அத்தியாயம்: 36, பாடம்: 20, ஹதீஸ் எண்: 3797

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ،  – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ :‏

بَعَثَنِي أَبُو طَلْحَةَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لأَدْعُوَهُ وَقَدْ جَعَلَ طَعَامًا – قَالَ – فَأَقْبَلْتُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَعَ النَّاسِ فَنَظَرَ إِلَىَّ فَاسْتَحْيَيْتُ فَقُلْتُ أَجِبْ أَبَا طَلْحَةَ ‏.‏ فَقَالَ لِلنَّاسِ ‏”‏ قُومُوا ‏”‏ ‏.‏ فَقَالَ أَبُو طَلْحَةَ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا صَنَعْتُ لَكَ شَيْئًا – قَالَ – فَمَسَّهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَدَعَا فِيهَا بِالْبَرَكَةِ ثُمَّ قَالَ ‏”‏ أَدْخِلْ نَفَرًا مِنْ أَصْحَابِي عَشَرَةً ‏”‏ ‏.‏ وَقَالَ ‏”‏ كُلُوا ‏”‏ ‏.‏ وَأَخْرَجَ لَهُمْ شَيْئًا مِنْ بَيْنِ أَصَابِعِهِ فَأَكَلُوا حَتَّى شَبِعُوا فَخَرَجُوا فَقَالَ ‏”‏ أَدْخِلْ عَشَرَةً ‏”‏ ‏.‏ فَأَكَلُوا حَتَّى شَبِعُوا ‏.‏ فَمَا زَالَ يُدْخِلُ عَشَرَةً وَيُخْرِجُ عَشَرَةً حَتَّى لَمْ يَبْقَ مِنْهُمْ أَحَدٌ إِلاَّ دَخَلَ فَأَكَلَ حَتَّى شَبِعَ ثُمَّ هَيَّأَهَا فَإِذَا هِيَ مِثْلُهَا حِينَ أَكَلُوا مِنْهَا


وَحَدَّثَنِي سَعِيدُ بْنُ يَحْيَى الأُمَوِيُّ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ بَعَثَنِي أَبُو طَلْحَةَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ ابْنِ نُمَيْرٍ غَيْرَ أَنَّهُ قَالَ فِي آخِرِهِ ثُمَّ أَخَذَ مَا بَقِيَ فَجَمَعَهُ ثُمَّ دَعَا فِيهِ بِالْبَرَكَةِ   – قَالَ – فَعَادَ كَمَا كَانَ فَقَالَ ‏ “‏ دُونَكُمْ هَذَا ‏”‏ ‏

وَحَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ أَمَرَ أَبُو طَلْحَةَ أُمَّ سُلَيْمٍ أَنْ تَصْنَعَ، لِلنَّبِيِّ صلى الله عليه وسلم طَعَامًا لِنَفْسِهِ خَاصَّةً ثُمَّ أَرْسَلَنِي إِلَيْهِ ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ وَقَالَ فِيهِ فَوَضَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدَهُ وَسَمَّى عَلَيْهِ ثُمَّ قَالَ ‏”‏ ائْذَنْ لِعَشَرَةٍ ‏”‏ ‏.‏ فَأَذِنَ لَهُمْ فَدَخَلُوا فَقَالَ ‏”‏ كُلُوا وَسَمُّوا اللَّهَ ‏”‏ ‏.‏ فَأَكَلُوا حَتَّى فَعَلَ ذَلِكَ بِثَمَانِينَ رَجُلاً ‏.‏ ثُمَّ أَكَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَعْدَ ذَلِكَ وَأَهْلُ الْبَيْتِ وَتَرَكُوا سُؤْرًا ‏

وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، ‏.‏ بِهَذِهِ الْقِصَّةِ فِي طَعَامِ أَبِي طَلْحَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَالَ فِيهِ فَقَامَ أَبُو طَلْحَةَ عَلَى الْبَابِ حَتَّى أَتَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا كَانَ شَىْءٌ يَسِيرٌ ‏.‏ قَالَ ‏ “‏ هَلُمَّهُ فَإِنَّ اللَّهَ سَيَجْعَلُ فِيهِ الْبَرَكَةَ ‏”‏ ‏

وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ الْبَجَلِيُّ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُوسَى، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا الْحَدِيثِ وَقَالَ فِيهِ ثُمَّ أَكَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَكَلَ أَهْلُ الْبَيْتِ وَأَفْضَلُوا مَا أَبْلَغُوا جِيرَانَهُمْ

وَحَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ جَرِيرَ بْنَ زَيْدٍ، يُحَدِّثُ عَنْ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ رَأَى أَبُو طَلْحَةَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مُضْطَجِعًا فِي الْمَسْجِدِ يَتَقَلَّبُ ظَهْرًا لِبَطْنٍ فَأَتَى أُمَّ سُلَيْمٍ فَقَالَ إِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مُضْطَجِعًا فِي الْمَسْجِدِ يَتَقَلَّبُ ظَهْرًا لِبَطْنٍ وَأَظُنُّهُ جَائِعًا ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ وَقَالَ فِيهِ ثُمَّ أَكَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو طَلْحَةَ وَأُمُّ سُلَيْمٍ وَأَنَسُ بْنُ مَالِكٍ وَفَضَلَتْ فَضْلَةٌ فَأَهْدَيْنَاهُ لِجِيرَانِنَا ‏

وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي أُسَامَةُ، أَنَّ يَعْقُوبَ بْنَ عَبْدِ اللهِ بْنِ أَبِي طَلْحَةَ الْأَنْصَارِيَّ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ جِئْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا فَوَجَدْتُهُ جَالِسًا مَعَ أَصْحَابِهِ يُحَدِّثُهُمْ وَقَدْ عَصَّبَ بَطْنَهُ بِعِصَابَةٍ – قَالَ أُسَامَةُ وَأَنَا أَشُكُّ – عَلَى حَجَرٍ فَقُلْتُ لِبَعْضِ أَصْحَابِهِ لِمَ عَصَّبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَطْنَهُ فَقَالُوا مِنَ الْجُوعِ ‏.‏ فَذَهَبْتُ إِلَى أَبِي طَلْحَةَ وَهُوَ زَوْجُ أُمِّ سُلَيْمٍ بِنْتِ مِلْحَانَ فَقُلْتُ يَا أَبَتَاهُ قَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَصَّبَ بَطْنَهُ بِعِصَابَةٍ فَسَأَلْتُ بَعْضَ أَصْحَابِهِ فَقَالُوا مِنَ الْجُوعِ ‏.‏ فَدَخَلَ أَبُو طَلْحَةَ عَلَى أُمِّي فَقَالَ هَلْ مِنْ شَىْءٍ فَقَالَتْ نَعَمْ عِنْدِي كِسَرٌ مِنْ خُبْزٍ وَتَمَرَاتٌ فَإِنْ جَاءَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَحْدَهُ أَشْبَعْنَاهُ وَإِنْ جَاءَ آخَرُ مَعَهُ قَلَّ عَنْهُمْ ‏.‏ ثُمَّ ذَكَرَ سَائِرَ الْحَدِيثِ بِقِصَّتِهِ ‏

وَحَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا حَرْبُ بْنُ مَيْمُونٍ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي طَعَامِ أَبِي طَلْحَةَ نَحْوَ حَدِيثِهِمْ

அபூதல்ஹா (ரலி) உணவு தயாரித்துவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைப்பதற்காக என்னை அனுப்பினார்கள். நான் சென்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களுடன் இருந்தார்கள். அவர்கள் என்னைப் பார்த்தபோது நான் கூச்சப்பட்டேன். நான், “அபூ தல்ஹா (ரலி) (தங்களை விருந்துண்ண அழைக்கின்றார்கள். அந்த) அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம்முடனிருந்த) மக்களிடம், “எழுந்திருங்கள்” என்று சொன்னார்கள். பிறகு (அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்து சேர்ந்தபோது) “அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு மட்டுமே நான் சிறிதளவு (உணவு) தயாரித்துள்ளேன்” என்று அபூதல்ஹா (ரலி) கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்த உணவைத் தொட்டு, அதில் பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள்.

பிறகு, “என் தோழர்களில் பத்துப் பேரை உள்ளே அனுப்புங்கள்” என்று கூறினார்கள். (அவர்கள் உள்ளே வந்ததும்) “உண்ணுங்கள்” என்று கூறிவிட்டு, தம் விரல்களுக்கிடையிலிருந்து எதையோ வெளியாக்கினார்கள். உள்ளே வந்தவர்கள் வயிறார உண்டுவிட்டு வெளியேறிச் சென்றனர். பிறகு “இன்னும் பத்துப் பேரை உள்ளே அனுப்புங்கள்” என்று கூறினார்கள். அவர்களும் வந்து வயிறார உண்டனர்.

இவ்வாறே பத்துப் பேர் உள்ளே வர, பத்துப் பேர் வெளியே போக அவர்களில் ஒருவர்கூட மிஞ்சாமல் அனைவரும் உள்ளே வந்து வயிறார உண்டனர். பிறகு எஞ்சியிருந்த உணவை ஒருங்கிணைத்துப் பார்த்தபோது, அவர்கள் சாப்பிட்டபோது இருந்த அதே அளவில் (சிறிதும் குறையாமல்) அது இருந்தது.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

யஹ்யா அல் அமவீ (ரஹ்) வழி அறிவிப்பு, “அபூதல்ஹா (ரலி) என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள் …” என்று ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளன. இறுதியில் “ … பிறகு எஞ்சியிருந்த உணவை எடுத்து ஒன்றுசேர்த்து அதில் பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். அது முன்பிருந்ததைப் போன்றே மாறிவிட்டது. பிறகு “இதை வைத்துக்கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது

அப்துர் ரஹ்மான் பின் அபூலைலா (ரஹ்) வழி அறிவிப்பு, “உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்களுக்காக மட்டும் உணவு தயாரிக்கும்படி கூறிவிட்டு, என்னை நபி (ஸல்) அவர்களிடம் அபூதல்ஹா (ரலி) அனுப்பினார்கள் …” என்று துவங்குகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி தொடருகின்றன. மேலும் அதில், நபி (ஸல்) தமது கரத்தை (உணவின் மீது) வைத்து அல்லாஹ்வின் பெயர் கூறினார்கள். பிறகு  “பத்துப் பேருக்கு அனுமதி அளியுங்கள்” என்று (அபூதல்ஹா (ரலி) அவர்களிடம்) கூறினார்கள். அவ்வாறே அபூதல்ஹா (ரலி) அனுமதியளித்ததும் அவர்கள் (இல்லத்திற்குள்) நுழைந்தனர். அப்போது “அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) சொல்லி உண்ணுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூற, அவ்வாறே அவர்கள் உண்டனர். இவ்வாறு எண்பது பேரிடமும் கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களும் (அபூதல்ஹா (ரலி) அவர்களின்) வீட்டாரும் உண்டுவிட்டு, (மீதி) உணவையும் விட்டுச்சென்றனர் என்று இடம்பெற்றுள்ளது.

அம்ரிப்னு யஹ்யா (ரஹ்) தம் தந்தை வழியாக அறிவிப்பதில், “அபூதல்ஹா (ரலி) (தம்) வீட்டு வாசலில் நின்றுகொண்டிருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்துசேர்ந்தார்கள். அப்போது அபூதல்ஹா (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! சிறிதளவே உணவு இருக்கிறது” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அதைக் கொண்டுவாருங்கள். அதில் அல்லாஹ் வளத்தை ஏற்படுத்துவான்” என்று கூறினார்கள் எனக் காணப்படுகிறது.

முஹம்மது பின் மூஸா (ரஹ்) வழி அறிவிப்பில், “… பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் சாப்பிட்டு, வீட்டாரும் சாப்பிட்டு, தங்கள் அண்டை வீட்டாருக்கும் கொடுத்தனுப்பும் அளவுக்கு மீதி வைத்தனர்” என்று இடம்பெற்றுள்ளது.

வஹ்பு இப்னு ஜரீர் (ரஹ்) வழி அறிவிப்பு, அபூதல்ஹா (ரலி) (ஒரு முறை), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பள்ளிவாசலில் படுத்திருப்பதைக் கண்டார்கள். அப்போது அவர்கள் புரண்டு புரண்டு படுத்தார்கள். (இதைக் கண்ட) அபூதல்ஹா (ரலி) (தம் துணைவி) உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பள்ளிவாசலில் படுத்திருப்பதை நான் கண்டேன். அவர்கள் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பசியோடு இருப்பதாக நான் எண்ணுகிறேன் …” என்று கூறியதாகத் துவங்குகிறது. மேலும் அதில், “… பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அபூதல்ஹா (ரலி), உம்மு ஸுலைம் (ரலி) மற்றும் அனஸ் (ரலி) ஆகியோரும் உண்டனர். மீதி உணவும் இருந்தது. அதை நாங்கள் எங்கள் அண்டை வீட்டாருக்கு அன்பளிப்பாக வழங்கினோம்” என்று இடம்பெற்றுள்ளது.

யஅகூப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தம் தோழர்களுடன் பேசிக்கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டேன். அப்போது அவர்கள் தமது வயிற்றில் ஒரு துணியைக் கட்டியிருந்தார்கள்.  (அறிவிப்பாளர்களுள் ஒருவரான உஸாமா பின் ஸைத் (ரஹ்) கல்லை வைத்து ஒரு துணியால் கட்டியிருந்தார்கள் (என்று கூறியதாகவே) நான் கருதுகிறேன்” என்று கூறுகின்றார்.) நான் நபித்தோழர்கள் சிலரிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஏன் தமது வயிற்றைத் துணியால் கட்டியிருக்கின்றார்கள்?” என்று கேட்டேன். தோழர்கள், “பசியால்“ என்று பதிலளித்தனர். ஆகவே, நான் அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் சென்று, – அபூதல்ஹா (ரலி) (என் தாயார்) உம்மு ஸுலைம் பின்த்தி மில்ஹானின் (இரண்டாவது) கணவர் ஆவார் – “தந்தையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது வயிற்றை ஒரு துணியால் கட்டியிருப்பதை நான் கண்டேன். எனவே, அவர்களுடைய தோழர்களில் சிலரிடம் (காரணம்) கேட்டேன். அதற்கு “பசியால்தான்“ என்று அவர்கள் பதிலளித்தனர் என்று சொன்னேன். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் என் தாயாரிடம் சென்று “(உன்னிடம் உணவு) ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். என் தாயார் “ஆம். என்னிடம் சில ரொட்டித் துண்டுகளும் பேரீச்சம் பழங்களும் இருக்கின்றன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மட்டும் நம்மிடம் வந்தால் அவர்களுக்கு நம்மால் வயிறார உணவளிக்க முடியும். அவர்களுடன் வேறு யாரேனும் வந்தால் எல்லாருக்கும் போதாது…” என்று கூறினார் என்று அனஸ் (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு தொடர்கின்றன.

அத்தியாயம்: 36, பாடம்: 20, ஹதீஸ் எண்: 3796

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكِ بْنِ أَنَسٍ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ :‏

قَالَ أَبُو طَلْحَةَ لأُمِّ سُلَيْمٍ قَدْ سَمِعْتُ صَوْتَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ضَعِيفًا أَعْرِفُ فِيهِ الْجُوعَ فَهَلْ عِنْدَكِ مِنْ شَىْءٍ فَقَالَتْ نَعَمْ ‏.‏ فَأَخْرَجَتْ أَقْرَاصًا مِنْ شَعِيرٍ ثُمَّ أَخَذَتْ خِمَارًا لَهَا فَلَفَّتِ الْخُبْزَ بِبَعْضِهِ ثُمَّ دَسَّتْهُ تَحْتَ ثَوْبِي وَرَدَّتْنِي بِبَعْضِهِ ثُمَّ أَرْسَلَتْنِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فَذَهَبْتُ بِهِ فَوَجَدْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم جَالِسًا فِي الْمَسْجِدِ وَمَعَهُ النَّاسُ فَقُمْتُ عَلَيْهِمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ أَرْسَلَكَ أَبُو طَلْحَةَ ‏”‏ ‏.‏ قَالَ فَقُلْتُ نَعَمْ ‏.‏ فَقَالَ ‏”‏ أَلِطَعَامٍ ‏”‏ ‏.‏ فَقُلْتُ نَعَمْ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِمَنْ مَعَهُ ‏”‏ قُومُوا ‏”‏ ‏.‏ قَالَ فَانْطَلَقَ وَانْطَلَقْتُ بَيْنَ أَيْدِيهِمْ حَتَّى جِئْتُ أَبَا طَلْحَةَ فَأَخْبَرْتُهُ فَقَالَ أَبُو طَلْحَةَ يَا أُمَّ سُلَيْمٍ قَدْ جَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالنَّاسِ وَلَيْسَ عِنْدَنَا مَا نُطْعِمُهُمْ فَقَالَتِ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ – قَالَ – فَانْطَلَقَ أَبُو طَلْحَةَ حَتَّى لَقِيَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَعَهُ حَتَّى دَخَلاَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ هَلُمِّي مَا عِنْدَكِ يَا أُمَّ سُلَيْمٍ ‏”‏ ‏.‏ فَأَتَتْ بِذَلِكَ الْخُبْزِ فَأَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَفُتَّ وَعَصَرَتْ عَلَيْهِ أُمُّ سُلَيْمٍ عُكَّةً لَهَا فَأَدَمَتْهُ ثُمَّ قَالَ فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ ثُمَّ قَالَ ‏”‏ ائْذَنْ لِعَشَرَةٍ ‏”‏ ‏.‏ فَأَذِنَ لَهُمْ فَأَكَلُوا حَتَّى شَبِعُوا ثُمَّ خَرَجُوا ثُمَّ قَالَ ‏”‏ ائْذَنْ لِعَشَرَةٍ ‏”‏ ‏.‏ فَأَذِنَ لَهُمْ فَأَكَلُوا حَتَّى شَبِعُوا ثُمَّ خَرَجُوا ثُمَّ قَالَ ‏”‏ ائْذَنْ لِعَشَرَةٍ ‏”‏ ‏.‏ حَتَّى أَكَلَ الْقَوْمُ كُلُّهُمْ وَشَبِعُوا وَالْقَوْمُ سَبْعُونَ رَجُلاً أَوْ ثَمَانُونَ ‏

அபூதல்ஹா (ரலி), (தம் துணைவியும் என் தாயாருமான) உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது குரலைப் பலவீனமானதாகச் செவியுற்றதில் (அவர்களுக்கு இருக்கும்) பசியைப் புரிந்து கொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அதற்கு உம்மு ஸுலைம் (ரலி), “ஆம் (இருக்கிறது)” என்று கூறிவிட்டு, பார்லி(யில் தயாரித்த) ரொட்டிகள் சிலவற்றை எடுத்தார்கள்.

பிறகு அவர்கள் தமது துப்பட்டா ஒன்றை எடுத்து, அதன் ஒரு பகுதியில் அந்த ரொட்டிகளைச் சுற்றி எனது ஆடைக்குள் திணித்துவிட்டு, அதன் மற்றொரு பகுதியை எனக்கு மேல்துண்டாகப் போர்த்திவிட்டார்கள். பிறகு என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள்.

நான் அதைக் கொண்டுசென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பள்ளிவாசலில் அமர்ந்திருப்பதைக் கண்டேன். அவர்களுடன் மக்களும் இருந்தனர். நான் (சென்று) அவர்களுக்கு முன்னால் நின்றேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (என்னிடம்), “உன்னை அபூதல்ஹா அனுப்பினாரா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “உணவு உண்ணவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம்முடன் இருந்தவர்களிடம் “எழுந்திருங்கள்” என்று சொல்லிவிட்டு, (என் இல்லம் நோக்கி) நடக்கலானார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன். அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் சென்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் தோழர்களுடன் வந்துகொண்டிருக்கும்) விவரத்தைத் தெரிவித்தேன்.

உடனே அபூதல்ஹா (ரலி) (என் தாயாரிடம்), “உம்மு ஸுலைம்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களுடன் வந்துவிட்டார்கள். ஆனால், அவர்கள் அனைவருக்கும் வேண்டிய உணவு நம்மிடம் இல்லையே!” என்று சொன்னார்கள். உம்மு ஸுலைம் (ரலி), “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள்” என்று கூறினார்கள்.

அபூதல்ஹா (ரலி), (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை வரவேற்பதற்காக) நடந்து முன் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அபூதல்ஹா (ரலி) அவர்களுடன் வீட்டுக்குள் நுழைந்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உம்மு ஸுலைம்! உம்மிடம் இருப்பதைக் கொண்டுவா” என்று சொல்ல, உம்மு ஸுலைம் (ரலி) அந்த ரொட்டியைக் கொண்டுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி) உத்தரவிட, அவ்வாறே அது பிய்க்கப்பட்டது.

உம்மு ஸுலைம் (ரலி), தம்மிடமிருந்த தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை(உருக்கி)க் குழம்பு செய்தார்கள். பிறகு அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறைவன் நாடிய(பிராத்தனை சொற்கள் சில)வற்றைச் சொன்னார்கள்.

பிறகு “பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி அளியுங்கள்” என்று (அபூதல்ஹா (ரலி) அவர்களிடம்) சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அனுமதி அளித்தார்கள். அவர்கள் (பத்துப் பேர்) வந்து வயிறார உண்டுவிட்டு வெளியேறினார்கள்.

பின்னர், “இன்னும் பத்துப் பேருக்கு அனுமதி அளியுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூற, அபூதல்ஹா (ரலி) அவர்களும் அனுமதியளித்தார்கள். அவர்களும் வயிறார உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு “இன்னும் பத்துப் பேருக்கு அனுமதி அளியுங்கள்” என்றார்கள். (இவ்வாறு வந்திருந்த) மக்கள் அனைவரும் வயிறார உண்டார்கள். அப்படி உண்ட மக்கள் எழுபது அல்லது எண்பது பேர் ஆவர்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

நபித் தோழர் அனஸ் (ரலி) அவர்களின் தந்தை மாலிக் மரணித்த பின்னர், அனஸ் (ரலி) அவர்களின் தாயார் உம்மு ஸுலைம், அபூதல்ஹா (ரலி) எனும் நபித் தோழருக்கு மனைவியானார் (பார்க்க 3373, 3609).

அத்தியாயம்: 36, பாடம்: 20, ஹதீஸ் எண்: 3795

حَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنِي الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، مِنْ رُقْعَةٍ عَارَضَ لِي بِهَا ثُمَّ قَرَأَهُ عَلَىَّ قَالَ أَخْبَرَنَاهُ حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ مِينَاءَ قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ :‏

لَمَّا حُفِرَ الْخَنْدَقُ رَأَيْتُ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم خَمَصًا فَانْكَفَأْتُ إِلَى امْرَأَتِي فَقُلْتُ لَهَا هَلْ عِنْدَكِ شَىْءٌ فَإِنِّي رَأَيْتُ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم خَمَصًا شَدِيدًا ‏.‏ فَأَخْرَجَتْ لِي جِرَابًا فِيهِ صَاعٌ مِنْ شَعِيرٍ وَلَنَا بُهَيْمَةٌ دَاجِنٌ – قَالَ – فَذَبَحْتُهَا وَطَحَنَتْ فَفَرَغَتْ إِلَى فَرَاغِي فَقَطَّعْتُهَا فِي بُرْمَتِهَا ثُمَّ وَلَّيْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ لاَ تَفْضَحْنِي بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَمَنْ مَعَهُ – قَالَ – فَجِئْتُهُ فَسَارَرْتُهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا قَدْ ذَبَحْنَا بُهَيْمَةً لَنَا وَطَحَنَتْ صَاعًا مِنْ شَعِيرٍ كَانَ عِنْدَنَا فَتَعَالَ أَنْتَ فِي نَفَرٍ مَعَكَ ‏.‏ فَصَاحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالَ ‏”‏ يَا أَهْلَ الْخَنْدَقِ إِنَّ جَابِرًا قَدْ صَنَعَ لَكُمْ سُورًا فَحَيَّهَلاَ بِكُمْ ‏”‏ ‏.‏ وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ لاَ تُنْزِلُنَّ بُرْمَتَكُمْ وَلاَ تَخْبِزُنَّ عَجِينَتَكُمْ حَتَّى أَجِيءَ ‏”‏ ‏.‏ فَجِئْتُ وَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْدُمُ النَّاسَ حَتَّى جِئْتُ امْرَأَتِي فَقَالَتْ بِكَ وَبِكَ ‏.‏ فَقُلْتُ قَدْ فَعَلْتُ الَّذِي قُلْتِ لِي ‏.‏ فَأَخْرَجْتُ لَهُ عَجِينَتَنَا فَبَصَقَ فِيهَا وَبَارَكَ ثُمَّ عَمَدَ إِلَى بُرْمَتِنَا فَبَصَقَ فِيهَا وَبَارَكَ ثُمَّ قَالَ ‏”‏ ادْعِي خَابِزَةً فَلْتَخْبِزْ مَعَكِ وَاقْدَحِي مِنْ بُرْمَتِكُمْ وَلاَ تُنْزِلُوهَا ‏”‏ ‏.‏ وَهُمْ أَلْفٌ فَأُقْسِمُ بِاللَّهِ لأَكَلُوا حَتَّى تَرَكُوهُ وَانْحَرَفُوا وَإِنَّ بُرْمَتَنَا لَتَغِطُّ كَمَا هِيَ وَإِنَّ عَجِينَتَنَا  – أَوْ كَمَا قَالَ الضَّحَّاكُ – لَتُخْبَزُ كَمَا هُوَ ‏

அகழ் (போருக்காகக் குழி) தோண்டப்பட்டுக்கொண்டிருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வயிறு (பசியால்) ஒட்டிக் கிடந்ததைக் கண்டேன். உடனே நான் என் மனைவியிடம் திரும்பிவந்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வயிறு மிகவும் ஒட்டியிருந்ததை நான் கண்டேன். உன்னிடம் ஏதேனும் (உணவு) இருக்கிறதா?” என்று கேட்டேன்.

உடனே என் மனைவி என்னிடம் ஒரு பையைக் கொண்டுவந்தார். அதில் ஒரு ‘ஸாஉ’ அளவு பார்லி இருந்தது. வீட்டில் வளரும் ஆட்டுக் குட்டி ஒன்றும் எங்களிடம் இருந்தது. அதை நான் அறுத்தேன். என் மனைவி அந்த பார்லியை அரைத்தார். நான் (அறுத்து) முடித்தபோது அவரும் (அரைத்து) முடித்துவிட்டார். மேலும், அதைத் துண்டுகளாக்கி அதற்கான பாத்திரத்தில் இட்டேன்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்றேன். என் மனைவி, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் முன்னால் என்னை நீங்கள் கேவலப்படுத்திவிட வேண்டாம் (“நம்மிடம் உணவு குறைவாகவே இருக்கிறது என்று கூறிவிடுங்கள்)” என்று சொல்லியிருந்தார்.

எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று இரகசியமாக “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குச் சொந்தமான ஆட்டுக் குட்டியொன்றை அறுத்தோம். எங்களிடம் இருந்த ஒரு ‘ஸாஉ’ அளவு பார்லியை (என் மனைவி) அரைத்து வைத்துள்ளார். எனவே, தாங்களும் தங்களுடன் ஒரு சிலரும் (என் இல்லத்திற்கு) வாருங்கள்” என்று அழைத்தேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உரத்த குரலில், “அகழ்வாசிகளே! ஜாபிர் உங்களுக்காக உணவு தயாரித்துள்ளார். எனவே, விரைந்து வாருங்கள்” என்று அழைத்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (என்னிடம்), “நான் வரும்வரை நீங்கள் பாத்திரத்தை (அடுப்பிலிருந்து) இறக்க வேண்டாம். குழைத்துவைத்துள்ள மாவில் ரொட்டி சுடவும் வேண்டாம்” என்று கூறினார்கள். நான் என் இல்லத்திற்கு வந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களை அழைத்துக்கொண்டு முன்னால் வந்துகொண்டிருந்தார்கள்.

நான் என் மனைவியிடம் வந்துசேர்ந்தேன். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நூற்றுக்கணக்கான மக்களுடன் வருவதைப் பார்த்து என் மனைவி), “(எல்லாம்) உங்களால்தான்; உங்களால்தான்” என என்னைக் கடிந்துகொண்டார். உடனே நான், “நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கச் சொன்ன விஷயத்தை நான் அவர்களிடம் தெரிவித்துவிட்டேன்” என்று சொன்னேன்.

பிறகு என் மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் குழைத்த மாவைக் கொண்டு வந்து கொடுத்தார். அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இலேசாக உமிழ்ந்து, பெருக்கம் ஏற்பட பிரார்த்தித்தார்கள். பிறகு (இறைச்சிப்) பாத்திரத்தை நோக்கிச் சென்று, அதில் இலேசாக உமிழ்ந்து பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள்.

பிறகு (என் மனைவியிடம்), “ரொட்டி சுடுபவள் ஒருத்தியை (உதவிக்கு) அழைத்துக்கொள். உன்னுடன் (சேர்ந்து) அவளும் ரொட்டி சுடட்டும்! உங்கள் (இறைச்சிப்) பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக்கொண்டிரு. பாத்திரத்தை இறக்கி வைத்துவிடாதே” என்று கூறினார்கள். அ(ங்கு வந்த)வர்கள் ஆயிரம் பேர் இருந்தனர்.

அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் அனைவரும் உண்டுவிட்டு, அந்த உணவை (சிறிதும் குறையாமல்) அப்படியே விட்டுவிட்டுத் திரும்பிச் சென்றனர். அப்போது எங்கள் பாத்திரம் முன்பு போலவே (சிறிதும் குறையாமல்) சப்தத்துடன் கொதித்துக்கொண்டிருந்தது. மேலும், நாங்கள் குழைத்த மாவும் (சிறிதும் குறைந்துவிடாமல்) முன்பு போலவே ரொட்டியாகச் சுடப்பட்டுக்கொண்டிருந்தது.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 20, ஹதீஸ் எண்: 3794

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ، عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ أَوْ لَيْلَةٍ فَإِذَا هُوَ بِأَبِي بَكْرٍ وَعُمَرَ فَقَالَ ‏”‏ مَا أَخْرَجَكُمَا مِنْ بُيُوتِكُمَا هَذِهِ السَّاعَةَ ‏”‏ ‏.‏ قَالاَ الْجُوعُ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏”‏ وَأَنَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لأَخْرَجَنِي الَّذِي أَخْرَجَكُمَا قُومُوا ‏”‏ ‏.‏ فَقَامُوا مَعَهُ فَأَتَى رَجُلاً مِنَ الأَنْصَارِ فَإِذَا هُوَ لَيْسَ فِي بَيْتِهِ فَلَمَّا رَأَتْهُ الْمَرْأَةُ قَالَتْ مَرْحَبًا وَأَهْلاً ‏.‏ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ أَيْنَ فُلاَنٌ ‏”‏ ‏.‏ قَالَتْ ذَهَبَ يَسْتَعْذِبُ لَنَا مِنَ الْمَاءِ ‏.‏ إِذْ جَاءَ الأَنْصَارِيُّ فَنَظَرَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَصَاحِبَيْهِ ثُمَّ قَالَ الْحَمْدُ لِلَّهِ مَا أَحَدٌ الْيَوْمَ أَكْرَمَ أَضْيَافًا مِنِّي  – قَالَ – فَانْطَلَقَ فَجَاءَهُمْ بِعِذْقٍ فِيهِ بُسْرٌ وَتَمْرٌ وَرُطَبٌ فَقَالَ كُلُوا مِنْ هَذِهِ ‏.‏ وَأَخَذَ الْمُدْيَةَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ إِيَّاكَ وَالْحَلُوبَ ‏”‏ ‏.‏ فَذَبَحَ لَهُمْ فَأَكَلُوا مِنَ الشَّاةِ وَمِنْ ذَلِكَ الْعِذْقِ وَشَرِبُوا فَلَمَّا أَنْ شَبِعُوا وَرَوُوا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَبِي بَكْرٍ وَعُمَرَ ‏”‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتُسْأَلُنَّ عَنْ هَذَا النَّعِيمِ يَوْمَ الْقِيَامَةِ أَخْرَجَكُمْ مِنْ بُيُوتِكُمُ الْجُوعُ ثُمَّ لَمْ تَرْجِعُوا حَتَّى أَصَابَكُمْ هَذَا النَّعِيمُ ‏”‏ ‏


وَحَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا أَبُو هِشَامٍ، – يَعْنِي الْمُغِيرَةَ بْنَ سَلَمَةَ – حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا يَزِيدُ، حَدَّثَنَا أَبُو حَازِمٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ بَيْنَا أَبُو بَكْرٍ قَاعِدٌ وَعُمَرُ مَعَهُ إِذْ أَتَاهُمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏ “‏ مَا أَقْعَدَكُمَا هَا هُنَا ‏”‏ ‏.‏ قَالاَ أَخْرَجَنَا الْجُوعُ مِنْ بُيُوتِنَا وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ ‏.‏ ثُمَّ ذَكَرَ نَحْوَ حَدِيثِ خَلَفِ بْنِ خَلِيفَةَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு பகலில் அல்லது ஓர் இரவில் (தமது இல்லத்திலிருந்து) வெளியே வந்தபோது அபூபக்ரு (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்ததைக் கண்டு, “இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து வெளிவரக் காரணம் என்ன ?” என்று கேட்டார்கள். அதற்கு, “பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே!” என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “என் உயிர் கையிலுள்ளவன்மீது சத்தியமாக! நானும்(வெளியில் வந்தது அதனால்)தான். உங்கள் இருவரையும் வெளியேவரச் செய்ததே என்னையும் வெளிவரச் செய்தது” என்று கூறிவிட்டு, “எழுங்கள்!” என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்ஸாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர்.

அப்போது அந்த அன்ஸாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அந்தத் தோழரின் துணைவியார் கண்டதும், “வாழ்த்துகள்! வருக!” என்று வரவேற்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அப்பெண்ணிடம், “அவர் எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், “எங்களுக்காக குடிநீர் கொண்டுவருவதற்காக (வெளியே) சென்றுள்ளார்” என்று பதிலளித்தார்.

அப்போது அந்த அன்ஸாரி வந்துவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்) கண்டுவிட்டு, “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும் இல்லை” என்று கூறியபின், (திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார். அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும் கனிந்த பழங்களும் செங்காய்களும் இருந்தன. அவர், “இதை உண்ணுங்கள்” என்று கூறிவிட்டு, (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள்.

அவ்வாறே அவர்களுக்காக அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார். அவர்கள் அனைவரும் அந்த ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிலிருந்தும் உண்டுவிட்டு (நீரும்) அருந்தினர். வயிறு நிரம்பி தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அபூபக்ரு (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம், “என் உயிர் கையிலுள்ளன் மீதாணையாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். பசி உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்கின்றீர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அல் முகீரா பின் ஸலமா (ரஹ்) வழி அறிவிப்பு, “அபூபக்ரு (ரலி) அவர்களுடன் உமர் (ரலி) அவர்கள் (ஓரிடத்தில்) அமர்ந்திருந்தபோது, அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்து, “இங்கு நீங்கள் இருவரும் அமர்ந்திருப்பதற்கு காரணம் என்ன?“ என்று கேட்டார்கள். அதற்கு அவ்விருவரும், “தங்களைச் சத்திய(மார்க் க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! பசிதான் எங்களை எங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது என்று கூறினர்” எனத் துவங்குகிறது. மற்ற நிகழ்வுகள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.