அத்தியாயம்: 44, பாடம்: 35, ஹதீஸ் எண்: 4532

قَالَ ابْنُ شِهَابٍ وَقَالَ ابْنُ الْمُسَيَّبِ :‏

إِنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ يَقُولُونَ إِنَّ أَبَا هُرَيْرَةَ قَدْ أَكْثَرَ وَاللَّهُ الْمَوْعِدُ وَيَقُولُونَ مَا بَالُ الْمُهَاجِرِينَ وَالأَنْصَارِ لاَ يَتَحَدَّثُونَ مِثْلَ أَحَادِيثِهِ وَسَأُخْبِرُكُمْ عَنْ ذَلِكَ إِنَّ إِخْوَانِي مِنَ الأَنْصَارِ كَانَ يَشْغَلُهُمْ عَمَلُ أَرَضِيهِمْ وَإِنَّ إِخْوَانِي مِنَ الْمُهَاجِرِينَ كَانَ يَشْغَلُهُمُ الصَّفْقُ بِالأَسْوَاقِ وَكُنْتُ أَلْزَمُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى مِلْءِ بَطْنِي فَأَشْهَدُ إِذَا غَابُوا وَأَحْفَظُ إِذَا نَسُوا وَلَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا ‏”‏ أَيُّكُمْ يَبْسُطُ ثَوْبَهُ فَيَأْخُذُ مِنْ حَدِيثِي هَذَا ثُمَّ يَجْمَعُهُ إِلَى صَدْرِهِ فَإِنَّهُ لَمْ يَنْسَ شَيْئًا سَمِعَهُ ‏”‏ ‏.‏ فَبَسَطْتُ بُرْدَةً عَلَىَّ حَتَّى فَرَغَ مِنْ حَدِيثِهِ ثُمَّ جَمَعْتُهَا إِلَى صَدْرِي فَمَا نَسِيتُ بَعْدَ ذَلِكَ الْيَوْمِ شَيْئًا حَدَّثَنِي بِهِ وَلَوْلاَ آيَتَانِ أَنْزَلَهُمَا اللَّهُ فِي كِتَابِهِ مَا حَدَّثْتُ شَيْئًا أَبَدًا ‏{‏ إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ وَالْهُدَى‏}‏ إِلَى آخِرِ الآيَتَيْنِ


وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا أَبُو الْيَمَانِ، عَنْ شُعَيْبٍ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ إِنَّكُمْ تَقُولُونَ إِنَّ أَبَا هُرَيْرَةَ يُكْثِرُ الْحَدِيثَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِنَحْوِ حَدِيثِهِمْ ‏.‏

“அபூஹுரைரா நபிமொழிகளை அதிகமதிகம் அறிவிக்கின்றாரே!” என்று மக்கள் (குறை) கூறுகிறார்கள். (இந்தக் குற்றச்சாட்டு சரியா, தவறா என்பதை அறிய) அல்லாஹ்விடம் குறித்த நேரம் ஒன்று உண்டு. “முஹாஜிர்களுக்கும் அன்ஸாரிகளுக்கும் என்ன நேர்ந்தது? அபூஹுரைராவைப் போன்று (அதிகமான) நபிமொழிகளை அவர்கள் அறிவிப்பதில்லையே!” என்றும் கேட்கிறார்கள். அது குறித்து அவர்களுக்கு விளக்குவேன்:

என் அன்ஸாரி சகோதரர்கள் தம் நிலங்களில் (விவசாயத்தில்) கவனம் செலுத்தி வந்தார்கள். என் முஹாஜிர் சகோதரர்கள் கடைவீதிகளில் வியாபாரம் செய்வதில் கவனம் செலுத்திவந்தார்கள். அதே நேரத்தில் நானோ, என் வயிற்றை நிரப்பும் (வருவாய் போதுமென்ற) திருப்தியுடன் (பொருள் சேர்க்கும் பணியில் ஈடுபடாமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனேயே எப்போதும் இருந்துவந்தேன். மக்கள் (வருவாய் தேடி) வெளியே சென்றுவிடும்போதும் நான் அல்லாஹ்வின் தூதருடனேயே இருப்பேன்; என் சகோதர்கள் (நபிமொழிகளை) மறந்துவிடும்போது, நான் (அவற்றை) நினைவில் வைத்திருப்பேன்.

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் யார் தமது ஆடையை விரித்து வைத்து, என்னுடைய இந்த உரையை வாங்கி, பிறகு அதைத் தமது நெஞ்சோடு சேர்த்து (அணைத்து)க்கொள்கின்றாரோ அவர் (என்னிடமிருந்து) கேட்ட எதையும் மறக்கமாட்டார்” என்று கூறினார்கள்.

உடனே நான் என் மீதிருந்த போர்வையை விரித்(துப் பிடித்)தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது உரையை முடிக்கும்வரை அதை விரித்து வைத்திருந்துவிட்டு, பிறகு அதை என் நெஞ்சோடு சேர்த்து (அணைத்து)க்கொண்டேன். அன்றைய தினத்திற்குப் பிறகு அவர்கள் எனக்கு அறிவித்த செய்திகள் எதையும் நான் மறந்ததேயில்லை.

அல்லாஹ் தனது வேதத்தில் அருளியுள்ள இரு வசனங்கள் மட்டும் இல்லாவிட்டால் நான் (நபிமொழிகளில்) எதையுமே ஒருபோதும் அறிவித்திருக்கமாட்டேன் (அவை):

“நாம் அருளிய சான்றுகளையும் நல்வழியையும் வேதத்தில் நாம் மக்களுக்குத் தெளிவுபடுத்திய பிறகும் அவற்றை மறைப்பவர்களை அல்லாஹ் சபிக்கின்றான்; சபிப்போரும் அவர்களைச் சபிக்கின்றனர்.

எனினும், பாவத்திலிருந்து மீண்டு, (தம்மைச்) சீர்திருத்தி, (தாம் மறைத்தவற்றைத்) தெளிவுபடுத்தியவர்களைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மிகவும் மன்னிப்பவனும் பெருங்கருணையாளனும் ஆவேன்” (2:159,160).

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக இபுனுல் முஸையப் (ரஹ்)


குறிப்பு :

அபூஸலமா (ரஹ்) வழி அறிவிப்பு, “அபூஹுரைரா, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கின்றார் என்று நீங்கள் (குறை) கூறுகின்றீர்கள்” என ஆரம்பமாகிறது.

அத்தியாயம்: 44, பாடம்: 35, ஹதீஸ் எண்: 4531

وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، حَدَّثَهُ أَنَّ عَائِشَةَ قَالَتْ :‏

أَلاَ يُعْجِبُكَ أَبُو هُرَيْرَةَ جَاءَ فَجَلَسَ إِلَى جَنْبِ حُجْرَتِي يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم يُسْمِعُنِي ذَلِكَ وَكُنْتُ أُسَبِّحُ فَقَامَ قَبْلَ أَنْ أَقْضِيَ سُبْحَتِي وَلَوْ أَدْرَكْتُهُ لَرَدَدْتُ عَلَيْهِ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَكُنْ يَسْرُدُ الْحَدِيثَ كَسَرْدِكُمْ ‏‏

ஆயிஷா (ரலி) என்னிடம், “அபூஹுரைரா(வின் நடவடிக்கை) உனக்கு வியப்பூட்டவில்லையா? (ஒரு நாள்) அவர் வந்து என் அறைக்கருகில் அமர்ந்து என் காதில் விழும் விதமாக நபிமொழிகளை அறிவித்துக்கொண்டிருந்தார்.

அப்போது நான் கூடுதல்தொழுகை (நஃபில்) தொழுதுகொண்டிருந்தேன். நான் தொழுது முடிப்பதற்குமுன் அவர் எழுந்து சென்றுவிட்டார். அவர் என்னிடம் சிக்கியிருந்தால், “நீங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஹதீஸ்களை அறிவித்துக்கொண்டிருப்பதைப் போன்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொடர்ச்சியாக (ஹதீஸ்களை) அறிவித்துக்கொண்டிருக்கவில்லை” என்று அவருக்கு மறுப்புத் தெரிவித்திருப்பேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 44, பாடம்: 35, ஹதீஸ் எண்: 4530

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ جَمِيعًا عَنْ سُفْيَانَ، قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ الأَعْرَجِ قَالَ :‏

سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ إِنَّكُمْ تَزْعُمُونَ أَنَّ أَبَا هُرَيْرَةَ، يُكْثِرُ الْحَدِيثَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَاللَّهُ الْمَوْعِدُ كُنْتُ رَجُلاً مِسْكِينًا أَخْدُمُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى مِلْءِ بَطْنِي وَكَانَ الْمُهَاجِرُونَ يَشْغَلُهُمُ الصَّفْقُ بِالأَسْوَاقِ وَكَانَتِ الأَنْصَارُ يَشْغَلُهُمُ الْقِيَامُ عَلَى أَمْوَالِهِمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ مَنْ يَبْسُطُ ثَوْبَهُ فَلَنْ يَنْسَى شَيْئًا سَمِعَهُ مِنِّي ‏”‏ ‏.‏ فَبَسَطْتُ ثَوْبِي حَتَّى قَضَى حَدِيثَهُ ثُمَّ ضَمَمْتُهُ إِلَىَّ فَمَا نَسِيتُ شَيْئًا سَمِعْتُهُ مِنْهُ


حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرِ بْنِ يَحْيَى بْنِ خَالِدٍ، أَخْبَرَنَا مَعْنٌ، أَخْبَرَنَا مَالِكٌ، ح وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، كِلاَهُمَا عَنِ الزُّهْرِيِّ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ بِهَذَا الْحَدِيثِ غَيْرَ أَنَّ مَالِكًا، انْتَهَى حَدِيثُهُ عِنْدَ انْقِضَاءِ قَوْلِ أَبِي هُرَيْرَةَ وَلَمْ يَذْكُرْ فِي حَدِيثِهِ الرِّوَايَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏ “‏ مَنْ يَبْسُطْ ثَوْبَهُ ‏”‏ ‏.‏ إِلَى آخِرِهِ ‏

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அதிகமான ஹதீஸ்களை அபூஹுரைரா அறிவிக்கின்றாரே!” என்று நீங்கள் (குறை) கூறுகின்றீர்கள். (இந்தக் குற்றச்சாட்டு சரியா, தவறா என்பதை அறிய) அல்லாஹ்விடம் குறித்த நேரம் ஒன்று உண்டு.

நான் ஓர் ஏழை. நான் என் வயிறு நிரம்பினால் போதும் என்ற திருப்தியுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பணிவிடைகள் செய்துவந்தேன். முஹாஜிர்கள் கடைவீதிகளில் வணிகம் செய்வதில் கவனமாக இருந்தார்கள். அன்ஸாரிகளோ தம் (வேளாண்) செல்வங்களைப் பராமரிப்பதில் கவனம் செலுத்திவந்தார்கள். (ஆனால், நானோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனே இருந்துவந்தேன்).

இந்நிலையில் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “யார் தமது (மேல்) துண்டை விரித்து வைத்(திருந்து பிறகு அதைச் சுருட்டி நெஞ்சோடு அணைத்)துக் கொள்கின்றாரோ அவர் என்னிடமிருந்து கேட்ட எதையும் ஒருபோதும் மறக்கமாட்டார்” என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பேசி முடிக்கும்வரை நான் எனது துணியை விரித்(துப் பிடித்)தேன். பிறகு அதை என் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டேன். அதன் பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட எதையும் நான் மறந்ததில்லை.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

மாலிக் பின் அனஸ் (ரஹ்) வழி அறிவிப்பு, “அன்ஸாரிகள் (வேளாண்) செல்வங்களைப் பராமரிப்பதில் கவனம் செலுத்திவந்தார்கள்” என்பதோடு முடிந்துவிடுகின்றது.

அத்தியாயம்: 44, பாடம்: 35, ஹதீஸ் எண்: 4529

حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ الْيَمَامِيُّ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، عَنْ أَبِي كَثِيرٍ، يَزِيدَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ قَالَ :‏

كُنْتُ أَدْعُو أُمِّي إِلَى الإِسْلاَمِ وَهِيَ مُشْرِكَةٌ فَدَعَوْتُهَا يَوْمًا فَأَسْمَعَتْنِي فِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا أَكْرَهُ فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا أَبْكِي قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ أَدْعُو أُمِّي إِلَى الإِسْلاَمِ فَتَأْبَى عَلَىَّ فَدَعَوْتُهَا الْيَوْمَ فَأَسْمَعَتْنِي فِيكَ مَا أَكْرَهُ فَادْعُ اللَّهَ أَنْ يَهْدِيَ أُمَّ أَبِي هُرَيْرَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ اللَّهُمَّ اهْدِ أُمَّ أَبِي هُرَيْرَةَ ‏”‏ ‏.‏ فَخَرَجْتُ مُسْتَبْشِرًا بِدَعْوَةِ نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا جِئْتُ فَصِرْتُ إِلَى الْبَابِ فَإِذَا هُوَ مُجَافٌ فَسَمِعَتْ أُمِّي خَشْفَ قَدَمَىَّ فَقَالَتْ مَكَانَكَ يَا أَبَا هُرَيْرَةَ ‏.‏ وَسَمِعْتُ خَضْخَضَةَ الْمَاءِ قَالَ – فَاغْتَسَلَتْ وَلَبِسَتْ دِرْعَهَا وَعَجِلَتْ عَنْ خِمَارِهَا فَفَتَحَتِ الْبَابَ ثُمَّ قَالَتْ يَا أَبَا هُرَيْرَةَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ – قَالَ – فَرَجَعْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَتَيْتُهُ وَأَنَا أَبْكِي مِنَ الْفَرَحِ – قَالَ – قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَبْشِرْ قَدِ اسْتَجَابَ اللَّهُ دَعْوَتَكَ وَهَدَى أُمَّ أَبِي هُرَيْرَةَ ‏.‏ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَقَالَ خَيْرًا – قَالَ – قُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يُحَبِّبَنِي أَنَا وَأُمِّي إِلَى عِبَادِهِ الْمُؤْمِنِينَ وَيُحَبِّبَهُمْ إِلَيْنَا – قَالَ – فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ اللَّهُمَّ حَبِّبْ عُبَيْدَكَ هَذَا – يَعْنِي أَبَا هُرَيْرَةَ وَأُمَّهُ – إِلَى عِبَادِكَ الْمُؤْمِنِينَ وَحَبِّبْ إِلَيْهِمُ الْمُؤْمِنِينَ”‏ ‏.‏ فَمَا خُلِقَ مُؤْمِنٌ يَسْمَعُ بِي وَلاَ يَرَانِي إِلاَّ أَحَبَّنِي ‏

என் தாயார் இணைவைப்பாளராக இருந்த போது, இஸ்லாத்தை ஏற்குமாறு அவருக்கு நான் அழைப்பு விடுப்பது வழக்கம். ஒருநாள் நான் அவருக்கு (இஸ்லாமிய) அழைப்பு விடுத்தபோது, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் குறித்து நான் விரும்பாத (வசை மொழிகள்) சிலவற்றை என் காதுபடக் கூறினார்.

உடனே நான் அழுதுகொண்டே அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நான் என் தாயாருக்கு இஸ்லாமிய அழைப்பு விடுப்பது வழக்கம். அவர் மறுத்துவந்தார். இன்றைய தினமும் அவருக்கு நான் அழைப்பு விடுத்தேன். அவர் உங்களைக் குறித்து நான் விரும்பாத (வசைச்) சொற்கள் சிலவற்றை என் காதுபடக் கூறினார். ஆகவே, (இந்த) அபூஹுரைராவின் தாய்க்கு நல்வழி காட்டுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைவா! அபூஹுரைராவின் தாய்க்கு நல்வழி காட்டுவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனையைக் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தவனாக நான் (வீட்டை நோக்கிப்) புறப்பட்டேன். நான் வீட்டு வாசலை அடைந்தபோது (உள்ளே) அது தாழிடப்பட்டிருந்தது. என் தாயார் என் காலடிச் சப்தத்தைக் கேட்டுவிட்டு, “அபூஹுரைரா, அங்கேயே இரு!” என்று கூறினார்.

அப்போது நீர் புழங்கும் சப்தம் எனக்குக் கேட்டது. என் தாயார் குளித்துவிட்டு, தமது சட்டையை அணிந்துகொண்டு, முக்காட்டுத் துணி அணியாமல் விரைந்து வந்து கதவைத் திறந்தார். பிறகு, “அபூஹுரைரா! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் உறுதி மொழிகின்றேன்; முஹம்மது (ஸல்) அவனுடைய அடியாரும் தூதருமாவார் என்றும் உறுதி மொழிகிறேன்” என்று கூறினார்.

உடனே நான் மகிழ்ச்சி தாளாது அழுது கொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மகிழ்ச்சியான செய்தி!. அல்லாஹ் உங்களின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு விட்டான். அபூஹுரைராவின் தாயாருக்கு நல்வழி காட்டிவிட்டான்” என்று சொன்னேன்.

அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார்கள். நல்ல வார்த்தைகளைச் சொன்னார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! இறை நம்பிக்கையுள்ள அடியார்களுக்கு என்மீதும் என் தாயார் மீதும் நேசம் ஏற்படவும் அவர்கள் மீது எனக்கும் என் தாயாருக்கும் நேசம் ஏற்படவும், நீங்கள் பிரார்த்தியுங்கள்” என்று கேட்டுக்கொண்டேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைவா! உன்னுடைய இந்தச் சிறிய அடியார் -அபூஹுரைரா- மீதும் அவருடைய தாயார்மீதும் இறைநம்பிக்கையாளர்களான உன் அடியார்களுக்கு நேசத்தை ஏற்படுத்துவாயாக! இறைநம்பிக்கையாளர்கள்மீது இவர்களுக்கு நேசத்தை ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

எனவேதான், என்னைப் பார்க்காவிட்டாலும் என்னைப் பற்றிக் கேள்விப்படும் எந்த ஓர் இறை நம்பிக்கையாளரும் என்னை நேசிக்காமல் இருப்பதில்லை.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)