அத்தியாயம்: 43, பாடம்: 36, ஹதீஸ் எண்: 4333

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ حَدَّثَهُ :‏

أَنَّ رَجُلاً مِنَ الأَنْصَارِ خَاصَمَ الزُّبَيْرَ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي شِرَاجِ الْحَرَّةِ الَّتِي يَسْقُونَ بِهَا النَّخْلَ فَقَالَ الأَنْصَارِيُّ سَرِّحِ الْمَاءَ ‏.‏ يَمُرُّ فَأَبَى عَلَيْهِمْ فَاخْتَصَمُوا عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِلزُّبَيْرِ ‏”‏ اسْقِ يَا زُبَيْرُ ثُمَّ أَرْسِلِ الْمَاءَ إِلَى جَارِكَ ‏”‏ ‏.‏ فَغَضِبَ الأَنْصَارِيُّ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَنْ كَانَ ابْنَ عَمَّتِكَ فَتَلَوَّنَ وَجْهُ نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ ‏”‏ يَا زُبَيْرُ اسْقِ ثُمَّ احْبِسِ الْمَاءَ حَتَّى يَرْجِعَ إِلَى الْجَدْرِ ‏”‏ ‏.‏ فَقَالَ الزُّبَيْرُ وَاللَّهِ إِنِّي لأَحْسِبُ هَذِهِ الآيَةَ نَزَلَتْ فِي ذَلِكَ ‏{‏ فَلاَ وَرَبِّكَ لاَ يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لاَ يَجِدُوا فِي أَنْفُسِهِمْ حَرَجًا‏}

மதீனாவாசிகள், தம் பேரீச்சந்தோப்புகளுக்கு நீர் பாய்ச்ச பயன்படுத்திவந்த ‘ஷிராஜுல் ஹர்ரா’ எனும் கால்வாய் தொடர்பாக அன்ஸாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களுடன் தகராறு செய்தார். அந்த அன்ஸாரித் தோழர், “மடையைத் திறந்துவிடுங்கள்; நீர் பாயட்டும்!” என்று சொன்னார். ஸுபைர் (ரலி), (மடையைத் திறந்துவிட) மறுத்து விட்டார்கள். (இதையடுத்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுசென்றனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸுபைர் (ரலி) அவர்களிடம், “ஸுபைரே! (உங்கள் தோப்புக்கு) நீர் பாய்ச்சிவிட்டு, பிறகு உங்கள் பக்கத்துத் தோப்புக்காரருக்குத் நீரைத் திறந்துவிடுங்கள்” என்று சொன்னார்கள்.

உடனே அந்த அன்ஸாரித் தோழர் கோபம் கொண்டு, “அவர் உங்கள் அத்தை மகன் என்பதாலா (அவர் முதலில் நீர் பாய்ச்சிக்கொண்டு, பிறகு எனக்குத் திறந்துவிடும்படி அவருக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கூறுகின்றீர்கள்)?” என்று கேட்டார்.

இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) நிறம் மாறிவிட்டது. அவர்கள் (என் தந்தையிடம்), “ஸுபைரே! நீங்கள் உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சுங்கள். பிறகு வரப்புகள் எட்டும்வரை நீரை (மடை கட்டி)த் தேக்கி நிறுத்திவிடுங்கள்” என்று சொன்னார்கள்.

ஸுபைர் (ரலி) கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீதாணையாக! உம்முடைய இறைவன் மீதாணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட வழக்கில் உம்மை நீதிபதியாக்கி, பின்னர் நீர் வழங்குகின்ற தீர்ப்பால் தம் உள்ளங்களில் அவர்கள் எந்த அதிருப்தியும் கொள்ளாமல் (அதற்கு) முழுமையாகக் கட்டுப்படாத வரை நம்பிக்கை கொண்டவர்களாக ஆகமாட்டார்கள் எனும் (4:65) இறைவசனம் இந்த விவகாரத்தில்தான் அருளப்பெற்றது என்று நான் எண்ணுகின்றேன்”

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி)