அத்தியாயம்: 45, பாடம்: 15, ஹதீஸ் எண்: 4660

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا بُرَيْدُ بْنُ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مُوسَى قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُمْلِي لِلظَّالِمِ فَإِذَا أَخَذَهُ لَمْ يُفْلِتْهُ ‏”‏ ‏ ثُمَّ قَرَأَ ‏{‏ وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ‏}‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ் (இவ்வுலகில்) அநீதி இழைப்பவனுக்கு (விட்டுக்கொடுத்து) அவகாசமளிப்பான். இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால், அவனைத் தப்பவிடமாட்டான்” என்று கூறிவிட்டு, “அநீதி இழைத்த ஊர்(க்காரர்)களைப் பிடிக்கும்போது இவ்வாறே உம்முடைய இறைவன் பிடிக்கின்றான். அவனது பிடி, வதைக்கக்கூடியது; கடுமையானது” எனும் (11:102) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 15, ஹதீஸ் எண்: 4659

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ – عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لَتُؤَدُّنَّ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُقَادَ لِلشَّاةِ الْجَلْحَاءِ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ ‏”‏

“கொம்பில்லாத ஆட்டுக்காக (அதை முட்டிய) கொம்புள்ள ஆட்டிடம் பழிவாங்கப்படும் (என்பதற்கொப்ப, உங்களுக்குச் சொந்தமில்லாத) உரிமைகளை உரியவர்களிடம் நிச்சயமாக நீங்கள் மறுமை நாளில் ஒப்படைத்தாக வேண்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 15, ஹதீஸ் எண்: 4658

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – وَهُوَ ابْنُ جَعْفَرٍ – عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ ‏”‏ ‏.‏ قَالُوا الْمُفْلِسُ فِينَا مَنْ لاَ دِرْهَمَ لَهُ وَلاَ مَتَاعَ ‏.‏ فَقَالَ ‏”‏ إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلاَةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّارِ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), “திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் (திர்ஹம்) வெள்ளிக் காசோ  வாழ்வாதாரப் பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்” என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் யாரெனில், ஒருவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (ஆனால்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) உண்டிருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில, (பாதிக்கப்பட்ட) இவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 15, ஹதீஸ் எண்: 4657

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ عُقَيْلٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ لاَ يَظْلِمُهُ وَلاَ يُسْلِمُهُ مَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً فَرَّجَ اللَّهُ عَنْهُ بِهَا كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ ‏”‏

“ஒரு முஸ்லிம், மற்றொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார். அவருக்கு இவர் அநீதியிழைக்கமாட்டார்; (பிறரது அநீதிக்கு அவர் ஆளாகும்படி) அவரைக் கைவிட்டுவிடவுமாட்டார். தம் சகோதரரின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருப்பவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குபவருக்கு அதற்குப் பகரமாக அவரைவிட்டு அல்லாஹ் மறுமை நாளில் அவருடைய துன்பங்களில் ஒன்றை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைப்பவருடைய குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக அன்னாரின் மகன் ஸாலிம் (ரஹ்)

அத்தியாயம்: 45, பாடம்: 15, ஹதீஸ் எண்: 4656

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ الْمَاجِشُونُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِنَّ الظُّلْمَ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ ‏”‏

“அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 15, ஹதீஸ் எண்: 4655

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا دَاوُدُ، – يَعْنِي ابْنَ قَيْسٍ – عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِقْسَمٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ اتَّقُوا الظُّلْمَ فَإِنَّ الظُّلْمَ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ وَاتَّقُوا الشُّحَّ فَإِنَّ الشُّحَّ أَهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ حَمَلَهُمْ عَلَى أَنْ سَفَكُوا دِمَاءَهُمْ وَاسْتَحَلُّوا مَحَارِمَهُمْ ‏”‏

“அநீதியிழைப்பதிலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில் அநீதியானது, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும். கருமித்தனத்திலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில் கருமித்தனமானது, உங்களுக்கு முன்னிருந்தவர்களை அழித்தது. அவர்கள் இரத்தம் சிந்துவதற்கும் இறைவனால் அவர்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவையாக ஆக்கிக் கொள்வதற்கும் தூண்டுகோலாக இருந்தது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 15, ஹதீஸ் எண்: 4654

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بَهْرَامَ الدَّارِمِيُّ، حَدَّثَنَا مَرْوَانُ، – يَعْنِي ابْنَ مُحَمَّدٍ الدِّمَشْقِيَّ – حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ أَبِي ذَرٍّ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيمَا رَوَى عَنِ اللَّهِ، تَبَارَكَ وَتَعَالَى أَنَّهُ قَالَ ‏ “‏ يَا عِبَادِي إِنِّي حَرَّمْتُ الظُّلْمَ عَلَى نَفْسِي وَجَعَلْتُهُ بَيْنَكُمْ مُحَرَّمًا فَلاَ تَظَالَمُوا

يَا عِبَادِي كُلُّكُمْ ضَالٌّ إِلاَّ مَنْ هَدَيْتُهُ فَاسْتَهْدُونِي أَهْدِكُمْ

يَا عِبَادِي كُلُّكُمْ جَائِعٌ إِلاَّ مَنْ أَطْعَمْتُهُ فَاسْتَطْعِمُونِي أُطْعِمْكُمْ

يَا عِبَادِي كُلُّكُمْ عَارٍ إِلاَّ مَنْ كَسَوْتُهُ فَاسْتَكْسُونِي أَكْسُكُمْ

يَا عِبَادِي إِنَّكُمْ تُخْطِئُونَ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَأَنَا أَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ

يَا عِبَادِي إِنَّكُمْ لَنْ تَبْلُغُوا ضَرِّي فَتَضُرُّونِي وَلَنْ تَبْلُغُوا نَفْعِي فَتَنْفَعُونِي

يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَتْقَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنْكُمْ مَا زَادَ ذَلِكَ فِي مُلْكِي شَيْئًا

يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَفْجَرِ قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مَا نَقَصَ ذَلِكَ مِنْ مُلْكِي شَيْئًا

يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ قَامُوا فِي صَعِيدٍ وَاحِدٍ فَسَأَلُونِي فَأَعْطَيْتُ كُلَّ إِنْسَانٍ مَسْأَلَتَهُ مَا نَقَصَ ذَلِكَ مِمَّا عِنْدِي إِلاَّ كَمَا يَنْقُصُ الْمِخْيَطُ إِذَا أُدْخِلَ الْبَحْرَ

يَا عِبَادِي إِنَّمَا هِيَ أَعْمَالُكُمْ أُحْصِيهَا لَكُمْ ثُمَّ أُوَفِّيكُمْ إِيَّاهَا فَمَنْ وَجَدَ خَيْرًا فَلْيَحْمَدِ اللَّهَ وَمَنْ وَجَدَ غَيْرَ ذَلِكَ فَلاَ يَلُومَنَّ إِلاَّ نَفْسَهُ ‏”‏ ‏


قَالَ سَعِيدٌ كَانَ أَبُو إِدْرِيسَ الْخَوْلاَنِيُّ إِذَا حَدَّثَ بِهَذَا الْحَدِيثِ جَثَا عَلَى رُكْبَتَيْهِ ‏.‏

حَدَّثَنِيهِ أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّ مَرْوَانَ أَتَمُّهُمَا حَدِيثًا ‏.‏

قَالَ أَبُو إِسْحَاقَ حَدَّثَنَا بِهَذَا الْحَدِيثِ الْحَسَنُ، وَالْحُسَيْنُ، ابْنَا بِشْرٍ وَمُحَمَّدُ بْنُ يَحْيَى قَالُوا حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ، ‏.‏ فَذَكَرُوا الْحَدِيثَ بِطُولِهِ ‏.‏

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، كِلاَهُمَا عَنْ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ، عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ تَبَارَكَ وَتَعَالَى ‏ “‏ إِنِّي حَرَّمْتُ عَلَى نَفْسِي الظُّلْمَ وَعَلَى عِبَادِي فَلاَ تَظَالَمُوا ‏”‏ ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِهِ وَحَدِيثُ أَبِي إِدْرِيسَ الَّذِي ذَكَرْنَاهُ أَتَمُّ مِنْ هَذَا ‏

வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அறிவித்தார்கள்:

என் அடியார்களே! அநீதியிழைப்பதை எனக்கு நானே தடை செய்துகொண்டேன். அதை உங்களிடையேயும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டேன். ஆகவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதியிழைக்காதீர்கள்.

என் அடியார்களே! உங்களில் யாரை நான் நல்வழியில் செலுத்தினேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் வழி தவறியவர்களே. ஆகவே, (உங்களை) நல்வழியில் செலுத்துமாறு என்னிடமே கேளுங்கள். உங்களை நான் நல்வழியில் செலுத்துவேன்.

என் அடியார்களே! உங்களில் யாருக்கு நான் உணவளித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் பசித்திருப்பவர்களே. ஆகவே, என்னிடமே உணவாதாரத்தைக் கேளுங்கள். நான் உங்களுக்கு உணவளிக்கின்றேன்.

என் அடியார்களே! உங்களில் யாருக்கு நான் ஆடையணிவித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் நிர்வாணிகளே. ஆகவே, என்னிடமே ஆடை கேளுங்கள். நான் உங்களுக்கு ஆடையணிவிக்கின்றேன்.

என் அடியார்களே! நீங்கள் இரவிலும் பகலிலும் பாவம் செய்கின்றீர்கள். நான் அனைத்துப் பாவங்களையும் மறைத்துக் கொண்டிருக்கின்றேன். ஆகவே, என்னிடமே பாவமன்னிப்புக் கோருங்கள். நான் உங்கள் பாவங்களை மன்னிக்கின்றேன்.

என் அடியார்களே! உங்களால் எனக்கு எவ்விதத் தீங்கும் செய்ய முடியாது; மேலும், உங்களால் எனக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாது.

என் அடியார்களே! உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் உங்களில் மிகவும் இறையச்சமுடைய ஒருவரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் அதிகமாக்கிவிடுவதில்லை.

என் அடியார்களே! உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார்,  மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் மிகவும் தீய ஒருவரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் குறைத்துவிடப்போவதில்லை.

என் அடியார்களே! உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து ஒரே திறந்த வெளியில் நின்று என்னிடத்தில் (தத்தம் தேவைகளைக்) கோரினாலும் ஒவ்வொரு மனிதருக்கும் அவர் கேட்பதை நான் கொடுப்பேன். அது என்னிடத்தில் இருப்பவற்றில் எதையும் குறைத்துவிடுவதில்லை; கடலில் நுழை(த்து எடு)க்கப்பட்ட ஊசி (நீரைக்) குறைப்பதைப் போன்றே தவிர (குறைக்காது)!

என் அடியார்களே! நீங்கள் செய்துவரும் நல்லறங்களை நான் உங்களுக்காக எண்ணிக் கணக்கிடுகின்றேன். பிறகு அதன் நற்பலனை நான் முழுமையாக வழங்குவேன். நல்லதைக் கண்டவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழட்டும். அல்லதைக் கண்டவர் தம்மையே நொந்துகொள்ளட்டும்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி)


குறிப்புகள் :

“இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) இந்த ஹதீஸ் குத்ஸீயை அறிவிக்கும்போது, முழந்தாளிட்டு நின்றுகொள்வார்கள்” என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஸயீத் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) கூறுகின்றார்.

அபூதர் (ரலி) அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ், அபூமுஸ்ஹிர் (ரஹ்) வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், மர்வான் பின் முஹம்மது (ரஹ்) அவர்களே அபூமுஸ்ஹிர் (ரஹ்) அவர்களைவிட ஹதீஸ் அறிவிப்பில் முழுமையானவர் ஆவார்.

கத்தாதா (ரஹ்) வழி அறிவிப்பு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான் அநீதியிழைப்பதை என்மீதும் தடை செய்துகொண்டேன். என் அடியார்கள் மீதும் தடை செய்துவிட்டேன். ஆகவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதி இழைக்காதீர்கள் …” என்று வளமும் உயர்வும் மிக்க தம் இறைவனிடமிருந்து கூறியதாக ஆரம்பமாகிறது.

மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அறிவித்த மேற்கண்ட ஹதீஸே இதைவிட முழுமையானதாகும்.

அத்தியாயம்: 45, பாடம்: 14, ஹதீஸ் எண்: 4653

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَبِشْرُ بْنُ الْمُفَضَّلِ، قَالاَ حَدَّثَنَا عِمْرَانُ أَبُو بَكْرٍ، حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ قَالَ :‏

قَالَ لِي ابْنُ عَبَّاسٍ أَلاَ أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الْجَنَّةِ قُلْتُ بَلَى ‏.‏ قَالَ هَذِهِ الْمَرْأَةُ السَّوْدَاءُ أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَتْ إِنِّي أُصْرَعُ وَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي ‏.‏ قَالَ ‏”‏ إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الْجَنَّةُ وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ ‏.‏ قَالَتْ أَصْبِرُ ‏.‏ قَالَتْ فَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ أَنْ لاَ أَتَكَشَّفَ ‏.‏ فَدَعَا لَهَا ‏

இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம், “சொர்க்கவாசிகளில் ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று கேட்டார்கள். நான் “சரி! (காட்டுங்கள்)” என்று சொன்னேன். அவர்கள், “(இதோ) இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதான் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் வலிப்பு நோயால் பாதிக்கப்படுகிறேன். அப்போது (என் உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கிறது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார்.

நபி (ஸல்), “நீ விரும்பினால் பொறுமையாக இருக்கலாம். (உன் பொறுமைக்கு) உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் வேண்டுவேன்” என்று சொன்னார்கள். அப்பெண்மணி ‘நான் பொறுமையாக இருந்துவிடுகின்றேன். ஆயினும், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறக்காமலிருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினர்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 45, பாடம்: 14, ஹதீஸ் எண்: 4652

حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا الْحَجَّاجُ الصَّوَّافُ، حَدَّثَنِي أَبُو الزُّبَيْرِ، حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ عَلَى أُمِّ السَّائِبِ أَوْ أُمِّ الْمُسَيَّبِ فَقَالَ ‏”‏ مَا لَكِ يَا أُمَّ السَّائِبِ أَوْ يَا أُمَّ الْمُسَيَّبِ تُزَفْزِفِينَ ‏”‏ ‏.‏ قَالَتِ الْحُمَّى لاَ بَارَكَ اللَّهُ فِيهَا ‏.‏ فَقَالَ ‏”‏ لاَ تَسُبِّي الْحُمَّى فَإِنَّهَا تُذْهِبُ خَطَايَا بَنِي آدَمَ كَمَا يُذْهِبُ الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (உடல் நலிவுற்றிருந்த) உம்முஸ் ஸாயிப் (அ) உம்முல் முஸய்யப் எனும் பெண்மணியிடம் (உடல்நலம் விசாரிக்கச்) சென்றார்கள். அப்போது “உம்முஸ் ஸாயிபே! / உம்முல் முஸய்யபே! உமக்கு என்ன நேர்ந்தது? ஏன் நடுங்கிக்கொண்டிருக்கின்றாய்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அப்பெண், “காய்ச்சல்! அதில் அல்லாஹ் கடுமை சேர்க்காமல் இருக்கட்டும்!” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “காய்ச்சலை ஏசாதே! ஏனெனில் அது, கொல்லனின் உலை இரும்பின் துருவை அகற்றிவிடுவதைப் போன்று, ஆதமின் மக்களின் தவறுகளை அகற்றி விடுகின்றது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 14, ஹதீஸ் எண்: 4651

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ كِلاَهُمَا عَنِ ابْنِ عُيَيْنَةَ، – وَاللَّفْظُ لِقُتَيْبَةَ – حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ مُحَيْصِنٍ، شَيْخٍ مِنْ قُرَيْشٍ سَمِعَ مُحَمَّدَ بْنَ قَيْسِ بْنِ مَخْرَمَةَ، يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

لَمَّا نَزَلَتْ ‏{‏ مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ‏}‏ بَلَغَتْ مِنَ الْمُسْلِمِينَ مَبْلَغًا شَدِيدًا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ قَارِبُوا وَسَدِّدُوا فَفِي كُلِّ مَا يُصَابُ بِهِ الْمُسْلِمُ كَفَّارَةٌ حَتَّى النَّكْبَةِ يُنْكَبُهَا أَوِ الشَّوْكَةِ يُشَاكُهَا ‏”‏ ‏


قَالَ مُسْلِمٌ هُوَ عُمَرُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَيْصِنٍ مِنْ أَهْلِ مَكَّةَ

தீமை செய்பவர் அதற்குரிய தண்டனை வழங்கப்படுவார் எனும் (4:123) இறைவசனம் அருளப்பெற்றபோது, அது முஸ்லிம்களுக்குக் கடுமையான கவலையை ஏற்படுத்தியது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(நற்செயல்களில்) நடுநிலையாகச் செயல்படுங்கள்; சரியானதைச் செய்யுங்கள். (அதிகமான வழிபாடுகள் செய்யமுடியவில்லையே என வருந்தாதீர்கள்) ஏனெனில், கால் இடறி (காயமடைவது), அல்லது முள் தைப்பது போன்ற ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் ஒவ்வொரு துன்பமும் அவருக்குப் பாவப் பரிகாரமாகவே அமையும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

குறிப்பு :

“இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள இப்னு முஹைஸின் என்பவர், மக்காவாசியான உமர் பின் அப்திர் ரஹ்மான் பின் முஹைஸின் என்பவர் ஆவார்” என்று இமாம் முஸ்லிம் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.