அத்தியாயம்: 31, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3256

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ أَنَّهُ قَالَ :‏

قُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ تَبْعَثُنَا فَنَنْزِلُ بِقَوْمٍ فَلاَ يَقْرُونَنَا فَمَا تَرَى فَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِنْ نَزَلْتُمْ بِقَوْمٍ فَأَمَرُوا لَكُمْ بِمَا يَنْبَغِي لِلضَّيْفِ فَاقْبَلُوا فَإِنْ لَمْ يَفْعَلُوا فَخُذُوا مِنْهُمْ حَقَّ الضَّيْفِ الَّذِي يَنْبَغِي لَهُمْ ‏”‏ ‏.‏

நாங்கள் (நபியவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களை ஒரு சமூகத்தாரிடம் அனுப்பிவைக்கின்றீர்கள். நாங்கள் (அங்குச்) சென்று அவர்களிடம் தங்குகின்றோம். ஆனால், அவர்கள் எங்களை உபசரிக்கவில்ல. அவ்வாறெனில் (அது குறித்து) தாங்கள் என்ன கருதுகின்றீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீங்கள் ஒரு சமூகத்தாரிடம் செல்ல, அவர்கள் விருந்தினர்களுக்கு வேண்டிய வசதிகளை உங்களுக்குச் செய்து தர ஏற்பாடு செய்தால், அதை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் அப்படிச் செய்யவில்லையென்றால், விருந்தினருக்கான உரிமையை அவர்களிடமிருந்து (நீங்களே) எடுத்துக்கொள்ளுங்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : உக்பா பின் ஆமிர் (ரலி)

அத்தியாயம்: 31, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3255

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي شُرَيْحٍ الْخُزَاعِيِّ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ الضِّيَافَةُ ثَلاَثَةُ أَيَّامٍ وَجَائِزَتُهُ يَوْمٌ وَلَيْلَةٌ وَلاَ يَحِلُّ لِرَجُلٍ مُسْلِمٍ أَنْ يُقِيمَ عِنْدَ أَخِيهِ حَتَّى يُؤْثِمَهُ ‏”‏ ‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ يُؤْثِمُهُ قَالَ ‏”‏ يُقِيمُ عِنْدَهُ وَلاَ شَىْءَ لَهُ يَقْرِيهِ بِهِ ‏”‏ ‏.‏


وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو بَكْرٍ، – يَعْنِي الْحَنَفِيَّ – حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ، بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ، أَنَّهُ سَمِعَ أَبَا شُرَيْحٍ الْخُزَاعِيَّ، يَقُولُ سَمِعَتْ أُذُنَاىَ، وَبَصُرَ، عَيْنِي وَوَعَاهُ قَلْبِي حِينَ تَكَلَّمَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ اللَّيْثِ وَذَكَرَ فِيهِ ‏ “‏ وَلاَ يَحِلُّ لأَحَدِكُمْ أَنْ يُقِيمَ عِنْدَ أَخِيهِ حَتَّى يُؤْثِمَهُ ‏”‏ ‏.‏ بِمِثْلِ مَا فِي حَدِيثِ وَكِيعٍ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “விருந்தோம்பல் என்பது மூன்று நாட்களாகும். ஒரு பகல் ஓர் இரவு (விருந்து) அவருடைய பரிசாகும். ஒரு முஸ்லிம், தம் சகோதரரிடம் அவரைப் பாவத்தில் தள்ளும் அளவுக்குத் தங்கியிருப்பதற்கு அனுமதி இல்லை” என்று கூறினார்கள்.

மக்கள், “அவரைப் பாவத்தில் தள்ளுதல் எப்படி, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அவ(ர் தம் சகோதர)ரிடம் தங்கி இருப்பார். ஆனால், விருந்தளிப்பதற்கு அவரிடம் எதுவுமே இருக்காமல் போய்விடும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஷுரைஹ் அல்குஸாயீ (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் அல் முஸன்னா வழி அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  பேசியபோது என் காதுகளால் கேட்டேன். என் கண்களால் பார்த்தேன்; எனது உள்ளம் மனனமிட்டது” என்று ஆரம்பமாகிறது. அதில், “உங்களில் ஒருவர் தம் சகோதரரைப் பாவத்தில் தள்ளும் அளவுக்குத் தங்கியிருப்பதற்கு அனுமதி இல்லை” என்று மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 31, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3254

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي شُرَيْحٍ الْعَدَوِيِّ أَنَّهُ قَالَ :‏

سَمِعَتْ أُذُنَاىَ، وَأَبْصَرَتْ، عَيْنَاىَ حِينَ تَكَلَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏”‏ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ جَائِزَتَهُ ‏”‏ ‏.‏ قَالُوا وَمَا جَائِزَتُهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏”‏ يَوْمُهُ وَلَيْلَتُهُ وَالضِّيَافَةُ ثَلاَثَةُ أَيَّامٍ فَمَا كَانَ وَرَاءَ ذَلِكَ فَهُوَ صَدَقَةٌ عَلَيْهِ – وَقَالَ – مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ ‏”‏ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பேசியபோது என் செவிகளால் கேட்டேன்; என் கண்களால் பார்த்தேன். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளிக்குத் தமது பரிசைக் கண்ணியமாக வழங்கட்டும்” என்று கூறினார்கள். மக்கள், “அவருடைய பரிசு என்பது என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், “ஒரு பகல் ஓர் இரவு விருந்து (அவருடைய பரிசு) ஆகும். விருந்தோம்பல் என்பது மூன்று நாட்களாகும். அதற்குப் பிறகு அளிப்பவை அவருக்குத் தர்மமாக அமையும். மேலும், அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர் நல்லதையே பேசட்டும்; அல்லது மௌனமாக இருக்கட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஷுரைஹ் அல்அதவீ (ரலி)