அத்தியாயம்: 18, பாடம்: 5, ஹதீஸ் எண்: 2704

‏‏حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُمَرُ بْنُ يُونُسَ الْحَنَفِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكٍ أَبِي زُمَيْلٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏قَالَ ‏

‏لَمَّا اعْتَزَلَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نِسَاءَهُ قَالَ دَخَلْتُ الْمَسْجِدَ فَإِذَا النَّاسُ ‏ ‏يَنْكُتُونَ ‏ ‏بِالْحَصَى وَيَقُولُونَ طَلَّقَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نِسَاءَهُ وَذَلِكَ قَبْلَ أَنْ يُؤْمَرْنَ بِالْحِجَابِ فَقَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏فَقُلْتُ لَأَعْلَمَنَّ ذَلِكَ الْيَوْمَ قَالَ فَدَخَلْتُ عَلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَقُلْتُ يَا بِنْتَ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏أَقَدْ بَلَغَ مِنْ شَأْنِكِ أَنْ تُؤْذِي رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ مَا لِي وَمَا لَكَ يَا ‏ ‏ابْنَ الْخَطَّابِ ‏ ‏عَلَيْكَ ‏ ‏بِعَيْبَتِكَ ‏ ‏قَالَ فَدَخَلْتُ عَلَى ‏ ‏حَفْصَةَ بِنْتِ عُمَرَ ‏ ‏فَقُلْتُ لَهَا يَا ‏ ‏حَفْصَةُ ‏ ‏أَقَدْ بَلَغَ مِنْ شَأْنِكِ أَنْ تُؤْذِي رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَاللَّهِ لَقَدْ عَلِمْتِ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا يُحِبُّكِ وَلَوْلَا أَنَا لَطَلَّقَكِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَبَكَتْ أَشَدَّ الْبُكَاءِ فَقُلْتُ لَهَا أَيْنَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ هُوَ فِي خِزَانَتِهِ فِي ‏ ‏الْمَشْرُبَةِ ‏ ‏فَدَخَلْتُ فَإِذَا أَنَا ‏ ‏بِرَبَاحٍ ‏ ‏غُلَامِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَاعِدًا عَلَى ‏ ‏أُسْكُفَّةِ ‏ ‏الْمَشْرُبَةِ ‏ ‏مُدَلٍّ رِجْلَيْهِ عَلَى ‏ ‏نَقِيرٍ ‏ ‏مِنْ خَشَبٍ وَهُوَ جِذْعٌ ‏ ‏يَرْقَى عَلَيْهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَيَنْحَدِرُ فَنَادَيْتُ يَا ‏ ‏رَبَاحُ ‏ ‏اسْتَأْذِنْ لِي عِنْدَكَ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَنَظَرَ ‏ ‏رَبَاحٌ ‏ ‏إِلَى الْغُرْفَةِ ثُمَّ نَظَرَ إِلَيَّ فَلَمْ يَقُلْ شَيْئًا ثُمَّ قُلْتُ يَا ‏ ‏رَبَاحُ ‏ ‏اسْتَأْذِنْ لِي عِنْدَكَ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَنَظَرَ ‏ ‏رَبَاحٌ ‏ ‏إِلَى الْغُرْفَةِ ثُمَّ نَظَرَ إِلَيَّ فَلَمْ يَقُلْ شَيْئًا ثُمَّ رَفَعْتُ صَوْتِي فَقُلْتُ يَا ‏ ‏رَبَاحُ ‏ ‏اسْتَأْذِنْ لِي عِنْدَكَ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِنِّي أَظُنُّ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ظَنَّ أَنِّي جِئْتُ مِنْ أَجْلِ ‏ ‏حَفْصَةَ ‏ ‏وَاللَّهِ لَئِنْ أَمَرَنِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِضَرْبِ عُنُقِهَا لَأَضْرِبَنَّ عُنُقَهَا وَرَفَعْتُ صَوْتِي ‏ ‏فَأَوْمَأَ ‏ ‏إِلَيَّ أَنْ ‏ ‏ارْقَهْ ‏ ‏فَدَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ مُضْطَجِعٌ عَلَى حَصِيرٍ فَجَلَسْتُ فَأَدْنَى عَلَيْهِ ‏ ‏إِزَارَهُ ‏ ‏وَلَيْسَ عَلَيْهِ غَيْرُهُ وَإِذَا الْحَصِيرُ قَدْ أَثَّرَ فِي جَنْبِهِ فَنَظَرْتُ بِبَصَرِي فِي خِزَانَةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِذَا أَنَا بِقَبْضَةٍ مِنْ شَعِيرٍ نَحْوِ ‏ ‏الصَّاعِ ‏ ‏وَمِثْلِهَا ‏ ‏قَرَظًا ‏ ‏فِي نَاحِيَةِ الْغُرْفَةِ وَإِذَا ‏ ‏أَفِيقٌ ‏ ‏مُعَلَّقٌ قَالَ ‏ ‏فَابْتَدَرَتْ ‏ ‏عَيْنَايَ قَالَ مَا يُبْكِيكَ يَا ‏ ‏ابْنَ الْخَطَّابِ ‏ ‏قُلْتُ يَا نَبِيَّ اللَّهِ وَمَا لِي لَا أَبْكِي وَهَذَا الْحَصِيرُ قَدْ أَثَّرَ فِي جَنْبِكَ وَهَذِهِ خِزَانَتُكَ لَا أَرَى فِيهَا إِلَّا مَا أَرَى وَذَاكَ ‏ ‏قَيْصَرُ ‏ ‏وَكِسْرَى ‏ ‏فِي الثِّمَارِ وَالْأَنْهَارِ وَأَنْتَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَصَفْوَتُهُ وَهَذِهِ خِزَانَتُكَ فَقَالَ يَا ‏ ‏ابْنَ الْخَطَّابِ ‏ ‏أَلَا ‏ ‏تَرْضَى أَنْ تَكُونَ لَنَا الْآخِرَةُ وَلَهُمْ الدُّنْيَا قُلْتُ بَلَى قَالَ وَدَخَلْتُ عَلَيْهِ حِينَ دَخَلْتُ وَأَنَا أَرَى فِي وَجْهِهِ الْغَضَبَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا يَشُقُّ عَلَيْكَ مِنْ شَأْنِ النِّسَاءِ فَإِنْ كُنْتَ طَلَّقْتَهُنَّ فَإِنَّ اللَّهَ مَعَكَ وَمَلَائِكَتَهُ ‏ ‏وَجِبْرِيلَ ‏ ‏وَمِيكَائِيلَ ‏ ‏وَأَنَا ‏ ‏وَأَبُو بَكْرٍ ‏ ‏وَالْمُؤْمِنُونَ مَعَكَ وَقَلَّمَا تَكَلَّمْتُ وَأَحْمَدُ اللَّهَ بِكَلَامٍ إِلَّا رَجَوْتُ أَنْ يَكُونَ اللَّهُ يُصَدِّقُ قَوْلِي ‏ ‏الَّذِي أَقُولُ وَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ آيَةُ التَّخْيِيرِ:” عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبْدِلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ ‏‏وَإِنْ ‏ ‏تَظَاهَرَا ‏ ‏عَلَيْهِ فَإِنَّ اللَّهَ هُوَ مَوْلَاهُ ‏ ‏وَجِبْرِيلُ ‏ ‏وَصَالِحُ الْمُؤْمِنِينَ وَالْمَلَائِكَةُ بَعْدَ ذَلِكَ ‏ ‏ظَهِيرٌ“‏

‏وَكَانَتْ ‏ ‏عَائِشَةُ بِنْتُ أَبِي بَكْرٍ ‏ ‏وَحَفْصَةُ ‏ ‏تَظَاهَرَانِ ‏ ‏عَلَى سَائِرِ نِسَاءِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَطَلَّقْتَهُنَّ قَالَ لَا قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي دَخَلْتُ الْمَسْجِدَ وَالْمُسْلِمُونَ ‏ ‏يَنْكُتُونَ ‏ ‏بِالْحَصَى يَقُولُونَ طَلَّقَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نِسَاءَهُ أَفَأَنْزِلُ فَأُخْبِرَهُمْ أَنَّكَ لَمْ تُطَلِّقْهُنَّ قَالَ نَعَمْ إِنْ شِئْتَ فَلَمْ أَزَلْ أُحَدِّثُهُ حَتَّى ‏ ‏تَحَسَّرَ ‏ ‏الْغَضَبُ عَنْ وَجْهِهِ وَحَتَّى ‏ ‏كَشَرَ ‏ ‏فَضَحِكَ وَكَانَ مِنْ أَحْسَنِ النَّاسِ ‏ ‏ثَغْرًا ‏ ‏ثُمَّ نَزَلَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَنَزَلْتُ فَنَزَلْتُ أَتَشَبَّثُ بِالْجِذْعِ وَنَزَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَأَنَّمَا يَمْشِي عَلَى الْأَرْضِ مَا يَمَسُّهُ بِيَدِهِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا كُنْتَ فِي الْغُرْفَةِ تِسْعَةً وَعِشْرِينَ قَالَ إِنَّ الشَّهْرَ يَكُونُ تِسْعًا وَعِشْرِينَ فَقُمْتُ عَلَى بَابِ الْمَسْجِدِ فَنَادَيْتُ بِأَعْلَى صَوْتِي لَمْ يُطَلِّقْ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نِسَاءَهُ وَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ ”وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِنْ الْأَمْنِ أَوْ الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي ‏ ‏الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ ‏ ‏يَسْتَنْبِطُونَهُ ‏ ‏مِنْهُمْ” ‏

‏فَكُنْتُ أَنَا اسْتَنْبَطْتُ ذَلِكَ الْأَمْرَ وَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ آيَةَ التَّخْيِيرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு மாத காலம் தம் மனைவியரிடம் நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் செய்து) தம் மனைவியரிடமிருந்து விலகியிருந்தபோது, நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கு மக்கள் (கவலையோடு) பொடிக் கற்களைத் தரையில் எறிந்து கொண்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் மனைவியரை மணவிலக்குச் செய்துவிட்டார்கள்” என்று பேசிக்கொண்டிருந்தனர். – இது ஹிஜாப் பற்றிய சட்டம் அருளப்பெறுவதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சியாகும்.- “அன்றைய நாளில் என்னதான் நடந்தது என்பதை நான் அறிந்தாக வேண்டும்” என்று (எனக்குள்) நான் கூறிக்கொண்டேன்.

பிறகு நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “அபூபக்ரு (ரலி) அவர்களின் மகளே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மன வேதனைப்படுத்தும் அளவிற்கு உங்களது தகுதி உயர்ந்துவிட்டதா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி), “கத்தாபின் புதல்வரே! உங்களுக்கும் எனக்கும் என்ன பிரச்சினை? (முதலில்) நீங்கள் உங்களது பெட்டகத்தை(குடும்பத்தை)க் கவனியுங்கள்” என்று கூறினார்கள். ஆகவே, நான் (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்று, “ஹஃப்ஸா! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மன வேதனைப்படுத்தும் அளவிற்கு உனது தகுதி உயர்ந்துவிட்டதா? அல்லாஹ்வின் மீதாணையாக! (நீ அவ்வாறு செய்திருந்தால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உன்னை நேசிக்கமாட்டார்கள் என்பதை நீ அறிந்தே உள்ளாய். நான் மட்டும் இல்லையென்றால், உன்னை அவர்கள் மணவிலக்குச் செய்திருப்பார்கள்” என்று கூறினேன்.

இதைக் கேட்டு ஹஃப்ஸா கடுமையாக அழுதார். நான் ஹஃப்ஸாவிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இப்போது) எங்கே இருக்கின்றார்கள்?” என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, “மாடியிலுள்ள அவர்களது தனி அறையில் இருக்கின்றார்கள்” என்றார்.

உடனே நான் அங்குச் சென்றேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பணியாளர் ரபாஹ், அந்த மாடியறையின் வாசற்படியில், செதுக்கப்பட்ட மரக் கட்டையின் மீது கால்களைத் தொங்கவிட்டபடி அமர்ந்திருந்தார். அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஏறுவதற்கும் இறங்குவதற்கும் பயன்படுத்திய பேரீச்ச மரக் கட்டையாகும்.

நான் (அவரைக்) கூப்பிட்டு, “ரபாஹே! எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேள்” என்றேன். அப்போது ரபாஹ் அந்த அறையை உற்றுப் பார்த்தார். பிறகு என்னையும் பார்த்தார். ஆனால், பதிலேதும் சொல்லவில்லை. பின்னர் (மீண்டும்) நான், “ரபாஹே! எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உள்ளே வர) அனுமதி கேள்” என்றேன்.

ரபாஹ் அந்த அறையைப் பார்த்தார். பிறகு என்னையும் பார்த்தார். ஆனால், பதிலேதும் சொல்லவில்லை. பின்னர் நான் குரலை உயர்த்தி, “ரபாஹே! எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உள்ளே வர) அனுமதி கேள். நான் (என் மகள்) ஹஃப்ஸாவுக்(குப் பரிந்து பேசுவதற்)காக வந்துள்ளேன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எண்ணிவிட்டார்கள் என நான் நினைக்கின்றேன். அல்லாஹ்வின் மீதாணையாக! என் மகளின் கழுத்தை வெட்டுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உத்தரவிட்டாலும் நிச்சயமாக அவளது கழுத்தை வெட்டி விடுவேன்” என்று உரத்த குரலில் சொன்னேன்.

அப்போது ரபாஹ் என்னை ஏறிவரச் சொல்லி சைகை செய்தார். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் ஒரு பாயில் சாய்ந்து படுத்திருந்தார்கள். நான் அமர்ந்தவுடன் அவர்கள் தமது கீழாடையைச் சுருட்டி(ஒழுங்குபடுத்தி)னார்கள். அப்போது அவர்கள் உடலில் அந்த ஆடையைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அந்தப் பாய் அவர்களது விலாப் புறத்தில் அடையாளம் பதித்திருந்தது. அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தனி அறையை நோட்டமிட்டேன். அங்கு ஒரு ஸாஉ அளவு தொலி நீக்கப்படாத கோதுமையும், அறையின் ஒரு மூலையில் அதே அளவு கருவேல இலையும் இருந்தன. நன்கு பதனிடப்படாத ஒரு தோல் அங்குத் தொங்கவிடப்பட்டிருந்ததைக் கண்டேன்.

என் கண்கள் (என்னையும் அறியாமல்) கண்ணீர் சொரிந்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “கத்தாபின் மகனே! ஏன் அழுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் நபியே! என்னால் எவ்வாறு அழாமலிருக்க முடியும்? இந்தப் பாய் உங்களது விலாப் புறத்தில் அடையாளப்படுத்தியுள்ளதே. (இதோ) இதுதான் உங்களது தனி அறை. இதில் நான் காணுகின்ற (விலை மலிவான) சில பொருட்களைத் தவிர வேறெதையும் நான் காணவில்லை. அந்த (பாரசீகம் மற்றும் ரோம அரசர்களான) குஸ்ருவும் சீசரும் கனிகளை உண்டும், நதிகளில் விளையாடிக்கொண்டும் (உல்லாசமாக) இருக்கின்றனர். நீங்களோ அல்லாஹ்வின் தூதரும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவீர்கள். ஆனால், உங்களது தனி அறை இவ்வாறு இருக்கிறதே!” என்றேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “கத்தாபின் மகனே! நமக்கு மறுமையும் அ(ம் மன்ன)வர்களுக்கு இம்மையும் இருப்பது உங்களுக்குத் திருப்தி இல்லையா?” என்று கேட்டார்கள். நான் “ஆம் (திருப்திதான்)” என்றேன்.

அந்த அறைக்குள் நுழைந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்தில் கோபத்தைக் கண்டிருந்தேன். ஆகவே, “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மனைவியரைப் பற்றித் தங்களுக்கு என்ன சஞ்சலம்? நீங்கள் அவர்களை மணவிலக்குச் செய்திருந்தாலும் (நீங்கள் சஞ்சலப்பட வேண்டியதில்லை. ஏனெனில்,) தங்களுடன் (தங்களுக்கு உதவி செய்வதற்கு) அல்லாஹ் இருக்கின்றான். அவனுடைய வானவர்களும் ஜிப்ரீலும் மீக்காயீலும் நானும் அபூபக்ரும் இதர இறைநம்பிக்கையாளர்களும் தங்களுடன் இருக்கின்றோம்” என்று சொன்னேன்.

நான் ஒரு சிறு விஷயத்தைக் கூறினாலும் -நான் அல்லாஹ்வைப் புகழ்கின்றேன்- நான் கூறிய சொல்லை அல்லாஹ் மெய்யாக்கி வைப்பான் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்போது “உங்களை அவர் மணவிலக்குச் செய்துவிட்டால் உங்களுக்குப் பதிலாக உங்களைவிடவும் சிறந்த மனைவியரை அவருக்கு வழங்க அவருடைய இறைவன் போதுமானவன்” என்ற  விருப்ப உரிமை அளிக்கும் இந்த (66:5) வசனமும், “அவருக்கு எதிராக நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டால் அல்லாஹ் அவருக்கு (உதவும்) அதிபதி ஆவான். ஜிப்ரீலும் நம்பிக்கை கொண்டோரில் நல்லவர்களும் வானவர்களும் அதன் பின் (அவருக்கு) உதவுவார்கள்” எனும் (66:4) இறைவசனமும் அருளப்பெற்றன. அபூபக்ரு (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களும் (என் மகள்) ஹஃப்ஸாவுமே நபி (ஸல்) அவர்களின் மற்ற மனைவியரை மிகைத்தவர்களாக இருந்தனர்.

ஆகவே, நான், “அல்லாஹ்வின் தூதரே! (உங்கள் மனைவியரான) இவர்களை நீங்கள் மணவிலக்குச் செய்துவிட்டீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “இல்லை” என்றார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். (அங்கு) முஸ்லிம்கள் பொடிக் கற்களைத் தரையில் எறிந்துகொண்டு (ஆழ்ந்த கவலையுடன்) இருந்தனர்; ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் மனைவியரை மணவிலக்குச் செய்துவிட்டார்கள்’ என்று பேசிக்கொண்டுமிருந்தனர். நான் இங்கிருந்து இறங்கிச் சென்று, தாங்கள் தங்கள் மனைவியரை மணவிலக்குச் செய்யவில்லை என அவர்களிடம் தெரிவித்துவிடவா?” என்று கேட்டேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “சரி; நீங்கள் விரும்பினால்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்திலிருந்து கோபம் விலகும் வரையிலும், பற்கள் தெரியுமளவிற்கு அவர்கள் சிரிக்கும் வரையிலும் அவர்களிடம் நான் பேசிக்கொண்டேயிருந்தேன். -அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களிடையே அழகான பற்கள் உடையவராக இருந்தார்கள்.- பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அந்த மாடியறையிலிருந்து) இறங்கினார்கள். நானும் இறங்கினேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்தப் பேரீச்ச மரக் கட்டையைத் தமது கரத்தால் பற்றாமலேயே தரையில் நடப்பதைப் போன்று (சாதாரணமாக) நடந்தார்கள். (ஆனால்,) நான் அந்த மரக் கட்டையைப் பிடித்துக்கொண்டே இறங்கினேன். நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இந்த அறையில் இருபத்தொன்பது நாட்கள் மட்டுமே தங்கினீர்கள் (ஆனால், ஒரு மாதம் மனைவியரிடமிருந்து விலகியிருக்கப்போவதாக சத்தியம் செய்திருந்தீர்களே?)!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும்” என்று சொன்னார்கள்.

பின்னர் நான் பள்ளிவாசலின் தலைவாயிலில் நின்றுகொண்டு உரத்த குரலில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் மனைவியரை மணவிலக்குச் செய்யவில்லை” என்று கூறினேன். அப்போது, “பாதுகாப்பு(க் குறை), அல்லது பயம் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைத்தால் அதை அவர்கள் (உடனே) பரப்பிவிடுகின்றனர். அதை இறைத்தூதரிடமும் தங்களில் அதிகாரமுள்ளோரிடமும் கொண்டுசென்றிருந்தால் அதைத் தீர  விசாரித்து (தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள்” எனும் இந்த (4:83) வசனம் அருளப்பெற்றது.

(நபித் தோழர்கள் கூறிய) அந்தச் செய்தியைத் தீர விசாரிப்பவனாக நானிருந்தேன்.

அப்போது, மனைவியருக்கு விருப்ப உரிமை அளிப்பது தொடர்பான (33:28ஆவது) வசனத்தை, வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பாளர் : உமர் (ரலி)


குறிப்பு :

()“உன்னை … காலத்துக்கு நெருங்கமாட்டேன்“ என்று தன் மனைவியிடம் கூறி, அவளிடமிருந்து குறிப்பிட்டக் காலத்துக்கு விலகி இருப்பதாகச் சத்தியம் செய்வதற்கு ‘ஈலா‘ என்று சொல்லப்படும்.

Share this Hadith: