و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ وَاللَّفْظُ لِأَبِي بَكْرٍ قَالَا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ سَمِعَ عُبَيْدَ بْنَ حُنَيْنٍ وَهُوَ مَوْلَى الْعَبَّاسِ قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ:
كُنْتُ أُرِيدُ أَنْ أَسْأَلَ عُمَرَ عَنْ الْمَرْأَتَيْنِ اللَّتَيْنِ تَظَاهَرَتَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَبِثْتُ سَنَةً مَا أَجِدُ لَهُ مَوْضِعًا حَتَّى صَحِبْتُهُ إِلَى مَكَّةَ فَلَمَّا كَانَ بِمَرِّ الظَّهْرَانِ ذَهَبَ يَقْضِي حَاجَتَهُ فَقَالَ أَدْرِكْنِي بِإِدَاوَةٍ مِنْ مَاءٍ فَأَتَيْتُهُ بِهَا فَلَمَّا قَضَى حَاجَتَهُ وَرَجَعَ ذَهَبْتُ أَصُبُّ عَلَيْهِ وَذَكَرْتُ فَقُلْتُ لَهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مَنْ الْمَرْأَتَانِ فَمَا قَضَيْتُ كَلَامِي حَتَّى قَالَ عَائِشَةُ وَحَفْصَةُ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (அவர்களைச் சங்கடப்படுத்தும் வகையில்) கூடிப் பேசிச் செயல்பட்ட இரு மனைவியர் யாவர்? என்பது பற்றி உமர் (ரலி) அவர்களிடம் கேட்க வேண்டும் என்று (நீண்ட நாட்களாக) எண்ணியிருந்தேன். இவ்வாறு ஓராண்டுக் காலத்தைக் கடத்தி விட்டேன். (ஹஜ்ஜுக்காக) அவர்களுடன் செல்ல வேண்டிய சூழல்வரை எனக்கு அதற்கான வாய்ப்புக் கிடைக்கவில்லை. (திரும்பிவரும் வழியில்) நாங்கள் ‘மர்ருழ் ழஹ்ரான்’ எனுமிடத்தில் இருந்தபோது உமர் (ரலி) இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். அப்போது “(ஒளுச் செய்வதற்காக) நீர்குவளையை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று கூறினார்கள். அதை எடுத்துக்கொண்டு அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் இயற்கைக் கடனை முடித்துத் திரும்பியதும் அவர்களுக்குத் தண்ணீரை ஊற்றலானேன். அப்போது நான் (கேட்க நினைத்திருந்த விஷயத்தை) நினைவுகூர்ந்தேன். “இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சஞ்சலப் படுத்தும் வகையில் கூடிப் பேசிச் செயல்பட்ட அவ்விரு மனைவியர் யாவர்?” என்று கேட்டேன். நான் கேட்டு முடிப்பதற்குள், “ஆயிஷாவும் ஹஃப்ஸாவும்தாம் (அவ்விருவரும்)” என விடையளித்தார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)