அத்தியாயம்: 16, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2587

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِعَمْرٍو ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

‏جَاءَتْ امْرَأَةُ ‏ ‏رِفَاعَةَ ‏ ‏إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ كُنْتُ عِنْدَ ‏ ‏رِفَاعَةَ ‏ ‏فَطَلَّقَنِي ‏ ‏فَبَتَّ طَلَاقِي ‏ ‏فَتَزَوَّجْتُ ‏ ‏عَبْدَ الرَّحْمَنِ بْنَ الزَّبِيرِ ‏ ‏وَإِنَّ مَا مَعَهُ مِثْلُ ‏ ‏هُدْبَةِ الثَّوْبِ ‏ ‏فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏أَتُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى ‏ ‏رِفَاعَةَ ‏ ‏لَا حَتَّى تَذُوقِي عُسَيْلَتَهُ وَيَذُوقَ عُسَيْلَتَكِ قَالَتْ ‏ ‏وَأَبُو بَكْرٍ ‏ ‏عِنْدَهُ ‏ ‏وَخَالِدٌ ‏ ‏بِالْبَابِ يَنْتَظِرُ أَنْ يُؤْذَنَ لَهُ فَنَادَى يَا ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏أَلَا تَسْمَعُ هَذِهِ مَا تَجْهَرُ بِهِ عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்களின் மனைவியாக இருந்த பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் ரிஃபாஆவிடம் (மனைவியாக) இருந்தேன். அவர் என்னை முழுமையாக மணவிலக்குச் செய்துவிட்டார். ஆகவே, நான் (அவருக்குப் பிறகு) அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸபீர் அவர்களை மணமுடித்துக்கொண்டேன். அவருடன் (இன உறுப்பு என்று) இருப்பது (எனது மேலங்கியின்) இந்தக் குஞ்சத்தைப் போன்றதுதான்” என்று கூறினார். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புன்னகைத்தார்கள். பின்னர், “நீ (உன் முதல் கணவர்) ரிஃபாஆவிடம் திரும்பிச்செல்ல விரும்புகின்றாயா? நீ (உன் இரண்டாவது கணவரான) அவரிடம் (இல்லற) இன்பத்தைச் சுவைக்காத வரையிலும், அவர் உன்னிடம் (இல்லற) இன்பத்தைச் சுவைக்காத வரையிலும் அது முடியாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அப்போது (என் தந்தை) அபூபக்ரு (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு அமர்ந்திருந்தார்கள். வீட்டு வாசலில் (காத்து) இருந்த காலித் பின் ஸயீத் பின் அல்ஆஸ் (ரலி), “அபூபக்ரே! இந்தப் பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வெட்கமின்றி) வெளிப்படையாக விவரித்துக்கொண்டிருப்பதை நீங்கள் செவியுறவில்லையா? (நீங்கள் இவரைத் தடுக்கக் கூடாதா?” என்று கேட்டார்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

முழுமையான மணவிலக்கு (முத்தலாக்) பற்றிய சுருக்கமான விளக்கம்:

 அறியாமைக் காலத்தில் அற்பக் காரணங்களுக்காகக்கூட ஆண்கள் தங்கள் மனைவியரை மணவிலக்குச் செய்துவிட்டு, வேறொருத்தியை மணப்பதும் இவள் சரியில்லை என்று முதலாமவளை மீண்டும் மணப்பதும் மறுபடி சின்னஞ் சிறு காரணம் சொல்லி முதல் மனைவியை இரண்டாவது முறையாக மணவிலக்குச் செய்துவிட்டு மூன்றாமவளைத் தேடுவதும் இயல்பான வாடிக்கையாக இருந்தது. இந்தக் கேலிக் கூத்தைத் தடுத்து முறைப்படுத்துவதற்காக ‘முத்தலாக் – முழுமையான மணவிலக்கு’ எனும் முறையைக் கடுமையான நிபந்தனைகளுடன் இஸ்லாம் வரையறுத்தது.

((பல சமரசங்களுக்குப் பின்னரும் இணைந்து வாழ முடியாத மனைவியை, மாதவிடாய் இல்லாத, உடலுறவு கொள்ளாத நிலையில் மூன்று தலாக்குகளுள் முதலாவது தலாக்கை மனைவிக்குக் கணவன் அளிக்க வேண்டும். முதலாவது மணவிலக்கின் முடிவு என்பது மனைவியின் மூன்று மாதவிடாய்க் காலமாகும். இதற்கு, ‘காத்திருப்புக் காலம் (இத்தா)’ என்று சொல்லப்படும். இத்தாக் காலத்திலும் கணவனின் பராமரிப்பில்தான் மனைவி இருக்க வேண்டும். முதலாவது இத்தாக் கால கட்டத்தில் இருவருக்குமிடையில் இணக்கம் ஏற்பட்டுவிட்டால் மனைவியின் இத்தாவை முறித்துவிட்டு, இருவரும் கணவன் – மனைவியாக வாழ்க்கையைத் தொடரலாம்))

முதலாவது இத்தாக் காலமான மூன்று மாதவிடாய்கள் கழிந்துவிட்டாலுங்கூட இருவரும் கூடி வாழ விரும்பினால் இரண்டாவது தலாக்கைக் கணவன் மொழியாமல் இருவரும் பழையபடி கணவன் – மனைவியாக வாழலாம்.

முதலாவது தலாக்குக்குப் பின்னரும் மனக்கசப்பு மாறாவிட்டால், மனைவிக்கு இரண்டாவது தலாக் அளிப்பதற்குக் கணவனுக்கு உரிமையுண்டு. இரண்டாவது தலாக்குக்கு, மேற்காணும் இரு அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ள முதல் தலாக்கின் நடைமுறைகள் அனைத்தும் பொருந்தும். இரண்டாவது தலாக்கின் காத்திருப்புக் காலத்தில் இருவருக்குமிடையில் ஏற்பட்ட பிணக்கு நீங்கி, இணக்கம் ஏற்பட்டால் இரண்டாவது இத்தாவை முறித்துவிட்டுக் கணவன், மனைவியை மீட்டுக் கொள்ளலாம். (அல் குர்ஆன் 2:228).

இவ்வளவுக்குப் பின்னரும் மனைவியைக் கணவனுக்குப் பிடிக்காவிட்டால் ஆழ்ந்து சிந்தித்து முழுமையான மணவிலக்கான மூன்றாவது தலாக்கை மொழியவேண்டும். ஏனெனில், முழுமையான மணவிலக்கான மூன்றாவது தலாக் கூறப்பட்டுவிட்டால் இருவருக்குமிடையில் பிரிவு ஏற்பட்டு, கணவன் – மனைவி உறவு நீங்கிவிடும்.

அதற்குப் பின்னரும் பழைய கணவர் அதே பெண்ணை மனைவியாக அடைய விரும்பினால், அப்பெண் இன்னொருவருக்கு மனைவியாகி, அவரோடு இல்லற உறவு கொண்டு, குடும்பம் நடத்தி, பின்னர் அவரும் அப்பெண்ணுக்கு முழுமையான மணவிலக்கு அளித்து, காத்திருப்புக் காலங்களை அப்பெண் கழித்த பின்னர் பழைய கணவரை அடைய விரும்பினால் பழைய தம்பதிகள் இருவரும் புதிதாகத் திருமணம் செய்து இணைந்து வாழலாம் (அல் குர்ஆன் 2:230).

ஆண்களுக்கு மனைவியரைத் தலாக் செய்யும் உரிமை உள்ளதைப் போன்று, தம் கணவரிடமிருந்து ‘குல்உ’ மூலம் விடுதலை பெறும் உரிமை பெண்களுக்கும் உண்டு (அல் குர்ஆன் 2:229). முழுமையாக மணவிலக்கு அளிக்கப்பட்ட முன்னாள் மனைவியை அதே கணவன் மீண்டும் அடைய வேண்டுமாயின், இன்னொருவரின் மனைவியாக அவள் வாழ்ந்துவிட்டு, இரண்டாவது கணவனிடமிருந்து முறைப்படி முழுமையான மணவிலக்குப் பெற்று, பழைய கணவருடன் இணைந்து வாழ ஒப்புதல் தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறே, முன்னாள் கணவனை விரும்பி அடைவதற்குத் தலாக் (அ) குல்உ மூலம் விடுதலை பெற்ற பெண் ஏற்க வேண்டிய சமரசங்களும் கட்டாயமாகும். அதாவது, இன்னொருவரின் மனைவியாக அவள் வாழ்ந்துவிட்டு, இரண்டாவது கணவனிடமிருந்து முறைப்படி முழுமையான மணவிலக்குப் பெற்றால்தான் பழைய கணவருடன் இணைந்து வாழ முடியும். அதைத்தான் மேற்காணும் 2587ஆவது ஹதீஸ் குறிப்பிடுகின்றது.

Share this Hadith: