அத்தியாயம்: 1, பாடம்: 1.10, ஹதீஸ் எண்: 46

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُمَرُ بْنُ يُونُسَ الْحَنَفِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبُو كَثِيرٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏كُنَّا قُعُودًا حَوْلَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَعَنَا ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَعُمَرُ ‏ ‏فِي نَفَرٍ فَقَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ بَيْنِ أَظْهُرِنَا فَأَبْطَأَ عَلَيْنَا وَخَشِينَا أَنْ ‏ ‏يُقْتَطَعَ ‏ ‏دُونَنَا ‏ ‏وَفَزِعْنَا ‏ ‏فَقُمْنَا فَكُنْتُ أَوَّلَ مَنْ فَزِعَ فَخَرَجْتُ ‏ ‏أَبْتَغِي رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى أَتَيْتُ ‏ ‏حَائِطًا ‏ ‏لِلْأَنْصَارِ ‏ ‏لِبَنِي النَّجَّارِ ‏ ‏فَدُرْتُ بِهِ هَلْ أَجِدُ لَهُ بَابًا فَلَمْ أَجِدْ فَإِذَا ‏ ‏رَبِيعٌ ‏ ‏يَدْخُلُ فِي جَوْفِ حَائِطٍ مِنْ بِئْرٍ خَارِجَةٍ وَالرَّبِيعُ ‏ ‏الْجَدْوَلُ ‏ ‏فَاحْتَفَزْتُ ‏ ‏كَمَا ‏ ‏يَحْتَفِزُ ‏ ‏الثَّعْلَبُ فَدَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏فَقُلْتُ نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ مَا شَأْنُكَ قُلْتُ كُنْتَ بَيْنَ أَظْهُرِنَا فَقُمْتَ فَأَبْطَأْتَ عَلَيْنَا فَخَشِينَا أَنْ تُقْتَطَعَ دُونَنَا فَفَزِعْنَا فَكُنْتُ أَوَّلَ مِنْ فَزِعَ فَأَتَيْتُ هَذَا الْحَائِطَ ‏ ‏فَاحْتَفَزْتُ ‏ ‏كَمَا يَحْتَفِزُ الثَّعْلَبُ وَهَؤُلَاءِ النَّاسُ وَرَائِي فَقَالَ يَا ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏وَأَعْطَانِي نَعْلَيْهِ قَالَ اذْهَبْ بِنَعْلَيَّ هَاتَيْنِ فَمَنْ لَقِيتَ مِنْ وَرَاءِ هَذَا الْحَائِطِ يَشْهَدُ ‏ ‏أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُسْتَيْقِنًا بِهَا قَلْبُهُ فَبَشِّرْهُ بِالْجَنَّةِ فَكَانَ أَوَّلَ مَنْ لَقِيتُ ‏ ‏عُمَرُ ‏ ‏فَقَالَ مَا هَاتَانِ النَّعْلَانِ يَا ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏فَقُلْتُ هَاتَانِ نَعْلَا رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعَثَنِي بِهِمَا مَنْ لَقِيتُ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُسْتَيْقِنًا بِهَا قَلْبُهُ بَشَّرْتُهُ بِالْجَنَّةِ فَضَرَبَ ‏ ‏عُمَرُ ‏ ‏بِيَدِهِ بَيْنَ ثَدْيَيَّ ‏ ‏فَخَرَرْتُ ‏ ‏لِاسْتِي ‏ ‏فَقَالَ ارْجِعْ يَا ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏فَرَجَعْتُ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَجْهَشْتُ ‏ ‏بُكَاءً ‏ ‏وَرَكِبَنِي ‏ ‏عُمَرُ ‏ ‏فَإِذَا هُوَ عَلَى أَثَرِي فَقَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا لَكَ يَا ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قُلْتُ لَقِيتُ ‏ ‏عُمَرَ ‏ ‏فَأَخْبَرْتُهُ بِالَّذِي بَعَثْتَنِي بِهِ فَضَرَبَ بَيْنَ ثَدْيَيَّ ضَرْبَةً ‏ ‏خَرَرْتُ ‏ ‏لِاسْتِي ‏ ‏قَالَ ارْجِعْ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ يَا ‏ ‏عُمَرُ ‏ ‏مَا حَمَلَكَ عَلَى مَا فَعَلْتَ قَالَ يَا رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ وَأُمِّي أَبَعَثْتَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏بِنَعْلَيْكَ مَنْ لَقِيَ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُسْتَيْقِنًا بِهَا قَلْبُهُ بَشَّرَهُ بِالْجَنَّةِ قَالَ نَعَمْ قَالَ فَلَا تَفْعَلْ فَإِنِّي ‏ ‏أَخْشَى أَنْ يَتَّكِلَ النَّاسُ عَلَيْهَا فَخَلِّهِمْ يَعْمَلُونَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَخَلِّهِمْ

நாங்கள் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்தோம். எங்களுடன் அமர்ந்திருந்த சிலரில் அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) ஆகியோரும் இருந்தனர். அப்போது எங்களிடம் இருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சென்றார்கள். நெடு நேரமாகியும் அவர்கள் எங்களிடம் (திரும்பி) வரவில்லை. அவர்களுக்கு (எதிரிகளால்) ஏதேனும் ஆபத்து நேர்ந்து விட்டதோ என்று நாங்கள் அஞ்சினோம். நாங்கள் பதற்றம் அடைந்தவர்களாக எழுந்தோம். நான் அதிகம் பதற்றப் பட்டவனாக இருந்தேன். எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தேடிக் கொண்டு புறப்பட்டேன்.

பனூ நஜ்ஜார் குலத்தைச் சேர்ந்த அன்சாரிகளுக்குச் சொந்தமான ஒரு தோட்டத்திற்கு வந்து சேர்ந்தேன். அத்தோட்டத்தின் வாசல் எங்கே என்று (தேடியவனாக) அதைச் சுற்றி வந்தேன். ஆனால் (அதன் வாசலை) நான் காணவில்லை. அத்தோட்டத்திற்கு வெளியே இன்னொரு தோட்டத்திலிருந்து வாய்க்கால் ஒன்று அதனுள் சென்று கொண்டிருந்தது. உடனே நான் குள்ளநரி உடலைக் குறுக்குவதைப் போன்று (என் உடலைக்) குறுக்கிக் கொண்டு (அந்த வாய்க்கால் வழியே தோட்டத்திற்குள்) நுழைந்து அல்லாஹ்வின் தூதரிடம் சென்றேன்.

அப்போது அவர்கள் “அபூஹுரைராவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம், அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். “என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். “நீங்கள் எங்களிடையே இருந்து கொண்டிருந்தீர்கள்; (திடீரென) எழுந்து சென்றீர்கள்; நெடு நேரமாகியும் நீங்கள் எங்களிடம் திரும்பவில்லை. எனவே (எதிரிகளால்) ஏதேனும் உங்களுக்கு ஆபத்து நேர்ந்து விட்டதோ என்று நாங்கள் அஞ்சினோம்; பதறினோம். நான் அதிகம் பதறிப் போனேன். எனவேதான் குள்ளநரி உடலைக் குறுக்குவதைப் போன்று உடலைக் குறுக்கிக் கொண்டு, இந்தத் தோட்டத்திற்கு வந்தேன். இதோ மக்கள் என் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்கள்” என்று சொன்னேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அபூஹுரைரா!” (என்று என்னை அழைத்து,) தம் காலணிகள் இரண்டையும் என்னிடம் கொடுத்து, “இவ்விரு காலணிகளையும் கொண்டு செல்! வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று தமது உள்ளத்தால் உறுதியாக நம்பி சான்று கூறுகின்ற எவரையும் தோட்டத்திற்கு அப்பால் நீ சந்தித்தால் அவருக்கு சுவர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்!” என்று கூறினார்கள்.

நான் திரும்பி வந்தபோது உமர் (ரலி) அவர்களையே முதலில் சந்தித்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள், “இந்தக் காலணிகள் யாருடவை அபூஹுரைரா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலணிகள். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சாட்சியம் கூறுகின்ற எவரை நான் சந்தித்தாலும் அவருக்கு சுவர்க்கம் கிடைக்கும் என்ற நற்செய்தி கூறுமாறு சொல்லி இக்காலணிகளை (அடையாளமாக)க் கொடுத்து என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்” என்று சொன்னேன்.

உடனே உமர் (ரலி) அவர்கள் தமது கரத்தால் எனது மார்பில் அடித்தார்கள். நான் மல்லாந்து விழுந்தேன். “திரும்பிச் செல்லுங்கள் அபூஹுரைரா!” என்று சொன்னார்கள். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன்.

எனக்கு அழுகை அழுகையாக வந்தது. என்னைப் பின் தொடர்ந்து வந்த உமரும் அங்கே எனக்குப் பின்னால் வந்து நின்றார். என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அபூஹுரைரா! உமக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். நான் “உமரைச் சந்தித்து நீங்கள் என்னிடம் சொல்லி அனுப்பிய விஷயத்தை அவரிடம் தெரிவித்தேன். அவர் என் மார்பில் ஓர் அடி அடித்தார். நான் மல்லாந்து விழுந்து விட்டேன். பிறகு ‘திரும்பி செல்லுங்கள்’ என்று கூறினார்” என்றேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடம் “உமரே! ஏன் இவ்வாறு செய்தீர்?” என்று கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று உள்ளத்தால் உறுதிகொண்ட நிலையில் சாட்சியம் சொல்பவர் எவரைச் சந்தித்தாலும் அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுமாறு கூறி உங்கள் காலணிகளைக் கொடுத்து நீங்கள்தாம் அபூஹுரைராவை அனுப்பிவைத்தீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,”ஆம்” என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், “அவ்வாறு செய்யாதீர்கள்! ஏனெனில், மக்கள் அந்த ஒன்றையே சார்ந்து (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன்; அவர்கள் (நற்)செயல் புரிய விட்டு விடுங்கள்” என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறே அவர்களை விட்டு விடுங்கள் (அவர்கள் நற்செயல்கள் செய்யட்டும்)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)