அத்தியாயம்: 37, பாடம்: 2, ஹதீஸ் எண்: 3847

وَحَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، حَدَّثَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ :‏

رَأَى عُمَرُ عُطَارِدًا التَّمِيمِيَّ يُقِيمُ بِالسُّوقِ حُلَّةً سِيَرَاءَ – وَكَانَ رَجُلاً يَغْشَى الْمُلُوكَ وَيُصِيبُ مِنْهُمْ – فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي رَأَيْتُ عُطَارِدًا يُقِيمُ فِي السُّوقِ حُلَّةً سِيَرَاءَ فَلَوِ اشْتَرَيْتَهَا فَلَبِسْتَهَا لِوُفُودِ الْعَرَبِ إِذَا قَدِمُوا عَلَيْكَ – وَأَظُنُّهُ قَالَ وَلَبِسْتَهَا يَوْمَ الْجُمُعَةِ – فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ إِنَّمَا يَلْبَسُ الْحَرِيرَ فِي الدُّنْيَا مَنْ لاَ خَلاَقَ لَهُ فِي الآخِرَةِ ‏”‏ ‏.‏ فَلَمَّا كَانَ بَعْدَ ذَلِكَ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِحُلَلٍ سِيَرَاءَ فَبَعَثَ إِلَى عُمَرَ بِحُلَّةٍ وَبَعَثَ إِلَى أُسَامَةَ بْنِ زَيْدٍ بِحُلَّةٍ وَأَعْطَى عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ حُلَّةً وَقَالَ ‏”‏ شَقِّقْهَا خُمُرًا بَيْنَ نِسَائِكَ ‏”‏ ‏.‏ قَالَ فَجَاءَ عُمَرُ بِحُلَّتِهِ يَحْمِلُهَا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ بَعَثْتَ إِلَىَّ بِهَذِهِ وَقَدْ قُلْتَ بِالأَمْسِ فِي حُلَّةِ عُطَارِدٍ مَا قُلْتَ فَقَالَ ‏”‏ إِنِّي لَمْ أَبْعَثْ بِهَا إِلَيْكَ لِتَلْبَسَهَا وَلَكِنِّي بَعَثْتُ بِهَا إِلَيْكَ لِتُصِيبَ بِهَا ‏”‏ ‏.‏ وَأَمَّا أُسَامَةُ فَرَاحَ فِي حُلَّتِهِ فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَظَرًا عَرَفَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أَنْكَرَ مَا صَنَعَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا تَنْظُرُ إِلَىَّ فَأَنْتَ بَعَثْتَ إِلَىَّ بِهَا فَقَالَ ‏”‏ إِنِّي لَمْ أَبْعَثْ إِلَيْكَ لِتَلْبَسَهَا وَلَكِنِّي بَعَثْتُ بِهَا إِلَيْكَ لِتُشَقِّقَهَا خُمُرًا بَيْنَ نِسَائِكَ ‏”‏ ‏

தமீம் குலத்தைச் சேர்ந்த ‘உத்தாரித்’ என்பவர் கடைத்தெருவில் நின்று, கோடுபோட்ட பட்டு அங்கி விற்றுக்கொண்டிருப்பதை உமர் (ரலி) கண்டார்கள்.

-உத்தாரித் (பன்னாட்டு) மன்னர்களுடன் தொடர்புள்ளவராகவும், அவர்களிடமிருந்து (பல்வேறு பொருட்களைப்) பெற்றுவருபவராகவும் இருந்தார் –

பிறகு உமர் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! கடைத்தெருவில் நின்றுகொண்டு, கோடு போட்ட பட்டு அங்கியை உத்தாரித் விற்பதைக் கண்டேன். அதை நீங்கள் வாங்கி, அரபுத் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும்போது நீங்கள் அணிந்துகொண்டால் நன்றாயிருக்குமே!” என்று சொன்னார்கள்.

-“வெள்ளிக்கிழமையின்போதும் அணிந்து கொண்டால் நன்றாயிருக்குமே” என்றும் அவர்கள் கூறியதாக நான் எண்ணுகின்றேன் -.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “மறுமையில் எந்த நற்பேறும் இல்லாதவரே இம்மையில் இந்தப் பட்டாடைகளை அணிவார்” என்று சொன்னார்கள்.

பின்னர் (மறு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கோடு போட்ட பட்டாடைகள் சில கொண்டுவரப்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவற்றில் ஒரு பட்டாடையை உமர் (ரலி) அவர்களுக்கும் மற்றொன்றை உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களுக்கும் அனுப்பி வைத்தார்கள். இன்னொன்றை அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களுக்குக் கொடுத்து, “இதை முக்காடுகளாக வெட்டி உங்கள் பெண்களிடையே பங்கிட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள்.

உமர் (ரலி) தமது பட்டாடையை எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இதை எனக்குக் கொடுத்தனுப்பியுள்ளீர்கள். ஆனால், உத்தாரித் விற்ற பட்டாடை குறித்து நேற்று நீங்கள் வேறு விதமாகக் கூறினீர்களே?” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இதை நீங்கள் அணிந்துகொள்வதற்காக உங்களுக்கு நான் கொடுத்தனுப்பவில்லை. மாறாக, இதை நீங்கள் (விற்றுப் பணம்) பெறுவதற்காகவே கொடுத்தனுப்பினேன்” என்று சொன்னார்கள்.

உஸாமா (ரலி) அவர்களோ அதை அணிந்துகொண்டு வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உஸாமாவை உற்றுப் பார்த்தார்கள். (அவர்கள் பார்த்த பார்வையிலிருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தாம் (இவ்வாறு) செய்ததை விரும்பவில்லையென்பதை உஸாமா உணர்ந்து கொண்டார்.

“அல்லாஹ்வின் தூதரே! ஏன் (இப்படி) என்னை உற்றுப் பார்க்கின்றீர்கள்? நீங்கள்தாமே இதை எனக்குக் கொடுத்தனுப்பினீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இதை நீ அணிந்துகொள்வதற்காக உனக்கு நான் கொடுத்தனுப்பவில்லை. மாறாக, இதை முக்காடுகளாக வெட்டி, உன் (வீட்டுப்) பெண்களுக்குப் பங்கிடுவதற்காகவே உனக்குக் கொடுத்தனுப்பினேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

Share this Hadith:

Leave a Comment