و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى حَدَّثَنَا الْمُعْتَمِرُ حَدَّثَنَا عُمَارَةُ بْنُ غَزِيَّةَ الْأَنْصَارِيُّ قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِبْرَاهِيمَ يُحَدِّثُ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اعْتَكَفَ الْعَشْرَ الْأَوَّلَ مِنْ رَمَضَانَ ثُمَّ اعْتَكَفَ الْعَشْرَ الْأَوْسَطَ فِي قُبَّةٍ تُرْكِيَّةٍ عَلَى سُدَّتِهَا حَصِيرٌ قَالَ فَأَخَذَ الْحَصِيرَ بِيَدِهِ فَنَحَّاهَا فِي نَاحِيَةِ الْقُبَّةِ ثُمَّ أَطْلَعَ رَأْسَهُ فَكَلَّمَ النَّاسَ فَدَنَوْا مِنْهُ فَقَالَ إِنِّي اعْتَكَفْتُ الْعَشْرَ الْأَوَّلَ أَلْتَمِسُ هَذِهِ اللَّيْلَةَ ثُمَّ اعْتَكَفْتُ الْعَشْرَ الْأَوْسَطَ ثُمَّ أُتِيتُ فَقِيلَ لِي إِنَّهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَعْتَكِفَ فَلْيَعْتَكِفْ فَاعْتَكَفَ النَّاسُ مَعَهُ قَالَ وَإِنِّي أُرْبِئْتُهَا لَيْلَةَ وِتْرٍ وَإِنِّي أَسْجُدُ صَبِيحَتَهَا فِي طِينٍ وَمَاءٍ فَأَصْبَحَ مِنْ لَيْلَةِ إِحْدَى وَعِشْرِينَ وَقَدْ قَامَ إِلَى الصُّبْحِ فَمَطَرَتْ السَّمَاءُ فَوَكَفَ الْمَسْجِدُ فَأَبْصَرْتُ الطِّينَ وَالْمَاءَ فَخَرَجَ حِينَ فَرَغَ مِنْ صَلَاةِ الصُّبْحِ وَجَبِينُهُ وَرَوْثَةُ أَنْفِهِ فِيهِمَا الطِّينُ وَالْمَاءُ وَإِذَا هِيَ لَيْلَةُ إِحْدَى وَعِشْرِينَ مِنْ الْعَشْرِ الْأَوَاخِرِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ரமளான் மாதத்தின் முதல் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள். பின்னர் நடுப் பத்து நாட்களில் துருக்கித் தோல் கூடாரமொன்றில் இஃதிகாஃப் இருந்தார்கள். அதன் நுழைவிடத்தில் (மறைப்பாக) பாயொன்று (நிறுத்தி வைக்கப்பட்டு) இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது கரத்தால் அந்தப் பாயை எடுத்துக் கூடாரத்தின் ஓரத்திற்கு நகர்த்தினார்கள். பிறகு தமது தலையை (கூடாரத்திற்கு) வெளியே நீட்டி மக்களிடம் பேசினார்கள். உடனே மக்கள் அவர்களுக்கு அருகில் நெருங்கிவந்தனர். “இந்த (ரமளானில் லைலத்துல் கத்ரு) இரவைத் தேடியவாறு நான் முதல் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தேன். பின்னர் நடுப் பத்து நாட்களிலும் இஃதிகாஃப் இருந்தேன். பிறகு, ‘அந்த இரவு இறுதிப் பத்து நாட்களில் உள்ளது’ என (வானவர் மூலம்) என்னிடம் சொல்லப்பட்டது. ஆகவே, உங்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகின்றவர் (இறுதிப் பத்து நாட்களில்) இருக்கட்டும்” என்றார்கள்.
எனவே மக்களும் அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தனர். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “லைலத்துல் கத்ரு இரவு ரமளான் மாதத்தின் ஓர் ஒற்றைப்படையான இரவில் இருப்பதாக எனக்குக் காட்டப்பட்டது. நான் அன்று காலை ஈரமான சேற்றில் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்வதைப் போன்று காட்டப்பட்டது” என்றும் கூறினார்கள். இருபத்தொன்றாவது நாள் காலையில் அவர்கள் ஸுப்ஹுத் தொழுகைக்காக நின்றபோது மழை பெய்தது. பள்ளிவாசல் கூரை ஒழுகியது. அப்போது நான் மழை நீரையும் சேற்றையும் (பள்ளிவாசலுக்குள்) கண்டேன். ஸுப்ஹுத் தொழுகையை முடித்துப் புறப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நெற்றியிலும் மூக்கு நுனியிலும் சேறும் ஈரமும் படிந்திருந்ததை நான் கண்டேன். அந்த லைலத்துல் கத்ரு இரவு (ரமளானின்) இறுதிப் பத்தில் இருபத்தோராவது இரவாகும்.
அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)