அத்தியாயம்: 28, பாடம்: 11, ஹதீஸ் எண்: 3184

وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، ح وَحَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، وَأَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ:‏

اقْتَتَلَتِ امْرَأَتَانِ مِنْ هُذَيْلٍ فَرَمَتْ إِحْدَاهُمَا الأُخْرَى بِحَجَرٍ فَقَتَلَتْهَا وَمَا فِي بَطْنِهَا فَاخْتَصَمُوا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّ دِيَةَ جَنِينِهَا غُرَّةٌ عَبْدٌ أَوْ وَلِيدَةٌ وَقَضَى بِدِيَةِ الْمَرْأَةِ عَلَى عَاقِلَتِهَا وَوَرَّثَهَا وَلَدَهَا وَمَنْ مَعَهُمْ فَقَالَ حَمَلُ بْنُ النَّابِغَةِ الْهُذَلِيُّ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ أَغْرَمُ مَنْ لاَ شَرِبَ وَلاَ أَكَلَ وَلاَ نَطَقَ وَلاَ اسْتَهَلَّ فَمِثْلُ ذَلِكَ يُطَلُّ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏إِنَّمَا هَذَا مِنْ إِخْوَانِ الْكُهَّانِ‏”‏ ‏.‏ مِنْ أَجْلِ سَجْعِهِ الَّذِي سَجَعَ ‏.‏


وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ اقْتَتَلَتِ امْرَأَتَانِ ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ بِقِصَّتِهِ وَلَمْ يَذْكُرْ وَوَرَّثَهَا وَلَدَهَا وَمَنْ مَعَهُمْ ‏.‏ وَقَالَ فَقَالَ قَائِلٌ كَيْفَ نَعْقِلُ وَلَمْ يُسَمِّ حَمَلَ بْنَ مَالِكٍ ‏.‏

ஹுதைல் குலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சண்டையிட்டுக்கொண்டனர். அவர்களில் ஒருத்தி மற்றொருத்திமீது கல் எறிந்து, அவளையும் அவளுடைய வயிற்றிலிருந்த சிசுவையும் கொன்றுவிட்டாள். இதையொட்டி மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுவந்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவளுடைய சிசுவிற்கான இழப்பீடாக அடிமையான ஓர் ஆண் அல்லது பெண்ணை வழங்க வேண்டும் என்றும், (கொல்லப்பட்ட) அந்தப் பெண்ணிற்கான இழப்பீட்டுத் தொகை, கொலை செய்த பெண்ணின் தந்தைவழி உறவினர்கள்மீது கடமையாகுமென்றும் தீர்ப்பளித்தார்கள். அவளது சொத்து அவளுடைய குழந்தைகளுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் உரியதென்றும் கூறினார்கள்.

அப்போது (குற்றம் புரிந்த அப்பெண்ணின் கணவர்) ஹமல் பின் அந்நாபிஃகா அல்ஹுதலீ (ரலி) “அல்லாஹ்வின் தூதரே! உண்ணவோ பருகவோ மொழியவோ அழவோ இயலாத ஒரு சிசுவிற்காக நான் எப்படி அபராதம் செலுத்துவது? இதைப் போன்ற வழக்கு, தள்ளுபடி செய்யப்பட வேண்டுமல்லவா?” என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இவரெல்லாம் குறிகாரர்களின் குடும்பத்தில் ஒருவரே” என்று சொன்னார்கள். (குற்றவாளிக்குச் சாதகமாகச் சாதுரியமான முறையில்) அவர் எதுகை மோனையோடு பேசியதால்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவரைக் குறித்து அவ்வாறு கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

ம அமர் (ரஹ்) வழி அறிவிப்பு, “ஹுதைல் குலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சண்டையிட்டுக்கொண்டனர் …” என்று ஆரம்பமாகிறது. ஆனால், “… அவளது சொத்து அவளுடைய குழந்தைகளுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் உரியது என்று கூறினார்கள்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை. மேலும், “அப்போது ஒருவர் எப்படி நாங்கள் இழப்பீடு வழங்க முடியும்?” என்று கேட்டார் என்றே (பொதுவாக) இடம்பெற்றுள்ளது. “ஹமல் பின் மாலிக் என்பவர் கேட்டார்” என அவரது பெயரை அறிவிப்பாளர் குறிப்பிடவில்லை.

Share this Hadith: