அத்தியாயம்: 12, பாடம்: 46, ஹதீஸ் எண்: 1760

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصُ بْنُ غِيَاثٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏شَقِيقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏

‏قَسَمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَسْمًا فَقَالَ رَجُلٌ إِنَّهَا لَقِسْمَةٌ مَا أُرِيدَ بِهَا وَجْهُ اللَّهِ قَالَ فَأَتَيْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَارَرْتُهُ فَغَضِبَ مِنْ ذَلِكَ غَضَبًا شَدِيدًا وَاحْمَرَّ وَجْهُهُ حَتَّى تَمَنَّيْتُ أَنِّي لَمْ أَذْكُرْهُ لَهُ قَالَ ثُمَّ قَالَ ‏ ‏قَدْ أَوُذِيَ ‏ ‏مُوسَى ‏ ‏بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு முறை) போர்ச் செல்வங்களைப் பங்கிட்டார்கள். அப்போது ஒருவர், “இது இறைவனின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்” என்று சொன்னார். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர் கூறியதை இரகசியமாகச் சொன்னேன். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கடுமையாகக் கோபப்பட்டார்கள்; அவர்களின் முகம் சிவந்துவிட்டது. அந்தத் தகவலை அவர்களிடம் சொல்லாமல் இருந்திருக்கலாமே என்று நான் எண்ணினேன். பிறகு அவர்கள், “(இறைத்தூதர்) மூஸா (அலை) இதைவிட அதிகமாக மன வேதனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஆயினும், அவர்கள் சகித்துக்கொண்டார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 46, ஹதீஸ் எண்: 1759

حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏
‏لَمَّا كَانَ يَوْمُ ‏ ‏حُنَيْنٍ ‏ ‏آثَرَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَاسًا فِي الْقِسْمَةِ فَأَعْطَى ‏ ‏الْأَقْرَعَ بْنَ حَابِسٍ ‏ ‏مِائَةً مِنْ الْإِبِلِ وَأَعْطَى ‏ ‏عُيَيْنَةَ ‏ ‏مِثْلَ ذَلِكَ وَأَعْطَى أُنَاسًا مِنْ أَشْرَافِ ‏ ‏الْعَرَبِ ‏ ‏وَآثَرَهُمْ يَوْمَئِذٍ فِي الْقِسْمَةِ فَقَالَ ‏ ‏رَجُلٌ ‏ ‏وَاللَّهِ إِنَّ هَذِهِ لَقِسْمَةٌ مَا عُدِلَ فِيهَا وَمَا أُرِيدَ فِيهَا وَجْهُ اللَّهِ قَالَ فَقُلْتُ وَاللَّهِ لَأُخْبِرَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَأَتَيْتُهُ فَأَخْبَرْتُهُ بِمَا قَالَ قَالَ فَتَغَيَّرَ وَجْهُهُ حَتَّى كَانَ كَالصِّرْفِ ثُمَّ قَالَ ‏ ‏فَمَنْ يَعْدِلُ إِنْ لَمْ يَعْدِلْ اللَّهُ وَرَسُولُهُ قَالَ ثُمَّ قَالَ يَرْحَمُ اللَّهُ ‏ ‏مُوسَى ‏ ‏قَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ قَالَ قُلْتُ لَا جَرَمَ لَا أَرْفَعُ إِلَيْهِ بَعْدَهَا حَدِيثًا

ஹுனைன் போரின்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்கள் சிலருக்கு முன்னுரிமை (அளித்துப் போர்ச் செல்வங்களிலிருந்து அதிகமாக) வழங்கினார்கள். (புதிய முஸ்லிம்களில் ஒருவரான) அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். உயைனா (பின் ஹிஸ்னு) அவர்களுக்கும் அதைப் போன்றே கொடுத்தார்கள். அரபுகளில் முக்கியப் பிரமுகர்கள் சிலருக்கும் கொடுத்தார்கள். அன்றைய தினம் அவர்களுக்கெல்லாம் பங்கீட்டில் முன்னுரிமை அளித்தார்கள். அப்போது ஒருவர், “அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்தப் பங்கீட்டில் நீதி வழங்கப்படவில்லை; அல்லாஹ்வின் திருப்தி நாடப்படவில்லை” என்று சொன்னார். உடனே நான், “இதை நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிப்பேன்” என்று சொல்லிவிட்டு, அவர்களிடம் சென்று அவர் சொன்னதைத் தெரிவித்தேன். இதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் செஞ்சாந்து போல் சிவந்துவிட்டது. பிறகு “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீதியுடன் நடந்துகொள்ளாவிட்டால் வேறுயார் நீதியுடன் நடந்துகொள்வர்? அல்லாஹ் (இறைத்தூதர்) மூஸா (அலை) அவர்களுக்கு கருணை புரிவானாக! அவர்கள் இதைவிட அதிகமாக மன வேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும், (அதைச்) சகித்துக்கொண்டார்கள்” என்று கூறினார்கள்.

நான், “உறுதியாக! இனிமேல் எந்தச் செய்தியையும் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லமாட்டேன்” என்று சொன்னேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 46, ஹதீஸ் எண்: 1758

حَدَّثَنَا ‏ ‏سُرَيْجُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ يَحْيَى بْنِ عُمَارَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبَّادِ بْنِ تَمِيمٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمَّا فَتَحَ ‏ ‏حُنَيْنًا ‏ ‏قَسَمَ الْغَنَائِمَ فَأَعْطَى الْمُؤَلَّفَةَ قُلُوبُهُمْ فَبَلَغَهُ أَنَّ ‏ ‏الْأَنْصَارَ ‏ ‏يُحِبُّونَ أَنْ يُصِيبُوا مَا أَصَابَ النَّاسُ فَقَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَخَطَبَهُمْ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ يَا مَعْشَرَ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏أَلَمْ أَجِدْكُمْ ضُلَّالًا فَهَدَاكُمْ اللَّهُ بِي ‏ ‏وَعَالَةً ‏ ‏فَأَغْنَاكُمْ اللَّهُ بِي وَمُتَفَرِّقِينَ فَجَمَعَكُمْ اللَّهُ بِي وَيَقُولُونَ اللَّهُ وَرَسُولُهُ أَمَنُّ فَقَالَ أَلَا تُجِيبُونِي فَقَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَمَنُّ فَقَالَ أَمَا إِنَّكُمْ لَوْ شِئْتُمْ أَنْ تَقُولُوا كَذَا وَكَذَا وَكَانَ مِنْ الْأَمْرِ كَذَا وَكَذَا لِأَشْيَاءَ عَدَّدَهَا زَعَمَ ‏ ‏عَمْرٌو ‏ ‏أَنْ لَا يَحْفَظُهَا فَقَالَ ‏ ‏أَلَا تَرْضَوْنَ أَنْ يَذْهَبَ النَّاسُ بِالشَّاءِ وَالْإِبِلِ وَتَذْهَبُونَ بِرَسُولِ اللَّهِ إِلَى ‏ ‏رِحَالِكُمْ ‏ ‏الْأَنْصَارُ ‏ ‏شِعَارٌ وَالنَّاسُ دِثَارٌ وَلَوْلَا الْهِجْرَةُ لَكُنْتُ امْرَأً مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏وَلَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا وَشِعْبًا لَسَلَكْتُ وَادِيَ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏وَشِعْبَهُمْ إِنَّكُمْ سَتَلْقَوْنَ بَعْدِي ‏ ‏أَثَرَةً ‏ ‏فَاصْبِرُوا حَتَّى تَلْقَوْنِي عَلَى الْحَوْضِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹுனைன் போரில் வெற்றி கண்டபோது, போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டார்கள். அப்போது உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டி(மக்கா வெற்றியின்போது புதிதாக இஸ்லாத்தைத் தழுவி(யவர்களுக்கு அவற்றைக் கொடுத்தார்கள். ‘அந்த மக்களுக்குக் கிடைத்ததைப் போன்று தமக்கும் கிடைக்க வேண்டும் என அன்ஸாரிகள் விரும்புகின்றார்கள்’ என்ற செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எழுந்து நின்று, அன்ஸாரிகளிடையே உரையாற்றினார்கள்.

அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிறகு, “அன்ஸாரிகளே! உங்களை வழிதவறியவர்களாக நான் கண்டேன்; அல்லாஹ் என் மூலமாக உங்களுக்கு நேர்வழி காட்டவில்லையா? நீங்கள் ஏழ்மையில் இருந்தீர்கள். அல்லாஹ், என் மூலமாக உங்களைத் தேவையற்றவர்களாக ஆக்கவில்லையா? நீங்கள் பிரிந்து (சிதறிக்) கிடந்தீர்கள். அல்லாஹ் என் மூலமாக உங்களை இணக்கமாக்கவில்லையா?” என்று கேட்டார்கள். ஒவ்வொரு கேள்விக்கும் அன்ஸாரிகள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே (எங்களுக்கு) அதிக நலன் நாடுவோர்” என்று பதில் கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவ்வாறிருக்க, எனக்கு நீங்கள் ஒத்துழைக்கமாட்டீர்களா?” என்று கேட்க அதற்கும் அன்ஸாரிகள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே (எங்களுக்கு) அதிக நலன் நாடுவோர்” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “விரும்பினால் நீங்களும் இன்னின்னவாறு இன்னின்னபோது நடந்தது என்று (எனக்கு நீங்கள் செய்த உதவிகளையும் எடுத்துக்) கூறலாம்” என்று சில விஷயங்களை நினைவூட்டினார்கள்.

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(புதிதாக இஸ்லாத்தை ஏற்றுள்ள) இந்த மக்கள் (நான் கொடுக்கும்) ஆடுகளையும் ஒட்டகங்களையும் (ஓட்டிக்) கொண்டுசெல்ல, நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைவனின் தூதரையே கொண்டுசெல்வதை விரும்பமாட்டீர்களா? அன்ஸாரி(களாகிய நீங்)கள் (மேனியுடன் ஒட்டிய) உள்ளாடைகள் போன்றவர்கள். மற்றவர்கள் மேலாடை போன்றவர்கள். ஹிஜ்ரத்(தினால் நான் மக்கத்து முஹாஜிர்) இல்லாவிட்டால், நான் (மதீனத்து) அன்ஸாரிகளில் ஒருவனே!. மக்களெல்லாம் ஒரு கணவாயிலும் பள்ளத்தாக்கிலும் நடந்து சென்றால், நான் அன்ஸாரிகள் செல்லும் கணவாயிலும் பள்ளத் தாக்கிலும்தான் செல்வேன். நீங்கள் விரைவில் (ஆட்சியதிகாரத்தில்) உங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதைக் காண்பீர்கள். ஆகவே, (மறுமையில்) தடாகம் அருகே என்னைச் சந்திக்கும்வரை பொறுமையுடன் இருங்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)

குறிப்பு : “நீங்கள் எனக்குச் செய்த இன்னின்ன உதவிகளைச் சொல்லிக் காட்டலாம்“ என்று நபி (ஸல்) நினைவூட்டிய விஷயங்களைத் தாம் மனனமிடவில்லை என இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ரு பின் யஹ்யா (ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாயம்: 12, பாடம்: 46, ஹதீஸ் எண்: 1757

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عُمَرَ بْنِ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبَايَةَ بْنِ رِفَاعَةَ ‏ ‏عَنْ ‏ ‏رَافِعِ بْنِ خَدِيجٍ ‏ ‏قَالَ ‏

‏أَعْطَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَبَا سُفْيَانَ بْنَ حَرْبٍ ‏ ‏وَصَفْوَانَ بْنَ أُمَيَّةَ ‏ ‏وَعُيَيْنَةَ بْنَ حِصْنٍ ‏ ‏وَالْأَقْرَعَ بْنَ حَابِسٍ ‏ ‏كُلَّ إِنْسَانٍ مِنْهُمْ مِائَةً مِنْ الْإِبِلِ وَأَعْطَى ‏ ‏عَبَّاسَ بْنَ مِرْدَاسٍ ‏ ‏دُونَ ذَلِكَ فَقَالَ ‏ ‏عَبَّاسُ بْنُ مِرْدَاسٍ ‏
‏أَتَجْعَلُ نَهْبِي وَنَهْبَ ‏ ‏الْعُبَيْدِ ‏

‏بَيْنَ ‏ ‏عُيَيْنَةَ ‏ ‏وَالْأَقْرَعِ ‏
‏فَمَا كَانَ ‏ ‏بَدْرٌ ‏ ‏وَلَا ‏ ‏حَابِسٌ ‏
‏يَفُوقَانِ ‏ ‏مِرْدَاسَ ‏ ‏فِي الْمَجْمَعِ ‏
‏وَمَا كُنْتُ دُونَ امْرِئٍ مِنْهُمَا ‏
‏وَمَنْ تَخْفِضْ الْيَوْمَ لَا ‏ ‏يُرْفَعِ ‏

‏قَالَ فَأَتَمَّ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِائَةً ‏

‏و حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُمَرَ بْنِ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَسَمَ غَنَائِمَ ‏ ‏حُنَيْنٍ ‏ ‏فَأَعْطَى ‏ ‏أَبَا سُفْيَانَ بْنَ حَرْبٍ ‏ ‏مِائَةً مِنْ الْإِبِلِ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِهِ وَزَادَ وَأَعْطَى ‏ ‏عَلْقَمَةَ بْنَ عُلَاثَةَ ‏ ‏مِائَةً ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مَخْلَدُ بْنُ خَالِدٍ الشَّعِيرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُمَرُ بْنُ سَعِيدٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَلَمْ يَذْكُرْ فِي الْحَدِيثِ ‏ ‏عَلْقَمَةَ بْنَ عُلَاثَةَ ‏ ‏وَلَا ‏ ‏صَفْوَانَ بْنَ أُمَيَّةَ ‏ ‏وَلَمْ يَذْكُرْ الشِّعْرَ فِي حَدِيثِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஹுனைன் போர்ச் செல்வங்களிலிருந்து) அபூஸுஃப்யான் பின் ஹர்பு (ரலி), ஸஃப்வான் பின் உமய்யா (ரலி), உயைனா பின் ஹிஸ்னு (ரலி) மற்றும் அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) ஆகியோருக்குத் தலா நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள். அப்பாஸ் பின் மிர்தாஸ் (ரலி) அவர்களுக்கு அதைவிடக் குறைவாகக் கொடுத்தார்கள். அப்போது அப்பாஸ் பின் மிர்தாஸ் (ரலி),

“எனது பங்கையும்
(என் குதிரை) உபைதின் பங்கையும்
உயைனாவுக்கும் அக்ரஉக்குமிடையே
பங்கிடுகின்றீரா?
சபைகளில் மிர்தாஸை மிஞ்சுபவர்களாக
பத்ருமில்லை; ஹாபிஸும் இல்லை.
அவ்விருவரையும்விட
நான் குறைந்தவனுமில்லை
யாரை இன்று நீர் தாழ்த்திவிட்டீரோ
அவர் உயர்த்தப்படப்போவதில்லை”

என்று கவி பாடினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நூறு ஒட்டகங்களை அவருக்கு முழுமையாக்கி(வழங்கி)னார்கள்.

அறிவிப்பாளர்: ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)

குறிப்புகள் : அஹ்மதிப்னு அப்த (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டார்கள். அப்போது அபூஸுஃப்யான் பின் ஹர்பு (ரலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள் …” என்று ஹதீஸ் தொடங்குகிறது. மேலும் அதில், “அல்கமா பின் உலாஸா (ரலி) அவர்களுக்கும் நூறு ஒட்டகங்கள் வழங்கினார்கள்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

மக்லதிப்னு காலித் அஷ்ஷயீரி (ரஹ்) வழி அறிப்பில், அல்கமா பின் உலாஸா (ரலி) அவர்களைப் பற்றியோ ஸஃப்வான் பின் உமய்யா (ரலி) அவர்களைப் பற்றியோ குறிப்பேதுமில்லை. மேலும், மேற்கண்ட கவிதையும் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 12, பாடம்: 46, ஹதீஸ் எண்: 1756

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَإِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عَرْعَرَةَ ‏ ‏يَزِيدُ أَحَدُهُمَا عَلَى الْآخَرِ الْحَرْفَ بَعْدَ الْحَرْفِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عَوْنٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ زَيْدِ بْنِ أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏

‏لَمَّا كَانَ يَوْمُ ‏ ‏حُنَيْنٍ ‏ ‏أَقْبَلَتْ ‏ ‏هَوَازِنُ ‏ ‏وَغَطَفَانُ ‏ ‏وَغَيْرُهُمْ بِذَرَارِيِّهِمْ وَنَعَمِهِمْ وَمَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَئِذٍ عَشَرَةُ آلَافٍ وَمَعَهُ ‏ ‏الطُّلَقَاءُ ‏ ‏فَأَدْبَرُوا عَنْهُ حَتَّى بَقِيَ وَحْدَهُ قَالَ فَنَادَى يَوْمَئِذٍ نِدَاءَيْنِ لَمْ يَخْلِطْ بَيْنَهُمَا شَيْئًا قَالَ فَالْتَفَتَ عَنْ يَمِينِهِ فَقَالَ ‏ ‏يَا مَعْشَرَ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏فَقَالُوا لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ أَبْشِرْ نَحْنُ مَعَكَ قَالَ ثُمَّ الْتَفَتَ عَنْ يَسَارِهِ فَقَالَ يَا مَعْشَرَ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏قَالُوا لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ أَبْشِرْ نَحْنُ مَعَكَ قَالَ وَهُوَ عَلَى بَغْلَةٍ بَيْضَاءَ فَنَزَلَ فَقَالَ أَنَا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ فَانْهَزَمَ الْمُشْرِكُونَ وَأَصَابَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏غَنَائِمَ كَثِيرَةً فَقَسَمَ فِي ‏ ‏الْمُهَاجِرِينَ ‏ ‏وَالطُّلَقَاءِ ‏ ‏وَلَمْ يُعْطِ ‏ ‏الْأَنْصَارَ ‏ ‏شَيْئًا فَقَالَتْ ‏ ‏الْأَنْصَارُ ‏ ‏إِذَا كَانَتْ الشِّدَّةُ فَنَحْنُ ‏ ‏نُدْعَى ‏ ‏وَتُعْطَى الْغَنَائِمُ غَيْرَنَا فَبَلَغَهُ ذَلِكَ فَجَمَعَهُمْ فِي ‏ ‏قُبَّةٍ ‏ ‏فَقَالَ يَا مَعْشَرَ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏مَا حَدِيثٌ بَلَغَنِي عَنْكُمْ فَسَكَتُوا فَقَالَ يَا مَعْشَرَ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏أَمَا تَرْضَوْنَ أَنْ يَذْهَبَ النَّاسُ بِالدُّنْيَا وَتَذْهَبُونَ ‏ ‏بِمُحَمَّدٍ ‏ ‏تَحُوزُونَهُ ‏ ‏إِلَى بُيُوتِكُمْ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ رَضِينَا قَالَ فَقَالَ لَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا وَسَلَكَتْ ‏ ‏الْأَنْصَارُ ‏ ‏شِعْبًا ‏ ‏لَأَخَذْتُ ‏ ‏شِعْبَ ‏ ‏الْأَنْصَارِ ‏

‏قَالَ ‏ ‏هِشَامٌ ‏ ‏فَقُلْتُ ‏ ‏يَا ‏ ‏أَبَا حَمْزَةَ ‏ ‏أَنْتَ شَاهِدٌ ذَاكَ قَالَ وَأَيْنَ أَغِيبُ عَنْهُ

‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏وَحَامِدُ بْنُ عُمَرَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏السُّمَيْطُ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏ ‏افْتَتَحْنَا ‏ ‏مَكَّةَ ‏ ‏ثُمَّ إِنَّا غَزَوْنَا ‏ ‏حُنَيْنًا ‏ ‏فَجَاءَ الْمُشْرِكُونَ بِأَحْسَنِ صُفُوفٍ رَأَيْتُ قَالَ فَصُفَّتْ الْخَيْلُ ثُمَّ صُفَّتْ الْمُقَاتِلَةُ ثُمَّ صُفَّتْ النِّسَاءُ مِنْ وَرَاءِ ذَلِكَ ثُمَّ صُفَّتْ الْغَنَمُ ثُمَّ صُفَّتْ النَّعَمُ قَالَ وَنَحْنُ بَشَرٌ كَثِيرٌ قَدْ بَلَغْنَا سِتَّةَ آلَافٍ وَعَلَى ‏ ‏مُجَنِّبَةِ ‏ ‏خَيْلِنَا ‏ ‏خَالِدُ بْنُ الْوَلِيدِ ‏ ‏قَالَ فَجَعَلَتْ خَيْلُنَا ‏ ‏تَلْوِي خَلْفَ ظُهُورِنَا فَلَمْ نَلْبَثْ أَنْ انْكَشَفَتْ خَيْلُنَا وَفَرَّتْ ‏ ‏الْأَعْرَابُ ‏ ‏وَمَنْ نَعْلَمُ مِنْ النَّاسِ قَالَ فَنَادَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَالَ ‏ ‏الْمُهَاجِرِينَ ‏ ‏يَالَ ‏ ‏الْمُهَاجِرِينَ ‏ ‏ثُمَّ قَالَ ‏ ‏يَالَ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏يَالَ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏أَنَسٌ ‏ ‏هَذَا حَدِيثُ ‏ ‏عِمِّيَّةٍ ‏ ‏قَالَ قُلْنَا لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ فَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَايْمُ اللَّهِ مَا أَتَيْنَاهُمْ حَتَّى هَزَمَهُمْ اللَّهُ قَالَ فَقَبَضْنَا ذَلِكَ الْمَالَ ثُمَّ انْطَلَقْنَا إِلَى ‏ ‏الطَّائِفِ ‏ ‏فَحَاصَرْنَاهُمْ أَرْبَعِينَ لَيْلَةً ثُمَّ رَجَعْنَا إِلَى ‏ ‏مَكَّةَ ‏ ‏فَنَزَلْنَا قَالَ فَجَعَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُعْطِي الرَّجُلَ الْمِائَةَ مِنْ الْإِبِلِ ثُمَّ ذَكَرَ بَاقِيَ الْحَدِيثِ كَنَحْوِ حَدِيثِ ‏ ‏قَتَادَةَ ‏ ‏وَأَبِي التَّيَّاحِ ‏ ‏وَهِشَامِ بْنِ زَيْدٍ

ஹுனைன் போரின்போது (எதிரிகளான) ஹவாஸின் குலத்தாரும் கத்ஃபான் குலத்தாரும் தம் குழந்தை குட்டிகளுடனும் கால்நடைகளுடனும் (இஸ்லாமியப் படையினரை எதிர்நோக்கி) வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களுடன் (அறப்) போராளிகள் பத்தாயிரம் பேரும் (மக்கா வெற்றியின்போது) மன்னிப்பு அளிக்கப்பட்டவர்களும் இருந்தனர். எனினும், அவர்கள் (எதிரிகளின் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல்) நபி (ஸல்) அவர்களைத் தனியாக விட்டுவிட்டுப் பின்வாங்கினர். அப்போது நபி (ஸல்) எதுவும் பேசாமல் இரு முறை அழைப்பு விடுத்தார்கள். தமது வலப் பக்கம் திரும்பி “அன்ஸாரிகளே!” என்று அழைக்க, அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இதோ வந்துவிட்டோம். நற்செய்தி பெறுங்கள்; நாங்கள் உங்களுடன்தான் இருக்கின்றோம்” என்று கூறினர். பிறகு தம் இடப் பக்கம் திரும்பி, “அன்ஸாரிகளே!” என்று அழைத்தார்கள். அவர்களும், “அல்லாஹ்வின் தூதரே! இதோ வந்துவிட்டோம். நற்செய்தி பெறுங்கள்; நாங்கள் உங்களுடன்தான் இருக்கின்றோம்” என்று கூறினர். அப்போது நபி (ஸல்) வெள்ளைக் கோவேறு கழுதையின் மீது இருந்தார்கள். பிறகு அதிலிருந்து இறங்கி, “நான் அல்லாஹ்வின் அடியானும் அவனுடைய தூதனுமாவேன்” என்று சொன்னார்கள். பிறகு (தொடர்ந்து நடந்த அந்தப் போரில்) இணைவைப்பாளர்கள் வெற்றிகொள்ளப்பட்டனர்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதிகமான போர்ச் செல்வங்களைப் பெற்றார்கள். அவற்றை முஹாஜிர்களிடையேயும் (மக்கா வெற்றியின்போது) மன்னிப்பு அளிக்கப்பட்டவர்களிடையேயும் பங்கிட்டார்கள். அன்ஸாரிகளுக்கு எதையும் கொடுக்கவில்லை.

ஆகவே, அன்ஸாரிகள் (சிலர்), “கடுமையான பிரச்சினை என்றால் நாங்கள் அழைக்கப்படுகின்றோம். போர்ச் செல்வங்களோ மற்றவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன” என்று (மனக் குறையுடன்) பேசிக்கொண்டனர். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, நபி (ஸல்), அன்ஸாரிகளை ஒரு கூடாரத்தில் ஒன்று கூட்டி, “அன்ஸாரிகளே! உங்களைக் குறித்து எனக்கு எட்டிய செய்தியின் நிலை என்ன? (உண்மைதானா?)” என்று கேட்டார்கள். அவர்கள் (அதை ஒப்புக்கொள்வதைப் போன்று) மௌனமாயிருந்தார்கள். அப்போது நபி (ஸல்), “அன்ஸாரிகளே! மக்கள் உலகச் செல்வத்தைத் தங்களுடன் கொண்டுசெல்ல, நீங்கள் முஹம்மதை உடைமையாக்கிக் கொண்டு உங்கள் இல்லங்களுக்குச் செல்வதை நீங்கள் விரும்பவில்லையா?” என்று கேட்டார்கள். அன்ஸாரிகள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (உங்களைத்தான்) விரும்புகின்றோம்” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்), “மக்கள் அனைவரும் ஒரு பள்ளத்தாக்கின் வழியில் செல்ல, அன்ஸாரிகள் மட்டும் ஒரு கணவாய் வழிச் செல்வார்களாயின், நான் அன்ஸாரிகள் செல்லும் கணவாய் வழியையே தேர்ந்தெடுப்பேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

குறிப்புகள் : இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் பின் ஸைத் (ரஹ்), (இதைத் தமக்கு அறிவித்த தம் பாட்டனாரான அனஸ் (ரலி) அவர்களிடம்), “அபூஹம்ஸா! (இந்நிகழ்ச்சி நடைபெற்றபோது) நீங்கள் அங்கு இருந்தீர்களா?” என்று கேட்க, அனஸ் (ரலி), “நான் நபி (ஸல்) அவர்களை விடுத்து எங்குப் போவேன்?” என்று பதிலளித்தார்கள்.

அல் முஅத்தமிர் பின் ஸுலைமான் வழி அறிவிப்பில்,
நாங்கள் மக்காவை வெற்றிகொண்டோம். பின்னர் ஹுனைனை நோக்கிப் போருக்காகப் புறப்பட்டோம். அப்போது (எதிரிகளான) இணைவைப்பாளர்கள் நான் பார்த்தவற்றிலேயே மிக அழகான முறையில் அணிவகுத்து வந்தனர். முதலில் குதிரைப் படைகள் நிறுத்தப்பட்டன. பிறகு காலாட் படையினரும் அதற்குப் பின்னால் பெண்கள் அணியும் நிறுத்தப்பட்டது. பிறகு ஆடுகளும் பின்னர் இதர கால்நடைகளும் நிறுத்தப்பட்டன. அப்போது (எங்கள் அணியில்) அதிகமான வீரர்கள் இருந்தனர்; நாங்கள் ஆறாயிரம் பேர் இருந்தோம். எங்கள் குதிரைப் படைக்கு காலித் பின் வலீத் (ரலி) (தளபதியாக) இருந்தார்கள். எங்கள் குதிரைப் படை (திடீரென) எங்கள் முதுகுக்குப் பின்னால் திரும்பலாயிற்று. சிறிது நேரமே கழிந்திருக்கும்; அதற்குள் அவை (களத்திலிருந்து) விலகிச் செல்லத் தொடங்கின. எங்கள் (அணியிலிருந்த) கிராமவாசிகளும் நாங்கள் அறிந்த வேறு சிலரும் வெருண்டோடலாயினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “முஹாஜிர்களே, முஹாஜிர்களே!” என்று அழைத்தார்கள். பின்னர் “அன்ஸாரிகளே, அன்ஸாரிகளே!” என்று அழைத்தார்கள்.

(“இது என் தந்தையின் சகோதரர்கள் (அல்லது என் கூட்டத்தார்) அறிவித்த தகவலாகும்” என்று அறிவிப்பாளர் குறிப்பிடுகின்றார்)

அப்போது நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் அழைப்புக்குக் கீழ்ப்படிந்தோம்” என்று கூறி(முன்னே வந்து எதிரிகளுடன் போரிடலா)னோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முன்னேறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் எதிரிகளை நோக்கி முன்னேறிச் சென்றபோது, அல்லாஹ் எங்கள் எதிரிகளை தோல்வியுறச் செய்தான். (எதிரிகள் விட்டுச் சென்ற) அந்த(ப் போர்)ச் செல்வங்களை நாங்கள் கைப்பற்றினோம். பின்னர் தாயிஃப் (நகர மக்களை) நோக்கிச் சென்று அவர்களை நாற்பது இரவுகள் முற்றுகையிட்டோம். பிறகு மக்காவிற்குத் திரும்பி வந்து (அங்குத்) தங்கினோம். அப்போது ஒருவருக்கு நூறு ஒட்டகங்கள் (போர்ப் பரிசாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வழங்கினார்கள்” எனும் விபரம் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 12, பாடம்: 46, ஹதீஸ் எண்: 1755

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي التَّيَّاحِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏قَالَ ‏

‏لَمَّا فُتِحَتْ ‏ ‏مَكَّةُ ‏ ‏قَسَمَ الْغَنَائِمَ فِي ‏ ‏قُرَيْشٍ ‏ ‏فَقَالَتْ ‏ ‏الْأَنْصَارُ ‏ ‏إِنَّ هَذَا لَهُوَ الْعَجَبُ إِنَّ سُيُوفَنَا تَقْطُرُ مِنْ دِمَائِهِمْ وَإِنَّ غَنَائِمَنَا تُرَدُّ عَلَيْهِمْ فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَجَمَعَهُمْ فَقَالَ ‏ ‏مَا الَّذِي بَلَغَنِي عَنْكُمْ قَالُوا هُوَ الَّذِي بَلَغَكَ وَكَانُوا لَا يَكْذِبُونَ قَالَ أَمَا تَرْضَوْنَ أَنْ يَرْجِعَ النَّاسُ بِالدُّنْيَا إِلَى بُيُوتِهِمْ وَتَرْجِعُونَ بِرَسُولِ اللَّهِ إِلَى بُيُوتِكُمْ لَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا أَوْ ‏ ‏شِعْبًا ‏ ‏وَسَلَكَتْ ‏ ‏الْأَنْصَارُ ‏ ‏وَادِيًا أَوْ ‏ ‏شِعْبًا ‏ ‏لَسَلَكْتُ وَادِيَ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏أَوْ ‏ ‏شِعْبَ ‏ ‏الْأَنْصَارِ

மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) குறைஷியர்களுக்குப் போர்ச் செல்வங்களைப் பங்கிட்டார்கள். அப்போது அன்ஸாரிகள் (சிலர்), “இது எங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது!. எதிரிகளின் இரத்தம் எங்களின் வாட்களில் சொட்டிக்கொண்டிருக்க, எங்களுக்குச் சேர வேண்டிய போர்ச் செல்வங்கள் குறைஷியருக்கு மடை மாற்றம் செய்யபடுகின்றன” என்று பேசிக்கொண்டனர். இந்த விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, அன்ஸாரிகளை (ஒரு கூடாரத்தினுள்) ஒன்று திரட்டி, “உங்களைப் பற்றி எனக்கு எட்டிய செய்தியின் நிலை என்ன? (உண்மைதானா?)” என்று கேட்டார்கள். அதற்கு அன்ஸாரிகள் “உங்களுக்கு எட்டிய செய்தி உண்மைதான்” என்று பதிலளித்தனர். அன்ஸாரிகள் பொய் பேசாதவர்களாய் இருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “மக்கள் உலகச் செல்வங்களைப் பெற்றுக்கொண்டு தம் வீடுகளுக்குத் திரும்பிச்செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதரைப் பெற்றுக்கொண்டு உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச்செல்வதை விரும்பவில்லையா? மக்கள் ஒரு கணவாயிலோ பள்ளத்தாக்கிலோ நடந்து செல்ல, அன்ஸாரிகள் வேறொரு கணவாயிலோ பள்ளத்தாக்கிலோ நடந்துசென்றால், நான் அன்ஸாரிகளின் கணவாயின் அல்லது அன்ஸாரிகளின் பள்ளத்தாக்கின் வழிச் செல்வேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 46, ஹதீஸ் எண்: 1754

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏قَتَادَةَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏

‏جَمَعَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْأَنْصَارَ ‏ ‏فَقَالَ أَفِيكُمْ أَحَدٌ مِنْ غَيْرِكُمْ فَقَالُوا لَا إِلَّا ‏ ‏ابْنُ أُخْتٍ ‏ ‏لَنَا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ ابْنَ أُخْتِ الْقَوْمِ مِنْهُمْ فَقَالَ إِنَّ ‏ ‏قُرَيْشًا ‏ ‏حَدِيثُ عَهْدٍ بِجَاهِلِيَّةٍ وَمُصِيبَةٍ وَإِنِّي أَرَدْتُ أَنْ أَجْبُرَهُمْ وَأَتَأَلَّفَهُمْ أَمَا تَرْضَوْنَ أَنْ يَرْجِعَ النَّاسُ بِالدُّنْيَا وَتَرْجِعُونَ بِرَسُولِ اللَّهِ إِلَى بُيُوتِكُمْ لَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا وَسَلَكَ ‏ ‏الْأَنْصَارُ ‏ ‏شِعْبًا ‏ ‏لَسَلَكْتُ ‏ ‏شِعْبَ ‏ ‏الْأَنْصَارِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அன்ஸாரிகளை ஒன்றுதிரட்டி, “உங்களிடையே உங்களுடைய கூட்டத்தார் அல்லாத மற்றவர்கள் எவரேனும் (இங்கு) இருக்கின்றாரா?” என்று கேட்டார்கள். அதற்கு அன்ஸாரிகள், “எங்கள் சகோதரி ஒருத்தியின் புதல்வர் ஒருவரைத் தவிர (பிறத்தியார்) வேறெவருமில்லை” என்று பதிலளித்தார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஒரு சமுதாயத்தாரின் சகோதரியின் புதல்வர் அவர்களைச் சேர்ந்தவரே!” என்று கூறிவிட்டு, “குறைஷியர் அறியாமைக் காலத்திலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுபட்டு இப்போதுதான் இஸ்லாத்தில் இணைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும் அவர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தவும் விரும்பினேன். (அதனால்தான் அவர்களுக்குக் கொடுத்தேன்) மக்கள் உலகச் செல்வங்களைப் பெற்றுக்கொண்டு தம் வீடுகளுக்குத் திருமபிச்செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதரையே பெற்றுக்கொண்டு உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதை விரும்ப வில்லையா? மக்கள் கூட்டம் ஒரு கணவாய் வழியில் நடந்து செல்ல, அன்ஸாரிகள் வேறொரு கணவாய் வழியில் சென்றால் நான் அன்ஸாரிகளின் வழியில்தான் செல்வேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 46, ஹதீஸ் எண்: 1753

حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ ‏

‏أَنَّ أُنَاسًا مِنْ ‏ ‏الْأنْصَارِ ‏ ‏قَالُوا يَوْمَ ‏ ‏حُنَيْنٍ ‏ ‏حِينَ ‏ ‏أَفَاءَ ‏ ‏اللَّهُ عَلَى رَسُولِهِ مِنْ أَمْوَالِ ‏ ‏هَوَازِنَ ‏ ‏مَا ‏ ‏أَفَاءَ ‏ ‏فَطَفِقَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُعْطِي رِجَالًا مِنْ ‏ ‏قُرَيْشٍ ‏ ‏الْمِائَةَ مِنْ الْإِبِلِ فَقَالُوا يَغْفِرُ اللَّهُ لِرَسُولِ اللَّهِ يُعْطِي ‏ ‏قُرَيْشًا ‏ ‏وَيَتْرُكُنَا وَسُيُوفُنَا تَقْطُرُ مِنْ دِمَائِهِمْ قَالَ ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ ‏ ‏فَحُدِّثَ ذَلِكَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ قَوْلِهِمْ فَأَرْسَلَ إِلَى ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏فَجَمَعَهُمْ فِي ‏ ‏قُبَّةٍ ‏ ‏مِنْ ‏ ‏أَدَمٍ ‏ ‏فَلَمَّا اجْتَمَعُوا جَاءَهُمْ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ مَا حَدِيثٌ بَلَغَنِي عَنْكُمْ فَقَالَ لَهُ فُقَهَاءُ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏أَمَّا ذَوُو رَأْيِنَا يَا رَسُولَ اللَّهِ فَلَمْ يَقُولُوا شَيْئًا وَأَمَّا أُنَاسٌ مِنَّا حَدِيثَةٌ أَسْنَانُهُمْ قَالُوا يَغْفِرُ اللَّهُ لِرَسُولِهِ يُعْطِي ‏ ‏قُرَيْشًا ‏ ‏وَيَتْرُكُنَا وَسُيُوفُنَا تَقْطُرُ مِنْ دِمَائِهِمْ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِنِّي أُعْطِي رِجَالًا حَدِيثِي عَهْدٍ بِكُفْرٍ ‏ ‏أَتَأَلَّفُهُمْ ‏ ‏أَفَلَا تَرْضَوْنَ أَنْ يَذْهَبَ النَّاسُ بِالْأَمْوَالِ وَتَرْجِعُونَ إِلَى ‏ ‏رِحَالِكُمْ ‏ ‏بِرَسُولِ اللَّهِ فَوَاللَّهِ لَمَا ‏ ‏تَنْقَلِبُونَ ‏ ‏بِهِ خَيْرٌ مِمَّا ‏ ‏يَنْقَلِبُونَ ‏ ‏بِهِ فَقَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَدْ رَضِينَا قَالَ فَإِنَّكُمْ سَتَجِدُونَ ‏ ‏أَثَرَةً ‏ ‏شَدِيدَةً فَاصْبِرُوا حَتَّى تَلْقَوْا اللَّهَ وَرَسُولَهُ فَإِنِّي عَلَى الْحَوْضِ قَالُوا سَنَصْبِرُ ‏

‏حَدَّثَنَا ‏ ‏حَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏لَمَّا ‏ ‏أَفَاءَ ‏ ‏اللَّهُ عَلَى رَسُولِهِ مَا ‏ ‏أَفَاءَ ‏ ‏مِنْ أَمْوَالِ ‏ ‏هَوَازِنَ ‏ ‏وَاقْتَصَّ الْحَدِيثَ بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ قَالَ ‏ ‏أَنَسٌ ‏ ‏فَلَمْ نَصْبِرْ وَقَالَ فَأَمَّا أُنَاسٌ حَدِيثَةٌ أَسْنَانُهُمْ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمِّهِ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِهِ إِلَّا أَنَّهُ قَالَ قَالَ ‏ ‏أَنَسٌ ‏ ‏قَالُوا نَصْبِرُ كَرِوَايَةِ ‏ ‏يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ

அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு ‘ஹவாஸின்’ குலத்தாரின் செல்வத்தை ஹுனைனில் (வெற்றிப் பரிசாக) வழங்கியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) சில குறைஷியருக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். அப்போது அன்ஸாரிகளில் சிலர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! (எதிரிகளான) குறைஷிகளின் இரத்தம், நம் வாட்களில் சொட்டிக்கொண்டிருக்க, நம்மை விடுத்து அவர்களுக்குக் கொடுக்கின்றார்கள்!” என்று (ஆற்றாமையுடன்) சொன்னார்கள்.

அவர்களின் இந்தப் பேச்சு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அன்ஸாரிகளுக்கு ஆளனுப்பி, அவர்களை ஒரு கூடாரத்தில் ஒன்றுதிரட்டினார்கள். அவர்கள் ஒன்றுகூடியதும் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்து, “உங்களைப் பற்றி எனக்கு எட்டியுள்ள செய்தியின் நிலை என்ன? (உண்மைதானா?)” என்று கேட்க, அன்ஸாரிகளுள் அறிவார்ந்தவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் பக்குவப்பட்ட(தலை)வர்கள் எதுவும் சொல்லவில்லை. எங்களில் இளவயதுடைய சிலர்தாம், ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! நம்முடைய வாட்களில் குறைஷிகளின் இரத்தம் சொட்டிக்கொண்டிருக்க, நம்மை விடுத்து அவர்களுக்குக் கொடுக்கின்றார்களே!’ என்று பேசிக்கொண்டனர்” என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைமறுப்பை விட்டு இப்போதுதான் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சிலருக்கு நான் கொடுக்கின்றேன். அவர்களது உள்ளங்களோடு (இஸ்லாத்தில்) நான் இணக்கம் ஏற்படுத்துகின்றேன். மக்கள் உலகச் செல்வங்களை எடுத்துக்கொண்டு (நாடு) திரும்ப, நீங்கள் உங்கள் இறைவனின் தூதரையே கொண்டுசெல்வதை விரும்பமாட்டீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் பெற்றுச் செல்லும் செல்வங்களைவிட நீங்கள் பெற்றுக் கொள்வது சிறந்ததாகும்” என்று சொன்னார்கள். உடனே அன்ஸாரிகள், “ஆம், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (எங்களுடன் உங்களைக் கொண்டுசெல்வதையே) விரும்புகிறோம்” என்று சொன்னார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “விரைவில் (உங்களை விடுத்து ஆட்சியதிகாரத்தில்) பிறருக்கு அதிகமாக முன்னுரிமை வழங்கப்படுவதைக் காண்பீர்கள். ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (மறுமையில்) நீங்கள் சந்திக்கும்வரை பொறுமையாயிருங்கள். ஏனெனில், அன்று நான் (‘அல்கவ்ஸர்’ எனும்) தடாகத்தின் அருகில் இருப்பேன்” என்று சொன்னார்கள். அதற்கு அன்ஸாரிகள், “நாங்கள் பொறுமையாக இருப்போம்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

குறிப்புகள் : ஸாலிஹ் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹவாஸின் குலத்தாரின் செல்வங்களை வெற்றிப் பரிசாக வழங்கியபோது …” என்று ஹதீஸ் தொடங்குகிறது. இறுதியில் “ஆனால், நாங்கள் பொறுமையாக இருக்கவில்லைதான்” என்று அன்ஸாரிகள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. மேலும், “எங்களில் இளவயதுடைய சிலர்” என்றில்லாமல், ‘இளவயதுடைய சிலர்’ என்று மட்டுமே இடம்பெற்றுள்ளது.

யஃகூப் பின் இபுராஹீம் வழி அறிவிப்பில், மேற்காணும் முழு ஹதீஸின் இறுதியில் உள்ளதைப் போன்று “நாங்கள் பொறுமையாக இருப்போம்” என்றே அன்ஸாரிகள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.