அத்தியாயம்: 29, பாடம்: 8, ஹதீஸ் எண்: 3220

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ الضَّرِيرُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ عُمَيْرِ بْنِ سَعِيدٍ، عَنْ عَلِيٍّ قَالَ :‏

مَا كُنْتُ أُقِيمُ عَلَى أَحَدٍ حَدًّا فَيَمُوتَ فِيهِ فَأَجِدَ مِنْهُ فِي نَفْسِي إِلاَّ صَاحِبَ الْخَمْرِ لأَنَّهُ إِنْ مَاتَ وَدَيْتُهُ لأَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَسُنَّهُ ‏


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ ‏.‏

“நான் தண்டனை நிறைவேற்றியதால் எவரேனும் இறந்துபோனால் (அதற்காக) நான் கவலை அடையப்போவதில்லை, குடிகாரனைத் தவிர! ஏனெனில், (தண்டனை வழங்கப்பட்டதால்) குடிகாரன் இறந்துபோனால் அவனுக்காக நான் ஈட்டுத் தொகை வழங்கிவிடுவேன். இதற்குக் காரணம், (மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (குறிப்பிட்ட தண்டனை எதையும்) வழிமுறையாக்கவில்லை” என்று அலீ (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி)

அத்தியாயம்: 29, பாடம்: 8, ஹதீஸ் எண்: 3219

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – وَهُوَ ابْنُ عُلَيَّةَ – عَنِ ابْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ الدَّانَاجِ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ – وَاللَّفْظُ لَهُ – أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ فَيْرُوزَ، مَوْلَى ابْنِ عَامِرٍ الدَّانَاجِ حَدَّثَنَا حُضَيْنُ بْنُ الْمُنْذِرِ أَبُو سَاسَانَ قَالَ :‏

شَهِدْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ وَأُتِيَ بِالْوَلِيدِ قَدْ صَلَّى الصُّبْحَ رَكْعَتَيْنِ ثُمَّ قَالَ أَزِيدُكُمْ فَشَهِدَ عَلَيْهِ رَجُلاَنِ أَحَدُهُمَا حُمْرَانُ أَنَّهُ شَرِبَ الْخَمْرَ وَشَهِدَ آخَرُ أَنَّهُ رَآهُ يَتَقَيَّأُ فَقَالَ عُثْمَانُ إِنَّهُ لَمْ يَتَقَيَّأْ حَتَّى شَرِبَهَا فَقَالَ يَا عَلِيُّ قُمْ فَاجْلِدْهُ ‏.‏ فَقَالَ عَلِيٌّ قُمْ يَا حَسَنُ فَاجْلِدْهُ ‏.‏ فَقَالَ الْحَسَنُ وَلِّ حَارَّهَا مَنْ تَوَلَّى قَارَّهَا – فَكَأَنَّهُ وَجَدَ عَلَيْهِ – فَقَالَ يَا عَبْدَ اللَّهِ بْنَ جَعْفَرٍ قُمْ فَاجْلِدْهُ ‏.‏ فَجَلَدَهُ وَعَلِيٌّ يَعُدُّ حَتَّى بَلَغَ أَرْبَعِينَ فَقَالَ أَمْسِكْ ‏.‏ ثُمَّ قَالَ جَلَدَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَرْبَعِينَ وَجَلَدَ أَبُو بَكْرٍ أَرْبَعِينَ وَعُمَرُ ثَمَانِينَ وَكُلٌّ سُنَّةٌ وَهَذَا أَحَبُّ إِلَىَّ ‏.‏ زَادَ عَلِيُّ بْنُ حُجْرٍ فِي رِوَايَتِهِ قَالَ إِسْمَاعِيلُ وَقَدْ سَمِعْتُ حَدِيثَ الدَّانَاجِ مِنْهُ فَلَمْ أَحْفَظْهُ ‏.‏

நான் (கலீஃபா) உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது வலீத் பின் உக்பா (ரலி) (அங்கு) கொண்டுவரப்பட்டார். அவர் ஸுப்ஹுத் தொழுகை இரண்டு ரக்அத் தொழுவித்துவிட்டு, “உங்களுக்கு நான் இத்தொழுகையைக் கூடுதலாக்கப்போகிறேன்” என்று கூறியிருந்தார்.

அப்போது அவருக்கெதிராக இருவர் சாட்சியமளித்தனர். அவர்களில் ஒருவரான ஹும்ரான் பின் அபான், “அவர் (வலீத்) மது அருந்தியிருந்தார்” என்று சாட்சியம் அளித்தார். மற்றொருவர் வலீத் வாந்தியெடுத்ததைத் தாம் கண்டதாகச் சாட்சியமளித்தார். உஸ்மான் (ரலி), “அவர் மது அருந்தியதாலேயே வாந்தியெடுத்தார்” என்று கூறிவிட்டு, “அலீயே! நீங்கள் எழுந்து அவருக்கு (மது அருந்திய குற்றத்திற்காக) சாட்டையடி வழங்குங்கள்” என்று கூறினார்கள்.

உடனே அலீ (ரலி) (தம் மகனிடம்) “ஹஸனே! நீ எழுந்து அவருக்குச் சாட்டையடி வழங்கு” என்று கூறினார்கள். அதற்கு ஹஸன் (ரலி), (உஸ்மான் (ரலி) அவர்கள்மீது கோபம் கொண்டவரைப் போன்று) “ஆட்சியின் குளிர்ச்சிக்குப் பொறுப்பேற்றவர்களையே அதன் வெப்பத்துக்கும் பொறுப்பேற்கச் செய்யுங்கள்” என்று கூறிவிட்டார்கள். உடனே அலீ (ரலி) அவர்கள் (தம் சகோதரரின் மகனிடம்) “அப்துல்லாஹ் பின் ஜஅஃபரே! நீர் எழுந்து அவருக்குச் சாட்டையடி வழங்குவீராக” என்று சொன்னார்கள். அவ்வாறே அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் அவர்கள், வலீதுக்குச் சாட்டையடி வழங்கினார்கள். அப்போது அலீ (ரலி) (அப்துல்லாஹ் எத்தனை முறை அடிக்கிறார் என்பதை) எண்ணிக்கொண்டிருந்தார்கள். நாற்பது அடியானதும் “போதும் நிறுத்து” என்றார்கள்.

பிறகு, “(மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாக) நபி (ஸல்) நாற்பது சாட்டையடிகள் வழங்கினார்கள். அபூபக்ரு (ரலி) அவர்களும் (தமது ஆட்சிக் காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் வழங்கினார்கள். உமர் (ரலி) (தமது ஆட்சிக் காலத்தில்) எண்பது சாட்டையடிகள் வழங்கினார்கள். எல்லாம் (பின்பற்றத் தகுந்த) வழிமுறைகளே. ஆயினும், இ(றைத்தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ரு (ரலி) அவர்களும் வழங்கிய நாற்பது சாட்டையடிகளான)து எனக்கு மிகவும் விருப்பமானதாகும்” என்று அலீ (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி) வழியாக, அபூஸாசான் ஹுளைன் பின் அல்முன்திர் (ரஹ்)


குறிப்பு :

அலீ பின் ஹுஜ்ரு (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் இந்த ஹதீஸை அப்துல்லாஹ் அத்தானாஜ் (ரஹ்) அவர்களிடமிருந்தே (நேரடியாகக்) கேட்டிருந்தேன். ஆனால், அதை மனனம் செய்யவில்லை. (பின்னர் இப்னு அபீஅரூபா (ரஹ்) அவர்களிடம் கேட்டுவிட்டு, இப்போது அறிவிக்கிறேன்) என இஸ்மாயீல் பின் உலய்யா (ரஹ்) கூடுதலாகக் கூறினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 29, பாடம்: 8, ஹதீஸ் எண்: 3218

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ :‏

أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم جَلَدَ فِي الْخَمْرِ بِالْجَرِيدِ وَالنِّعَالِ ثُمَّ جَلَدَ أَبُو بَكْرٍ أَرْبَعِينَ ‏ فَلَمَّا كَانَ عُمَرُ وَدَنَا النَّاسُ مِنَ الرِّيفِ وَالْقُرَى قَالَ مَا تَرَوْنَ فِي جَلْدِ الْخَمْرِ فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ أَرَى أَنْ تَجْعَلَهَا كَأَخَفِّ الْحُدُودِ ‏.‏ قَالَ فَجَلَدَ عُمَرُ ثَمَانِينَ ‏.‏


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا هِشَامٌ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَضْرِبُ فِي الْخَمْرِ بِالنِّعَالِ وَالْجَرِيدِ أَرْبَعِينَ ‏.‏ ثُمَّ ذَكَرَ نَحْوَ حَدِيثِهِمَا وَلَمْ يَذْكُرِ الرِّيفَ وَالْقُرَى ‏.

மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாக பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் அடிக்கும்படி நபி (ஸல்) உத்தரவிட்டார்கள். அபூபக்ரு (ரலி) (தமது ஆட்சிக் காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் கொடு(க்குமாறு உத்தரவு பிறப்பி)த்தார்கள். உமர் (ரலி) ஆட்சிக்கு வந்த வேளையில், (சிரியா, இராக் போன்ற பகுதிகள் வெற்றி கொள்ளப்பட்டு) மக்கள் கிராமப்புறங்களிலும் செழிப்பான பகுதிகளிலும் குடியேறியபோது (வாழ்க்கை வசதிகள் பெருகி, குடிப் பழக்கம் அதிகரித்தது. அப்போது), “மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை விஷயத்தில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று மக்களிடம் உமர் (ரலி) கேட்டார்கள்.

அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரலி), “(குர்ஆனில் கூறப்பட்ட) குற்றவியல் தண்டனைகளிலேயே மிகவும் குறைந்தபட்ச தண்டனையை (எண்பது கசையடி) அதற்குரிய தண்டனையாக நீங்கள் ஆக்க வேண்டுமென நான் கருதுகிறேன்” என்றார்கள். இதன்படி உமர் (ரலி) எண்பது சாட்டையடிகள் வழங்கினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு

வகீஉ (ரஹ்) வழி அறிவிப்பு, “மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாகக் காலணியாலும் பேரீச்ச மட்டையாலும் நபி (ஸல்) நாற்பது முறை அடிக்குமாறு உத்தரவிட்டுவந்தார்கள்” என்று ஆரம்பமாகிறது. அதில் “மக்கள் கிராமப்புறங்களிலும் செழிப்பான பகுதிகளிலும் குடியேறியபோது …“ எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 29, பாடம்: 8, ஹதீஸ் எண்: 3217

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ بِرَجُلٍ قَدْ شَرِبَ الْخَمْرَ فَجَلَدَهُ بِجَرِيدَتَيْنِ نَحْوَ أَرْبَعِينَ ‏‏ قَالَ وَفَعَلَهُ أَبُو بَكْرٍ فَلَمَّا كَانَ عُمَرُ اسْتَشَارَ النَّاسَ فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ أَخَفَّ الْحُدُودِ ثَمَانِينَ ‏.‏ فَأَمَرَ بِهِ عُمَرُ ‏.‏


وَحَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، – يَعْنِي ابْنَ الْحَارِثِ – حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِرَجُلٍ ‏.‏ فَذَكَرَ نَحْوَهُ ‏.‏

மது அருந்திய ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது, அவரை இரு பேரீச்ச மட்டைகளால் ஏறக்குறைய நாற்பது முறை அடிக்குமாறு உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

அபூபக்ரு (ரலி) அவர்களும் (தமது ஆட்சிக் காலத்தில்) அவ்வாறே செய்தார்கள். உமர் (ரலி) ஆட்சிக்கு வந்தபோது, மக்களிடம் ஆலோசனை கேட்டார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரலி) “(குர்ஆனில் கூறப்பட்டுள்ள) குற்றவியல் தண்டனைகளிலேயே குறைந்த பட்ச தண்டனையான எண்பது (சாட்டையடிகள் வழங்கலாம்)” என்று கூறினார்கள். அவ்வாறே உமர் (ரலி) கட்டளையிட்டார்கள்.

காலித் இப்னுல் ஹாரிஸ் (ரஹ்) வழி அறிவிப்பு, “(மது அருந்திய) ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது…” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.