அத்தியாயம்: 15, பாடம்: 82, ஹதீஸ் எண்: 2413

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي شُرَيْحٍ الْعَدَوِيِّ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏لِعَمْرِو بْنِ سَعِيدٍ: ‏

وَهُوَ يَبْعَثُ الْبُعُوثَ إِلَى ‏ ‏مَكَّةَ ‏ ‏ائْذَنْ لِي أَيُّهَا الْأَمِيرُ أُحَدِّثْكَ قَوْلًا قَامَ بِهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْغَدَ مِنْ يَوْمِ الْفَتْحِ سَمِعَتْهُ أُذُنَايَ وَوَعَاهُ قَلْبِي وَأَبْصَرَتْهُ عَيْنَايَ حِينَ تَكَلَّمَ بِهِ أَنَّهُ حَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ ‏ ‏إِنَّ ‏ ‏مَكَّةَ ‏ ‏حَرَّمَهَا اللَّهُ وَلَمْ يُحَرِّمْهَا النَّاسُ فَلَا يَحِلُّ لِامْرِئٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ يَسْفِكَ بِهَا دَمًا وَلَا ‏ ‏يَعْضِدَ ‏ ‏بِهَا شَجَرَةً فَإِنْ أَحَدٌ ‏ ‏تَرَخَّصَ ‏ ‏بِقِتَالِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِيهَا فَقُولُوا لَهُ إِنَّ اللَّهَ أَذِنَ لِرَسُولِهِ وَلَمْ يَأْذَنْ لَكُمْ وَإِنَّمَا أَذِنَ لِي فِيهَا سَاعَةً مِنْ نَهَارٍ وَقَدْ عَادَتْ حُرْمَتُهَا الْيَوْمَ كَحُرْمَتِهَا بِالْأَمْسِ وَلْيُبَلِّغْ الشَّاهِدُ الْغَائِبَ ‏
‏فَقِيلَ ‏ ‏لِأَبِي شُرَيْحٍ ‏ ‏مَا قَالَ لَكَ ‏ ‏عَمْرٌو ‏ ‏قَالَ ‏ ‏أَنَا أَعْلَمُ بِذَلِكَ مِنْكَ يَا ‏ ‏أَبَا شُرَيْحٍ ‏ ‏إِنَّ الْحَرَمَ لَا يُعِيذُ عَاصِيًا وَلَا ‏ ‏فَارًّا ‏ ‏بِدَمٍ وَلَا ‏ ‏فَارًّا ‏ ‏بِخَرْبَةٍ

அம்ரு பின் ஸயீத், (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக) மக்காவை நோக்கிப் படைப் பிரிவுகளை அனுப்பியபோது அவரிடம் அபூ ஷுரைஹ் அல்அதவீ (ரலி) கூறினார்கள்:

தலைவரே! எனக்கு அனுமதி தாருங்கள்! மக்கா வெற்றிக்கு மறு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிய செய்தியை உங்களுக்கு நான் அறிவிக்கின்றேன். என் காதுகள் அதைக் கேட்டிருக்கின்றன. எனது உள்ளம் அதை நினைவில் வைத்துள்ளது. அதை அவர்கள் கூறியபோது என் கண்கள் அவர்களைப் பார்த்திருக்கின்றன.

அவ்வுரையின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, “அல்லாஹ்தான் மக்கா நகருக்குப் புனிதத்தை வழங்கினான். அதற்குப் புனிதத்தை வழங்கியவர்கள் மனிதர்களல்லர். எனவே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் இங்கு (சண்டையிட்டு) இரத்தத்தைச் சிந்துவதற்கோ, இங்குள்ள மரம் செடிகொடிகளை வெட்டுவதற்கோ அனுமதி இல்லை. அல்லாஹ்வின் தூதர் (மக்கா வெற்றி நாளில் ஒரு பகற்பொழுது மட்டும்) இங்குப் போரிட்டதால் (அதைக் காரணமாகக் காட்டி) இதைப் பொது அனுமதி என்று யாரேனும் கருதினால், ‘அல்லாஹ் தன் தூதருக்கு மட்டும்தான் அனுமதியளித்தான், உங்களுக்கு அவன் அனுமதி வழங்கவில்லை’ என்று சொல்லிவிடுங்கள். எனக்குக்கூட (நேற்றைய) பகலில் சிறிது நேரம் மட்டுமே அல்லாஹ் அனுமதியளித்தான். இன்று அதன் முந்தைய புனிதத் தன்மைக்கு அது மீண்டு வந்துவிட்டது. (நான் சொன்ன விஷயங்கள் யாவற்றையும் இங்கு) வந்திருப்பவர்கள் வராதவர்களுக்குச் சொல்லிவிடுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அப்போது “அதற்கு அம்ரு பின் ஸயீத் என்ன பதிலளித்தார்?” என்று அபூஷுரைஹ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு “அபூஷுரைஹே! உம்மைவிட இதைப் பற்றி நான் நன்கறிவேன். நிச்சயமாக (புனித நகரமான) மக்கா, குற்றவாளிக்கும் மரண தண்டனைக்குப் பயந்து (மக்காவிற்குள்) ஓடிவந்த(கொலைக் குற்றம் புரிந்த)வனுக்கும், திருட்டுக் குற்றம் புரிந்துவிட்டு ஓடிவந்தவனுக்கும் பாதுகாப்பளிக்காது என்று அம்ரு கூறினார்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஷுரைஹ் அல்அதவீ (ரலி) வழியாக ஸயீத் பின் அபீஸயீத் (ரஹ்)


குறிப்பு :

அம்ரு பின் ஸயீத் என்பவர், யஸீதின் ஆட்சியின்கீழ் மதீனாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.

Share this Hadith: