حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ حَدَّثَنَا ثَابِتٌ عَنْ أَنَسٍ قَالَ:
كُنْتُ رِدْفَ أَبِي طَلْحَةَ يَوْمَ خَيْبَرَ وَقَدَمِي تَمَسُّ قَدَمَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَأَتَيْنَاهُمْ حِينَ بَزَغَتْ الشَّمْسُ وَقَدْ أَخْرَجُوا مَوَاشِيَهُمْ وَخَرَجُوا بِفُؤُوسِهِمْ وَمَكَاتِلِهِمْ وَمُرُورِهِمْ فَقَالُوا مُحَمَّدٌ وَالْخَمِيسُ قَالَ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرِبَتْ خَيْبَرُ إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ ” فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ “
قَالَ وَهَزَمَهُمْ اللَّهُ عَزَّ وَجَلَّ وَوَقَعَتْ فِي سَهْمِ دِحْيَةَ جَارِيَةٌ جَمِيلَةٌ فَاشْتَرَاهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعَةِ أَرْؤُسٍ ثُمَّ دَفَعَهَا إِلَى أُمِّ سُلَيْمٍ تُصَنِّعُهَا لَهُ وَتُهَيِّئُهَا قَالَ وَأَحْسِبُهُ قَالَ وَتَعْتَدُّ فِي بَيْتِهَا وَهِيَ صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ قَالَ وَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلِيمَتَهَا التَّمْرَ وَالْأَقِطَ وَالسَّمْنَ فُحِصَتْ الْأَرْضُ أَفَاحِيصَ وَجِيءَ بِالْأَنْطَاعِ فَوُضِعَتْ فِيهَا وَجِيءَ بِالْأَقِطِ وَالسَّمْنِ فَشَبِعَ النَّاسُ قَالَ وَقَالَ النَّاسُ لَا نَدْرِي أَتَزَوَّجَهَا أَمْ اتَّخَذَهَا أُمَّ وَلَدٍ قَالُوا إِنْ حَجَبَهَا فَهِيَ امْرَأَتُهُ وَإِنْ لَمْ يَحْجُبْهَا فَهِيَ أُمُّ وَلَدٍ فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَبَ حَجَبَهَا فَقَعَدَتْ عَلَى عَجُزِ الْبَعِيرِ فَعَرَفُوا أَنَّهُ قَدْ تَزَوَّجَهَا فَلَمَّا دَنَوْا مِنْ الْمَدِينَةِ دَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَدَفَعْنَا قَالَ فَعَثَرَتْ النَّاقَةُ الْعَضْبَاءُ وَنَدَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَدَرَتْ فَقَامَ فَسَتَرَهَا وَقَدْ أَشْرَفَتْ النِّسَاءُ فَقُلْنَ أَبْعَدَ اللَّهُ الْيَهُودِيَّةَ
قَالَ قُلْتُ يَا أَبَا حَمْزَةَ أَوَقَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِي وَاللَّهِ لَقَدْ وَقَعَ
நான் கைபர் போர் நாளில் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்திருந்தேன். எனது பாதம், (பக்கத்து ஒட்டகத்தில் பயணம் செய்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பாதத்தைத் தொட்டது. சூரியன் உதிக்கத் துவங்கிய நேரத்தில் நாங்கள் கைபர்வாசிகளிடம் சென்றடைந்தோம். அப்போது அவர்கள் தம் கால்நடைகளை ஓட்டிக்கொண்டு கோடாரிகள், பேரீச்சங் கூடைகள் மற்றும் மண்வெட்டிகளுடன் (தோட்டங்களை நோக்கிப்) புறப்பட்டுவந்தனர். (எங்களைக் கண்டதும்) “முஹம்மதும் (அவருடைய) ஐந்து அணிகள் கொண்ட படையினரும் (வந்து விட்டனர்)” என்று பதறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “கைபர் பாழா(வது உறுதியா)கிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தாரின் களத்தில் இறங்கிவிட்டோமாயின் எச்சரிக்கப்பட்ட அம்மக்களுக்கு அது கெட்ட காலையாகவே அமையும்” என்று கூறினார்கள்.
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கைபர்வாசிகளைத் தோற்கடித்தான். (போர்ச் செல்வங்களில்) திஹ்யா அல்கல்பீ (ரலி) அவர்களது பங்கில் அழகிய இளம் பெண் ஒருவர் போய்ச்சேர்ந்துவிட்டிருந்தார். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஏழு அடிமைகளைக் கொடுத்து அப் பெண்ணை (திஹ்யா (ரலி) அவர்களிடமிருந்து) வாங்கிக்கொண்டார்கள். பிறகு அப் பெண்ணை (என் தாயார்) உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்து, தமக்காக அலங்காரமும் ஆயத்தமும் செய்யவைத்தார்கள்.
ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களே அப்பெண் ஆவார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் ஆகியவற்றை(க் கலந்து தயாரித்த ‘ஹைஸ்’ எனும் உணவை மணவிருந்தாக ஆக்கினார்கள். (முன்னதாக) நிலத்தில் நன்கு மண்ணைப் பறித்து (குழியாக்கி), தோல் விரிப்பொன்று கொண்டுவரப்பட்டு, அதனுள் அவ்விரிப்பு (விரித்து) வைக்கப்பட்டது. பாலாடைக் கட்டியும் நெய்யும் கொண்டுவரப்(பட்டு, அதில் கொட்டப்)பட்டது. மக்கள் அதிலிருந்து எடுத்து வயிராற உண்டனர். மக்கள், “அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மணந்து மனைவியாக்கிக்கொண்டார்களா, அல்லது குழந்தை பெற்றுத்தரும் அடிமைப் பெண்ணாக (உம்முல் வலத்) ஆக்கிக்கொண்டார்களா என்று எங்களுக்கு(உறுதியாக)த் தெரியவில்லை. அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) திரையிட்டு மறைத்தால், அவர், அவர்களின் மனைவி ஆவார். திரையிட்டு மறைக்காவிட்டால், அவர் அடிமைப் பெண் (உம்முல் வலத்) ஆவார்” என்று மக்கள் பேசிக்கொண்டனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வாகனத்தில் ஏறிப் புறப்பட நாடியபோது, அவருக்குத் திரையிட்டு மறைத்தார்கள். அவர் ஒட்டகத்தின் கடைக்கோடியில் அமர்ந்திருந்தார். அப்போது மக்கள் ‘அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியே’ என்று அறிந்துகொண்டனர். அவர்கள் மதீனாவை நெருங்கியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது வாகனத்தை விரைவாகச் செலுத்தினார்கள்; நாங்களும் (எங்கள் வாகனங்களை) விரைவாகச் செலுத்தினோம். அப்போது (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பயணித்த) ‘அல்அள்பா’ எனும் அந்த ஒட்டகத்திற்குக் கால் இடறியது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒட்டகத்திலிருந்து) விழுந்துவிட்டார்கள்; ஸஃபிய்யா (ரலி) அவர்களும் விழுந்துவிட்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்), எழுந்து ஸஃபிய்யா (ரலி) அவர்களை (திரையிட்டு) மறைத்தார்கள். அப்போது பெண்கள் எட்டிப் பார்த்து, “அந்த யூதப் பெண்ணை அல்லாஹ் (தனது அருளிலிருந்து) அப்புறப்படுத்துவானாக!” என்று கூறினர்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)
குறிப்பு :
அறிவிப்பாளர் ஸாபித் அல்புனானீ (ரஹ்) கூறுகின்றார்:
நான் (அனஸ் (ரலி) அவர்களிடம்), “அபூ ஹம்ஸா! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விழுந்துவிட்டார்களா?” என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்), விழுந்துவிட்டார்கள்” என விடையளித்தார்கள்.
அனஸ் (ரலி), “உம்மு ஸுலைம் (ரலி) அவர்களது இல்லத்திலேயே அப்பெண்ணைக் காத்திருப்புக் காலத்தில் (இத்தா) தங்கவைத்(துப் பரிசோதித்)தார்கள்” என்று கூறினார்கள் என நான் கருதுகின்றேன் என்று அறிவிப்பாளர் ஸாபித் (ரஹ்) கூறுகின்றார்.