அத்தியாயம்: 5, பாடம்: 41, ஹதீஸ் எண்: 1024

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سَيَّارُ بْنُ سَلَامَةَ ‏ ‏قَالَ ‏

سَمِعْتُ أَبِي يَسْأَلُ ‏ ‏أَبَا بَرْزَةَ ‏ ‏عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏آنْتَ سَمِعْتَهُ قَالَ فَقَالَ كَأَنَّمَا أَسْمَعُكَ السَّاعَةَ قَالَ سَمِعْتُ أَبِي يَسْأَلُهُ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ كَانَ ‏ ‏لَا يُبَالِي ‏ ‏بَعْضَ تَأْخِيرِهَا ‏ ‏قَالَ ‏ ‏يَعْنِي الْعِشَاءَ ‏ ‏إِلَى نِصْفِ اللَّيْلِ وَلَا يُحِبُّ النَّوْمَ قَبْلَهَا وَلَا الْحَدِيثَ بَعْدَهَا ‏ ‏قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏ثُمَّ لَقِيتُهُ بَعْدُ فَسَأَلْتُهُ فَقَالَ ‏ ‏وَكَانَ ‏ ‏يُصَلِّي الظُّهْرَ حِينَ ‏ ‏تَزُولُ ‏ ‏الشَّمْسُ وَالْعَصْرَ يَذْهَبُ الرَّجُلُ إِلَى أَقْصَى ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏وَالشَّمْسُ ‏ ‏حَيَّةٌ ‏ ‏قَالَ وَالْمَغْرِبَ لَا أَدْرِي أَيَّ حِينٍ ذَكَرَ قَالَ ثُمَّ لَقِيتُهُ بَعْدُ فَسَأَلْتُهُ فَقَالَ ‏ ‏وَكَانَ ‏ ‏يُصَلِّي الصُّبْحَ فَيَنْصَرِفُ الرَّجُلُ فَيَنْظُرُ إِلَى وَجْهِ جَلِيسِهِ الَّذِي يَعْرِفُ فَيَعْرِفُهُ قَالَ وَكَانَ يَقْرَأُ فِيهَا بِالسِّتِّينَ إِلَى الْمِائَةِ

“என் தந்தை ஸலாமா (ரஹ்), அபூபர்ஸா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை பற்றி வினவியதை நான் செவியுற்றேன்” என்று ஸய்யார் பின் ஸலாமா (ரஹ்) கூறினார்கள்.

நான் ஸய்யார் (ரஹ்) அவர்களிடம், “நீங்கள் அதை(நேரடியாக)ச் செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நீங்கள் கேட்டதைத் தற்போது நான் செவியேற்பதைப் போன்றே செவியேற்றேன். என் தந்தை ஸலாமா (ரஹ்), அபூபர்ஸா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை குறித்து வினவினார்கள். அதற்கு அபூபர்ஸா (ரலி), ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்), இஷாத் தொழுகைக்கு இரவின் பாதிவரை தாமதிப்பதைப் பொருட்படுத்தியதில்லை. இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாத் தொழுகைக்குப் பின் (உறங்காமல்) பேசிக் கொண்டிருப்பதையும் விரும்பியதில்லை’ என பதிலளித்தார்கள்” எனக் கூறினார்.

பிறகு (மற்றொரு முறை) நான் ஸய்யார் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோதும் (தொழுகை நேரங்கள் பற்றி) வினவினேன். அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது லுஹ்ருத் தொழுவார்கள். பிறகு அஸ்ருத் தொழுவார்கள். (அவர்களுடன் அஸ்ருத் தொழுத) ஒருவர் மதீனாவின் கடைக்கோடியிலுள்ள தமது இல்லத்திற்குச் சென்றடையும்போதும் சூரியன் (ஒளிகுன்றாமல்) இருந்துகொண்டிருக்கும் என்று அபூபர்ஸா (ரலி) கூறினார்கள். மஃக்ரிபு (தொழுகையின் நேரம்) குறித்து அவர்கள் கூறியது சரியாக என் நினைவில் இல்லை” என்று கூறினார்கள்.

பிறகு (இன்னொரு முறை) அவர்களைச் சந்தித்து வினவியபோது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸுப்ஹுத் தொழுகையைத் தொழுவி(த்து முடி)க்கும்போது (தொழுதுவிட்டுத்) திரும்பும் (எங்களில்) ஒருவர், தமக்குப் பக்கத்தில் அமர்ந்திக்கும் அறிமுகமானவரின் முகம் பார்த்து (இன்னார் என) அறிந்துகொள்வார். ஸுப்ஹுத் தொழுகையில் நபி (ஸல்) அறுபது முதல் நூறு வசனங்கள்வரை ஓதுவார்கள்” என அபூபர்ஸா (ரலி) கூறியதை நினைவு கூர்ந்தார்.

அறிவிப்பாளர் : அபூபர்ஸா (ரலி) வழியாக ஸய்யார் (ரஹ்) வழியாக ஷுஅபா (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment