حَدَّثَنِي يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى الصَّدَفِيُّ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ بَكْرَ بْنَ سَوَادَةَ حَدَّثَهُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ :
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَلَا قَوْلَ اللَّهِ عَزَّ وَجَلَّ فِي إِبْرَاهِيمَ [“رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِنْ النَّاسِ فَمَنْ تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي] ” الْآيَةَ وَقَالَ عِيسَى عَلَيْهِ السَّلَام [ “إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ “] فَرَفَعَ يَدَيْهِ وَقَالَ اللَّهُمَّ أُمَّتِي أُمَّتِي وَبَكَى فَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ يَا جِبْرِيلُ اذْهَبْ إِلَى مُحَمَّدٍ وَرَبُّكَ أَعْلَمُ فَسَلْهُ مَا يُبْكِيكَ فَأَتَاهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام فَسَأَلَهُ فَأَخْبَرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَا قَالَ وَهُوَ أَعْلَمُ فَقَالَ اللَّهُ يَا جِبْرِيلُ اذْهَبْ إِلَى مُحَمَّدٍ فَقُلْ إِنَّا سَنُرْضِيكَ فِي أُمَّتِكَ وَلَا نَسُوءُكَ
இப்ராஹீம் (அலை) கூறுவதாக அல்லாஹ் (குர்ஆனில்) எடுத்துச் சொல்லுகின்ற, “இறைவா! நிச்சயமாக (சிலைகளான) இவை மக்களில் அநேகரை வழிகெடுத்துவிட்டன. எனவே, என்னைப் பின்பற்றுபவர் என்னைச் சேர்ந்தவராவார் …” என்ற (14:36ஆவது) வசனத்தையும் ஈஸா (அலை) கூறியதாகக் குறிப்பிட்டுள்ள, “(இப்போது) நீ இவர்களுக்கு வேதனை அளித்தால் இவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடியார்களே! நீ இவர்களை மன்னித்தாலும் (அப்போதும் உன் அடியார்களே!) நீயே கண்ணியமிக்கவன்; ஞானம் நிறைந்தவன்” என்ற (5:118 ஆவது) வசனத்தையும் ஓதினார்கள். அப்போது நபியவர்கள் தம்மிரு கைகளையும் உயர்த்தியவாறு “இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம் (இவர்களைக் காப்பாற்றுவாயாக!)” என்று அழுது பிரார்த்தித்தார்கள். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (வானவர் ஜிப்ரீலிடம்), “ஜிப்ரீலே! நீங்கள் முஹம்மதிடம் சென்று -உங்கள் இறைவனுக்குத் தெரியும்; என்றாலும்- ‘நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?’ என்று கேளுங்கள்” என்றான்.
அவ்வாறே ஜிப்ரீல் (அலை) சென்று, (நபியவர்களிடம்) கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) -அல்லாஹ்வுக்குத் தெரியும்; என்றாலும்- தாம் கூறிய (பிரார்த்தனைக்) கூற்றைத் தெரிவித்தார்கள். அதற்கு அல்லாஹ், “ஜிப்ரீலே! முஹம்மதிடம் சென்று, நாம் உம் சமுதாயத்தவர் தொடர்பாக உம்மை மனநிறைவடையச் செய்வோம்; உம்மை நாம் துயரில் ஆழ்த்த மாட்டோம் என்று கூறுக” என்றான்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரிப்னில் ஆஸ் (ரலி)