அத்தியாயம்: 32, பாடம்: 13, ஹதீஸ் எண்: 3297

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ الْحَنَفِيُّ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنِي إِيَاسُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنِي أَبِي سَلَمَةُ بْنُ الأَكْوَعِ قَالَ :‏

غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم هَوَازِنَ فَبَيْنَا نَحْنُ نَتَضَحَّى مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذْ جَاءَ رَجُلٌ عَلَى جَمَلٍ أَحْمَرَ فَأَنَاخَهُ ثُمَّ انْتَزَعَ طَلَقًا مِنْ حَقَبِهِ فَقَيَّدَ بِهِ الْجَمَلَ ثُمَّ تَقَدَّمَ يَتَغَدَّى مَعَ الْقَوْمِ وَجَعَلَ يَنْظُرُ وَفِينَا ضَعْفَةٌ وَرِقَّةٌ فِي الظَّهْرِ وَبَعْضُنَا مُشَاةٌ إِذْ خَرَجَ يَشْتَدُّ فَأَتَى جَمَلَهُ فَأَطْلَقَ قَيْدَهُ ثُمَّ أَنَاخَهُ وَقَعَدَ عَلَيْهِ فَأَثَارَهُ فَاشْتَدَّ بِهِ الْجَمَلُ فَاتَّبَعَهُ رَجُلٌ عَلَى نَاقَةٍ وَرْقَاءَ ‏.‏ قَالَ سَلَمَةُ وَخَرَجْتُ أَشْتَدُّ فَكُنْتُ عِنْدَ وَرِكِ النَّاقَةِ ‏.‏ ثُمَّ تَقَدَّمْتُ حَتَّى كُنْتُ عِنْدَ وَرِكِ الْجَمَلِ ثُمَّ تَقَدَّمْتُ حَتَّى أَخَذْتُ بِخِطَامِ الْجَمَلِ فَأَنَخْتُهُ فَلَمَّا وَضَعَ رُكْبَتَهُ فِي الأَرْضِ اخْتَرَطْتُ سَيْفِي فَضَرَبْتُ رَأْسَ الرَّجُلِ فَنَدَرَ ثُمَّ جِئْتُ بِالْجَمَلِ أَقُودُهُ عَلَيْهِ رَحْلُهُ وَسِلاَحُهُ فَاسْتَقْبَلَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَالنَّاسُ مَعَهُ فَقَالَ ‏”‏ مَنْ قَتَلَ الرَّجُلَ ‏”‏ ‏.‏ قَالُوا ابْنُ الأَكْوَعِ ‏.‏ قَالَ ‏”‏ لَهُ سَلَبُهُ أَجْمَعُ ‏”‏

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘ஹவாஸின்’ குலத்தாருடன் போரிடப் புறப்பட்டோம். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் காலை உணவு உண்டு கொண்டு இருந்தபோது, சிவப்பு ஒட்டகம் ஒன்றில் (உளவு பார்ப்பதற்காக எதிரிகளில்) ஒருவர் வந்து, ஒட்டகத்தை மண்டியிட வைத்தார். பிறகு ஒட்டகத்திலிருந்த பையிலிருந்து கயிறு ஒன்றை எடுத்து ஒட்டகத்தைக் கட்டிப்போட்டார்.

பிறகு மக்களுடன் சேர்ந்து காலை உணவு உட்கொள்ள வந்தார்; எங்களை நோட்டமிட ஆரம்பித்தார். எங்களிடையே பலவீனமும் வாகனப் பற்றாக்குறையும் இருந்தன. எங்களில் சிலர் நடைப்பயணிகளாக இருந்தனர். பிறகு அவர் (அங்கிருந்து) வேகமாகப் புறப்பட்டு தமது ஒட்டகத்திடம் சென்று, அதன் கயிற்றை அவிழ்த்துவிட்டு, அதை மண்டியிடச் செய்து அதிலேறி அமர்ந்தார்.

பிறகு ஒட்டகத்தைக் கிளப்பி அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டார். (அவர் உளவு பார்க்க வந்தவர் என்பதை அறிந்த முஸ்லிம்) ஒருவர் சாம்பல் நிற ஒட்டகத்தில் ஏறி அவரைப் பின்தொடர்ந்தார்.

நானும் வேகமாகப் புறப்பட்டுச் சென்று, (பின்னால் சென்ற அம்மனிதரின்) ஒட்டகத்திற்கு அருகில் சென்றேன். பிறகு முன்னேறிச் சென்று, அந்தச் சிவப்பு ஒட்டகத்திற்கு அருகில் இருந்தேன். பிறகு இன்னும் சற்று முன்னேறிச் சென்று, அந்தச் சிவப்பு ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்து, அதை மண்டியிடச் செய்தேன்.

அவ்வொட்டகம் முழங்காலை மடித்து பூமியில் அமர்ந்ததும் எனது உறையிலிருந்த வாளை உருவி அந்த உளவாளியின் தலையில் செலுத்தினேன். அவர் சரிந்து விழுந்தார். பிறகு அந்த ஒட்டகத்தை அதன் சிவிகையுடனும் மற்ற ஆயுதங்களுடனும் ஓட்டிக்கொண்டு வந்தேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடனிருந்த மக்களும் என்னை எதிர்கொண்டார்கள். “அவனைக் கொன்றவர் யார்?” என்று நபியவர்கள் கேட்டார்கள். மக்கள் “(ஸலமா) இப்னுல் அக்வஉதாம் (அவனைக் கொன்றார்)” என்று பதிலளித்தனர். “இவருக்கே அவனுடைய உடைமைகள் அனைத்தும் உரியவை” என்று நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸலமா பின் அல்அக்வஉ (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 13, ஹதீஸ் எண்: 3296

وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ قَالَ :‏

قَتَلَ رَجُلٌ مِنْ حِمْيَرَ رَجُلاً مِنَ الْعَدُوِّ فَأَرَادَ سَلَبَهُ فَمَنَعَهُ خَالِدُ بْنُ الْوَلِيدِ وَكَانَ وَالِيًا عَلَيْهِمْ فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَوْفُ بْنُ مَالِكٍ فَأَخْبَرَهُ فَقَالَ لِخَالِدٍ ‏”‏ مَا مَنَعَكَ أَنْ تُعْطِيَهُ سَلَبَهُ ‏”‏ ‏‏ قَالَ اسْتَكْثَرْتُهُ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏”‏ ادْفَعْهُ إِلَيْهِ ‏”‏ ‏.‏ فَمَرَّ خَالِدٌ بِعَوْفٍ فَجَرَّ بِرِدَائِهِ ثُمَّ قَالَ هَلْ أَنْجَزْتُ لَكَ مَا ذَكَرْتُ لَكَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَمِعَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَاسْتُغْضِبَ فَقَالَ ‏”‏ لاَ تُعْطِهِ يَا خَالِدُ لاَ تُعْطِهِ يَا خَالِدُ هَلْ أَنْتُمْ تَارِكُونَ لِي أُمَرَائِي إِنَّمَا مَثَلُكُمْ وَمَثَلُهُمْ كَمَثَلِ رَجُلٍ اسْتُرْعِيَ إِبِلاً أَوْ غَنَمًا فَرَعَاهَا ثُمَّ تَحَيَّنَ سَقْيَهَا فَأَوْرَدَهَا حَوْضًا فَشَرَعَتْ فِيهِ فَشَرِبَتْ صَفْوَهُ وَتَرَكَتْ كَدَرَهُ فَصَفْوُهُ لَكُمْ وَكَدَرُهُ عَلَيْهِمْ ‏”‏ ‏


وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ عَنْ أَبِيهِ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الأَشْجَعِيِّ، قَالَ خَرَجْتُ مَعَ مَنْ خَرَجَ مَعَ زَيْدِ بْنِ حَارِثَةَ فِي غَزْوَةِ مُؤْتَةَ وَرَافَقَنِي مَدَدِيٌّ مِنَ الْيَمَنِ ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ بِنَحْوِهِ غَيْرَ أَنَّهُ قَالَ فِي الْحَدِيثِ قَالَ عَوْفٌ فَقُلْتُ يَا خَالِدُ أَمَا عَلِمْتَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَضَى بِالسَّلَبِ لِلْقَاتِلِ قَالَ بَلَى وَلَكِنِّي اسْتَكْثَرْتُهُ

 ‘ஹிம்யர்’ குலத்தாரில் ஒருவர் (ரோம பைஸாந்திய) எதிரிகளில் ஒருவரை (மூத்தா போரில்)  கொன்றுவிட்டு, தம்மால் கொல்லப்பட்டவரின் உடைமைகளை எடுத்துக்கொள்ள விரும்பினார்.

ஆனால், தளபதியாக இருந்த காலித் பின் அல்வலீத் (ரலி), (அவற்றை முழுமையாகத்) தர மறுத்துவிட்டார்கள்.

எனவே, நான் (மதீனா திரும்பியதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தேன். அவர்கள் காலிதிடம் “அவர், தாம் கொன்ற எதிரியின் உடைமைகளை எடுத்துக்கொள்ள விடாமல் நீர் தடுக்கக் காரணமென்ன?” என்று வினவினார்கள். அதற்கு “அவை அதிகமாக இருப்பதாக நான் கருதினேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று காலித் (ரலி) பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “எல்லாவற்றையும் அவரிடமே கொடுத்துவிடுங்கள்” என்று கூறினார்கள்.

பிறகு காலித் பின் அல்வலீத் (ரலி) (அங்கு அமர்ந்திருந்த) என்னைக் கடந்து சென்றார்கள். உடனே நான் காலித் (ரலி) அவர்களது மேல்துண்டைப் பிடித்து இழுத்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உம்மைப் பற்றிக் கூறுவேன் என்று நான் கூறியபடி செய்துவிட்டேன் அல்லவா!” என்று கூறினேன்.

இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கோபமடைந்தார்கள். “காலிதே! அவருக்குக் கொடுக்காதீர்; காலிதே! அவருக்குக் கொடுக்காதீர். என்னால் நியமிக்கப்பெற்ற தளபதிகளை எனக்காக விட்டுவைக்கமாட்டீர்களா? உங்களது நிலையும் (உங்களுக்குத் தளபதிகளாக நியமிக்கப்பட்ட) அவர்களது நிலையும் ஒட்டகங்களையோ ஆடுகளையோ மேய்க்குமாறு நியமிக்கப்பட்ட (இடையன்) ஒருவனின் நிலையைப் போன்றதாகும். அவன் அவற்றை (ஓட்டிச் சென்று) மேய்த்தான். பிறகு தண்ணீர் புகட்டும் நேரம் வரும்வரை காத்திருந்து, நீர்நிலை ஒன்றுக்கு அவற்றை ஓட்டிச் சென்றான்.

அவை அதில் தண்ணீர் குடிக்கத் துவங்கின. அப்போது (நீர்நிலையின் மேற்பகுதியில் உள்ள) தெளிந்த நீரை அவை குடித்துவிட்டு, கலங்கலான நீரை விட்டுவைத்தன. (அவ்வாறுதான்) தெளிந்த நீர் உங்களுக்கும் கலங்கலான நீர் உங்கள் தளபதிகளுக்கும் உரியவையா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் :  அவ்ஃபு பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி)


குறிப்பு :

‘ஹிம்யர்’ என்போர் யமன் நாட்டின் பழங்குடி இனத்தவராவர்.

ஸஃப்வான் இபுனு அம்ரு (ரஹ்) வழி அறிவிப்பு, “மூத்தா போரின்போது ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றவர்களில் நானும் இருந்தேன். படையினருக்கு உதவி செய்ய யமனிலிருந்து ஒருவர் என்னுடன் வந்திருந்தார்…” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.

மேலும், “அவ்ஃபு பின் மாலிக் (ரலி), ‘காலித் (ரலி) அவர்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எதிரியைக் கொன்றவருக்கே அவரால் கொல்லப்பட்டவரின் உடைமைகள் உரியவை எனத் தீர்ப்பளித்துள்ளதை நீங்கள் அறியவில்லையா?’ என்று கேட்டார்கள். அதற்கு காலித் (ரலி)  ‘கேட்டிருக்கின்றேன்; ஆயினும், நான் அதை அதிகமாகக் கருதுகின்றேன்’ என்று விடையளித்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 32, பாடம்: 13, ஹதீஸ் எண்: 3295

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا يُوسُفُ بْنُ الْمَاجِشُونِ، عَنْ صَالِحِ بْنِ إِبْرَاهِيمَ، بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّهُ قَالَ :‏

بَيْنَا أَنَا وَاقِفٌ، فِي الصَّفِّ يَوْمَ بَدْرٍ نَظَرْتُ عَنْ يَمِينِي، وَشِمَالِي، فَإِذَا أَنَا بَيْنَ غُلاَمَيْنِ مِنَ الأَنْصَارِ حَدِيثَةٍ أَسْنَانُهُمَا تَمَنَّيْتُ لَوْ كُنْتُ بَيْنَ أَضْلَعَ مِنْهُمَا فَغَمَزَنِي أَحَدُهُمَا ‏.‏ فَقَالَ يَا عَمِّ هَلْ تَعْرِفُ أَبَا جَهْلٍ قَالَ قُلْتُ نَعَمْ وَمَا حَاجَتُكَ إِلَيْهِ يَا ابْنَ أَخِي قَالَ أُخْبِرْتُ أَنَّهُ يَسُبُّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَئِنْ رَأَيْتُهُ لاَ يُفَارِقُ سَوَادِي سَوَادَهُ حَتَّى يَمُوتَ الأَعْجَلُ مِنَّا ‏.‏ قَالَ فَتَعَجَّبْتُ لِذَلِكَ فَغَمَزَنِي الآخَرُ فَقَالَ مِثْلَهَا – قَالَ – فَلَمْ أَنْشَبْ أَنْ نَظَرْتُ إِلَى أَبِي جَهْلٍ يَزُولُ فِي النَّاسِ فَقُلْتُ أَلاَ تَرَيَانِ هَذَا صَاحِبُكُمَا الَّذِي تَسْأَلاَنِ عَنْهُ قَالَ فَابْتَدَرَاهُ فَضَرَبَاهُ بِسَيْفَيْهِمَا حَتَّى قَتَلاَهُ ثُمَّ انْصَرَفَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرَاهُ ‏.‏ فَقَالَ ‏”‏ أَيُّكُمَا قَتَلَهُ ‏”‏ ‏.‏ فَقَالَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا أَنَا قَتَلْتُ ‏.‏ فَقَالَ ‏”‏ هَلْ مَسَحْتُمَا سَيْفَيْكُمَا ‏”‏ ‏.‏ قَالاَ لاَ ‏.‏ فَنَظَرَ فِي السَّيْفَيْنِ فَقَالَ ‏”‏ كِلاَكُمَا قَتَلَهُ ‏”‏ ‏.‏ وَقَضَى بِسَلَبِهِ لِمُعَاذِ بْنِ عَمْرِو بْنِ الْجَمُوحِ وَالرَّجُلاَنِ مُعَاذُ بْنُ عَمْرِو بْنِ الْجَمُوحِ وَمُعَاذُ ابْنُ عَفْرَاءَ‏

பத்ருப் போரின்போது நான் (படை) அணியில் நின்றுகொண்டிருந்த நேரத்தில் என் வலப் பக்கமும் இடப் பக்கமும் பார்த்தேன். என்னருகே (இரு பக்கங்களிலும்) இளம் வயது அன்ஸாரிச் சிறுவர்கள் இருவர் நின்றுகொண்டிருந்தனர். (இவர்களுக்கிடையே வந்து நிற்கிறோமே!) இவர்களைவிட வலுவானவர்களுக்கிடையே நான் இருந்திருக்க வேண்டுமே! என்று நான் எண்ணினேன்.

அப்போது அவர்களில் ஒருவர் என்னைத் தொட்டுணர்த்தி, (அரபுகளின் வழக்கப்படி) “என் தந்தையின் சகோதரரே! (என அழைத்து,) நீங்கள் அபூஜஹ்லை அறிவீர்களா?” என்று கேட்டார்.

நான், “ஆம் (அறிவேன்). உமக்கு அவனிடம் என்ன தேவை, என் சகோதரர் மகனே!” என்று கேட்டேன்.

அதற்கு அந்த இளவல், “அவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஏசுகிறான் என்று எனக்குத் தகவல் கிடைத்தது. என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் அவனைக் கண்டுகொண்டால், எங்களில் ஒருவர் இறக்கும்வரை அவனது உடலைவிட்டு எனது உடல் பிரியாது” என்று கூறினார்.

இதைக் கேட்டு நான் வியந்துபோனேன். அப்போது மற்றோர் இளவலும் என்னைத் தொட்டுணர்த்தி முதலாமவர் கூறியதைப் போன்றே கூறினார். சிறிது நேரம்தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூஜஹ்லு மக்களிடையே (பம்பரமாகச்) சுற்றி வருவதைக் கண்டு, “அதோ தெரிகிறானே? அவன்தான் நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி” என்று கூறினேன். உடனே அவர்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு அவனை நோக்கிச் சென்று தம்மிடமிருந்த வாட்களால் அவனை வெட்டிக் கொன்றார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அபூஜஹ்லைக் கொன்றுவிட்ட செய்தியைத் தெரிவித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) , “உங்களில் யார் அவனைக் கொன்றார்?” என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் “நான்தான் கொன்றேன்” என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) , “உங்கள் வாட்க(ளில் படிந்த இரத்தக் கறைக)ளைத் துடைத்துவிட்டீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள் இருவரும் “இல்லை” என்று பதிலுரைத்தனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்விரு வாட்களையும் கூர்ந்து பார்த்துவிட்டு, “நீங்கள் இருவருமே அவனை வெட்டிக்கொன்றிருக்கின்றீர்கள்” என்று கூறினார்கள்.

“முஆத் பின் அம்ரு பின் அல்ஜமூஹுக்கே (முதலில் வெட்டியவர் என்ற அடிப்படையில்) அபூஜஹ்லின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் உரியவை” என்று தீர்ப்பளித்தார்கள். முஆத் பின் அம்ரு பின் அல்ஜமூஹ் (ரலி) மற்றும் முஆத் பின் அஃப்ரா (ரலி) ஆகிய இருவருமே அந்த இளவல்கள் ஆவர்.

அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 13, ஹதீஸ் எண்: 3294

وَحَدَّثَنَا أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ، – وَاللَّفْظُ لَهُ – أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ سَمِعْتُ مَالِكَ بْنَ أَنَسٍ، يَقُولُ حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُمَرَ بْنِ كَثِيرِ بْنِ أَفْلَحَ، عَنْ أَبِي مُحَمَّدٍ، مَوْلَى أَبِي قَتَادَةَ عَنْ أَبِي قَتَادَةَ قَالَ :‏

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ حُنَيْنٍ فَلَمَّا الْتَقَيْنَا كَانَتْ لِلْمُسْلِمِينَ جَوْلَةٌ ‏.‏ قَالَ فَرَأَيْتُ رَجُلاً مِنَ الْمُشْرِكِينَ قَدْ عَلاَ رَجُلاً مِنَ الْمُسْلِمِينَ فَاسْتَدَرْتُ إِلَيْهِ حَتَّى أَتَيْتُهُ مِنْ وَرَائِهِ فَضَرَبْتُهُ عَلَى حَبْلِ عَاتِقِهِ وَأَقْبَلَ عَلَىَّ فَضَمَّنِي ضَمَّةً وَجَدْتُ مِنْهَا رِيحَ الْمَوْتِ ثُمَّ أَدْرَكَهُ الْمَوْتُ فَأَرْسَلَنِي فَلَحِقْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ فَقَالَ مَا لِلنَّاسِ فَقُلْتُ أَمْرُ اللَّهِ ‏.‏ ثُمَّ إِنَّ النَّاسَ رَجَعُوا وَجَلَسَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَقَالَ ‏”‏ مَنْ قَتَلَ قَتِيلاً لَهُ عَلَيْهِ بَيِّنَةٌ فَلَهُ سَلَبُهُ ‏”‏ ‏.‏ قَالَ فَقُمْتُ فَقُلْتُ مَنْ يَشْهَدُ لِي ثُمَّ جَلَسْتُ ثُمَّ قَالَ مِثْلَ ذَلِكَ فَقَالَ فَقُمْتُ فَقُلْتُ مَنْ يَشْهَدُ لِي ثُمَّ جَلَسْتُ ثُمَّ قَالَ ذَلِكَ الثَّالِثَةَ فَقُمْتُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ مَا لَكَ يَا أَبَا قَتَادَةَ ‏”‏ ‏.‏ فَقَصَصْتُ عَلَيْهِ الْقِصَّةَ فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ صَدَقَ يَا رَسُولَ اللَّهِ سَلَبُ ذَلِكَ الْقَتِيلِ عِنْدِي فَأَرْضِهِ مِنْ حَقِّهِ ‏.‏ وَقَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ لاَهَا اللَّهِ إِذًا لاَ يَعْمِدُ إِلَى أَسَدٍ مِنْ أُسُدِ اللَّهِ يُقَاتِلُ عَنِ اللَّهِ وَعَنْ رَسُولِهِ فَيُعْطِيكَ سَلَبَهُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ صَدَقَ فَأَعْطِهِ إِيَّاهُ ‏”‏ ‏.‏ فَأَعْطَانِي قَالَ فَبِعْتُ الدِّرْعَ فَابْتَعْتُ بِهِ مَخْرَفًا فِي بَنِي سَلِمَةَ فَإِنَّهُ لأَوَّلُ مَالٍ تَأَثَّلْتُهُ فِي الإِسْلاَمِ ‏.‏


وَفِي حَدِيثِ اللَّيْثِ فَقَالَ أَبُو بَكْرٍ كَلاَّ لاَ يُعْطِيهِ أُضَيْبِعَ مِنْ قُرَيْشٍ وَيَدَعُ أَسَدًا مِنْ أُسُدِ اللَّهِ ‏‏ وَفِي حَدِيثِ اللَّيْثِ لأَوَّلُ مَالٍ تَأَثَّلْتُهُ ‏.‏

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عُمَرَ بْنِ كَثِيرِ بْنِ أَفْلَحَ عَنْ أَبِي مُحَمَّدٍ الأَنْصَارِيِّ، وَكَانَ جَلِيسًا لأَبِي قَتَادَةَ قَالَ قَالَ أَبُو قَتَادَةَ ‏.‏ وَاقْتَصَّ الْحَدِيثَ ‏.‏

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عُمَرَ بْنِ كَثِيرٍ، عَنْ أَبِي مُحَمَّدٍ، مَوْلَى أَبِي قَتَادَةَ أَنَّ أَبَا قَتَادَةَ قَالَ ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ

ஹுனைன் போர் நடந்த ஆண்டில் (அப்போருக்காக) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். (எதிரிகளைப் போர்க்களத்தில்) நாங்கள் எதிர்கொண்டபோது, (தொடக்கத்தில்) முஸ்லிம்களுக்குத் தோல்வி பயம் இருந்தது.

அப்போது இணைவைப்பாளர்களில் ஒருவன் ஒரு முஸ்லிமின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு, அவரைக் கொல்ல முயல்வதை நான் கண்டேன். நான் அவனிடம் சுற்றிவந்து, அவனுக்குப் பின்பக்கம் சென்று, அவனது பிடரி நரம்பில் வெட்டினேன்.

உடனே அவன் (அந்த முஸ்லிமை விட்டுவிட்டு) என்னைத் தாவியணைத்து ஓர் இறுக்கு இறுக்கினான். எனக்கு மூச்சடைத்தது. பின்னர் மரணம் அவனைப் பிடித்துக்கொள்ளவே அவன் என்னை விட்டுவிட்டான்.

பின்னர் நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களைச் சென்றடைந்தேன். அப்போது அவர்கள் “மக்களுக்கு என்ன நேர்ந்தது? (ஏன் சிதறி ஓடுகிறார்கள்?)” என்று கேட்டார்கள். அதற்கு நான், “(எல்லாம்) அல்லாஹ்வின் ஏற்பாடு” என்று பதிலளித்தேன். பிறகு (பின்வாங்கி ஓடிய) மக்கள் (போர்க் களத்திற்குத்) திரும்பி வந்தார்கள். (தீரத்துடன் போராடி வென்றார்கள்).

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அமர்ந்தவாறு, “போரில் எதிரி ஒருவனைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் (உடலில் கிடந்த ஆடை, ஆயுதம் போன்ற) உடைமைகள் உரியவை” என்று கூறினார்கள்.

அப்போது நான் எழுந்து நின்று, “(நான் எதிரி ஒருவனை வீழ்த்தியதற்கு) எனக்குச் சாட்சியம் கூறுபவர் யார்?” என்று கேட்டு விட்டு உட்கார்ந்துகொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மீண்டும், “போரில் எதிரி ஒருவனைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடைமைகள் உரியவை” என்று) கூறினார்கள்.

உடனே நான் (மறுபடியும்) எழுந்து, “(நான் எதிரி ஒருவனை வீழ்த்தியதற்கு) எனக்குச் சாட்சியம் கூறுபவர் யார்?” என்று கேட்டேன்; பிறகு உட்கார்ந்துகொண்டேன். பிறகு, மூன்றாவது தடவையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முன்பு கூறியதைப் போன்றே கூறினார்கள்.

உடனே நான் எழுந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (என்னைப் பார்த்து), “உங்களுக்கு என்ன வேண்டும், அபூகத்தாதா?” என்று கேட்டார்கள். நடந்ததை அவர்களிடம் நான் எடுத்துரைத்தேன்.

அப்போது மக்களில் ஒருவர், “இவர் சொல்வது உண்மைதான், அல்லாஹ்வின் தூதரே! (இவரால்) கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் என்னிடம் உள்ளன. அவர் தமது உரிமையை (எனக்கு) விட்டுக்கொடுக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்.

அப்போது அபூபக்ருஸ்ஸித்தீக் (ரலி), “நடக்காது!, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கம் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் போரிட்டு (எதிரி ஒருவனை வீழ்த்திவிட்டு) வர, அவரால் கொல்லப்பட்ட எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உனக்குக் கொடுக்கமாட்டார்கள்” என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) , “உண்மைதான். (எதிரியை வீழ்த்திய) இவரிடமே அந்தப் பொருட்களைக் கொடுத்துவிடு” என்று சொன்னார்கள்.

அவ்வாறே அவர் அதை என்னிடம் கொடுத்தார். (அந்த வகையில் எனக்குக் கவச உடையொன்று கிடைத்தது.) அந்தக் கவச உடையை விற்றுவிட்டு பனூ ஸலமா குலத்தார் வாழும் பகுதியில் ஒரு பேரீச்சந் தோட்டத்தை வாங்கினேன். அதுதான் இஸ்லாத்தைத் தழுவிய பின் நான் அடைந்த முதல் சொத்தாகும்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி)


குறிப்பு :

லைஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “அபூபக்ரு (ரலி),  ‘நடக்காது!, அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கத்தை விட்டுவிட்டு, குறைஷியரில் உள்ள குழிமுயல் குட்டிக்கு அதைக் கொடுக்கமாட்டார்கள்’ என்று கூறினார்கள்” என இடம் பெற்றுள்ளது.