அத்தியாயம்: 32, பாடம்: 15, ஹதீஸ் எண்: 3301

وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ، أَنَّ مَالِكَ بْنَ أَوْسٍ، حَدَّثَهُ قَالَ :‏

أَرْسَلَ إِلَىَّ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَجِئْتُهُ حِينَ تَعَالَى النَّهَارُ – قَالَ – فَوَجَدْتُهُ فِي بَيْتِهِ جَالِسًا عَلَى سَرِيرٍ مُفْضِيًا إِلَى رِمَالِهِ مُتَّكِئًا عَلَى وِسَادَةٍ مِنْ أَدَمٍ ‏.‏ فَقَالَ لِي يَا مَالُ إِنَّهُ قَدْ دَفَّ أَهْلُ أَبْيَاتٍ مِنْ قَوْمِكَ وَقَدْ أَمَرْتُ فِيهِمْ بِرَضْخٍ فَخُذْهُ فَاقْسِمْهُ بَيْنَهُمْ – قَالَ  – قُلْتُ لَوْ أَمَرْتَ بِهَذَا غَيْرِي قَالَ خُذْهُ يَا مَالُ ‏.‏ قَالَ فَجَاءَ يَرْفَا فَقَالَ هَلْ لَكَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ فِي عُثْمَانَ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَالزُّبَيْرِ وَسَعْدٍ فَقَالَ عُمَرُ نَعَمْ ‏.‏ فَأَذِنَ لَهُمْ فَدَخَلُوا ثُمَّ جَاءَ ‏.‏ فَقَالَ هَلْ لَكَ فِي عَبَّاسٍ وَعَلِيٍّ قَالَ نَعَمْ ‏.‏ فَأَذِنَ لَهُمَا فَقَالَ عَبَّاسٌ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ اقْضِ بَيْنِي وَبَيْنَ هَذَا الْكَاذِبِ الآثِمِ الْغَادِرِ الْخَائِنِ ‏.‏ فَقَالَ الْقَوْمُ أَجَلْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ فَاقْضِ بَيْنَهُمْ وَأَرِحْهُمْ ‏.‏ فَقَالَ مَالِكُ بْنُ أَوْسٍ يُخَيَّلُ إِلَىَّ أَنَّهُمْ قَدْ كَانُوا قَدَّمُوهُمْ لِذَلِكَ – فَقَالَ عُمَرُ اتَّئِدَا أَنْشُدُكُمْ بِاللَّهِ الَّذِي بِإِذْنِهِ تَقُومُ السَّمَاءُ وَالأَرْضُ أَتَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ لاَ نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ ‏”‏ ‏.‏ قَالُوا نَعَمْ ‏.‏ ثُمَّ أَقْبَلَ عَلَى الْعَبَّاسِ وَعَلِيٍّ فَقَالَ أَنْشُدُكُمَا بِاللَّهِ الَّذِي بِإِذْنِهِ تَقُومُ السَّمَاءُ وَالأَرْضُ أَتَعْلَمَانِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ لاَ نُورَثُ مَا تَرَكْنَاهُ صَدَقَةٌ ‏”‏ ‏.‏ قَالاَ نَعَمْ ‏.‏ فَقَالَ عُمَرُ إِنَّ اللَّهَ جَلَّ وَعَزَّ كَانَ خَصَّ رَسُولَهُ صلى الله عليه وسلم بِخَاصَّةٍ لَمْ يُخَصِّصْ بِهَا أَحَدًا غَيْرَهُ قَالَ ‏{‏ مَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ مِنْ أَهْلِ الْقُرَى فَلِلَّهِ وَلِلرَّسُولِ‏}‏ مَا أَدْرِي هَلْ قَرَأَ الآيَةَ الَّتِي قَبْلَهَا أَمْ لاَ ‏.‏ قَالَ فَقَسَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَكُمْ أَمْوَالَ بَنِي النَّضِيرِ فَوَاللَّهِ مَا اسْتَأْثَرَ عَلَيْكُمْ وَلاَ أَخَذَهَا دُونَكُمْ حَتَّى بَقِيَ هَذَا الْمَالُ فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأْخُذُ مِنْهُ نَفَقَةَ سَنَةٍ ثُمَّ يَجْعَلُ مَا بَقِيَ أُسْوَةَ الْمَالِ ‏.‏ ثُمَّ قَالَ أَنْشُدُكُمْ بِاللَّهِ الَّذِي بِإِذْنِهِ تَقُومُ السَّمَاءُ وَالأَرْضُ أَتَعْلَمُونَ ذَلِكَ قَالُوا نَعَمْ ‏.‏ ثُمَّ نَشَدَ عَبَّاسًا وَعَلِيًّا بِمِثْلِ مَا نَشَدَ بِهِ الْقَوْمَ أَتَعْلَمَانِ ذَلِكَ قَالاَ نَعَمْ ‏.‏ قَالَ فَلَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ أَبُو بَكْرٍ أَنَا وَلِيُّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَجِئْتُمَا تَطْلُبُ مِيرَاثَكَ مِنَ ابْنِ أَخِيكَ وَيَطْلُبُ هَذَا مِيرَاثَ امْرَأَتِهِ مِنْ أَبِيهَا فَقَالَ أَبُو بَكْرٍ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ مَا نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ ‏”‏ ‏.‏ فَرَأَيْتُمَاهُ كَاذِبًا آثِمًا غَادِرًا خَائِنًا وَاللَّهُ يَعْلَمُ إِنَّهُ لَصَادِقٌ بَارٌّ رَاشِدٌ تَابِعٌ لِلْحَقِّ ثُمَّ تُوُفِّيَ أَبُو بَكْرٍ وَأَنَا وَلِيُّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَوَلِيُّ أَبِي بَكْرٍ فَرَأَيْتُمَانِي كَاذِبًا آثِمًا غَادِرًا خَائِنًا وَاللَّهُ يَعْلَمُ إِنِّي لَصَادِقٌ بَارٌّ رَاشِدٌ تَابِعٌ لِلْحَقِّ فَوَلِيتُهَا ثُمَّ جِئْتَنِي أَنْتَ وَهَذَا وَأَنْتُمَا جَمِيعٌ وَأَمْرُكُمَا وَاحِدٌ فَقُلْتُمَا ادْفَعْهَا إِلَيْنَا فَقُلْتُ إِنْ شِئْتُمْ دَفَعْتُهَا إِلَيْكُمَا عَلَى أَنَّ عَلَيْكُمَا عَهْدَ اللَّهِ أَنْ تَعْمَلاَ فِيهَا بِالَّذِي كَانَ يَعْمَلُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخَذْتُمَاهَا بِذَلِكَ قَالَ أَكَذَلِكَ قَالاَ نَعَمْ ‏.‏ قَالَ ثُمَّ جِئْتُمَانِي لأَقْضِيَ بَيْنَكُمَا وَلاَ وَاللَّهِ لاَ أَقْضِي بَيْنَكُمَا بِغَيْرِ ذَلِكَ حَتَّى تَقُومَ السَّاعَةُ فَإِنْ عَجَزْتُمَا عَنْهَا فَرُدَّاهَا إِلَىَّ ‏.‏


حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، – قَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا وَقَالَ الآخَرَانِ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، – أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَالِكِ بْنِ أَوْسِ، بْنِ الْحَدَثَانِ قَالَ أَرْسَلَ إِلَىَّ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَقَالَ إِنَّهُ قَدْ حَضَرَ أَهْلُ أَبْيَاتٍ مِنْ قَوْمِكَ ‏.‏ بِنَحْوِ حَدِيثِ مَالِكٍ ‏.‏ غَيْرَ أَنَّ فِيهِ، فَكَانَ يُنْفِقُ عَلَى أَهْلِهِ مِنْهُ سَنَةً وَرُبَّمَا قَالَ مَعْمَرٌ يَحْبِسُ قُوتَ أَهْلِهِ مِنْهُ سَنَةً ثُمَّ يَجْعَلُ مَا بَقِيَ مِنْهُ مَجْعَلَ مَالِ اللَّهِ عَزَّ وَجَلَّ ‏.‏

என்னிடம் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) ஆளனுப்பினார்கள். நண்பகல் நேரத்தில் நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் தமது இல்லத்தில் ஒரு கட்டிலில் விரிப்பு ஏதுமின்றி ஈச்சம் பாயில் ஒரு தோல் தலையணையின் மீது சாய்ந்தபடி அமர்ந்திருந்தார்கள்.

அப்போது அவர்கள் என்னிடம் (என் பெயரைச் சுருக்கி) “மால்! உங்கள் குலத்தாரிலுள்ள சில குடும்பத்தார் (என்னிடம்) வேகமாக வந்தனர். அவர்களுக்குச் சிறிதளவு நன்கொடைகளை வழங்குமாறு உத்தரவிட்டேன். அதை நீங்கள் பெற்றுச் சென்று, அவர்களிடையே பங்கிட்டுக் கொடுங்கள்” என்று கூறினார்கள்.

நான், “இந்தப் பொறுப்பை வேறெவரிடமாவது நீங்கள் ஒப்படைத்தால் நன்றாயிருக்குமே!” என்று சொன்னேன். அதற்கு “மாலே! நீங்களே அதைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அப்போது (உமர் அவர்களின் மெய்க்காவலர்) யர்ஃபஉ என்பார் வந்து, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே!  உஸ்மான் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரலி), ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி), ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் (ஒரு குழுவாக) வந்துள்ளனர். அனுமதியளிக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு உமர் (ரலி) “ஆம்” என அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். அவர்கள் அனைவரும் உள்ளே வந்(து, அமர்ந்)தனர்.

பிறகு (சற்று நேரம் கழித்து) யர்ஃபஉ வந்து, “அப்பாஸ் (ரலி) அவர்களும் அலீ (ரலி) அவர்களும் (அனுமதி கேட்கிறார்கள்) சந்திக்க அனுமதிக்கின்றீர்களா?” என்று கேட்டார். உமர் (ரலி) அவர்கள் “ஆம்” என்று கூறி அவ்விருவருக்கும் அனுமதி அளித்தார்கள்.

அப்பாஸ் (ரலி), “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இந்தப் பொய்யரும் பாவியும் நாணயமற்றவரும் மோசடிக்காரரான, (என் சகோதரர் மகனுமான) இவரு(அலீ)க்கும் எனக்கும் இடையே தீர்ப்பளியுங்கள்” என்று சொன்னார்கள்.

அப்போது (உஸ்மான் அவர்களுடன் வந்திருந்த) குழுவினர், “ஆம்; இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! (இந்த) இருவருக்குமிடையே தீர்ப்பளித்து ஒருவரது பிடியிலிருந்து மற்றவரை விடுவித்துவிடுங்கள்” என்று கூறினார்கள். (இதற்காகத்தான் இவ்விருவரும் அக்குழுவினரை முன்கூட்டியே அனுப்பி வைத்திருந்தனர் என்று எனக்குத் தோன்றியது).

அதற்கு உமர் (ரலி) அவர்கள், “இருவரும் பொறுமையாக இருங்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் உங்களிடம் கேட்கின்றேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘(நபிமார்களான எங்களுக்கு) யாரும் வாரிசாக மாட்டார். நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே’ என்று சொன்னதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?” என்று (அக்குழுவினரிடம்) கேட்டார்கள். அக்குழுவினர் “ஆம் (அறிவோம்)” என்று பதிலளித்தனர்.

பிறகு உமர் (ரலி) அவர்கள் (வாதியும் – பிரதிவாதியுமான) அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி, “எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘(நபிமார்களான எங்களுக்கு) யாரும் வாரிசாகமாட்டார். நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே’ என்று சொன்னதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள்.

அவ்விருவரும் “ஆம் (அறிவோம்)” என்று விடையளித்தனர். உமர் (ரலி), “(போரிடாமல் கைப்பற்றப்பட்ட) இந்த ‘ஃபைஉ’ச் செல்வத்தைத் தன் தூதருக்கு மட்டுமே உரியதாக அல்லாஹ் ஆக்கியிருந்தான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதைச் சொந்தமாக்கவில்லை” (என்று கூறிவிட்டு,) ‘(பல்வேறு) ஊராரிடமிருந்து எதைத் தன் தூதர் கைப்பற்றுமாறு அல்லாஹ் செய்தானோ அது, அல்லாஹ்வுக்கும் தூதருக்கும்… உரியது” (59:7) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். (அதற்கு முந்தைய வசனத்தையும் அப்போது ஓதினார்களா இல்லையா என்பது எனக்கு நினைவில்லை.)

தொடர்ந்து, “எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்), பனூ நளீர் குலத்தாரின் செல்வங்களை (அவர்கள் நாடு கடத்தப்பட்ட பின்) உங்களிடையே பங்கிட்டுக் கொடுத்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உங்களைவிட, தம்மைப் பெரிதாகக் கருதவுமில்லை; உங்களை விட்டுவிட்டுத் (தனி உரிமை இருந்தும்) தமக்காக அதை எடுத்துக்கொள்ளவுமில்லை. இறுதியாக (இறைத்தூதருக்கு மட்டுமே இறைவன் ஒதுக்கிய அந்நிதியிலிருந்து) இந்தச் செல்வம் மட்டுமே எஞ்சியது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இந்தச் செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் ஆண்டுச் செலவை எடுத்து(ச் செலவிட்டு)வந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு மீதியுள்ளதைப் பொதுச் சொத்தாக ஆக்கினார்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்று இருக்கின்றனவோ அந்த அல்லாஹ்வின் பொருட்டால் உங்களை நான் கேட்கிறேன்: இதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அக்குழுவினர் “ஆம் (அறிவோம்)” என்று பதிலளித்தனர். பிறகு அல்லாஹ்வைப் பொருட்டாக்கி அக்குழுவினரிடம் கேட்டதைப் போன்றே அப்பாஸ் (ரலி) அவர்களிடமும் அலீ (ரலி) அவர்களிடமும் “நீங்கள் இருவரும் அறிவீர்களா?“ என்று கேட்டார்கள். அவர்கள் இருவரும் “ஆம் (அறிவோம்)” என்று பதிலளித்தனர்.

தொடர்ந்து உமர் (ரலி), “பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறந்தபோது (ஆட்சித் தலைவராக வந்த) அபூபக்ரு (ரலி), ‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய (ஆட்சிக்குப்) பிரதி நிதியாவேன்’ என்று கூறினார்கள். (அச்செல்வத்தை தமது பொறுப்பில் வைத்துக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செயல்பட்டதைப் போன்றே தாமும் செயல்பட்டார்கள்) அப்போதும் நீங்கள் இருவரும் (அபூபக்ரு (ரலி) அவர்களிடம்) சென்றீர்கள். (அப்பாஸே!) நீங்கள் உம்முடைய சகோதரரின் மகனிடமிருந்து உங்களுக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைக் கேட்டீர்கள். இதோ இவரும் (அலீயும்) தம் மனைவிக்கு அவருடைய தந்தையிடமிருந்து சேர வேண்டிய வாரிசுச் சொத்தைக் கேட்டார்.

அப்போது அபூபக்ரு (ரலி), ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (நபிமார்களான) எங்களுக்கு யாரும் வாரிசாகமாட்டார். நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே! என்று கூறினார்கள்’ என்று பதிலளித்து(அதைத் தர மறுத்து)விட்டார்கள். அப்போது நீங்கள் இருவரும் அபூபக்ரு (ரலி) அவர்களைப் பொய்யராகவும் பாவியாகவும் நாணயமற்ற மோசடிக்காரராகவுமே பார்த்தீர்கள். ஆனால், அபூபக்ரு (ரலி) அந்த விஷயத்தில் உண்மையே உரைத்தார்கள்; நல்லவிதமாகவே நடந்துகொண்டார்கள்; நேர்வழி நின்று வாய்மையையே பின்பற்றினார்கள் என்பதை அல்லாஹ் அறிவான்.

பிறகு அபூபக்ரு (ரலி) இறந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அபூபக்ரு (ரலி) அவர்களுக்கும் நான் பிரதிநிதியானேன்; அந்தச் செல்வத்துக்கும் பொறுப்பேற்றேன். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ரு (ரலி) அவர்களும் செயல்பட்டதைப் போன்றே நானும் செயல்பட்டேன்) அப்போது என்னையும் நீங்கள் இருவரும் பொய்யனாகவும் பாவியாகவும் நாணயமற்ற மோசடிக்காரனாகவுமே பார்த்தீர்கள்.

ஆனால், இந்த விஷயத்தில் நான் உண்மையே உரைத்தேன்; நல்ல விதமாகவே நடந்து கொண்டேன்; நேர்வழி நின்று, வாய்மையையே பின்பற்றினேன் என்பதை அல்லாஹ் அறிவான்.

பிறகு நீங்களும் இவரும் சேர்ந்து வந்தீர்கள். நீங்கள் இருவரும் ஒரே நிலைப் பாட்டில்தான் இருந்தீர்கள். நீங்கள் இருவருமே, அதை எங்கள் இருவரிடமும் ஒப்படைத்து விடுங்கள் என்று கூறினீர்கள். அப்போது உங்கள் இருவரிடமும் நான், ‘நீங்கள் இருவரும் விரும்பினால் இச்செல்வத்தை ஒப்படைக்கிறேன். ஆனால், இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எவ்வாறு செயல்பட்டார்களோ அவ்வாறே நீங்கள் இருவரும் செயல்பட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு வாக்குறுதியளிக்க வேண்டும்’ என்று நான் கூறினேன். நீங்கள் இருவரும் அதன் பேரில் (என் நிபந்தனையை ஏற்று) அச்செல்வத்தைப் பெற்றுச் சென்றீர்கள். சரிதானே?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இருவரும் “ஆம்” என்று பதிலளித்தனர்.

தொடர்ந்து உமர் (ரலி), “பின்னர் நீங்கள் இருவரும் உங்களிருவர் இடையே தீர்ப்பளிக்கும்படி கோரி என்னிடம் இப்போது வந்துள்ளீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த விஷயத்தில் இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் மறுமை நாள் நிகழும்வரை அளிக்கமாட்டேன். உங்கள் இருவராலும் இதைப் பராமரிக்க முடியாவிட்டால், என்னிடமே அதைத் திரும்ப ஒப்படைத்துவிடுங்கள் (அதை நானே பராமரித்துக் கொள்கிறேன்)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : உமர் (ரலி) வழியாக மாலிக் பின் அவ்ஸ் (ரஹ்)


குறிப்பு :

‘கனீமத்’ என்பது போர் வெற்றிச் செல்வமாகும். அதில் படை வீரர்களுக்குப் பங்கு உண்டு. ‘ஃபைஉ’ என்பது போரிடாமல் கிடைக்கும் செல்வமாகும். இது, ஆட்சியாளருக்கு மட்டும் உரியதாகும். அல்லாஹ்வின் தூதரின் மனைவியரின் ஓராண்டுக்கான வீட்டுச் செலவுக்கு ‘ஃபைஉ’ வழங்கப்பட்டது போக, எஞ்சியதை அல்லாஹ்வின் பாதையில் நபி (ஸல்) செலவழித்தார்கள்.

அப்து பின் ஹுமைத் (ரஹ்) வழி அறிவிப்பு, “உமர் பின் அல்கத்தாப் (ரலி) என்னிடம் ஆளனுப்பினார்கள். (நான் சென்றேன்) அப்போது அவர்கள் உங்கள் குலத்தாரில் சில குடும்பத்தார் (என்னிடம்) வந்தார்கள்…” என்று ஆரம்பமாகிறது. மேலும் அவற்றில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்தச் செல்வத்திலிருந்தே தம் வீட்டாருக்கு ஓராண்டிற்குச் செலவிட்டுவந்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

மஅமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அச்செல்வத்திலிருந்து தம் வீட்டாருக்கு ஓராண்டிற்கு வேண்டிய உணவை சேமித்து வைப்பார்கள். பிறகு மீதியை எடுத்து, அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் (நல நிதியாக வைத்துச்) செலவிட்டுவந்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 32, பாடம்: 15, ஹதீஸ் எண்: 3300

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ عَبَّادٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ – وَاللَّفْظُ لاِبْنِ أَبِي شَيْبَةَ – قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ الآخَرُونَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَالِكِ بْنِ أَوْسٍ، عَنْ عُمَرَ قَالَ :‏

كَانَتْ أَمْوَالُ بَنِي النَّضِيرِ مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ مِمَّا لَمْ يُوجِفْ عَلَيْهِ الْمُسْلِمُونَ بِخَيْلٍ وَلاَ رِكَابٍ فَكَانَتْ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم خَاصَّةً فَكَانَ يُنْفِقُ عَلَى أَهْلِهِ نَفَقَةَ سَنَةٍ وَمَا بَقِيَ يَجْعَلُهُ فِي الْكُرَاعِ وَالسِّلاَحِ عُدَّةً فِي سَبِيلِ اللَّهِ ‏


حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏

பனூ நளீர் (யூதக்) குலத்தாரின் செல்வங்கள், அல்லாஹ் தன் தூதருக்கு அளித்தவை ஆகும். அதற்காக முஸ்லிம்கள் குதிரைகளையோ ஒட்டகங்களையோ ஓட்டிச் செல்லவில்லை (போர் செய்திருக்கவில்லை). அவை நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரியவையாக இருந்தன. அதிலிருந்துதான் நபியவர்கள் தம் வீட்டாருக்கு ஆண்டுச் செலவுக்குக் கொடுத்துவந்தார்கள். பிறகு மீதியை அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்கான ஆயத்தப் பொருட்கள் வாங்க, ஆயுதங்களுக்காகவும் குதிரைகளுக்காகவும் செலவிட்டுவந்தார்கள்.

அறிவிப்பாளர் : உமர் (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 15, ஹதீஸ் எண்: 3299

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ أَيُّمَا قَرْيَةٍ أَتَيْتُمُوهَا وَأَقَمْتُمْ فِيهَا فَسَهْمُكُمْ فِيهَا وَأَيُّمَا قَرْيَةٍ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ خُمُسَهَا لِلَّهِ وَلِرَسُولِهِ ثُمَّ هِيَ لَكُمْ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

ஓர் ஊருக்கு நீங்கள் சென்று, அங்கு(ப் போரிடாமல்) நீங்கள் தங்கினால் (போர் நிறுத்தத்திற்காகப் பெறப்படும்) அவர்களின் செல்வங்களில் உங்களின் பங்கு (நன்கொடையாக உங்களுக்கே) வந்துசேரும்.

ஓர் ஊரார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தால் (அவர்கள்மீது தாக்குதல் தொடுத்துக் கைப்பற்றப்படும்) அவர்களின் செல்வங்களில் ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் சேரும். பின்னர் அ(வற்றில் மிஞ்சுவ)து உங்களுக்கு உரியதாகும்

அறிவிப்பாளர் : அபூஹுரைரா வழியாக ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)


குறிப்பு :

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களுள் இதுவும் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.