அத்தியாயம்: 32, பாடம்: 31, ஹதீஸ் எண்: 3330

حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

وَفَدَتْ وُفُودٌ إِلَى مُعَاوِيَةَ وَذَلِكَ فِي رَمَضَانَ فَكَانَ يَصْنَعُ بَعْضُنَا لِبَعْضٍ الطَّعَامَ فَكَانَ أَبُو هُرَيْرَةَ مِمَّا يُكْثِرُ أَنْ يَدْعُوَنَا إِلَى رَحْلِهِ فَقُلْتُ أَلاَ أَصْنَعُ طَعَامًا فَأَدْعُوَهُمْ إِلَى رَحْلِي فَأَمَرْتُ بِطَعَامٍ يُصْنَعُ ثُمَّ لَقِيتُ أَبَا هُرَيْرَةَ مِنَ الْعَشِيِّ فَقُلْتُ الدَّعْوَةُ عِنْدِي اللَّيْلَةَ فَقَالَ سَبَقْتَنِي ‏.‏ قُلْتُ نَعَمْ ‏.‏ فَدَعَوْتُهُمْ فَقَالَ أَبُو هُرَيْرَةَ أَلاَ أُعْلِمُكُمْ بِحَدِيثٍ مِنْ حَدِيثِكُمْ يَا مَعْشَرَ الأَنْصَارِ ثُمَّ ذَكَرَ فَتْحَ مَكَّةَ فَقَالَ أَقْبَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى قَدِمَ مَكَّةَ فَبَعَثَ الزُّبَيْرَ عَلَى إِحْدَى الْمُجَنِّبَتَيْنِ وَبَعَثَ خَالِدًا عَلَى الْمُجَنِّبَةِ الأُخْرَى وَبَعَثَ أَبَا عُبَيْدَةَ عَلَى الْحُسَّرِ فَأَخَذُوا بَطْنَ الْوَادِي وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي كَتِيبَةٍ – قَالَ – فَنَظَرَ فَرَآنِي فَقَالَ ‏”‏ أَبُو هُرَيْرَةَ ‏”‏ ‏.‏ قُلْتُ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ فَقَالَ ‏”‏ لاَ يَأْتِينِي إِلاَّ أَنْصَارِيٌّ ‏”‏ ‏.‏ زَادَ غَيْرُ شَيْبَانَ فَقَالَ ‏”‏ اهْتِفْ لِي بِالأَنْصَارِ ‏”‏ ‏.‏ قَالَ فَأَطَافُوا بِهِ وَوَبَّشَتْ قُرَيْشٌ أَوْبَاشًا لَهَا وَأَتْبَاعًا ‏.‏ فَقَالُوا نُقَدِّمُ هَؤُلاَءِ فَإِنْ كَانَ لَهُمْ شَىْءٌ كُنَّا مَعَهُمْ ‏.‏ وَإِنْ أُصِيبُوا أَعْطَيْنَا الَّذِي سُئِلْنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ تَرَوْنَ إِلَى أَوْبَاشِ قُرَيْشٍ وَأَتْبَاعِهِمْ ‏”‏ ‏.‏ ثُمَّ قَالَ بِيَدَيْهِ إِحْدَاهُمَا عَلَى الأُخْرَى ثُمَّ قَالَ ‏”‏ حَتَّى تُوَافُونِي بِالصَّفَا ‏”‏ ‏.‏ قَالَ فَانْطَلَقْنَا فَمَا شَاءَ أَحَدٌ مِنَّا أَنْ يَقْتُلَ أَحَدًا إِلاَّ قَتَلَهُ وَمَا أَحَدٌ مِنْهُمْ يُوَجِّهُ إِلَيْنَا شَيْئًا – قَالَ – فَجَاءَ أَبُو سُفْيَانَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أُبِيحَتْ خَضْرَاءُ قُرَيْشٍ لاَ قُرَيْشَ بَعْدَ الْيَوْمِ ‏.‏ ثُمَّ قَالَ ‏”‏ مَنْ دَخَلَ دَارَ أَبِي سُفْيَانَ فَهُوَ آمِنٌ ‏”‏ ‏.‏ فَقَالَتِ الأَنْصَارُ بَعْضُهُمْ لِبَعْضٍ أَمَّا الرَّجُلُ فَأَدْرَكَتْهُ رَغْبَةٌ فِي قَرْيَتِهِ وَرَأْفَةٌ بِعَشِيرَتِهِ ‏.‏ قَالَ أَبُو هُرَيْرَةَ وَجَاءَ الْوَحْىُ وَكَانَ إِذَا جَاءَ الْوَحْىُ لاَ يَخْفَى عَلَيْنَا فَإِذَا جَاءَ فَلَيْسَ أَحَدٌ يَرْفَعُ طَرْفَهُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى يَنْقَضِيَ الْوَحْىُ فَلَمَّا انْقَضَى الْوَحْىُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ يَا مَعْشَرَ الأَنْصَارِ ‏”‏ ‏.‏ قَالُوا لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏”‏ قُلْتُمْ أَمَّا الرَّجُلُ فَأَدْرَكَتْهُ رَغْبَةٌ فِي قَرْيَتِهِ ‏”‏ ‏.‏ قَالُوا قَدْ كَانَ ذَاكَ ‏.‏ قَالَ ‏”‏ كَلاَّ إِنِّي عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ هَاجَرْتُ إِلَى اللَّهِ وَإِلَيْكُمْ وَالْمَحْيَا مَحْيَاكُمْ وَالْمَمَاتُ مَمَاتُكُمْ ‏”‏ ‏.‏ فَأَقْبَلُوا إِلَيْهِ يَبْكُونَ وَيَقُولُونَ وَاللَّهِ مَا قُلْنَا الَّذِي قُلْنَا إِلاَّ الضِّنَّ بِاللَّهِ وَبِرَسُولِهِ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ إِنَّ اللَّهَ وَرَسُولَهُ يُصَدِّقَانِكُمْ وَيَعْذِرَانِكُمْ ‏”‏ ‏.‏ قَالَ فَأَقْبَلَ النَّاسُ إِلَى دَارِ أَبِي سُفْيَانَ وَأَغْلَقَ النَّاسُ أَبْوَابَهُمْ – قَالَ – وَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى أَقْبَلَ إِلَى الْحَجَرِ فَاسْتَلَمَهُ ثُمَّ طَافَ بِالْبَيْتِ – قَالَ – فَأَتَى عَلَى صَنَمٍ إِلَى جَنْبِ الْبَيْتِ كَانُوا يَعْبُدُونَهُ – قَالَ – وَفِي يَدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَوْسٌ وَهُوَ آخِذٌ بِسِيَةِ الْقَوْسِ فَلَمَّا أَتَى عَلَى الصَّنَمِ جَعَلَ يَطْعُنُهُ فِي عَيْنِهِ وَيَقُولُ ‏”‏ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ‏”‏ ‏.‏ فَلَمَّا فَرَغَ مِنْ طَوَافِهِ أَتَى الصَّفَا فَعَلاَ عَلَيْهِ حَتَّى نَظَرَ إِلَى الْبَيْتِ وَرَفَعَ يَدَيْهِ فَجَعَلَ يَحْمَدُ اللَّهَ وَيَدْعُو بِمَا شَاءَ أَنْ يَدْعُوَ ‏.‏


وَحَدَّثَنِيهِ عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، بِهَذَا الإِسْنَادِ وَزَادَ فِي الْحَدِيثِ ثُمَّ قَالَ بِيَدَيْهِ إِحْدَاهُمَا عَلَى الأُخْرَى ‏”‏ احْصُدُوهُمْ حَصْدًا ‏”‏ ‏.‏ وَقَالَ فِي الْحَدِيثِ قَالُوا قُلْنَا ذَاكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏”‏ فَمَا اسْمِي إِذًا كَلاَّ إِنِّي عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ ‏”‏ ‏

ஒரு ரமளான் மாதத்தில் (சிரியா நாட்டிலிருந்த) முஆவியா (ரலி) அவர்களைச் சந்திக்க (நானும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அடங்கிய) சில தூதுக் குழுக்கள் சென்றன. அப்போது எங்களுடன் இருந்தவர்கள் (முறைவைத்து) உணவு சமைத்(து விருந்தளித்)தனர். அபூஹுரைரா (ரலி) தமது கூடாரத்திற்கு மக்களை அதிகமாக (விருந்திற்கு) அழைப்பவராக இருந்தார்கள்.

அப்போது நான், “நான் உணவு சமைத்து மக்களை என் கூடாரத்திற்கு அழைக்கக் கூடாதா?” என்று கூறிவிட்டு, உணவு தயாரிக்க உத்தரவிட்டேன். பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்களை மாலையில் சந்தித்து, “இன்றிரவு என்னிடம்தான் விருந்து” என்றேன். அதற்கு அபூஹுரைரா (ரலி), “நீ என்னை முந்திக்கொண்டாய்” என்று கூறினார்கள். நான் “ஆம்“ என்று கூறிவிட்டு, மக்களை (எனது கூடாரத்திற்கு) அழைத்தேன்.

அப்போது அபூஹுரைரா (ரலி), (நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க) “அன்ஸாரிக் கூட்டத்தாரே! உங்கள் செய்திகளில் ஒன்றைக் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று கேட்ட பின்னர் மக்கா வெற்றியைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவிலிருந்து புறப்பட்டு மக்காவுக்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களை, (தமது படையின்) இரு பக்கவாட்டுப் படைகளில் ஒன்றுக்குத் தளபதியாக நியமித்தார்கள்.

காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களை மற்றொரு பக்கவாட்டுப் படைக்குத் தளபதியாக நியமித்தார்கள். அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை நிராயுதபாணி(களான காலாட் படை)யினருக்குத் தளபதியாக நியமித்தார்கள்.

அவர்கள் அனைவரும் பள்ளத்தாக்கின் மையப் பகுதிக்கு வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) படையின் முக்கியப் பகுதியில் இருந்தார்கள். அப்போது அவர்களது பார்வையில் நான் பட்டபோது, “அபூஹுரைரா நீயா?” என்று கேட்டார்கள். நான், “(ஆம்) இதோ, வந்தேன் அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். அப்போது, “அன்ஸாரித் தோழர் ஒருவர் என்னிடம் வருவார் (என்றே நான் எதிர்பார்த்தேன்)” என்றார்கள்.

குறைஷியர் தம்முடைய பல்வேறு குலத்தாரையும் ஆதரவாளர்களையும் ஒன்றுகூட்டி, “இவர்களை நாம் (முதலில் போருக்கு) அனுப்பிவைப்போம். இவர்களுக்கு (வெற்றி) ஏதேனும் கிடைத்தால், (குறைஷியரான) நாமும் இவர்களுடன் சேர்ந்துகொள்வோம். இவர்களுக்குத் தோல்வி ஏற்பட்டால், நம்மிடம் (முஸ்லிம்களால்) கோரப்படுவதை நாம் வழங்கிவிடுவோம்” என்று கூறிக்கொண்டிருந்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “நீங்கள் (ஒற்றுமையாக உள்ள) குறைஷியரின் பல்வேறு குலத்தாரையும் ஆதரவாளர்களையும் காண்கிறீர்கள் (அல்லவா?)” என்று கூறிவிட்டு, தம்முடைய ஒரு கையின் மீது மற்றொரு கையை வைத்து (அவர்களது ஒற்றுமையை) சைகை செய்து காட்டினார்கள்.

பிறகு “நீங்கள் (வெற்றி அடைந்த பின்) என்னை ‘ஸஃபா’ மலைக்கருகில் வந்து சந்தியுங்கள்” என்று கூறி(விட்டுப் போ)னார்கள்.

அவ்வாறே நாங்கள் நடந்து சென்றோம். எங்களில் ஒருவர் எதிரிகளில் ஒருவரைத் தாக்கி வீழ்த்த நினைத்தால், (எதிர்ப்பின்றித்) தாக்கி வீழ்த்தினார். ஆனால், எதிரிகளில் யாரும் எங்களை நோக்கி எதையும் வீச இயலவில்லை.

அப்போது (இஸ்லாத்தைத் தழுவியிருந்த) அபூஸுஃப்யான் (ரலி) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! குறைஷிக் குலமே அடியோடு அழிக்கப்பட்டு, இன்றைக்குப் பிறகு குறைஷியரே இருக்கமாட்டார்கள் (போலிருக்கிறது)” என்று கூறினார்.

எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அபூஸுஃப்யானின் இல்லத்தினுள் நுழைந்துகொள்கின்றவர் அபயம் பெற்றவராவார்” என்று அறிவித்தார்கள்.

அப்போது அன்ஸாரிகள் (நபியவர்களைக் குறித்துத்) தங்களுக்குள், “இவருக்கு  தமது ஊர்மீது பற்றும், தம் குலத்தார்மீது பரிவும் ஏற்பட்டுவிட்டது” என்று பேசிக்கொண்டனர்.

அப்போது இறைவனிடமிருந்து செய்தி (வஹீ) வந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஹீ’ வந்தால், அது எங்களுக்குத் தெரியாமல் போகாது. அப்போது வஹீ முடிவடையும்வரை எங்களில் யாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிப் பார்வையைச் செலுத்தமாட்டர்.

அவ்வாறே வஹீ’ வந்து முடிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அன்ஸாரி சமுதாயமே!“ என்று அழைத்தார்கள். அம்மக்கள் “இதோ வந்தோம், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். “இவருக்குத் தமது ஊர்மீது பற்று ஏற்பட்டுவிட் டது என்று நீங்கள் பேசிக்கொண்டீர்கள்(தானே)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் “ஆம்” என்று (உண்மை) சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவ்வாறன்று; நான் அல்லாஹ்வின் அடியானும் தூதரும் ஆவேன். நான் அல்லாஹ்வை நோக்கி, உங்களிடம் (நாடு துறந்து) ஹிஜ்ரத் வந்தேன். என் வாழ்வு உங்கள் வாழ்வோடுதான்; என் இறப்பு உங்கள் இறப்போடுதான்” என்று கூறினார்கள்.

அப்போது அன்ஸாரிகள் அழுதுகொண்டே வந்து, “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் கொண்ட பேரன்பின் காரணத்தாலேயே அவ்வாறு நாங்கள் கூறினோம்” என்று சொன்னார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களது சொல்லை உண்மை என ஏற்று, நீங்கள் கூறிய காரணத்தையும் ஏற்கின்றனர்“ என்று சொன்னார்கள்.

அப்போது மக்களில் சிலர், அபூஸுஃப்யானின் வீட்டை நோக்கிச் சென்றனர். வேறுசிலர் தங்கள் (வீட்டுக்) கதவுகளைப் பூட்டிக்கொண்டனர். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘ஹஜருல் அஸ்வத்’ எனும் கல் இருக்குமிடத்தை நோக்கி வந்து, அதைத் தமது கையால் தொட்டு முத்தமிட்டார்கள். பிறகு இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள்.

அப்போது இறையில்லம் கஅபாவுக்கு அருகில் மக்கள் வழிபட்டுவந்த ஒரு சிலையை நோக்கி வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கையில் வில்லொன்று இருந்தது. அவர்கள் அந்த வில்லின் வளைவுப் பகுதியைப் பிடித்திருந்தார்கள். அந்தச் சிலைக்கு அருகில் வந்ததும், அந்த வில்லால் அதன் கண்ணில் குத்திக்கொண்டே “உண்மை வந்துவிட்டது. பொய்மை அழிந்துவிட்டது” என்று கூறலானார்கள்.

இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்ததும், ‘ஸஃபா’ குன்றுக்கு வந்து, அதன் மீது ஏறி, இறையில்லம் கஅபாவைப் பார்த்தார்கள். அப்போது அல்லாஹ்வைப் போற்றிப் புகழவும், அவன் நாடிய சிலவற்றை வேண்டிப் பிரார்த்திக்கவும் ஆரம்பித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ரபாஹ் (ரஹ்)


குறிப்புகள் :

அப்துல்லாஹ் பின் ஹிஷாம் (ரஹ்) வழி அறிவிப்பில், “… பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம்முடைய ஒரு கையை மற்றொரு கைமீது வைத்து இரு கைகளையும் இணைத்துக் காட்டியபடி ‘அவர்களை அறுவடை செய்துவிடுங்கள்’ என்று கூறினார்கள்” என இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த அறிவிப்பில், “அன்ஸாரிகள் அவ்வாறு நாங்கள் கூறினோம், அல்லாஹ்வின் தூதரே!” என்று ஒப்புக்கொண்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “அவ்வாறாயின் (முஹம்மது – புகழப்பட்டவர் எனும்) என் பெயருக்கு என்ன அர்த்தம்? அவ்வாறன்று; நான் அல்லாஹ்வின் அடியானும் தூதரும் ஆவேன்’ என்று கூறினார்கள்” என்றும் இடம்பெற்றுள்ளது.

ஷைபான் பின் ஃபர்ரூக் (ரஹ்) அல்லாதோரின் அறிவிப்பில், “… அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), எனக்காக அன்ஸாரிகளைச் சப்தமிட்டு அழைப்பீராக! என்றார்கள். உடனே அன்ஸாரிகள் வந்து குழுமினர்” என இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: