அத்தியாயம்: 44, பாடம்: 32, ஹதீஸ் எண்: 4517

حَدَّثَنَا حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا عَارِمُ بْنُ الْفَضْلِ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏

أَسَرَّ إِلَىَّ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم سِرًّا فَمَا أَخْبَرْتُ بِهِ أَحَدًا بَعْدُ ‏.‏ وَلَقَدْ سَأَلَتْنِي عَنْهُ أُمُّ سُلَيْمٍ فَمَا أَخْبَرْتُهَا بِهِ

நபி (ஸல்) என்னிடம் ஓர் இரகசியம் சொன்னார்கள். அவர்களது இறப்புக்குப் பிறகும்கூட ஒருவரிடமும் அதை நான் தெரிவிக்கவில்லை. என்னிடம் (என் தாயார்) உம்மு ஸுலைம் (ரலி) அது குறித்துக் கேட்டார்கள். அதை நான் அவருக்கும் தெரிவிக்கவில்லை.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 32, ஹதீஸ் எண்: 4516

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ قَالَ :‏

أَتَى عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا أَلْعَبُ مَعَ الْغِلْمَانِ – قَالَ – فَسَلَّمَ عَلَيْنَا فَبَعَثَنِي إِلَى حَاجَةٍ فَأَبْطَأْتُ عَلَى أُمِّي فَلَمَّا جِئْتُ قَالَتْ مَا حَبَسَكَ قُلْتُ بَعَثَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِحَاجَةٍ ‏.‏ قَالَتْ مَا حَاجَتُهُ قُلْتُ إِنَّهَا سِرٌّ ‏.‏ قَالَتْ لاَ تُحَدِّثَنَّ بِسِرِّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَحَدًا ‏


قَالَ أَنَسٌ وَاللَّهِ لَوْ حَدَّثْتُ بِهِ أَحَدًا لَحَدَّثْتُكَ يَا ثَابِتُ ‏

நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பணியாளனாக இருந்தபோது) என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்தார்கள். அப்போது நான் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தேன். நபி (ஸல்) எங்களுக்கு முகமன் (ஸலாம்) சொன்னார்கள். பிறகு என்னை ஓர் அலுவல் நிமித்தம் (ஓரிடத்திற்கு) அனுப்பிவைத்தார்கள். நான் என் தாயாரிடம் தாமதமாகவே வந்தேன். நான் (வீட்டுக்கு) வந்தபோது என் தாயார், “உன் தாமதத்திற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஓர் அலுவலுக்காக என்னை அனுப்பிவைத்தார்கள்” என்று பதிலளித்தேன். அப்போது என் தாயார், “என்ன அலுவல்?” என்று கேட்டார்கள். நான், “அது இரகசியம்” என்று சொன்னேன். என் தாயார், “நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரகசியத்தை யாரிடமும் சொல்லாதே” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

(இதன் அறிவிப்பாளரான) ஸாபித் அல்புனானீ (ரஹ்) கூறுகின்றார்: (அனஸ் (ரலி) இந்த ஹதீஸை என்னிடம் அறிவித்தபோது) “அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த இரகசியத்தை நான் யாரிடமாவது சொல்வதாயிருந்தால் ஸாபித்தே! உங்களிடம் அதைச் சொல்லியிருப்பேன்” என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 44, பாடம்: 32, ஹதீஸ் எண்: 4515

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَعْفَرٌ، – يَعْنِي ابْنَ سُلَيْمَانَ – عَنِ الْجَعْدِ أَبِي عُثْمَانَ، قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ :‏

مَرَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَسَمِعَتْ أُمِّي أُمُّ سُلَيْمٍ صَوْتَهُ فَقَالَتْ بِأَبِي وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ أُنَيْسٌ ‏.‏ فَدَعَا لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثَ دَعَوَاتٍ قَدْ رَأَيْتُ مِنْهَا اثْنَتَيْنِ فِي الدُّنْيَا وَأَنَا أَرْجُو الثَّالِثَةَ فِي الآخِرَةِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு முறை) எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது என் தாயார் உம்மு ஸுலைம் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குரலைக் கேட்டார்கள். உடனே (அவர்களிடம் சென்று),  “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! (இதோ உங்கள் பணியாளன்) அனஸ்” என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்காக மூன்று பிரார்த்தனைகளைச் செய்தார்கள். அவற்றில் இரண்டை நான் இந்த உலகத்திலேயே பெற்றுவிட்டேன். மூன்றாவதை நான் மறுமையில் எதிர்பார்க்கின்றேன்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 32, ஹதீஸ் எண்: 4514

حَدَّثَنِي أَبُو مَعْنٍ الرَّقَاشِيُّ، حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عِكْرِمَةُ، حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا أَنَسٌ قَالَ :‏

جَاءَتْ بِي أُمِّي أُمُّ أَنَسٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدْ أَزَّرَتْنِي بِنِصْفِ خِمَارِهَا وَرَدَّتْنِي بِنِصْفِهِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ هَذَا أُنَيْسٌ ابْنِي أَتَيْتُكَ بِهِ يَخْدُمُكَ فَادْعُ اللَّهَ لَهُ ‏.‏ فَقَالَ ‏ “‏ اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ ‏”‏ ‏.‏ قَالَ أَنَسٌ فَوَاللَّهِ إِنَّ مَالِي لَكَثِيرٌ وَإِنَّ وَلَدِي وَوَلَدَ وَلَدِي لَيَتَعَادُّونَ عَلَى نَحْوِ الْمِائَةِ الْيَوْمَ ‏‏

என் தாயார் (சிறுவனாயிருந்த) என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். அப்போது தமது முக்காட்டுத் துணியில் ஒரு பகுதியை எனக்குக் கீழாடையாகவும் மற்றொரு பகுதியை எனக்கு மேல் துண்டாகவும் போர்த்திவிட்டிருந்தார்கள். என் தாயார், “அல்லாஹ்வின் தூதரே! இவன் என் (செல்ல) மகன் அனஸ். உங்களுக்குப் பணியாற்றுவதற்காக இவனை உங்களிடம் அழைத்துவந்துள்ளேன். இவனுக்காகப் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைவா! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றைய தினத்தில் என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. என் பிள்ளைகள் மற்றும் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் எண்ணிக்கை சுமார் நூறை எட்டியிருக்கிறது.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 32, ஹதீஸ் எண்: 4513

وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا سُلَيْمَانُ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ قَالَ :‏

دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَيْنَا وَمَا هُوَ إِلاَّ أَنَا وَأُمِّي وَأُمُّ حَرَامٍ خَالَتِي فَقَالَتْ أُمِّي يَا رَسُولَ اللَّهِ خُوَيْدِمُكَ ادْعُ اللَّهَ لَهُ – قَالَ – فَدَعَا لِي بِكُلِّ خَيْرٍ وَكَانَ فِي آخِرِ مَا دَعَا لِي بِهِ أَنْ قَالَ ‏ “‏ اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيهِ ‏”‏

நபி (ஸல்) எங்களிடம் (எங்கள் இல்லத்திற்கு ஒரு முறை) வந்தார்கள். அப்போது அங்கு நானும் என் தாயாரும் என் தாயின் சகோதரி உம்மு ஹராம் (ரலி) அவர்களுமே இருந்தோம். அப்போது என் தாயார், “அல்லாஹ்வின் தூதரே! (இதோ) உங்கள் அன்புச்  சேவகன் (அனஸ்). இவனுக்காகப் பிரார்த்தியுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது நபி (ஸல்) எனக்காக எல்லாவித நலன்களும் வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அவர்கள் தமது பிரார்த்தனையின் முடிவில், “இறைவா! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்கி, அ(வருக்கு நீ அளித்திருப்ப)தில் வளம் சேர்ப்பாயாக!” என்று எனக்காக வேண்டினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 32, ஹதீஸ் எண்: 4512

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسٍ :‏

عَنْ أُمِّ سُلَيْمٍ، أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ خَادِمُكَ أَنَسٌ ادْعُ اللَّهَ لَهُ فَقَالَ ‏ “‏ اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ ‏”‏ ‏


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، سَمِعْتُ أَنَسًا، يَقُولُ قَالَتْ أُمُّ سُلَيْمٍ يَا رَسُولَ اللَّهِ خَادِمُكَ أَنَسٌ ‏.‏ فَذَكَرَ نَحْوَهُ ‏‏

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ مِثْلَ ذَلِكَ

என் தாயார் உம்மு ஸுலைம் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! (இதோ) அனஸ்; (இனிமேல்) உங்கள் பணியாளன். இவனுக்காகப் பிரார்த்தியுங்கள்” என்றார்கள்.

நபி (ஸல்), “இறைவா! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! அவருக்கு நீ வழங்கியுள்ள(ஆயுள் முதலான)வற்றில் வளம் சேர்ப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

அபூதாவூத் (ரஹ்) வழி அறிவிப்பு, “(என் தாயார்) உம்மு ஸுலைம் (ரலி), அல்லாஹ்வின் தூதரே! (இதோ) உங்கள் பணியாளன் அனஸ்…” என்று கூறியதாக ஆரம்பமாகிறது.