் உங்களைப் பற்றிச் சொன்னேன். அவர்கள் மௌனமாக இருந்துவிட்டார்கள்” என்று கூறினார். எனவே, நான் திரும்பலானேன். அப்போது அந்தப் பணியாளர் என்னை அழைத்து, “உள்ளே செல்லுங்கள்! உங்களுக்கு நபியவர்கள் அனுமதியளித்துவிட்டார்கள்” என்று கூறினார். உடனே நான் (அந்த அறைக்குள்) நுழைந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அங்கு அவர்கள் நெய்யப்பட்ட பாய் ஒன்றில் சாய்ந்து படுத்திருந்தார்கள். அவர்களது விலாப் பகுதியில் அந்தப் பாய் அடையாளம் பதித்திருந்தது.

பிறகு, “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மனைவியரைத் தாங்கள் மணவிலக்குச் செய்துவிட்டீர்களா?” என்று கேட்டேன். நபியவர்கள் என்னை நோக்கி தமது தலையை உயர்த்தி “இல்லை” என்று கூறினார்கள். உடனே நான், “அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)” என்று சொன்னேன்.

பிறகு,“அல்லாஹ்வின் தூதரே! குறைஷிக் குலத்தாராகிய நாங்கள் பெண்களை அடக்கிவைத்திருந்தோம். நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது, ஆண்கள்மீது பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கூட்டத்தாரை(அன்ஸாரிகளை)க் கண்டோம். எங்கள் பெண்களும் அப்பெண்களைப் பார்த்து (ஆண்களை எதிர்த்துப் பேசும் பழக்கத்தைக்) கற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். நான் ஒரு நாள் என் மனைவிமீது கோபம் கொண்டேன். அவர் அப்போது என்னை எதிர்த்துப் பேசினார். அவர் என்னிடம் எதிர்த்துப் பேசிய(தை நான் விரும்பவில்லை; அ)தை நான் வெறுத்தேன். அப்போது அவர், “நான் உங்களை எதிர்த்துப் பேசுவதை வெறுக்கின்றீர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களின் மனைவியரும்கூட நபியவர்களின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசுகின்றனரே!. அவர்களில் ஒருவர் நபியவர்களுடன் பிணங்கிக்கொண்டு அன்றைய தினத்தில் இரவுவரை பேசுவதில்லை (தெரியுமா?)” என்று கூறினார். நான் “அவர்களில் இப்படிச் செய்தவர் இழப்புக்குள்ளாகிவிட்டார். அவர்களில் ஒருவர்மீது இறைத்தூதருக்குக் கோபம் ஏற்பட்டால் அவர்மீது அல்லாஹ்வும் கோபமடைந்து விடுவான் எனும் அச்சம் அவருக்கில்லையா? அவ்வாறாயின் அவர் அழிந்துபோய்விடுவார் என்று சொன்னேன்” என்று கூறினேன். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புன்னகைத்தார்கள்.

பிறகு நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்று, “உன் அண்டை வீட்டுக்காரர் (ஆயிஷா) உன்னைவிட அழகானவராகவும் அல்லாஹ்வின் தூதருக்குப் பிரியமானவராகவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வதைக் கண்டு) நீ ஏமாறிவிடாதே!” என்று கூறியதைச் சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இன்னொரு முறை புன்னகைத்தார்கள்.

நான் “அல்லாஹ்வின் தூதரே! (தங்களுடன் அமர்ந்து தங்களது) வெறுமையைப் போக்கட்டுமா?” என்று கேட்டேன். அவர்கள் “சரி” என்றார்கள். உடனே நான் அமர்ந்துகொண்டேன். பிறகு எனது தலையை உயர்த்தி அந்த அறையை நோட்டமிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! கண்ணைக் கவருகின்ற எந்தப் பொருளையும் நான் காணவில்லை; மூன்றே மூன்று தோல்களைத் தவிர! அப்போது நான் “தங்கள் சமுதாயத்தாருக்கு(உலகச் செல்வங்களை)த் தாராளமாக வழங்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள், அல்லாஹ்வின் தூதரே! ஏனெனில், பாரசீகர்களுக்கும் ரோமரும் -அவர்கள் (ஏக இறைவன்) அல்லாஹ்வை வழிபடாதவர்களாக இருந்தும்- உலகச் செல்வங்களை அல்லாஹ் தாராளமாக வழங்கியுள்ளானே?” என்று கூறினேன்.

உடனே (தலையணையில் சாய்ந்து அமர்ந்திருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நிமிர்ந்து அமர்ந்துகொண்டு, “உங்களுக்கு இன்னும் (இத்தகைய) சந்தேகம் உண்டா, கத்தாபின் மகனே? அவர்கள், தமக்குரிய இன்பங்களை இவ்வுலக வாழ்விலேயே (மறுமைக்கு) முன்னதாகவே வழங்கப்பட்டுவிட்ட மக்கள் ஆவர்” என்று கூறினார்கள். உடனே நான், “அல்லாஹ்வின் தூதரே! (அவசரப்பட்டுக் கேட்டுவிட்ட) எனக்காக பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தம் மனைவியர்மீது ஏற்பட்ட கடும் கோபத்தின் காரணமாக “(என் மனைவியரான) அவர்களிடம் ஒரு மாத காலத்திற்கு நான் செல்ல மாட்டேன்” எனச் சத்தியம் செய்திருந்தார்கள். இறுதியில் (66:1ஆவது வசனத்தை இறக்கி) நபியவர்களை அல்லாஹ் கண்டித்தான்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)


குறிப்புகள் :

@அறிவிப்பாளர்களுள் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! இப்னு அப்பாஸ் (ரலி) தம்மிடம் தம் மகள் தொடர்பான ஒரு வசனத்தைக் குறித்துக் கேட்டதை உமர் (ரலி) விரும்பவில்லை. ஆகவேதான், “உங்களை எண்ணி வியப்படைகின்றேன்” என்றார்கள். ஆயினும், அதற்குரிய பதிலை உமர் (ரலி) மறைக்கவில்லை).

“இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரியின் கருத்துத் தவறானதாகும். ‘உங்களை எண்ணி வியப்படைகின்றேன்’ என்று உமர் (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறியது, ‘இதைக் கேட்க இவ்வளவு காலம் தாமதித்தது ஏன்?’ எனும் கருத்திலாம்” என்று இமாம் குர்துபீ (ரஹ்) விளக்கியுள்ளார்.

Share this Hadith: