அத்தியாயம்: 43, பாடம்: 13, ஹதீஸ் எண்: 4260

وَحَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، وَأَبُو الرَّبِيعِ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَحْسَنَ النَّاسِ خُلُقًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களிலேயே மிக அழகிய பண்புகள் கொண்டவர்களாய்த் திகழ்ந்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 43, பாடம்: 13, ஹதீஸ் எண்: 4259

حَدَّثَنِي أَبُو مَعْنٍ الرَّقَاشِيُّ، زَيْدُ بْنُ يَزِيدَ أَخْبَرَنَا عُمَرُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عِكْرِمَةُ، – وَهُوَ ابْنُ عَمَّارٍ – قَالَ قَالَ إِسْحَاقُ قَالَ أَنَسٌ :‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَحْسَنِ النَّاسِ خُلُقًا فَأَرْسَلَنِي يَوْمًا لِحَاجَةٍ فَقُلْتُ وَاللَّهِ لاَ أَذْهَبُ ‏.‏ وَفِي نَفْسِي أَنْ أَذْهَبَ لِمَا أَمَرَنِي بِهِ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم فَخَرَجْتُ حَتَّى أَمُرَّ عَلَى صِبْيَانٍ وَهُمْ يَلْعَبُونَ فِي السُّوقِ فَإِذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ قَبَضَ بِقَفَاىَ مِنْ وَرَائِي – قَالَ – فَنَظَرْتُ إِلَيْهِ وَهُوَ يَضْحَكُ فَقَالَ ‏ “‏ يَا أُنَيْسُ أَذَهَبْتَ حَيْثُ أَمَرْتُكَ ‏”‏ ‏.‏ قَالَ قُلْتُ نَعَمْ أَنَا أَذْهَبُ يَا رَسُولَ اللَّهِ ‏


قَالَ أَنَسٌ وَاللَّهِ لَقَدْ خَدَمْتُهُ تِسْعَ سِنِينَ مَا عَلِمْتُهُ قَالَ لِشَىْءٍ صَنَعْتُهُ لِمَ فَعَلْتَ كَذَا وَكَذَا أَوْ لِشَىْءٍ تَرَكْتُهُ هَلاَّ فَعَلْتَ كَذَا وَكَذَا ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களிலேயே மிக அழகிய நற்குணம் கொண்டவராகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ஒரு நாள் ஒரு அலுவலுக்காக என்னைப் போகச் சொன்னார்கள். அப்போது நான் “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் போகமாட்டேன்” என்று சொன்னேன். ஆனால், என் மனத்தில் நபி (ஸல்) உத்தரவிட்ட அந்த அலுவலுக்குச் செல்ல வேண்டும் என்றே எண்ணமிருந்தது.

நான் புறப்பட்டுச் சென்றபோது, கடைத்தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றேன். (அவர்களுடன் சேர்ந்து நானும் விளையாடலானேன்) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்குப் பின்பக்கம் (வந்து) எனது பிடரியைப் பிடித்தார்கள். அவர்களை நான் பார்த்தபோது அவர்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள். “அருமை அனஸே! நான் உத்தரவிட்ட இடத்திற்கு நீ சென்றாயா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்; (இதோ) செல்கின்றேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னேன்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

 மேலும் அனஸ் (ரலி) கூறினார்கள்:

அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒன்பது ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். எனக்கு நினைவு தெரிந்து, நான் செய்த எதைப் பற்றியும் “இன்னின்னதை நீ ஏன் செய்தாய்?“ என்றோ, நான் செய்யாமல் விட்டுவிட்ட எதைப் பற்றியும் “நீ இன்னின்னதைச் செய்திருக்கக்கூடாதா?’ என்றோ அவர்கள் என்னிடம் கேட்டதில்லை.

அத்தியாயம்: 43, பாடம்: 13, ஹதீஸ் எண்: 4258

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ نُمَيْرٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، حَدَّثَنِي سَعِيدٌ، – وَهُوَ ابْنُ أَبِي بُرْدَةَ – عَنْ أَنَسٍ قَالَ :‏

خَدَمْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تِسْعَ سِنِينَ فَمَا أَعْلَمُهُ قَالَ لِي قَطُّ لِمَ فَعَلْتَ كَذَا وَكَذَا وَلاَ عَابَ عَلَىَّ شَيْئًا قَطُّ ‏

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒன்பது ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அவர்கள், எனக்கு நினைவு தெரிந்து ஒருபோதும் என்னிடம் “இன்னின்னதை நீ ஏன் செய்தாய்?” என்று கேட்டதில்லை; அவர்கள் எதற்காகவும் என்னை ஒருபோதும் குறை கூறியதுமில்லை.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 43, பாடம்: 13, ஹதீஸ் எண்: 4257

وَحَدَّثَنَاهُ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ، – وَاللَّفْظُ لأَحْمَدَ – قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ قَالَ :‏

لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ أَخَذَ أَبُو طَلْحَةَ بِيَدِي فَانْطَلَقَ بِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَنَسًا غُلاَمٌ كَيِّسٌ فَلْيَخْدُمْكَ ‏.‏ قَالَ فَخَدَمْتُهُ فِي السَّفَرِ وَالْحَضَرِ وَاللَّهِ مَا قَالَ لِي لِشَىْءٍ صَنَعْتُهُ لِمَ صَنَعْتَ هَذَا هَكَذَا وَلاَ لِشَىْءٍ لَمْ أَصْنَعْهُ لِمَ لَمْ تَصْنَعْ هَذَا هَكَذَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவுக்கு வந்தபோது (என் வளர்ப்புத் தந்தை) அபூதல்ஹா (ரலி), எனது கையைப் பிடித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! அனஸ் புத்திசாலிப் பையன்; அவன் தங்களுக்குப் பணிவிடை செய்யட்டும்” என்று சொன்னார்கள்.

அதன்படி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஊரிலிருக்கும்போதும் பயணத்தில் இருக்கும்போதும் அவர்களுக்குப் பணிவிடை செய்துவந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் செய்த எதைப் பற்றியும் “இதை நீ ஏன் இப்படிச் செய்தாய்?” என்றோ, நான் செய்யாமல் விட்ட எதைப் பற்றியும் “இதை நீ ஏன் இப்படிச் செய்யவில்லை?” என்றோ அவர்கள் என்னிடம் கேட்டதில்லை.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 43, பாடம்: 13, ஹதீஸ் எண்: 4256

حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَأَبُو الرَّبِيعِ، قَالاَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ:‏

خَدَمْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَشْرَ سِنِينَ وَاللَّهِ مَا قَالَ لِي أُفًّا قَطُّ وَلاَ قَالَ لِي لِشَىْءٍ لِمَ فَعَلْتَ كَذَا وَهَلاَّ فَعَلْتَ كَذَا


زَادَ أَبُو الرَّبِيعِ لَيْسَ مِمَّا يَصْنَعُهُ الْخَادِمُ ‏.‏ وَلَمْ يَذْكُرْ قَوْلَهُ وَاللَّهِ ‏

وَحَدَّثَنَاهُ شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا سَلاَّمُ بْنُ مِسْكِينٍ، حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ، عَنْ أَنَسٍ، بِمِثْلِهِ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னை எதற்காகவும் (மனம் வேதனைப்படும்படி) “ச்சீ“ என்றோ, “இதை ஏன் செய்தாய்?” என்றோ, “நீ இப்படிச் செய்திருக்கக் கூடாதா?” என்றோ (கடிந்து) சொன்னதில்லை.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

அபுர்ரபீஉ (ரஹ்) வழி அறிவிப்பில், “பணிவிடை செய்பவர் செய்த ஒரு செயலில் (ச்சீ என்றோ, இதை ஏன் செய்தாய்? என்றோ அவர்கள் கேட்டதில்லை)” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. மேலும், “அல்லாஹ்வின் மீதாணையாக!“ எனும் குறிப்பு அதில் இல்லை.

அத்தியாயம்: 43, பாடம்: 12, ஹதீஸ் எண்: 4255

حَدَّثَنَا مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، – يَعْنِي ابْنَ سَعْدٍ – عَنِ الزُّهْرِيِّ، ح وَحَدَّثَنِي أَبُو عِمْرَانَ، مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ زِيَادٍ – وَاللَّفْظُ لَهُ – أَخْبَرَنَا إِبْرَاهِيمُ، عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ :‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَجْوَدَ النَّاسِ بِالْخَيْرِ وَكَانَ أَجْوَدَ مَا يَكُونُ فِي شَهْرِ رَمَضَانَ إِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلاَمُ كَانَ يَلْقَاهُ فِي كُلِّ سَنَةٍ فِي رَمَضَانَ حَتَّى يَنْسَلِخَ فَيَعْرِضُ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْقُرْآنَ فَإِذَا لَقِيَهُ جِبْرِيلُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَجْوَدَ بِالْخَيْرِ مِنَ الرِّيحِ الْمُرْسَلَةِ


وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ مُبَارَكٍ، عَنْ يُونُسَ، ح وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، كِلاَهُمَا عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களிலேயே அதிகமாக வாரி வழங்கக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் ரமளான் மாதத்தில் மேன்மேலும் அதிகமாக வாரி வழங்குவார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) ஒவ்வோர் ஆண்டும் ரமளான் மாதத்தில் (ஒவ்வோர் இரவிலும்) அந்த மாதம் முடியும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்திப்பது வழக்கம். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். அவ்வாறு ஜிப்ரீல் தம்மைச் சந்திக்கும்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட அதிகமாகச் செல்வங்களை வாரி வழங்குவார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 43, பாடம்: 11, ஹதீஸ் எண்: 4254

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ قَالَ :‏

كَانَ بِالْمَدِينَةِ فَزَعٌ فَاسْتَعَارَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَرَسًا لأَبِي طَلْحَةَ يُقَالُ لَهُ مَنْدُوبٌ فَرَكِبَهُ فَقَالَ ‏ “‏ مَا رَأَيْنَا مِنْ فَزَعٍ وَإِنْ وَجَدْنَاهُ لَبَحْرًا ‏”‏


وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، ح وَحَدَّثَنِيهِ يَحْيَى بْنُ حَبِيبٍ، حَدَّثَنَا خَالِدٌ، – يَعْنِي ابْنَ الْحَارِثِ – قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الإِسْنَادِ وَفِي حَدِيثِ ابْنِ جَعْفَرٍ قَالَ فَرَسًا لَنَا ‏.‏ وَلَمْ يَقُلْ لأَبِي طَلْحَةَ ‏.‏ وَفِي حَدِيثِ خَالِدٍ عَنْ قَتَادَةَ سَمِعْتُ أَنَسًا ‏

மதீனாவில் (எதிரிகள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி மக்களிடையே) பீதி ஏற்பட்டது. நபி (ஸல்) அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குரிய ‘மன்தூப்’ எனப்படும் குதிரை ஒன்றை இரவல் வாங்கி, (உண்மை நிலையைக் கண்டறிய எதிரிகள் வருவதாகச் சொல்லப்பட்ட திசையில்) அக்குதிரையிலேறிச் சென்றார்கள்.

பிறகு திரும்பி வந்து “பீதியூட்டும் எதையும் நாம் காணவில்லை. இக்குதிரையை (தொடர்ந்து அலை வீசும்) கடலாக (தங்குதடையின்றி ஓடக்கூடியதாக) நாம் கண்டோம்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

இப்னு ஜஅஃபர் (ரஹ்) வழி அறிவிப்பில், “அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குரிய குதிரை“ என்பதற்குப் பதிலாக, “எங்களுக்குரிய குதிரை“ ஒன்றை இரவல் வாங்கினார்கள் என்று அனஸ் (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அபூதல்ஹா (ரலி) அவர்கள், அனஸ் (ரலி) அவர்களின் வளர்ப்புத் தந்தையாவார்.

அத்தியாயம்: 43, பாடம்: 11, ஹதீஸ் எண்: 4253

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، وَسَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَأَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، وَأَبُو كَامِلٍ – وَاللَّفْظُ لِيَحْيَى – قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا – حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَحْسَنَ النَّاسِ وَكَانَ أَجْوَدَ النَّاسِ وَكَانَ أَشْجَعَ النَّاسِ وَلَقَدْ فَزِعَ أَهْلُ الْمَدِينَةِ ذَاتَ لَيْلَةٍ فَانْطَلَقَ نَاسٌ قِبَلَ الصَّوْتِ فَتَلَقَّاهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَاجِعًا وَقَدْ سَبَقَهُمْ إِلَى الصَّوْتِ وَهُوَ عَلَى فَرَسٍ لأَبِي طَلْحَةَ عُرْىٍ فِي عُنُقِهِ السَّيْفُ وَهُوَ يَقُولُ ‏”‏ لَمْ تُرَاعُوا لَمْ تُرَاعُوا ‏”‏ ‏.‏ قَالَ ‏”‏ وَجَدْنَاهُ بَحْرًا أَوْ إِنَّهُ لَبَحْرٌ ‏”‏ ‏.‏ قَالَ وَكَانَ فَرَسًا يُبَطَّأُ ‏

நபி (ஸல்) (குணத்திலும் தோற்றத்திலும்) மக்களிலேயே மிகவும் அழகானவர்களாகவும் மக்களிலேயே அதிகக் கொடை குணம் கொண்டவர்களாகவும் மக்களிலேயே அதிக வீரமுடையவர்களாகவும் இருந்தார்கள்.

ஒரு (நாள்) இரவு மதீனவாசிகள், (எதிரிகள் படையெடுத்து வருவதாகக் கேள்விப்பட்டு) பீதியுற்றார்கள். சப்தம் வந்த திசையை நோக்கி மக்களில் சிலர் நடந்தனர். (உண்மை நிலை அறிய) அத்திசையை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முன்பே சென்றுவிட்டிருந்தார்கள். பிறகு அவர்கள் தமது கழுத்தில் வாளைத் தொங்கவிட்டபடி அபூதல்ஹா (ரலி) அவர்களது (சேணம் பூட்டப்படாத) வெற்றுடலான குதிரையின்மீது அமர்ந்தவண்ணம் திரும்பி வந்து மக்களைச் சந்தித்து, “பீதியடையாதீர்கள்; பீதியடையாதீர்கள்” என்று (மக்களைப் பார்த்துச்) சொன்னார்கள்.

பிறகு “(அலை வீசும்) கடலாகவே (தடையின்றி ஓடக்கூடியதாக) இக்குதிரையை நாம் கண்டோம்” (அ) “இக்குதிரை ஒரு கடலாகும்” என்று சொன்னார்கள். (அதற்கு முன்னர்) அக்குதிரை மெதுவாக ஓடக்கூடியதாகவே இருந்தது.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 43, பாடம்: 10, ஹதீஸ் எண்: 4252

وَحَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، بْنُ سَعْدٍ حَدَّثَنَا سَعْدٌ، عَنْ أَبِيهِ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ قَالَ :‏

لَقَدْ رَأَيْتُ يَوْمَ أُحُدٍ عَنْ يَمِينِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَعَنْ يَسَارِهِ رَجُلَيْنِ عَلَيْهِمَا ثِيَابٌ بِيضٌ يُقَاتِلاَنِ عَنْهُ كَأَشَدِّ الْقِتَالِ مَا رَأَيْتُهُمَا قَبْلُ وَلاَ بَعْدُ ‏

உஹுதுப் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வலப் பக்கமும் இடப் பக்கமும் வெண்ணிற ஆடைகள் அணிந்த இருவரை நான் பார்த்தேன். அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கு முன்போ அதற்குப் பின்போ அவ்விருவரையும் நான் பார்த்ததில்லை.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

அத்தியாயம்: 43, பாடம்: 10, ஹதீஸ் எண்: 4251

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، وَأَبُو أُسَامَةَ عَنْ مِسْعَرٍ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، عَنْ سَعْدٍ قَالَ :‏

رَأَيْتُ عَنْ يَمِينِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَعَنْ شِمَالِهِ يَوْمَ أُحُدٍ رَجُلَيْنِ عَلَيْهِمَا ثِيَابُ بَيَاضٍ مَا رَأَيْتُهُمَا قَبْلُ وَلاَ بَعْدُ ‏.‏ يَعْنِي جِبْرِيلَ وَمِيكَائِيلَ عَلَيْهِمَا السَّلاَمُ

உஹுதுப் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வலப் பக்கமும் இடப் பக்கமும் வெண்ணிற ஆடைகள் அணிந்த இருவரை -அதாவது ஜிப்ரீல் (அலை), மீக்காயீல் (அலை) ஆகியோரை- நான் பார்த்தேன். அதற்கு முன்போ அதற்குப் பின்போ அவ்விருவரையும் நான் பார்த்ததில்லை.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)