அத்தியாயம்: 39, பாடம்: 14, ஹதீஸ் எண்: 4040

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، أَنَّ أَسْمَاءَ قَالَتْ :‏

كُنْتُ أَخْدُمُ الزُّبَيْرَ خِدْمَةَ الْبَيْتِ وَكَانَ لَهُ فَرَسٌ وَكُنْتُ أَسُوسُهُ فَلَمْ يَكُنْ مِنَ الْخِدْمَةِ شَىْءٌ أَشَدَّ عَلَىَّ مِنْ سِيَاسَةِ الْفَرَسِ كُنْتُ أَحْتَشُّ لَهُ وَأَقُومُ عَلَيْهِ وَأَسُوسُهُ ‏.‏ قَالَ ثُمَّ إِنَّهَا أَصَابَتْ خَادِمًا جَاءَ النَّبِيَّ صلى الله عليه وسلم سَبْىٌ فَأَعْطَاهَا خَادِمًا ‏.‏ قَالَتْ كَفَتْنِي سِيَاسَةَ الْفَرَسِ فَأَلْقَتْ عَنِّي مَئُونَتَهُ فَجَاءَنِي رَجُلٌ فَقَالَ يَا أُمَّ عَبْدِ اللَّهِ إِنِّي رَجُلٌ فَقِيرٌ أَرَدْتُ أَنْ أَبِيعَ فِي ظِلِّ دَارِكِ ‏.‏ قَالَتْ إِنِّي إِنْ رَخَّصْتُ لَكَ أَبَى ذَاكَ الزُّبَيْرُ فَتَعَالَ فَاطْلُبْ إِلَىَّ وَالزُّبَيْرُ شَاهِدٌ فَجَاءَ فَقَالَ يَا أُمَّ عَبْدِ اللَّهِ إِنِّي رَجُلٌ فَقِيرٌ أَرَدْتُ أَنْ أَبِيعَ فِي ظِلِّ دَارِكِ ‏.‏ فَقَالَتْ مَا لَكَ بِالْمَدِينَةِ إِلاَّ دَارِي فَقَالَ لَهَا الزُّبَيْرُ مَا لَكِ أَنْ تَمْنَعِي رَجُلاً فَقِيرًا يَبِيعُ فَكَانَ يَبِيعُ إِلَى أَنْ كَسَبَ فَبِعْتُهُ الْجَارِيَةَ فَدَخَلَ عَلَىَّ الزُّبَيْرُ وَثَمَنُهَا فِي حَجْرِي ‏.‏ فَقَالَ هَبِيهَا لِي ‏.‏ قَالَتْ إِنِّي قَدْ تَصَدَّقْتُ بِهَا ‏

நான் (என் கணவர்) ஸுபைர் அவர்களின் வீட்டுப் பணிகளைச் செய்துவந்தேன். என் கணவரிடம் குதிரையொன்று இருந்தது. அந்தக் குதிரையைப் பராமரிக்கும் பொறுப்பைப் போன்று வேறெந்தப் பணியும் எனக்குக் கடினமானதாக இருக்கவில்லை. அதற்காக நானே புற்பூண்டுகள் திரட்டுவேன்; அதைப் பராமரிப்பேன்; அதை நானே மேய்ப்பேன்.

பிறகு எனக்கு (என் தந்தை அபூபக்ரு மூலம், பெண்) ஊழியர் ஒருவர் கிடைத்தார். நபி (ஸல்) அவர்களிடம் போர்க் கைதிகள் சிலர் வந்தபோது, அவர்களில் (பெண்) ஊழியர் ஒருவரை எனக்கு (என் தந்தை வழியாகக்) கொடுத்தார்கள். அந்தப் பெண் (ஊழியர்) குதிரையைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அதைப் பராமரிக்கும் பொறுப்பிலிருந்து என்னை விடுவித்தார்.

(இந்நிலையில்) ஒருவர் என்னிடம் வந்து, “அப்துல்லாஹ்வின் அன்னையே! நான் ஓர் ஏழை. நான் தங்கள் வீட்டு நிழலில் வியாபாரம் செய்ய விரும்புகின்றேன்” என்று கூறி(அனுமதி கோரி)னார். நான், “உங்களுக்கு நான் அனுமதி அளித்தால் ஸுபைர் அதை மறுப்பார். எனவே, ஸுபைர் (வீட்டில்) இருக்கும்போது நீங்கள் வந்து (இது போன்று) அனுமதி கேளுங்கள்” என்று கூறினேன்.

அவ்வாறே அம்மனிதர் வந்து, “அப்துல்லாஹ்வின் அன்னையே! நான் ஓர் ஏழை. நான் தங்கள் வீட்டு நிழலில் வியாபாரம் செய்ய விரும்புகின்றேன்” என்று கேட்டார். உடனே நான் (அவருக்கு மறுப்புத் தெரிவிப்பது போல்) “மதீனாவில் உமக்கு என் வீட்டைத் தவிர வேறிடம் கிடைக்க வில்லையா?” என்று கேட்டேன்.

அப்போது ஸுபைர் என்னிடம், “உனக்கு என்ன ஆயிற்று? ஓர் ஏழை வியாபாரி (நமது வீட்டு நிழலில்) வியாபாரம் செய்வதை நீ ஏன் தடுக்கிறாய்?” என்று கேட்டார். பிறகு அவர் வியாபாரம் செய்து (நல்ல) வருமானத்தைத் தேடிக் கொண்டார்.

அவருக்கே (எனது) அந்த அடிமைப் பெண்ணை நான் விற்றேன். அந்தக் காசை நான் எனது மடியில் வைத்துக்கொண்டிருந்தபோது ஸுபைர் என்னிடம் வந்து, “அதை எனக்கு அன்பளிப்பாக வழங்கு!” என்று கேட்டார். நான் “இதை ஏற்கெனவே தர்மமாக அளி(க்கத் தீர்மானி)த்து விட்டேன்” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் : அஸ்மா (ரலி)

அத்தியாயம்: 39, பாடம்: 14, ஹதீஸ் எண்: 4039

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ أَبُو كُرَيْبٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، أَخْبَرَنِي أَبِي، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ قَالَتْ :‏

تَزَوَّجَنِي الزُّبَيْرُ وَمَا لَهُ فِي الأَرْضِ مِنْ مَالٍ وَلاَ مَمْلُوكٍ وَلاَ شَىْءٍ غَيْرَ فَرَسِهِ – قَالَتْ – فَكُنْتُ أَعْلِفُ فَرَسَهُ وَأَكْفِيهِ مَئُونَتَهُ وَأَسُوسُهُ وَأَدُقُّ النَّوَى لِنَاضِحِهِ وَأَعْلِفُهُ وَأَسْتَقِي الْمَاءَ وَأَخْرِزُ غَرْبَهُ وَأَعْجِنُ وَلَمْ أَكُنْ أُحْسِنُ أَخْبِزُ وَكَانَ يَخْبِزُ لِي جَارَاتٌ مِنَ الأَنْصَارِ وَكُنَّ نِسْوَةَ صِدْقٍ – قَالَتْ – وَكُنْتُ أَنْقُلُ النَّوَى مِنْ أَرْضِ الزُّبَيْرِ الَّتِي أَقْطَعَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى رَأْسِي وَهْىَ عَلَى ثُلُثَىْ فَرْسَخٍ – قَالَتْ – فَجِئْتُ يَوْمًا وَالنَّوَى عَلَى رَأْسِي فَلَقِيتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَمَعَهُ نَفَرٌ مِنْ أَصْحَابِهِ فَدَعَانِي ثُمَّ قَالَ ‏ “‏ إِخْ إِخْ ‏” لِيَحْمِلَنِي خَلْفَهُ – قَالَتْ – فَاسْتَحْيَيْتُ وَعَرَفْتُ غَيْرَتَكَ فَقَالَ وَاللَّهِ لَحَمْلُكِ النَّوَى عَلَى رَأْسِكِ أَشَدُّ مِنْ رُكُوبِكِ مَعَهُ ‏.‏ قَالَتْ حَتَّى أَرْسَلَ إِلَىَّ أَبُو بَكْرٍ بَعْدَ ذَلِكَ بِخَادِمٍ فَكَفَتْنِي سِيَاسَةَ الْفَرَسِ فَكَأَنَّمَا أَعْتَقَتْنِي

என்னை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) (மக்காவிலிருந்தபோது) மணந்துகொண்டார். இந்தப் பூமியில், அவருக்கு அவரது குதிரையை(யும் நீரிறைத்துத் தரும்  ஓர் ஒட்டகத்தையும்) தவிர வேறு எந்தச் சொத்தும் அடிமைகளும் உடைமைகளும் இல்லை.

அந்தக் குதிரைக்கு நான் தீனி போடுவேன்; அதைப் பராமரிக்கும் பொறுப்புகளை நானே கவனித்துக்கொள்வேன்; (அதற்கு) நீர் புகட்டுவேன்; அதை ஓட்டிச் செல்வேன்; நீரிறைத்துத் தரும் அவரது ஒட்டகத்துக்காகப் பேரீச்சங் கொட்டைகளை இடித்து, அதற்கு ஊட்டுவேன்; நீர் இறைப்பேன்; அவரது தோல் பையின் கிழிசலைத் தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால், எனக்கு நன்றாக ரொட்டி சுடத் தெரியாது. என் அண்டை வீட்டு அன்ஸாரிப் பெண்களே எனக்கு ரொட்டி சுட்டுத் தருவார்கள். அப்பெண்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாயிருந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என் கணவருக்கு வருவாய் மானியமாக ஒதுக்கிய நிலத்திலிருந்து நானே பேரீச்சங் கொட்டைகளை(ப் பொறுக்கி) என் தலைமீது வைத்துச் சுமந்து வருவேன். அந்த நிலம் (என் வீட்டிலிருந்து) இரண்டு மைல் தொலைவில் இருந்தது.

ஒரு நாள் நான் பேரீச்சங் கொட்டைகளை என் தலைமீது சுமந்து வந்துகொண்டிருந்தேன். (வழியில்) நான், (என் சகோதரி ஆயிஷாவின் கணவரான) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தேன். அவர்களுடன் அவர்களுடைய தோழர்கள் சிலரும் இருந்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னை அழைத்தார்கள். என்னைத் தமக்குப் பின்னால் (ஒட்டகத்தில்) அமர்த்திக்கொள்வதற்காக “இஃக், இஃக்” என்று சொல்லித் தமது ஒட்டகத்தை மண்டியிட வைத்தார்கள். (ஆனால், நான் அவர்களது ஒட்டகத்தில் ஏறிக்கொள்ளவில்லை).

(நான் வீட்டுக்கு வந்து என் கணவர் ஸுபைர் (ரலி) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்துவிட்டு) “நான் வெட்கப்பட்டேன். மேலும், உங்களின் ரோஷத்தை நான் அறிவேன்” என்று கூறினேன். அதற்கு என் கணவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நீ வாகனத்தில் வருவதைவிடப் பேரீச்சங்கொட்டைகளை நீ சுமந்து வந்ததுதான் எனக்குக் கடினமானதாக இருக்கிறது” என்று கூறினார்.

(இவ்வாறாக வீட்டுப் பணிகளில் பெரும் பகுதியை நான் ஒருத்தியே மேற்கொண்டுவந்தேன்.) இறுதியாக (என் தந்தை) அபூபக்ரு (ரலி) எனக்கு ஓர் (அடிமைப் பெண்) ஊழியரை அனுப்பிவைத்தார்கள். அந்த ஊழியர் குதிரையைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண் டார். எனக்கு(ப் பெரும் பளுவிலிருந்து) விடுதலை கிடைத்தது போலிருந்தது.

அறிவிப்பாளர் : அஸ்மா பின்த்தி அபீபக்ரு (ரலி)