அத்தியாயம்: 33, பாடம்: 49, ஹதீஸ் எண்: 3533

حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أُمِّ حَرَامٍ، وَهْىَ خَالَةُ أَنَسٍ قَالَتْ :‏ ‏

أَتَانَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمًا فَقَالَ عِنْدَنَا فَاسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ فَقُلْتُ مَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ وَأُمِّي قَالَ ‏”‏ أُرِيتُ قَوْمًا مِنْ أُمَّتِي يَرْكَبُونَ ظَهْرَ الْبَحْرِ كَالْمُلُوكِ عَلَى الأَسِرَّةِ ‏”‏ ‏.‏ فَقُلْتُ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ قَالَ ‏”‏ فَإِنَّكِ مِنْهُمْ ‏”‏ ‏.‏ قَالَتْ ثُمَّ نَامَ فَاسْتَيْقَظَ أَيْضًا وَهُوَ يَضْحَكُ فَسَأَلْتُهُ فَقَالَ مِثْلَ مَقَالَتِهِ فَقُلْتُ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ ‏.‏ قَالَ ‏”‏ أَنْتِ مِنَ الأَوَّلِينَ ‏”‏ ‏.‏ قَالَ فَتَزَوَّجَهَا عُبَادَةُ بْنُ الصَّامِتِ بَعْدُ فَغَزَا فِي الْبَحْرِ فَحَمَلَهَا مَعَهُ فَلَمَّا أَنْ جَاءَتْ قُرِّبَتْ لَهَا بَغْلَةٌ فَرَكِبَتْهَا فَصَرَعَتْهَا فَانْدَقَّتْ عُنُقُهَا


وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ، وَيَحْيَى بْنُ يَحْيَى، قَالاَ أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنِ ابْنِ حَبَّانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ خَالَتِهِ أُمِّ حَرَامٍ بِنْتِ مِلْحَانَ، أَنَّهَا قَالَتْ نَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا قَرِيبًا مِنِّي ثُمَّ اسْتَيْقَظَ يَتَبَسَّمُ – قَالَتْ – فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا أَضْحَكَكَ قَالَ ‏ “‏ نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَىَّ يَرْكَبُونَ ظَهْرَ هَذَا الْبَحْرِ الأَخْضَرِ ‏”‏ ‏.‏ ثُمَّ ذَكَرَ نَحْوَ حَدِيثِ حَمَّادِ بْنِ زَيْدٍ ‏

وَحَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – وَهُوَ ابْنُ جَعْفَرٍ – عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ أَتَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ابْنَةَ مِلْحَانَ خَالَةَ أَنَسٍ فَوَضَعَ رَأْسَهُ عِنْدَهَا ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ إِسْحَاقَ بْنِ أَبِي طَلْحَةَ وَمُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ

ஒரு நாள் நபி (ஸல்) எங்களிடம் வந்து, எங்கள் வீட்டில் (உறங்கி) மதிய ஓய்வெடுத்தார்கள். பிறகு உறக்கத்திலிருந்து சிரித்தபடியே விழித்தெழுந்தார்கள். அப்போது நான், “என் தந்தையும் தாயும் உங்களுக்கு அர்ப்பணம்! ஏன் சிரிக்கின்றீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் கடல் முதுகில் பயணிப்பவர்களாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் மன்னர்களைப் போன்று இருந்தார்கள்” என்று கூறினார்கள். உடனே நான், “என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று வேண்டினேன்.

அதற்கு, “நீங்களும் அவர்களில் ஒருவராக இருப்பீர்கள்” என்று கூறினார்கள். பிறகு (மீண்டும்) உறங்கிவிட்டு மறுபடியும் சிரித்தபடியே விழித்தொழுந்தார்கள். அப்போது நான் (அதற்கான காரணத்தை) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் முன்பு கூறியதைப் போன்றே கூறினார்கள்.

அப்போதும் நான், “என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று வேண்டினேன். நபி (ஸல்), “நீங்கள் (கடல்வழிப் போரில் செல்லும்) முதலாவது குழுவினரில் ஒருவராக இருப்பீர்கள்” என்று கூறினார்கள்.

அனஸ் (ரலி) கூறுகிறார்கள்:

பின்னர் உம்மு ஹராம் (ரலி) உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டபோது, உபாதா (ரலி) கடலில் பயணம் செய்து அறப்போருக்குச் சென்றார்கள். அப்போது தம்முடன் (தம் துணைவி) உம்மு ஹராம் (ரலி) அவர்களையும் (கப்பலில்) அழைத்துச் சென்றார்கள். (போர் முடிந்து) வந்தபோது, உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கு அருகில் கோவேறு கழுதையொன்று கொண்டுவரப்பட்டது. அதில் அவர்கள் ஏறியபோது, அது கீழே தள்ளிவிட்டது. அதனால் அவர்களது கழுத்து முறிந்து இறந்துவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : உம்மு ஹராம் பின்த்தி மில்ஹான் (ரலி) வழியாக அனஸ் (ரலி)


குறிப்புகள் :

உம்மு ஹராம் (ரலி), அனஸ் (ரலி) அவர்களின் சிற்றன்னை ஆவார்.

லைஸ் (ரஹ்) வழி அறிவிப்பு, “ஒரு நாள் (பகலில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (என் வீட்டிற்கு வந்து) எனக்கு அருகில் உறங்கினார்கள். பிறகு புன்னகைத்தவர்களாக விழித்தெழுந்தார்கள். நான், ஏன் சிரிக்கின்றீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டேன். அதற்கு, என் சமுதாயத்தாரில் சிலர் இந்தப் பசுமைக் கடல் மேல் பயணிப்பவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள் என்று கூறினார்கள் …” என ஆரம்பமாகிறது.

அப்துல்லாஹ் பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்) வழி அறிவிப்பு, “ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என் சிற்றன்னை மில்ஹானின் மகள் (உம்முஹராம் – ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்து, அவர் அருகில் தமது தலையைக் கீழே வைத்து உறங்கினார்கள்…” என்று அனஸ் (ரலி) கூறியதாக ஆரம்பமாகிறது.

அத்தியாயம்: 33, பாடம்: 49, ஹதீஸ் எண்: 3532

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَدْخُلُ عَلَى أُمِّ حَرَامٍ بِنْتِ مِلْحَانَ فَتُطْعِمُهُ وَكَانَتْ أُمُّ حَرَامٍ تَحْتَ عُبَادَةَ بْنِ الصَّامِتِ فَدَخَلَ عَلَيْهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا فَأَطْعَمَتْهُ ثُمَّ جَلَسَتْ تَفْلِي رَأْسَهُ فَنَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ اسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ قَالَتْ فَقُلْتُ مَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏”‏ نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَىَّ غُزَاةً فِي سَبِيلِ اللَّهِ يَرْكَبُونَ ثَبَجَ هَذَا الْبَحْرِ مُلُوكًا عَلَى الأَسِرَّةِ أَوْ مِثْلَ الْمُلُوكِ عَلَى الأَسِرَّةِ ‏”‏ ‏.‏ يَشُكُّ أَيَّهُمَا قَالَ قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ فَدَعَا لَهَا ثُمَّ وَضَعَ رَأْسَهُ فَنَامَ ثُمَّ اسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ قَالَتْ فَقُلْتُ مَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏”‏ نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَىَّ غُزَاةً فِي سَبِيلِ اللَّهِ ‏”‏ ‏.‏ كَمَا قَالَ فِي الأُولَى قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهَ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ قَالَ ‏”‏ أَنْتِ مِنَ الأَوَّلِينَ ‏”‏ ‏.‏ فَرَكِبَتْ أُمُّ حَرَامٍ بِنْتُ مِلْحَانَ الْبَحْرَ فِي زَمَنِ مُعَاوِيَةَ فَصُرِعَتْ عَنْ دَابَّتِهَا حِينَ خَرَجَتْ مِنَ الْبَحْرِ فَهَلَكَتْ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மதீனாவுக்கு அருகிலுள்ள ‘குபா’வுக்குச் சென்றால், தம் பால்குடி அன்னையான) உம்மு ஹராம் பின்த்தி மில்ஹான் (ரலி) அவர்களது வீட்டிற்குச் செல்வதும் அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உணவளிப்பதும் வழக்கம் – அவர் (பிற்காலத்தில்) உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார் – ஒரு நாள் (பகலில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்ற போது, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு உணவளித்தார். பின்னர் நபி (ஸல்) அவர்களுக்கு உட்கார்ந்தபடி பேன் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உறங்கிவிட்டார்கள். பிறகு சிரித்தபடி விழித்தார்கள்.

தொடர்ந்து உம்மு ஹராம் (ரலி) கூறுகிறார்கள்:

அப்போது நான், “ஏன் சிரிக்கின்றீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “என் சமுதாயத்தாரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் இந்தக் கடல் மேல் பயணம் செய்யும் அறப்போர் வீரர்களாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் மன்னர்களாக / மன்னர்களைப் போன்று இருந்தார்கள்” என்று கூறினார்கள். (இவ்விரு சொற்களுள் எந்தச் சொல்லை அறிவிப்பாளர் அனஸ் (ரலி) கூறினார்கள் என அறிவிப்பாளர்களுள் ஒருவரான இஸ்ஹாக் (ரஹ்) சந்தேகத்துடன் அறிவிக்கிறார்) உடனே நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று வேண்டினேன். அப்போது எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பிரார்த்தித்தார்கள்.

பிறகு (மீண்டும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது தலையைக் கீழே வைத்து உறங்கிவிட்டுப் பிறகு சிரித்தபடி விழித்தெழுந்தார்கள். அப்போதும் நான், “ஏன் சிரிக்கின்றீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “என் சமுதாயத்தாரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள்” என்று முன்பு போலவே பதிலளித்தார்கள்.

அதைக் கேட்டு நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று வேண்டினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீங்கள் (கடல்வழி அறப்போருக்குச் செல்லும்) முதலாவது குழுவில் ஒருவராக இருப்பீர்கள்” என்று கூறினார்கள்.

உம்மு ஹராம் (ரலி), முஆவியா பின் அபீஸுஃப்யான் (ரலி) அவர்களது காலத்தில் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முன்னறிவிப்புச் செய்தபடியே) கடற்பயணம் மேற்கொண்டார்கள். பின்பு அவர்கள் கடலிலிருந்து (கரைக்கு) வந்தபோது, தமது வாகனத்திலிருந்து கீழே விழுந்து இறந்துபோனார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)