28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் ...

باب صِحَّةِ الإِقْرَارِ بِالْقَتْلِ وَتَمْكِينِ وَلِيِّ الْقَتِيلِ مِنَ الْقِصَاصِ وَاسْتِحْبَابِ طَلَبِ الْعَفْوِ مِنْهُ
கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும், பழி வாங்குவதற்குக் கொலையுண்டவனின் பொறுப்பாளிக்கு வாய்ப்புத் தருவதும் செல்லும்; என்றாலும், கொலையாளியை மன்னிக்குமாறு கோருவது விரும்பத் தக்கதாகும்

அத்தியாயம்: 28, பாடம்: 10, ஹதீஸ் எண்: 3181

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ سَالِمٍ عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ قَالَ:‏

أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِرَجُلٍ قَتَلَ رَجُلاً فَأَقَادَ وَلِيَّ الْمَقْتُولِ مِنْهُ فَانْطَلَقَ بِهِ وَفِي عُنُقِهِ نِسْعَةٌ يَجُرُّهَا فَلَمَّا أَدْبَرَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏الْقَاتِلُ وَالْمَقْتُولُ فِي النَّارِ‏”‏ ‏.‏ فَأَتَى رَجُلٌ الرَّجُلَ فَقَالَ لَهُ مَقَالَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَخَلَّى عَنْهُ ‏‏


قَالَ إِسْمَاعِيلُ بْنُ سَالِمٍ فَذَكَرْتُ ذَلِكَ لِحَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ فَقَالَ حَدَّثَنِي ابْنُ أَشْوَعَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم إِنَّمَا سَأَلَهُ أَنْ يَعْفُوَ عَنْهُ فَأَبَى ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் கொண்டுவரப்பட்டார். அவர் மற்றொருவரைக் கொலை செய்திருந்தார். அப்போது கொலையுண்டவரின் பொறுப்பாளர் கொலையாளியைப் பழிக்குப் பழி தீர்த்துக்கொள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அனுமதித்தார்கள். அவரும் அக்கொலையாளியின் கழுத்தில் ஒரு தோல் வாரைப் போட்டு இழுத்துக்கொண்டு சென்றார்.

அவர் திரும்பிச் சென்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “கொன்றவரும் கொல்லப்பட்டவரும் நரகவாசிகள் ஆவர்” என்று சொன்னார்கள். (அதைச் செவியுற்ற) ஒருவர் (கொலையுண்டவரின்) பொறுப்பாளரிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதைத் தெரிவித்தார். எனவே, அவர் அக்கொலையாளியை (மன்னித்து) விட்டுவிட்டார்.

அறிவிப்பாளர் : வாயில் பின் ஹுஜ்ரு (ரலி) வழியாக அன்னாரின் மகன் அல்கமா (ரஹ்)


குறிப்பு :

“நான் இந்த ஹதீஸை ஹபீப் பின் அபீஸாபித் (ரஹ்) அவர்களிடம் குறிப்பிட்டேன். அப்போது அவர்கள், “நபி (ஸல்) (தவறுதலாகக் கொலை செய்த) அவரை மன்னித்துவிடுமாறு (கொலையுண்டவரின்) பொறுப்பாளரிடம் கேட்டார்கள். அவர் மறுத்துவிட்டார். (எனவேதான், அவ்வாறு கூறினார்கள்) என்று ஸயீத் பின் அம்ரு பின் அஷ்வஉ (ரஹ்) கூறினார்கள்” என்பதாக இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இஸ்மாயீல் பின் ஸாலிம் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 28, பாடம்: 10, ஹதீஸ் எண்: 3180

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا أَبُو يُونُسَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ أَنَّ عَلْقَمَةَ بْنَ وَائِلٍ، حَدَّثَهُ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ قَالَ:‏

إِنِّي لَقَاعِدٌ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ جَاءَ رَجُلٌ يَقُودُ آخَرَ بِنِسْعَةٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَذَا قَتَلَ أَخِي ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”أَقَتَلْتَهُ‏”‏ ‏.‏ فَقَالَ إِنَّهُ لَوْ لَمْ يَعْتَرِفْ أَقَمْتُ عَلَيْهِ الْبَيِّنَةَ ‏.‏ قَالَ نَعَمْ ‏.‏ قَتَلْتُهُ قَالَ ‏”كَيْفَ قَتَلْتَهُ‏”‏ ‏.‏ قَالَ كُنْتُ أَنَا وَهُوَ نَخْتَبِطُ مِنْ شَجَرَةٍ فَسَبَّنِي فَأَغْضَبَنِي فَضَرَبْتُهُ بِالْفَأْسِ عَلَى قَرْنِهِ فَقَتَلْتُهُ ‏.‏ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”هَلْ لَكَ مِنْ شَىْءٍ تُؤَدِّيهِ عَنْ نَفْسِكَ‏”‏ ‏.‏ قَالَ مَا لِي مَالٌ إِلاَّ كِسَائِي وَفَأْسِي ‏.‏ قَالَ ‏”فَتَرَى قَوْمَكَ يَشْتَرُونَكَ‏”‏ ‏.‏ قَالَ أَنَا أَهْوَنُ عَلَى قَوْمِي مِنْ ذَاكَ ‏.‏ فَرَمَى إِلَيْهِ بِنِسْعَتِهِ ‏.‏ وَقَالَ ‏”دُونَكَ صَاحِبَكَ‏”‏ ‏.‏ فَانْطَلَقَ بِهِ الرَّجُلُ فَلَمَّا وَلَّى قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”إِنْ قَتَلَهُ فَهُوَ مِثْلُهُ‏”‏ ‏.‏ فَرَجَعَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ بَلَغَنِي أَنَّكَ قُلْتَ ‏”‏إِنْ قَتَلَهُ فَهُوَ مِثْلُهُ‏”‏ ‏.‏ وَأَخَذْتُهُ بِأَمْرِكَ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”أَمَا تُرِيدُ أَنْ يَبُوءَ بِإِثْمِكَ وَإِثْمِ صَاحِبِكَ‏”‏ ‏.‏ قَالَ يَا نَبِيَّ اللَّهِ – لَعَلَّهُ قَالَ – بَلَى ‏.‏ قَالَ ‏”فَإِنَّ ذَاكَ كَذَاكَ‏”‏ ‏.‏ قَالَ فَرَمَى بِنِسْعَتِهِ وَخَلَّى سَبِيلَهُ ‏.‏

நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த ஒருபோது, ஒருவர் மற்றொருவரைத் தோல் வாரினால் (கழுத்தில் போட்டு) இழுத்துக்கொண்டு வந்தார். “அல்லாஹ்வின் தூதரே! இவர் என் சகோதரனைக் கொலை செய்துவிட்டார்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ அவரைக் கொலை செய்தாயா?” என்று கேட்டார்கள். அப்போது அவரை இழுத்துக்கொண்டு வந்தவர், “இவர் கொலையை ஒப்புக்கொள்ளாவிட்டால் இவருக்கெதிரான ஆதாரத்தை முன்வைப்பேன்” என்றும் கூறினார். அதற்கு அவர், “ஆம், நான் அவரைக் கொலை செய்தேன்” என்று (ஒப்புதல் வாக்குமூலம்) சென்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “எப்படிக் கொன்றாய்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், “நானும் அவரும் ஒரு மரத்தில் (தடியால் அடித்து) இலை உதிர்த்துக்கொண்டிருந்தோம். அப்போது அவர் என்னை ஏசினார். எனக்குக் கோபம் ஏற்பட்டது. உடனே நான் (என் கையிலிருந்த) கோடரியால் அவரது உச்சந் தலையில் அடித்துவிட்டேன். அவர் இறந்துவிட்டார். (திட்டமிட்டு இந்தக் கொலையை நான் செய்யவில்லை)” என்று சொன்னார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவருக்கு இழப்பீடு வழங்க உம்மிடம் ஏதேனும் (பொருள்) உண்டா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “என்னிடம் எனது போர்வையையும் எனது கோடரியையும் தவிர வேறொன்றுமில்லை” என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உன்னுடைய கூட்டத்தார் உனக்காக (இழப்பீடு) திரட்டித் தருவார்கள் என்று நீ கருதுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கவர், “நான் என் கூட்டத்தாரிடம் அந்த அளவுக்கு மதிப்புடையவன் அல்லன்” என்று சொன்னார். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவரது (கழுத்தில் கிடந்த) தோல் வாரை, அ(வரை இழுத்துவ)ந்தவரிடம் தூக்கிப் போட்டு, “உம்முடைய ஆளைப் பிடித்துக்கொள்க” என்று சொன்னார்கள். உடனே அந்த மனிதர் அவரை(இழுத்து)க் கொண்டு சென்றார். அவர் திரும்பிச் சென்றதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவரை இவர் கொன்றுவிட்டால், இவரும் அவரைப் போன்றவரே ஆவார்” என்று கூறினார்கள்.

அவர் திரும்பிவந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் இவரைக் கொன்றுவிட்டால் நானும் இவரைப் போன்றவனே ஆவேன் என்று நீங்கள் கூறியதாகத் தெரிகிறது. உங்களது கட்டளைப்படிதானே நான் இவரை பிடித்துச்சென்றேன்” என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இவர் உமது பாவச் சுமையையும் (கொல்லப்பட்ட) உன் உறவினரின் பாவச் சுமையையும் சுமந்து கொண்டு செல்வதை நீர் விரும்புகிறீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! ஆம். அது அவ்வாறே ஆகட்டும்” என்று கூறிவிட்டு, அவரது (கழுத்தில் கிடந்த) தோல் வாரைத் தூக்கியெறிந்து, அவரை அவரது வழியிலேயே செல்ல விட்டுவிட்டார்.

அறிவிப்பாளர் : வாயில் பின் ஹுஜ்ரு (ரலி)