அத்தியாயம்: 54, பாடம்: 20, ஹதீஸ் எண்: 5201

حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ حَدَّثَنِي يَحْيَى بْنُ جَابِرٍ الطَّائِيُّ، قَاضِي حِمْصَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ جُبَيْرٍ عَنْ أَبِيهِ، جُبَيْرِ بْنِ نُفَيْرٍ الْحَضْرَمِيِّ أَنَّهُ سَمِعَ النَّوَّاسَ بْنَ سَمْعَانَ الْكِلاَبِيَّ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِيُّ، – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنْ يَحْيَى بْنِ جَابِرٍ الطَّائِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ عَنْ أَبِيهِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ عَنِ النَّوَّاسِ بْنِ سَمْعَانَ قَالَ :‏ ‏

ذَكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الدَّجَّالَ ذَاتَ غَدَاةٍ فَخَفَّضَ فِيهِ وَرَفَّعَ حَتَّى ظَنَنَّاهُ فِي طَائِفَةِ النَّخْلِ فَلَمَّا رُحْنَا إِلَيْهِ عَرَفَ ذَلِكَ فِينَا فَقَالَ ‏”‏ مَا شَأْنُكُمْ ‏”‏ ‏.‏ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ ذَكَرْتَ الدَّجَّالَ غَدَاةً فَخَفَّضْتَ فِيهِ وَرَفَّعْتَ حَتَّى ظَنَنَّاهُ فِي طَائِفَةِ النَّخْلِ ‏.‏ فَقَالَ ‏”‏ غَيْرُ الدَّجَّالِ أَخْوَفُنِي عَلَيْكُمْ إِنْ يَخْرُجْ وَأَنَا فِيكُمْ فَأَنَا حَجِيجُهُ دُونَكُمْ وَإِنْ يَخْرُجْ وَلَسْتُ فِيكُمْ فَامْرُؤٌ حَجِيجُ نَفْسِهِ وَاللَّهُ خَلِيفَتِي عَلَى كُلِّ مُسْلِمٍ إِنَّهُ شَابٌّ قَطَطٌ عَيْنُهُ طَافِئَةٌ كَأَنِّي أُشَبِّهُهُ بِعَبْدِ الْعُزَّى بْنِ قَطَنٍ فَمَنْ أَدْرَكَهُ مِنْكُمْ فَلْيَقْرَأْ عَلَيْهِ فَوَاتِحَ سُورَةِ الْكَهْفِ إِنَّهُ خَارِجٌ خَلَّةً بَيْنَ الشَّأْمِ وَالْعِرَاقِ فَعَاثَ يَمِينًا وَعَاثَ شِمَالاً يَا عِبَادَ اللَّهِ فَاثْبُتُوا ‏”‏ ‏.‏ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ وَمَا لَبْثُهُ فِي الأَرْضِ قَالَ ‏”‏ أَرْبَعُونَ يَوْمًا يَوْمٌ كَسَنَةٍ وَيَوْمٌ كَشَهْرٍ وَيَوْمٌ كَجُمُعَةٍ وَسَائِرُ أَيَّامِهِ كَأَيَّامِكُمْ ‏”‏ ‏.‏ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ فَذَلِكَ الْيَوْمُ الَّذِي كَسَنَةٍ أَتَكْفِينَا فِيهِ صَلاَةُ يَوْمٍ قَالَ ‏”‏ لاَ اقْدُرُوا لَهُ قَدْرَهُ ‏”‏ ‏.‏ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ وَمَا إِسْرَاعُهُ فِي الأَرْضِ قَالَ ‏”‏ كَالْغَيْثِ اسْتَدْبَرَتْهُ الرِّيحُ فَيَأْتِي عَلَى الْقَوْمِ فَيَدْعُوهُمْ فَيُؤْمِنُونَ بِهِ وَيَسْتَجِيبُونَ لَهُ فَيَأْمُرُ السَّمَاءَ فَتُمْطِرُ وَالأَرْضَ فَتُنْبِتُ فَتَرُوحُ عَلَيْهِمْ سَارِحَتُهُمْ أَطْوَلَ مَا كَانَتْ ذُرًا وَأَسْبَغَهُ ضُرُوعًا وَأَمَدَّهُ خَوَاصِرَ ثُمَّ يَأْتِي الْقَوْمَ فَيَدْعُوهُمْ فَيَرُدُّونَ عَلَيْهِ قَوْلَهُ فَيَنْصَرِفُ عَنْهُمْ فَيُصْبِحُونَ مُمْحِلِينَ لَيْسَ بِأَيْدِيهِمْ شَىْءٌ مِنْ أَمْوَالِهِمْ وَيَمُرُّ بِالْخَرِبَةِ فَيَقُولُ لَهَا أَخْرِجِي كُنُوزَكِ ‏.‏ فَتَتْبَعُهُ كُنُوزُهَا كَيَعَاسِيبِ النَّحْلِ ثُمَّ يَدْعُو رَجُلاً مُمْتَلِئًا شَبَابًا فَيَضْرِبُهُ بِالسَّيْفِ فَيَقْطَعُهُ جَزْلَتَيْنِ رَمْيَةَ الْغَرَضِ ثُمَّ يَدْعُوهُ فَيُقْبِلُ وَيَتَهَلَّلُ وَجْهُهُ يَضْحَكُ فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ بَعَثَ اللَّهُ الْمَسِيحَ ابْنَ مَرْيَمَ فَيَنْزِلُ عِنْدَ الْمَنَارَةِ الْبَيْضَاءِ شَرْقِيَّ دِمَشْقَ بَيْنَ مَهْرُودَتَيْنِ وَاضِعًا كَفَّيْهِ عَلَى أَجْنِحَةِ مَلَكَيْنِ إِذَا طَأْطَأَ رَأَسَهُ قَطَرَ وَإِذَا رَفَعَهُ تَحَدَّرَ مِنْهُ جُمَانٌ كَاللُّؤْلُؤِ فَلاَ يَحِلُّ لِكَافِرٍ يَجِدُ رِيحَ نَفَسِهِ إِلاَّ مَاتَ وَنَفَسُهُ يَنْتَهِي حَيْثُ يَنْتَهِي طَرْفُهُ فَيَطْلُبُهُ حَتَّى يُدْرِكَهُ بِبَابِ لُدٍّ فَيَقْتُلُهُ ثُمَّ يَأْتِي عِيسَى ابْنَ مَرْيَمَ قَوْمٌ قَدْ عَصَمَهُمُ اللَّهُ مِنْهُ فَيَمْسَحُ عَنْ وُجُوهِهِمْ وَيُحَدِّثُهُمْ بِدَرَجَاتِهِمْ فِي الْجَنَّةِ فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ أَوْحَى اللَّهُ إِلَى عِيسَى إِنِّي قَدْ أَخْرَجْتُ عِبَادًا لِي لاَ يَدَانِ لأَحَدٍ بِقِتَالِهِمْ فَحَرِّزْ عِبَادِي إِلَى الطُّورِ ‏.‏ وَيَبْعَثُ اللَّهُ يَأْجُوجَ وَمَأْجُوجَ وَهُمْ مِنْ كُلِّ حَدَبٍ يَنْسِلُونَ فَيَمُرُّ أَوَائِلُهُمْ عَلَى بُحَيْرَةِ طَبَرِيَّةَ فَيَشْرَبُونَ مَا فِيهَا وَيَمُرُّ آخِرُهُمْ فَيَقُولُونَ لَقَدْ كَانَ بِهَذِهِ مَرَّةً مَاءٌ ‏.‏ وَيُحْصَرُ نَبِيُّ اللَّهُ عِيسَى وَأَصْحَابُهُ حَتَّى يَكُونَ رَأْسُ الثَّوْرِ لأَحَدِهِمْ خَيْرًا مِنْ مِائَةِ دِينَارٍ لأَحَدِكُمُ الْيَوْمَ فَيَرْغَبُ نَبِيُّ اللَّهِ عِيسَى وَأَصْحَابُهُ فَيُرْسِلُ اللَّهُ عَلَيْهُمُ النَّغَفَ فِي رِقَابِهِمْ فَيُصْبِحُونَ فَرْسَى كَمَوْتِ نَفْسٍ وَاحِدَةٍ ثُمَّ يَهْبِطُ نَبِيُّ اللَّهِ عِيسَى وَأَصْحَابُهُ إِلَى الأَرْضِ فَلاَ يَجِدُونَ فِي الأَرْضِ مَوْضِعَ شِبْرٍ إِلاَّ مَلأَهُ زَهَمُهُمْ وَنَتْنُهُمْ فَيَرْغَبُ نَبِيُّ اللَّهِ عِيسَى وَأَصْحَابُهُ إِلَى اللَّهِ فَيُرْسِلُ اللَّهُ طَيْرًا كَأَعْنَاقِ الْبُخْتِ فَتَحْمِلُهُمْ فَتَطْرَحُهُمْ حَيْثُ شَاءَ اللَّهُ ثُمَّ يُرْسِلُ اللَّهُ مَطَرًا لاَ يَكُنُّ مِنْهُ بَيْتُ مَدَرٍ وَلاَ وَبَرٍ فَيَغْسِلُ الأَرْضَ حَتَّى يَتْرُكَهَا كَالزَّلَفَةِ ثُمَّ يُقَالُ لِلأَرْضِ أَنْبِتِي ثَمَرَتَكِ وَرُدِّي بَرَكَتَكِ ‏.‏ فَيَوْمَئِذٍ تَأْكُلُ الْعِصَابَةُ مِنَ الرُّمَّانَةِ وَيَسْتَظِلُّونَ بِقِحْفِهَا وَيُبَارَكُ فِي الرِّسْلِ حَتَّى أَنَّ اللِّقْحَةَ مِنَ الإِبِلِ لَتَكْفِي الْفِئَامَ مِنَ النَّاسِ وَاللِّقْحَةَ مِنَ الْبَقَرِ لَتَكْفِي الْقَبِيلَةَ مِنَ النَّاسِ وَاللِّقْحَةَ مِنَ الْغَنَمِ لَتَكْفِي الْفَخِذَ مِنَ النَّاسِ فَبَيْنَمَا هُمْ كَذَلِكَ إِذْ بَعَثَ اللَّهُ رِيحًا طَيِّبَةً فَتَأْخُذُهُمْ تَحْتَ آبَاطِهِمْ فَتَقْبِضُ رُوحَ كُلِّ مُؤْمِنٍ وَكُلِّ مُسْلِمٍ وَيَبْقَى شِرَارُ النَّاسِ يَتَهَارَجُونَ فِيهَا تَهَارُجَ الْحُمُرِ فَعَلَيْهِمْ تَقُومُ السَّاعَةُ ‏”‏ ‏


حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ، وَالْوَلِيدُ بْنُ مُسْلِمٍ – قَالَ ابْنُ حُجْرٍ دَخَلَ حَدِيثُ أَحَدِهِمَا فِي حَدِيثِ الآخَرِ – عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ بِهَذَا الإِسْنَادِ ‏.‏ نَحْوَ مَا ذَكَرْنَا وَزَادَ بَعْدَ قَوْلِهِ ‏”‏ لَقَدْ كَانَ بِهَذِهِ مَرَّةً مَاءٌ ثُمَّ يَسِيرُونَ حَتَّى يَنْتَهُوا إِلَى جَبَلِ الْخَمَرِ وَهُوَ جَبَلُ بَيْتِ الْمَقْدِسِ فَيَقُولُونَ لَقَدْ قَتَلْنَا مَنْ فِي الأَرْضِ هَلُمَّ فَلْنَقْتُلْ مَنْ فِي السَّمَاءِ ‏.‏ فَيَرْمُونَ بِنُشَّابِهِمْ إِلَى السَّمَاءِ فَيَرُدُّ اللَّهُ عَلَيْهِمْ نُشَّابَهُمْ مَخْضُوبَةً دَمًا ‏”‏ ‏.‏ وَفِي رِوَايَةِ ابْنِ حُجْرٍ ‏”‏ فَإِنِّي قَدْ أَنْزَلْتُ عِبَادًا لِي لاَ يَدَىْ لأَحَدٍ بِقِتَالِهِمْ ‏”‏ ‏

ஒரு நாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அவன் தொடர்பாக(ப் பேசியபோது) அவர்கள் (சில சமயம் குரலைத்) தாழ்த்தியும் (சில சமயம்) உயர்த்தினார்கள். இறுதியில் அவன், (பக்கத்திலுள்ள) பேரீச்ச மரத் தோப்புகளுக்கிடையே இருக்கிறானோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்குப் பேசினார்கள்.

பின்னர் நாங்கள் (மறுபடியும்) மாலைப் பொழுதில் நபியவர்களிடம் வந்தோம். அப்போது தஜ்ஜாலைக் குறித்த அச்சம் எங்கள் முகங்களில் இருப்பதை அவர்கள் அறிந்துகொண்டு, “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (இன்று) காலையில் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். (அப்போது) அவனைப் பற்றி(க் குரலை)த் தாழ்த்தியும் உயர்த்தியும் பேசினீர்கள். இறுதியில் அவன், (அருகிலுள்ள) பேரீச்ச மரத் தோப்புகளுக்கிடையே இருக்கிறானோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்குப் பேசினீர்கள் (அதுதான் எங்கள் அச்சத்திற்குக் காரணம்)” என்று கூறினோம்.

அப்போது நபியவர்கள், “நான் உங்கள் விஷயத்தில் பெரிதும் அஞ்சுவது தஜ்ஜாலைக் குறித்து அல்ல; நான் உங்களிடையே (உயிருடன்) இருக்கும்போது அவன் தோன்றினால் அவனிடமிருந்து உங்களைக் காக்க நான் வாதாடுவேன். நான் உங்களிடையே இல்லாத போது அவன் வெளிப்பட்டால், அப்போது ஒவ்வொரு (முஸ்லிமான) மனிதரும் தமக்காக வாதாடிக்கொள்ள வேண்டும்; அல்லாஹ் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் எனது சார்பில் பொறுப்பாளனாக இருப்பான்.

தஜ்ஜால், சுருள்முடி கொண்ட ஓர் இளைஞன் ஆவான்; அவனது கண் ஒரே குலையில் துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்றிருக்கும். உருவத்தில் அவன் அப்துல் உஸ்ஸா பின் கத்தன் என்பவனை ஒத்திருப்பான்.

உங்களில் யார் அவனை அடைகிறாரோ அவர் அவனுக்கெதிராக ’அல்கஹ்ஃப்’ அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை ஓதிக்கொள்ளட்டும். அவன் சிரியாவுக்கும் இராக்குக்கும் இடையே உள்ள ஒரு பகுதியிலிருந்து வெளிப்பட்டு வந்து, வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் அக்கிரமங்களைக் கட்டவிழ்த்துவிடுவான்; அல்லாஹ்வின் அடியார்களே! அப்போது நீங்கள் உறுதியோடு இருங்கள்” என்றார்கள்.

நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவன் பூமியில் எத்தனை நாள்கள் தங்கியிருப்பான்?” என்று கேட்டோம். அதற்கு, “நாற்பது நாள்கள்” என்று பதிலளித்த நபியவர்கள், “அன்றைய ஒரு நாள் ஓர் ஆண்டைப் போன்றும், மறுநாள் ஒரு மாதத்தைப் போன்றும், அதற்கு அடுத்த நாள் ஒரு வாரத்தைப் போன்றும், மற்ற நாள்கள் உங்களின் (சாதாரண) நாட்களைப் போன்றும் இருக்கும்” என்று குறிப்பிட்டார்கள்.

நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஓர் ஆண்டிற்குச் சமமாக இருக்கும் அந்த ஒரு நாளில், வழக்கமாகத் தொழும் (ஐவேளைத்) தொழுகைகளைத் தொழுதால் போதுமா?” என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள், “இல்லை (போதாது); அந்த (நீண்ட) நாளை, அதற்கேற்ப மதிப்பிட்டு(த் தொழுது)கொள்ளுங்கள்” என்று பதிலளித்தார்கள்.

நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! பூமியில் அவன் (சுற்றித் திரியும்) வேகம் எப்படி இருக்கும்?” என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள், “பின்னாலிருந்து காற்று விரட்டிச் செல்லும் மேகம் போன்று (அவன் படுவேகமாக பூமியைச் சுற்றிவருவான்)” என்றார்கள். மேலும், நபியவர்கள் கூறினார்கள்:

”அவன் ஒரு சமுதாயத்தாரிடம் வந்து (தன்னை இறைவன் என்று ஏற்றுக்கொள்ளுமாறு) அவர்களுக்கு அழைப்பு விடுப்பான். அவர்களும் அவன்மீது நம்பிக்கை கொண்டு அவனது அழைப்புக்குப் பதிலளிப்பார்கள். உடனே வானத்திற்கு (மழை பொழியுமாறு) அவன் கட்டளையிட, மழை பொழியும். பூமிக்கு(த் தாவரங்கள் முளைப்பதற்குக்) கட்டளையிட, அது முளையவைக்கும். (அவற்றை மேய்ந்து) அம்மக்களின் கால்நடைகள் ஏற்கெனவே இருந்ததைவிட நீண்ட திமில்களைக் கொண்டவையாகவும் மடி கனத்தவையாகவும் வயிறு நிரம்பியவையாகவும் மாலையில் (வீடு) திரும்பும்.

பின்னர், அவன் மற்றொரு சமுதாயத்தாரிடம் வந்து, (தன்னை இறைவன் என்று ஏற்றுக்கொள்ளுமாறு) அவர்களுக்கும் அழைப்பு விடுப்பான். ஆனால், அவனது அழைப்பை அவர்கள் நிராகரித்து விடுவார்கள். அவர்களிடமிருந்து அவன் திரும்பிச் சென்றுவிடுவான். அதனால், அவர்கள் பஞ்சத்தாலும் வறட்சியாலும் பாதிக்கப்பட்டவர்களாகக் காலைப் பொழுதை அடைவார்கள். அவர்களின் கைகளில் அவர்களின் செல்வம் ஏதும் (எஞ்சி) இராது.

அவன் பாழடைந்த இடமொன்றைக் கடந்து செல்வான். அதைப் பார்த்து, “உன்னிடம் இருக்கின்ற புதையல்களை வெளிப்படுத்து” என்று கூறுவான். அப்போது (வெளிப்படும்) அந்தப் புதையல்கள், இராணித் தேனீயை(ப் பின்பற்றிச் செல்லும் தேனீக்களை)ப் போன்று அவனைப் பின்தொடர்ந்து செல்லும்.

பின்னர், அவன் வாட்டசாட்டமான இளைஞர் ஒருவரை அழைத்து, அவரை வாளால் வெட்டி இரு துண்டுகளாக்கி, அம்பெய்யும் தூரத்திற்கு இடைவெளிவிட்டு (அவ்விரண்டையும்) போடுவான். பின்னர் அந்தச் சடலத்தை அழைப்பான். உடனே அந்த இளைஞர் முகம் ஒளிர சிரித்துக்கொண்டே எழுந்து வருவார்.

இதற்கிடையே, மர்யமின் மைந்தர் ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ் (பூமிக்கு) அனுப்பி வைப்பான். அவர் (சிரியாவின் தலைநகர்) டமாஸ்கஸ் நகரின் கிழக்குப் பகுதியிலுள்ள வெள்ளைக் கோபுரத்திற்கு அருகில் இரு வானவர்களின் இறக்கைகள்மீது தம் கைகளை வைத்தவாறு இறங்குவார்.

அப்போது அவர் குங்குமப்பூ நிறத்தில் இரு ஆடைகளை அணிந்திருப்பார். அவர் தமது தலையைத் தாழ்த்தினால் நீர்த்துளி சொட்டும்; தலையை உயர்த்தினாலோ வெண் முத்தைப் போன்று நீர்த்துளி வழியும். அவரது மூச்சுக் காற்றைச் சுவாசிக்கும் (அதாவது அவரை நெருங்கும்) எந்தவோர் இறைமறுப்பாளனும் சாகாமல் இருக்கமாட்டான். அவர் விடும் மூச்சானது அவரது பார்வை எட்டும் தூரம்வரை செல்லும்.

பின்னர் ஈஸா (அலை), தஜ்ஜாலைத் தேடிச் செல்வார்கள். இறுதியில், (பாலஸ்தீனத்திலுள்ள) ’லுத்து’ எனும் நகரத்தின் தலைவாயில் அருகே அவனைக் கண்டு, அவனைக் கொன்றொழிப்பார்கள். பின்னர் தஜ்ஜாலிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய ஒரு சமுதாயத்தார் மர்யமின் மைந்தர் ஈஸா (அலை) அவர்களிடம் வருவார்கள். அவர்களின் முகங்களை(ப் பரிவோடு) அவர் தடவிக் கொடுத்துச் சொர்க்கத்தில் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் படித்தரங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிப்பார்.

இதற்கிடையே, ஈஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ், “நான் என் அடியார்கள் சிலரை வெளி வரச் செய்துள்ளேன். அவர்களுடன் போரிட யாருக்கும் ஆற்றல் கிடையாது. எனவே, (முஸ்லிமான) என் அடியார்களை (சினாயிலுள்ள) ’தூர்’ மலைக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வையுங்கள்” என்று (வஹீ) அறிவிப்பான்.

பின்னர், அல்லாஹ் ’யஃஜூஜ்’-“மஃஜூஜ்’ கூட்டத்தாரை அனுப்புவான். அவர்கள் ஒவ்வோர் உயரமான பகுதியிலிருந்தும் வேகமாக(க் கீழே இறங்கி) வருவார்கள். அவர்களில் முதல் அணியினர்  (ஜோர்டானிலுள்ள) ’தபரிய்யா’ ஏரியைக் கடந்து செல்லும்போது, அதிலுள்ள மொத்த நீரையும் குடித்துவிடுவார்கள். அவர்களின் இறுதி அணியினர் அதைக் கடந்து செல்லும்போது. “முன்னொரு காலத்தில் இந்த ஏரியில் தண்ணீர் இருந்திருக்கும்” என்று பேசிக்கொள்வார்கள்.

பின்னர் இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் (’தூர்’ மலையில்) முற்றுகையிடப்படுவார்கள். அப்போது (ஏற்படும் பட்டினியால்) அவர்களில் ஒருவருக்குக் காளை மாட்டின் தலை கிடைப்பது, இன்று உங்களில் ஒருவருக்கு நூறு பொற்காசுகள் கிடைப்பதைவிடச் சிறந்ததாக இருக்கும்.

பின்னர் இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் (அல்லாஹ்விடம் உதவி கேட்டுப்) பணிந்து வேண்டுவார்கள். அப்போது யஃஜூஜ்-மஃஜூஜ் கூட்டத்தாரின் பிடரிகளில் புழுக்களை அல்லாஹ் அனுப்புவான். அதனால் அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பலியாவார்கள். பின்னர் இறைத் தூதர் ஈஸா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் (மலையிலிருந்து) தரைக்கு இறங்கி வருவார்கள்.

அப்போது பூமியின் எந்தவொரு சாண் அளவு இடமும், யஃஜூஜ்-மஃஜூஜ் கூட்டத்தாரின் (சடலங்களிலிருந்து வெளிவரும்) கொழுப்பாலும் துர்நாற்றத்தாலும் நிரம்பியிருப்பதைக் காண்பார்கள். உடனே இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் அல்லாஹ்விடம் (அவற்றை அகற்றக் கோரிப்) பணிந்து வேண்டுவார்கள். அப்போது அல்லாஹ் ஒட்டகங்களின் கழுத்துகளைப் போன்று (பெரியதாக உள்ள) பறவைகளை அனுப்புவான். அவை அந்தப் பிணங்களைத் தூக்கிச் சென்று அல்லாஹ் நாடிய இடத்தில் வீசியெறியும்.

பின்னர் அல்லாஹ் மழை பொழியச் செய்வான். அந்த மழை, எந்த மண் வீட்டிலும், எந்த மாடி வீட்டிலும் படாமல் இருக்காது. இறுதியில், பூமியைக் கழுவி, கண்ணாடி போன்று (சுத்தமாக) ஆக்கி விடும். பின்னர் பூமிக்கு, “நீ உன் கனி வர்க்கங்களை முளைக்கச் செய்வாயாக; உன்னிடமுள்ள வளங்களை மறுபடியும் தருவாயாக” என்று உத்தரவு பிறப்பிக்கப்படும்.

அன்றைய நாளில், ஒரு குழுவினர் சேர்ந்து ஒரேயொரு மாதுளம் பழத்தை உண்பர். அதன் தொலி அவர்கள் அனைவருக்கும் நிழல் அளிக்கும். அவர்களுக்குப் பால் வளமும் கிட்டும். எந்த அளவுக்கென்றால், ஓர் ஒட்டகம் தரும் பால், ஒரு பெரும் கூட்டத்துக்கே போதுமானதாயிருக்கும். ஒரு பசு தரும் பால், ஒரு குலத்தாருக்கே போதுமானதாயிருக்கும். ஓர் ஆடு தரும் பால், உறவினர்கள் அடங்கிய ஒரு கூட்டத்திற்கே போதுமானதாயிருக்கும்.

இந்நிலையில், அல்லாஹ் தூய காற்று ஒன்றை அனுப்புவான். அது அவர்களின் அக்குள்களுக்குக் கீழே நுழைந்து அவர்களைப் பிடித்துக்கொள்ளும். இறைநம்பிக்கை கொண்ட ஒவ்வொரு முஸ்லிமின் உயிரையும் அது கைப்பற்றும். அதையடுத்து மக்களில் தீயவர்கள் (மட்டுமே பூமியில்) எஞ்சியிருப்பார்கள். அவர்கள் கழுதைகளைப் போன்று (வெட்ட வெளியில் வைத்துப் பகிரங்கமாக) உடலுறவு கொள்வார்கள். அவர்கள்மீதுதான் உலக முடிவு நாள் ஏற்படும்” என்று விளக்கினார்கள்.

அறிவிப்பாளர் : நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி)


குறிப்புகள் :

அல் வலீத் பின் முஸ்லிம் (ரஹ்) வழி அறிவிப்பில், “முன்பொரு காலத்தில் இங்கு நீர் இருந்திருக்கும் …” என்பதை அடுத்து, ”… பின்னர் அவர்கள் பைத்துல் மக்திஸிலுள்ள மலையான ’ஜபலுல் கமர்’வரை பயணம் மேற்கொள்வார்கள். அப்போது அவர்கள், “பூமியிலுள்ளவர்கள் அனைவரையும் நாம் கொன்று விட்டோம். வாருங்கள்: வானத்திலுள்ளோரை நாம் கொல்வோம்” என்று கூறியபடி தங்களு டைய அம்புகளை வானை நோக்கி எய்வார்கள். அப்போது அல்லாஹ் அவர்களுடைய அம்புகளை இரத்தம் தோய்த்து திருப்பியனுப்புவான்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அலீ பின் ஹுஜ்ரு (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் என் அடியார்கள் சிலரை (மலைகளிலிருந்து) இறக்கிவிட்டுள்ளேன். அவர்களுடன் போரிட யாருக்கும் ஆற்றல் கிடையாது என்று (அல்லாஹ் ஈஸா (அலை) அவர்களிடம் அறிவிப்பான்” என) இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: