அத்தியாயம்: 22, பாடம்: 18, ஹதீஸ் எண்: 2989

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏دَاوُدُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏قَالَ: ‏
سَأَلْتُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏وَابْنَ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏الصَّرْفِ ‏ ‏فَلَمْ يَرَيَا بِهِ بَأْسًا فَإِنِّي لَقَاعِدٌ عِنْدَ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏فَسَأَلْتُهُ عَنْ ‏ ‏الصَّرْفِ ‏ ‏فَقَالَ مَا زَادَ فَهُوَ رِبًا فَأَنْكَرْتُ ذَلِكَ لِقَوْلِهِمَا ‏ ‏فَقَالَ لَا أُحَدِّثُكَ إِلَّا مَا ‏
‏سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏جَاءَهُ صَاحِبُ نَخْلِهِ ‏ ‏بِصَاعٍ ‏ ‏مِنْ تَمْرٍ طَيِّبٍ وَكَانَ تَمْرُ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هَذَا اللَّوْنَ فَقَالَ لَهُ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّى لَكَ هَذَا قَالَ انْطَلَقْتُ ‏ ‏بِصَاعَيْنِ ‏ ‏فَاشْتَرَيْتُ بِهِ هَذَا الصَّاعَ فَإِنَّ سِعْرَ هَذَا فِي السُّوقِ كَذَا وَسِعْرَ هَذَا كَذَا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَيْلَكَ أَرْبَيْتَ إِذَا أَرَدْتَ ذَلِكَ فَبِعْ تَمْرَكَ بِسِلْعَةٍ ثُمَّ اشْتَرِ بِسِلْعَتِكَ أَيَّ تَمْرٍ شِئْتَ ‏
‏قَالَ ‏ ‏أَبُو سَعِيدٍ ‏ ‏فَالتَّمْرُ بِالتَّمْرِ أَحَقُّ أَنْ يَكُونَ رِبًا أَمْ الْفِضَّةُ بِالْفِضَّةِ ‏ ‏قَالَ ‏ ‏فَأَتَيْتُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏بَعْدُ ‏ ‏فَنَهَانِي وَلَمْ آتِ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏ ‏فَحَدَّثَنِي ‏ ‏أَبُو الصَّهْبَاءِ ‏ ‏أَنَّهُ سَأَلَ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏عَنْهُ ‏ ‏بِمَكَّةَ ‏ ‏فَكَرِهَهُ

நான் இப்னு உமர் (ரலி) மற்றும் இப்னு அப்பாஸ் (ரலி) ஆகிய இருவரிடமும் நாணயமாற்று வணிகம் பற்றிக் கேட்டேன். அவ்விருவரும் அதைக் குற்றமாகக் கருதவில்லை. பின்னர் நான் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது, நாணயமாற்று பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அபூஸயீத் (ரலி), “கூடுதலாக வருபவை வட்டியாகும்” என்றார்கள். இரு(மேற்சொன்ன)வரும் (வேறு விதமாக) கூறியிருந்ததால், நான் அபூஸயீத் (ரலி) கருத்தை ஆட்சேபித்தேன்.

அப்போது அபூஸயீத் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதையே நான் உம்மிடம் அறிவிக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அவர்களின் பேரீச்ச மரத் தோட்டக்காரர் ஒரு ‘ஸாஉ’ சிறந்த வகை பேரீச்சம் பழத்துடன் வந்தார். நபி (ஸல்) அவர்களது பேரீச்சம் பழம் தரம் குறைந்த (நாட்டு ரகப்) பழமாக இருந்தது.

ஆகவே, நபி (ஸல்) தம் தோட்டக்காரரிடம், “இது எங்கிருந்து கிடைத்தது?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “நான் (நம்முடைய பேரீச்சம் பழங்களில்) இரண்டு ‘ஸாஉ’களுடன் சென்று, அதற்குப் பதிலாக இந்த (சிறந்த வகை பழத்தின்) ஒரு ‘ஸாஉ’வை வாங்கி வந்தேன். கடைத் தெருவில் இந்தப் பேரீச்சம் பழத்தின் விலை இவ்வளவு; அந்தப் பேரீச்சம் பழத்தின் விலை இவ்வளவு” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உனக்குக் கேடுதான்; நீ வட்டி வியாபாரம் செய்துவிட்டாய். இ(ந்த சிறந்த வகை பழத்)தை நீ விரும்பினால், உனது பேரீச்சம் பழத்தை (வேறு) ஏதேனும் ஒரு பொருளுக்காக விற்றுவிட்டு, பிறகு அந்தப் பொருளுக்குப் பதிலாக நீ விரும்பும் எந்தப் பேரீச்சம் பழத்தை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்” என்றார்கள்.

அபூஸயீத் (ரலி), “(தரம் குறைந்த) பேரீச்சம் பழத்தை, (தரம் கூடிய) பேரீச்சம் பழத்திற்கு விற்பது வட்டியாக இருக்க அதிகத் தகுதியுடையதா?, (தரம் குறைந்த) வெள்ளியை, (தரம் கூடிய) வெள்ளிக்கு விற்பது வட்டியாக இருக்க அதிகத் தகுதியுடையதா?” என்று கேட்டார்கள். பின்னர் நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் சென்றபோது, ‘அவ்வாறு விற்க வேண்டாம்’ என அவர்கள் என்னைத் தடுத்தார்கள். பிறகு நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் செல்லவில்லை; (ஆயினும்,) அபுஸ்ஸஹ்பா (ரஹ்), “நான் மக்காவில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்டேன். அப்போது அவர்கள் அதை வெறுக்கத் தக்கதாகக் கருதினார்கள்” என்று என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) வழியாக அபூநள்ரா முன்திர் பின் மாலிக் (ரஹ்)

Share this Hadith: