و حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ حَدَّثَنَا أَبِي عَنْ صَالِحٍ قَالَ ابْنُ شِهَابٍ إِنَّ أَنَسَ بْنَ مَالِكٍ قَالَ:
أَنَا أَعْلَمُ النَّاسِ بِالْحِجَابِ لَقَدْ كَانَ أُبَيُّ بْنُ كَعْبٍ يَسْأَلُنِي عَنْهُ قَالَ أَنَسٌ أَصْبَحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرُوسًا بِزَيْنَبَ بِنْتِ جَحْشٍ قَالَ وَكَانَ تَزَوَّجَهَا بِالْمَدِينَةِ فَدَعَا النَّاسَ لِلطَّعَامِ بَعْدَ ارْتِفَاعِ النَّهَارِ فَجَلَسَ رَسُولُ اللَّهِ وَجَلَسَ مَعَهُ رِجَالٌ بَعْدَ مَا قَامَ الْقَوْمُ حَتَّى قَامَ رَسُولُ اللَّهِ فَمَشَى فَمَشَيْتُ مَعَهُ حَتَّى بَلَغَ بَابَ حُجْرَةِ عَائِشَةَ ثُمَّ ظَنَّ أَنَّهُمْ قَدْ خَرَجُوا فَرَجَعَ وَرَجَعْتُ مَعَهُ فَإِذَا هُمْ جُلُوسٌ مَكَانَهُمْ فَرَجَعَ فَرَجَعْتُ الثَّانِيَةَ حَتَّى بَلَغَ حُجْرَةَ عَائِشَةَ فَرَجَعَ فَرَجَعَتْ فَإِذَا هُمْ قَدْ قَامُوا فَضَرَبَ بَيْنِي وَبَيْنَهُ بِالسِّتْرِ وَأَنْزَلَ اللَّهُ آيَةَ الْحِجَابِ
ஹிஜாப் சட்டம் (பற்றிய பின்னணி) குறித்து மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நான்தான் என்பதால் உபை பின் கஅப் (ரலி) என்னிடம் அதைப் பற்றிக் கேட்டுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) அவர்களை மதீனா நகரில் மணமுடித்து, மணமகனாகி இருந்தார்கள். அப்போது அவர்கள் உச்சிப் பொழுதுக்குப் பின் மக்களை மணவிருந்துக்காக அழைத்திருந்தார்கள்.
மக்கள் (விருந்து முடிந்து) எழுந்து சென்ற பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (சற்று நேரம்) அமர்ந்திருந்தார்கள். அவர்களுடன் வேறுசிலரும் அமர்ந்திருந்தனர். இறுதியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எழுந்து சென்றுவிட்டார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். அவர்கள் (தம் துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்களின் அறை வாசலை அடைந்தார்கள். பிறகு (விருந்து நடந்த வீட்டில்) அமர்ந்திருந்தவர்கள் (அனைவரும்) வெளியேறியிருப்பர் எனக் கருதித் திரும்பி வந்தார்கள். நானும் அவர்களுடன் திரும்பினேன். அப்போதும் சிலர் அங்கேயே அமர்ந்திருந்தனர்.
எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அங்கிருந்து திரும்பிவிட, அவர்களுடன் நானும் இரண்டாவது முறையாகத் திரும்பினேன். ஆயிஷா (ரலி) அவர்களின் அறையை அடைந்தார்கள். மீண்டும் (புதுமணப் பெண்ணிருந்த) வீட்டிற்குத் திரும்பினார்கள். அவர்களுடன் நானும் திரும்பினேன். இப்போது அந்தச் சிலர் எழுந்து சென்றுவிட்டிருந்தனர். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்கும் தமக்குமிடையே திரையொன்றை இட்டார்கள். அப்போதுதான், அல்லாஹ் ஹிஜாப் வசனத்தை அருளினான்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)