அத்தியாயம்: 27, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3109

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَرَّادٍ الأَشْعَرِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ الْهَمْدَانِيُّ – وَتَقَارَبَا فِي اللَّفْظِ – قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ :‏

أَرْسَلَنِي أَصْحَابِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَسْأَلُهُ لَهُمُ الْحُمْلاَنَ إِذْ هُمْ مَعَهُ فِي جَيْشِ الْعُسْرَةِ – وَهِيَ غَزْوَةُ تَبُوكَ – فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ إِنَّ أَصْحَابِي أَرْسَلُونِي إِلَيْكَ لِتَحْمِلَهُمْ ‏.‏ فَقَالَ ‏”‏ وَاللَّهِ لاَ أَحْمِلُكُمْ عَلَى شَىْءٍ ‏”‏‏ وَوَافَقْتُهُ وَهُوَ غَضْبَانُ وَلاَ أَشْعُرُ فَرَجَعْتُ حَزِينًا مِنْ مَنْعِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَمِنْ مَخَافَةِ أَنْ يَكُونَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ وَجَدَ فِي نَفْسِهِ عَلَىَّ فَرَجَعْتُ إِلَى أَصْحَابِي فَأَخْبَرْتُهُمُ الَّذِي قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمْ أَلْبَثْ إِلاَّ سُوَيْعَةً إِذْ سَمِعْتُ بِلاَلاً يُنَادِي أَىْ عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ ‏.‏ فَأَجَبْتُهُ فَقَالَ أَجِبْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَدْعُوكَ ‏.‏ فَلَمَّا أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ خُذْ هَذَيْنِ الْقَرِينَيْنِ وَهَذَيْنِ الْقَرِينَيْنِ وَهَذَيْنِ الْقَرِينَيْنِ – لِسِتَّةِ أَبْعِرَةٍ ابْتَاعَهُنَّ حِينَئِذٍ مِنْ سَعْدٍ – فَانْطَلِقْ بِهِنَّ إِلَى أَصْحَابِكَ فَقُلْ إِنَّ اللَّهَ – أَوْ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم – يَحْمِلُكُمْ عَلَى هَؤُلاَءِ فَارْكَبُوهُنَّ ‏”‏ ‏.‏ قَالَ أَبُو مُوسَى فَانْطَلَقْتُ إِلَى أَصْحَابِي بِهِنَّ فَقُلْتُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَحْمِلُكُمْ عَلَى هَؤُلاَءِ وَلَكِنْ وَاللَّهِ لاَ أَدَعُكُمْ حَتَّى يَنْطَلِقَ مَعِي بَعْضُكُمْ إِلَى مَنْ سَمِعَ مَقَالَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ سَأَلْتُهُ لَكُمْ وَمَنْعَهُ فِي أَوَّلِ مَرَّةٍ ثُمَّ إِعْطَاءَهُ إِيَّاىَ بَعْدَ ذَلِكَ لاَ تَظُنُّوا أَنِّي حَدَّثْتُكُمْ شَيْئًا لَمْ يَقُلْهُ ‏.‏ فَقَالُوا لِي وَاللَّهِ إِنَّكَ عِنْدَنَا لَمُصَدَّقٌ وَلَنَفْعَلَنَّ مَا أَحْبَبْتَ ‏.‏ فَانْطَلَقَ أَبُو مُوسَى بِنَفَرٍ مِنْهُمْ حَتَّى أَتَوُا الَّذِينَ سَمِعُوا قَوْلَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَمَنْعَهُ إِيَّاهُمْ ثُمَّ إِعْطَاءَهُمْ بَعْدُ فَحَدَّثُوهُمْ بِمَا حَدَّثَهُمْ بِهِ أَبُو مُوسَى سَوَاءً ‏

என் நண்பர்கள் என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அவர்களுக்காக(ப் பயண) வாகனம் கேட்கும்படி அனுப்பிவைத்தார்கள். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கடினமான ஒரு போருக்குச் செல்லவிருந்தனர். – தபூக் போர்தான் அது – அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! என் நண்பர்கள், அவர்களுக்காக வாகனம் கேட்கும்படி என்னைத் தங்களிடம் அனுப்பிவைத்துள்ளனர்” என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு எந்த வாகனத்தையும் என்னால் தர இயலாது” என்று சொன்னார்கள். நான் அங்குப் போன நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கோபத்திலிருந்தார்கள், (அது) எனக்குத் தெரியவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (வாகனம் தர) மறுத்ததாலும் என்மீது அவர்கள் வருத்தம் கொண்டிருப்பார்களோ என்ற அச்சத்தாலும் நான் கவலை கொண்டவனாகத் திரும்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை என் நண்பர்களிடம் வந்து தெரிவித்தேன். இது நடந்து சிறிது நேரம் கழிந்திருக்கும். அதற்குள், “அப்துல்லாஹ் பின் கைஸே!” என்று பிலால் (ரலி) (என்னை) அழைப்பதைச் செவியுற்றேன். உடனே நான் அவரது அழைப்புக்குப் பதிலளித்தேன். அப்போது பிலால் (ரலி), “உங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அழைக்கின்றார்கள். அவர்களது அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது அவர்கள், “இவ்விரு ஒட்டகங்களையும், இவ்விரு ஒட்டகங்களையும், இவ்விரு ஒட்டகங்களையும்” என்று (இணைத்துக் கட்டப்பட்டிருந்த) ஆறு ஒட்டகங்களைக் காட்டி, “பிடித்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். அவற்றை அப்போதுதான் ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தார்கள். “உங்கள் நண்பர்களிடம் இவற்றைக் கொண்டுசென்று, அல்லாஹ் / அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இந்த ஒட்டகங்களை உங்கள் பயணத்திற்காக அளித்துள்ளார்கள். எனவே, இவற்றில் ஏறிப் புறப்படச் சொன்னார்கள் எனத் தெரிவியுங்கள்” என்றார்கள்.

அவ்வாறே நான் என் தோழர்களிடம் அவற்றைக் கொண்டுசென்று, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இவற்றில் ஏறிப் பயணம் செல்லும்படிக் கூறினார்கள். எனினும், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் சிலர் என்னுடன் வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் (வாகனம்) கேட்டதையும், முதலில் அவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்ததையும், பின்னர் அவற்றை வழங்கியதையும் அறிந்த மக்களிடம் விசாரிக்கும்வரையில் நான் உங்களை விடமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொல்லாத ஒன்றை நான் உங்களிடம் சொல்லி விட்டதாக நீங்கள் நினைத்துவிடக் கூடாது” என்று சொன்னேன்.

அதற்கு என் தோழர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை நாங்கள் உண்மையாளர் என்றே உறுதியாக நம்புகிறோம். (இருப்பினும், நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பதால்) உங்கள் விருப்பப்படி நாங்கள் செய்கிறோம்” என்று கூறினர். நான் அவர்களில் சிலரை அழைத்துக் கொண்டு “நான் அவர்களுக்குத் தரமாட்டேன்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (முதலில்) மறுத்ததையும், பிறகு அவர்களே வழங்கியதையும் அறிந்த சிலரிடம் சென்றேன். அப்போது அந்தச் சிலர், நான் மக்களிடம் தெரிவித்ததைப் போன்றே தெரிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 27, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3108

حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَيَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ – وَاللَّفْظُ لِخَلَفٍ – قَالُوا حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ غَيْلاَنَ بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، الأَشْعَرِيِّ قَالَ :‏

أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي رَهْطٍ مِنَ الأَشْعَرِيِّينَ نَسْتَحْمِلُهُ فَقَالَ ‏”‏ وَاللَّهِ لاَ أَحْمِلُكُمْ وَمَا عِنْدِي مَا أَحْمِلُكُمْ عَلَيْهِ ‏”‏ ‏.‏ قَالَ فَلَبِثْنَا مَا شَاءَ اللَّهُ ثُمَّ أُتِيَ بِإِبِلٍ فَأَمَرَ لَنَا بِثَلاَثِ ذَوْدٍ غُرِّ الذُّرَى فَلَمَّا انْطَلَقْنَا قُلْنَا – أَوْ قَالَ بَعْضُنَا لِبَعْضٍ – لاَ يُبَارِكُ اللَّهُ لَنَا أَتَيْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَسْتَحْمِلُهُ فَحَلَفَ أَنْ لاَ يَحْمِلَنَا ثُمَّ حَمَلَنَا ‏.‏ فَأَتَوْهُ فَأَخْبَرُوهُ فَقَالَ ‏”‏ مَا أَنَا حَمَلْتُكُمْ وَلَكِنَّ اللَّهَ حَمَلَكُمْ وَإِنِّي وَاللَّهِ إِنْ شَاءَ اللَّهُ لاَ أَحْلِفُ عَلَى يَمِينٍ ثُمَّ أَرَى خَيْرًا مِنْهَا إِلاَّ كَفَّرْتُ عَنْ يَمِينِي وَأَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ ‏”‏

நான் (என்) அஷ்அரீ குலத்தாரில் ஒரு குழுவினருடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, எங்களையும் எங்கள் சுமைகளையும் ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்து தரும்படிக் கேட்டேன். அப்போது நபி (ஸல்), “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஏற்றியனுப்பத் தேவையான வாகனங்கள் என்னிடம் (தற்போது) இல்லை. எனவே, நான் உங்களை வாகனத்தில் ஏற்றியனுப்ப முடியாது” என்று சொன்னார்கள்.

நாங்கள் அல்லாஹ் நாடிய நேரம்வரை (அங்கேயே) இருந்தோம். பின்பு நபியவர்களிடம் ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் வெள்ளைத் திமில்கள் கொண்ட மூன்று ஜோடி ஒட்டகங்களை எங்களுக்குத் தருமாறு நபியவர்கள் உத்தரவிட்டார்கள்.

நாங்கள் (விடைபெற்றுச்) சென்றுகொண்டிருந்தபோது நாங்கள் எங்களுக்குள் அல்லது எங்களில் சிலர் வேறுசிலரிடம் “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் நமக்கு வளம் (பரக்கத்) வழங்கப் போவதில்லை. நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நம்மை ஏற்றியனுப்ப வாகன ஏற்பாடு செய்யும்படிக் கேட்டோம். அவர்கள் நம்மை ஏற்றியனுப்ப வாகனம் தரமாட்டேன் என்று (அல்லாஹ்வின் மீது) சத்தியம் செய்து கூறினார்கள். பிறகு நமக்கு ஒட்டகங்கள் வழங்கினார்கள்” என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்களிடம் சென்று (அவர்கள் செய்த சத்தியத்தைத்) தெரிவித்தோம்.

அப்போது அவர்கள், “உங்களை ஏற்றியனுப்ப நான் வாகனங்கள் தரவில்லை. மாறாக, அல்லாஹ்வே உங்களை ஏற்றியனுப்ப வாகனங்களை வழங்கினான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், இனிமேல் நான் ஏதேனும் ஒரு சத்தியம் செய்து, பிறகு அஃதல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதினால், சத்திய முறிவுக்காகப் பரிகாரம் செய்துவிட்டு அந்தச் சிறந்ததையே செய்வேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)