و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ خَالِدٍ عَنْ أَبِي قِلَابَةَ قَالَ أَخْبَرَنِي أَبُو الْمَلِيحِ قَالَ دَخَلْتُ مَعَ أَبِيكَ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو فَحَدَّثَنَا
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذُكِرَ لَهُ صَوْمِي فَدَخَلَ عَلَيَّ فَأَلْقَيْتُ لَهُ وِسَادَةً مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ فَجَلَسَ عَلَى الْأَرْضِ وَصَارَتْ الْوِسَادَةُ بَيْنِي وَبَيْنَهُ فَقَالَ لِي أَمَا يَكْفِيكَ مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثَةُ أَيَّامٍ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ قَالَ خَمْسًا قُلْتُ يَا رَسُولَ اللَّهِ قَالَ سَبْعًا قُلْتُ يَا رَسُولَ اللَّهِ قَالَ تِسْعًا قُلْتُ يَا رَسُولَ اللَّهِ قَالَ أَحَدَ عَشَرَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا صَوْمَ فَوْقَ صَوْمِ دَاوُدَ شَطْرُ الدَّهْرِ صِيَامُ يَوْمٍ وَإِفْطَارُ يَوْمٍ
அபுல்மலீஹ் ஆமிர் பின் உஸாமா (ரஹ்) என்னிடம், “நான் உம்முடைய தந்தையுடன் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்களிடம் சென்றபோது அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), எங்களிடம் கூறியதாவது”:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எனது நோன்பு குறித்துச் சொல்லப்பட்டது. எனவே, அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்காக நான் ஈச்ச நாரால் நிரப்பப்பட்டிருந்த தோல் தலையணை ஒன்றை எடுத்துவைத்தேன். அவர்களோ தரையில் அமர்ந்தார்கள். தலையணை எனக்கும் அவர்களுக்கும் இடையில் கிடந்தது. அப்போது அவர்கள் என்னிடம், “ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் (நோன்பு நோற்பது) உமக்குப் போதாதா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! (என்னால் அதைவிட அதிகமாக நோன்பு நோற்க இயலும்)” என்றேன். அவர்கள், “(மாதத்தில்) ஐந்து நாட்கள் (நோற்றுக்கொள்)” என்றார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! (என்னால் அதைவிட அதிகமாக இயலும்)” என்றேன். அவர்கள் “ஏழு நாட்கள் (நோற்றுக்கொள்)” என்றார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! (என்னால் அதைவிட அதிகமாக இயலும்)” என்றேன். அவர்கள், “ஒன்பது நாட்கள். (நோற்றுக்கொள்)” என்றார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! (என்னால் அதைவிட அதிகமாக இயலும்)” என்றேன். அவர்கள், “பதினோரு நாட்கள். (நோற்றுக்கொள்).” என்றார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! (என்னால் அதைவிட அதிகமாக இயலும்)” என்றேன். அதற்கு நபி (ஸல்), “தாவூத் (அலை) அவர்களின் நோன்புக்கு மேல் (சிறப்பான) எந்த நோன்பும் கிடையாது. வருடத்தின் பாதி நாட்கள் (நோன்பு நோற்றலே அது). ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்றலாகும்” என்றார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) வழியாக அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்)