அத்தியாயம்: 10, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1508

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏وَتَقَارَبَا فِي اللَّفْظِ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ ‏

‏انْكَسَفَتْ الشَّمْسُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَ مَاتَ ‏ ‏إِبْرَاهِيمُ ابْنُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ النَّاسُ إِنَّمَا انْكَسَفَتْ لِمَوْتِ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏فَقَامَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَصَلَّى بِالنَّاسِ سِتَّ رَكَعَاتٍ بِأَرْبَعِ سَجَدَاتٍ بَدَأَ فَكَبَّرَ ثُمَّ قَرَأَ فَأَطَالَ الْقِرَاءَةَ ثُمَّ رَكَعَ نَحْوًا مِمَّا قَامَ ثُمَّ رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ فَقَرَأَ قِرَاءَةً دُونَ الْقِرَاءَةِ الْأُولَى ثُمَّ رَكَعَ نَحْوًا مِمَّا قَامَ ثُمَّ رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ فَقَرَأَ قِرَاءَةً دُونَ الْقِرَاءَةِ الثَّانِيَةِ ثُمَّ رَكَعَ نَحْوًا مِمَّا قَامَ ثُمَّ رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ ثُمَّ انْحَدَرَ بِالسُّجُودِ فَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ قَامَ فَرَكَعَ أَيْضًا ثَلَاثَ رَكَعَاتٍ لَيْسَ فِيهَا رَكْعَةٌ إِلَّا الَّتِي قَبْلَهَا أَطْوَلُ مِنْ الَّتِي بَعْدَهَا وَرُكُوعُهُ نَحْوًا مِنْ سُجُودِهِ ثُمَّ تَأَخَّرَ وَتَأَخَّرَتْ الصُّفُوفُ خَلْفَهُ حَتَّى انْتَهَيْنَا وَقَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَتَّى انْتَهَى إِلَى النِّسَاءِ ثُمَّ تَقَدَّمَ وَتَقَدَّمَ النَّاسُ مَعَهُ حَتَّى قَامَ فِي مَقَامِهِ فَانْصَرَفَ حِينَ انْصَرَفَ وَقَدْ ‏ ‏آضَتْ ‏ ‏الشَّمْسُ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ ‏ ‏إِنَّمَا الشَّمْسُ وَالْقَمَرُ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ وَإِنَّهُمَا لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ مِنْ النَّاسِ وَقَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏لِمَوْتِ بَشَرٍ فَإِذَا رَأَيْتُمْ شَيْئًا مِنْ ذَلِكَ فَصَلُّوا حَتَّى تَنْجَلِيَ مَا مِنْ شَيْءٍ تُوعَدُونَهُ إِلَّا قَدْ رَأَيْتُهُ فِي صَلَاتِي هَذِهِ لَقَدْ جِيءَ بِالنَّارِ وَذَلِكُمْ حِينَ رَأَيْتُمُونِي تَأَخَّرْتُ مَخَافَةَ أَنْ يُصِيبَنِي مِنْ ‏ ‏لَفْحِهَا ‏ ‏وَحَتَّى رَأَيْتُ فِيهَا ‏ ‏صَاحِبَ ‏ ‏الْمِحْجَنِ ‏ ‏يَجُرُّ ‏ ‏قُصْبَهُ ‏ ‏فِي النَّارِ كَانَ يَسْرِقُ الْحَاجَّ ‏ ‏بِمِحْجَنِهِ ‏ ‏فَإِنْ ‏ ‏فُطِنَ لَهُ ‏ ‏قَالَ إِنَّمَا تَعَلَّقَ بِمِحْجَنِي وَإِنْ غُفِلَ عَنْهُ ذَهَبَ بِهِ وَحَتَّى رَأَيْتُ فِيهَا صَاحِبَةَ الْهِرَّةِ الَّتِي رَبَطَتْهَا فَلَمْ تُطْعِمْهَا وَلَمْ تَدَعْهَا تَأْكُلُ مِنْ ‏ ‏خَشَاشِ ‏ ‏الْأَرْضِ حَتَّى مَاتَتْ جُوعًا ثُمَّ جِيءَ بِالْجَنَّةِ وَذَلِكُمْ حِينَ رَأَيْتُمُونِي تَقَدَّمْتُ حَتَّى قُمْتُ فِي مَقَامِي وَلَقَدْ مَدَدْتُ يَدِي وَأَنَا أُرِيدُ أَنْ أَتَنَاوَلَ مِنْ ثَمَرِهَا لِتَنْظُرُوا إِلَيْهِ ثُمَّ بَدَا لِي أَنْ لَا أَفْعَلَ فَمَا مِنْ شَيْءٍ تُوعَدُونَهُ إِلَّا قَدْ رَأَيْتُهُ فِي صَلَاتِي هَذِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில், அவர்களுடைய புதல்வர் இப்ராஹீம் (ரலி) இறந்த நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது மக்கள் “இப்ராஹீம் இறந்ததனால் தான் கிரகணம் ஏற்பட்டது” என்று பேசிக்கொண்டனர். (இந்தச் செய்தி எட்டியதும்) நபி (ஸல்) எழுந்து மக்களுக்கு (இரண்டு ரக்அத்களில்) ஆறு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்(து தொழுவித்)தார்கள். அவர்கள் முதலில் ‘தக்பீர்’ (தஹ்ரீம்) கூறினார்கள். பின்னர் நீண்ட நேரம் (குர்ஆன் வசனங்களை) ஓதினார்கள். பிறகு ஏறக்குறைய நிலையில் நின்றிருந்த அளவிற்கு ருகூஉச் செய்தார்கள். பிறகு ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தி முன்பு ஓதியதைவிடக் குறைவாக (குர்ஆனை) ஓதினார்கள். பிறகு ஏறக்குறைய முன்பு நிலையில் நின்றிருந்த அளவிற்கு ருகூஉச் செய்தார்கள். பிறகு ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தி இரண்டாவது முறை (குர்ஆனை) ஓதினார்கள். அது முதலாவது முறை ஓதியதைவிடக் குறைவாக இருந்தது. பிறகு ஏறக்குறைய முன்பு நிலையில் நின்றிருந்த அளவிற்கு ருகூஉச் செய்தார்கள். பிறகு ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தினார்கள். பிறகு (பூமியில்) தாழ்ந்து இரண்டு ஸஜ்தாக்கள் செய்தார்கள்.

பிறகு (இரண்டாவது ரக்அத்திற்காக) எழுந்து (முந்தைய ரக்அத்தில் செய்ததைப் போன்றே) மீண்டும் மூன்று ருகூஉகள் செய்தார்கள். அவர்கள் ஒரு ருகூஉச் செய்தால் அதற்கு முந்தைய ருகூஉவைவிட அது குறைவாகவே இருந்தது. அவர்களது ருகூஉ ஏறக்குறைய அவர்களது ஸஜ்தாவின் அளவிற்கே அமைந்திருந்தது. பிறகு அவர்கள் (தாம் நின்று தொழுவித்த இடத்திலிருந்து) பின்வாங்கினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த வரிசைகளும் அவர்களுடன் பின்வாங்கின. இறுதியில் நாங்கள் நின்ற இடத்திற்கே நபியவர்கள் வந்துவிட்டார்கள்.

(“பெண்கள் நின்றிருந்த இடத்திற்கு வந்துசேர்ந்தார்கள்” என்று அறிவிப்பாளர் அபூபக்ரு கூறுகின்றார்).

பிறகு நபி (ஸல்) முன்னோக்கி நகர, அவர்களுடன் சேர்ந்து மக்களும் முன்னோக்கி நகர்ந்து, முன்பு நின்றிருந்த இடத்திற்கு வந்து நின்றனர். (கிரகணம் விலகி) சூரியன் தனது பழைய நிலைக்குத் திரும்பிய வேளையில் நபி (ஸல்) தொழுகையை முடித்தார்கள். பிறகு உரையாற்றினார்கள். அதில்,

“மக்களே!, சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளுள் இரு சான்றுகளாகும். மக்களில் எவரது இறப்புக்காகவும் அவற்றுக்குக் கிரகணம் ஏற்படுவதில்லை. இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் சூரிய வெளிச்சம் வரும்வரை தொழுங்கள். உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள (சொர்க்கம் மற்றும் நரகம் உள்ளிட்ட) அனைத்தையும் நான் இத்தொழுகையில் இருந்தபோது கண்டேன். நரகம் என் (கண்) முன்னே கொண்டுவரப்பட்டது. அதன் தீச்சுவாலை என்னைத் தாக்கிவிடுமோ என நான் அஞ்சினேன். அதன் காரணமாகவே நான் பின்வாங்கியதை நீங்கள் கண்டீர்கள். அ(ந்த நரகத்)தில் முனை வளைந்த கைத்தடி வைத்திருந்த ஒருவன் தனது குடலை இழுத்தபடி நரகத்தில் சென்றுகொண்டிருந்ததைக் கண்டேன். அவன் கைத்தடியின் முனையால் ஹஜ் பயணிகளிடம் திருடிவந்தான். திருட்டு அம்பலமாகிவிட்டால் ‘எனது கைத்தடியில் (எப்படியோ இந்தப் பொருள்) மாட்டிக்கொண்டது’ என்று கூறுவான். யாருக்கும் தெரியாவிட்டால் அதைக் கொண்டு சென்றுவிடுவான்.
மேலும், பூனை வளர்த்த பெண் ஒருத்தியையும் நான் நரகத்தில் கண்டேன். அவள் அதற்குத் தீனி போடாமல் கட்டிப்போட்டு வைத்திருந்தாள். அவள் அதை பூமியிலுள்ள புழுப்பூச்சிகளைத் தின்ன(அவிழ்த்து)விடவுமில்லை. அது பசியாலேயே செத்துப்போய்விட்டது. பிறகு என் (கண்) முன்னே சொர்க்கம் கொண்டுவரப்பட்டது. நான் இந்த இடத்திற்கு மீண்டும் முன்னேறி வந்ததை நீங்கள் பார்த்தீர்களே, அதற்குக் காரணம் அதுதான். நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே நான் சொர்க்கத்தின் கனிகளைப் பறிக்க எனது கையை நீட்டினேன். பிறகு அவ்வாறு செய்யலாகாது என்று எனக்குத் தோன்றியது (ஆகவே, அதிலிருந்து பின்வாங்கிவிட்டேன்). உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள அனைத்தையும் இந்தத் தொழுகையில் இருந்தபோது நான் கண்டுகொண்டேன்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).

Share this Hadith:

Leave a Comment