அத்தியாயம்: 33, பாடம்: 13, ஹதீஸ் எண்: 3432

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ حَدَّثَنِي بُسْرُ بْنُ عُبَيْدِ اللَّهِ الْحَضْرَمِيُّ، أَنَّهُ سَمِعَ أَبَا إِدْرِيسَ الْخَوْلاَنِيَّ، يَقُولُ سَمِعْتُ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ يَقُولُ :‏

كَانَ النَّاسُ يَسْأَلُونَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْخَيْرِ وَكُنْتُ أَسْأَلُهُ عَنِ الشَّرِّ مَخَافَةَ أَنْ يُدْرِكَنِي فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا فِي جَاهِلِيَّةٍ وَشَرٍّ فَجَاءَنَا اللَّهُ بِهَذَا الْخَيْرِ فَهَلْ بَعْدَ هَذَا الْخَيْرِ شَرٌّ قَالَ ‏”‏ نَعَمْ ‏”‏ فَقُلْتُ هَلْ بَعْدَ ذَلِكَ الشَّرِّ مِنْ خَيْرٍ قَالَ ‏”‏ نَعَمْ وَفِيهِ دَخَنٌ ‏”‏ ‏.‏ قُلْتُ وَمَا دَخَنُهُ قَالَ ‏”‏ قَوْمٌ يَسْتَنُّونَ بِغَيْرِ سُنَّتِي وَيَهْدُونَ بِغَيْرِ هَدْيِي تَعْرِفُ مِنْهُمْ وَتُنْكِرُ ‏”‏ ‏.‏ فَقُلْتُ هَلْ بَعْدَ ذَلِكَ الْخَيْرِ مِنْ شَرٍّ قَالَ ‏”‏ نَعَمْ دُعَاةٌ عَلَى أَبْوَابِ جَهَنَّمَ مَنْ أَجَابَهُمْ إِلَيْهَا قَذَفُوهُ فِيهَا ‏”‏ ‏.‏ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ صِفْهُمْ لَنَا ‏.‏ قَالَ ‏”‏ نَعَمْ قَوْمٌ مِنْ جِلْدَتِنَا وَيَتَكَلَّمُونَ بِأَلْسِنَتِنَا ‏”‏ ‏.‏ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَمَا تَرَى إِنْ أَدْرَكَنِي ذَلِكَ قَالَ ‏”‏ تَلْزَمُ جَمَاعَةَ الْمُسْلِمِينَ وَإِمَامَهُمْ ‏”‏ ‏.‏ فَقُلْتُ فَإِنْ لَمْ تَكُنْ لَهُمْ جَمَاعَةٌ وَلاَ إِمَامٌ قَالَ ‏”‏ فَاعْتَزِلْ تِلْكَ الْفِرَقَ كُلَّهَا وَلَوْ أَنْ تَعَضَّ عَلَى أَصْلِ شَجَرَةٍ حَتَّى يُدْرِكَكَ الْمَوْتُ وَأَنْتَ عَلَى ذَلِكَ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மக்கள் நன்மையானவற்றைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்பவனாக இருந்தேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சியதே காரணம்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் கால வழக்கங்களிலும் தீமையிலும் மூழ்கிக்கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) இந்த நன்மையை எங்களிடம் கொண்டுவந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதா?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

நான், “அந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதா?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆம். ஆனால், அது கலப்படமாக இருக்கும்” என்று பதிலளித்தார்கள். நான், “என்ன மாதிரிக் கலப்படம்?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “ஒரு கூட்டத்தார் எனது வழிமுறை (சுன்னா) அல்லாததைக் கடைப்பிடிப்பார்கள். எனது நேர்வழியல்லாததைக் கொண்டு வழிகாட்டுவார்கள். அவர்களில் நீ நன்மையையும் காண்பாய்; தீமையையும் காண்பாய்” என்று பதிலளித்தார்கள்.

நான், “அந்த நன்மைக்குப் பிறகு தீமை உண்டா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம். நரகத்தின் வாசல்களில் நின்றுகொண்டு (அங்கு வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவரை நரகத்தில் அவர்கள் எறிந்து விடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்க(ளுடைய அடையாளங்)களை எங்களுக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவும் நம் மொழியைப் பேசுபவர்களாகவும் இருப்பார்கள்” என்று பதிலளித்தார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! அத்தகைய கால கட்டத்தை நான் அடைந்தால் என்ன செய்ய வேண்டும் என எனக்குக் கட்டளையிடுகின்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ முஸ்லிம்களின் கூட்டமைப்பையும் அதன் ஆட்சியாளரையும் பற்றிக்கொள்” என்று பதிலளித்தார்கள்.

அதற்கு நான், “அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஆட்சியாளரோ இல்லை (பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால் (என்ன செய்வது)?” என்று கேட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அந்தப் பிரிவுகள் அனைத்தையும் விட்டு (விலகி) ஒதுங்கிவிடு. ஒரு மரத்தின் வேர் பாகத்தைப் பற்களால் நீ கவ்விப் பிடித்திருந்து, இறுதியில் அதே நிலையில் இறப்பு உன்னைத் தழுவினாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் நீ சேர்ந்துவிடாதே)” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி)

அத்தியாயம்: 33, பாடம்: 12, ஹதீஸ் எண்: 3431

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ الْحَضْرَمِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ سَأَلَ سَلَمَةُ بْنُ يَزِيدَ الْجُعْفِيُّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ :‏

يَا نَبِيَّ اللَّهِ أَرَأَيْتَ إِنْ قَامَتْ عَلَيْنَا أُمَرَاءُ يَسْأَلُونَا حَقَّهُمْ وَيَمْنَعُونَا حَقَّنَا فَمَا تَأْمُرُنَا فَأَعْرَضَ عَنْهُ ثُمَّ سَأَلَهُ فَأَعْرَضَ عَنْهُ ثُمَّ سَأَلَهُ فِي الثَّانِيَةِ أَوْ فِي الثَّالِثَةِ فَجَذَبَهُ الأَشْعَثُ بْنُ قَيْسٍ وَقَالَ ‏ “‏ اسْمَعُوا وَأَطِيعُوا فَإِنَّمَا عَلَيْهِمْ مَا حُمِّلُوا وَعَلَيْكُمْ مَا حُمِّلْتُمْ ‏”‏


وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكٍ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ وَقَالَ فَجَذَبَهُ الأَشْعَثُ بْنُ قَيْسٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ اسْمَعُوا وَأَطِيعُوا فَإِنَّمَا عَلَيْهِمْ مَا حُمِّلُوا وَعَلَيْكُمْ مَا حُمِّلْتُمْ ‏”‏ ‏.‏

ஸலமா பின் யஸீத் அல்ஜுஅஃபீ (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! எங்களை நிர்வகிக்கும் ஆட்சித் தலைவர்கள், அவர்களுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய உரிமைகளைக் கோருகின்றவர்களாகவும், எங்களுக்கு அவர்கள் தர வேண்டிய உரிமைகளை மறுப்பவர்களாகவும் அமைந்துவிட்டால், அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கட்டளையிடுகின்றீர்கள், கூறுங்கள்?” என்று கேட்டார்கள். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸலமா (ரலி) அவர்களைவிட்டுத் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.

பிறகு மீண்டும் ஸலமா (ரலி) கேட்டபோதும் அவர்களைவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இரண்டாவது தடவையோ அல்லது மூன்றாவது தடவையோ (அவ்வாறு) ஸலமா (ரலி) கேட்டபோது, அவர்களை அல்அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) இழுத்தார்கள். “நீங்கள் (உங்கள் தலைமையின் கட்டளையைச்) செவியேற்று, (அதற்குக்) கீழ்ப்படியுங்கள். ஏனெனில், அவர்கள்மீது சுமத்தப்பட்டது அவர்களைச் சாரும். உங்கள்மீது சுமத்தப்பட்டது உங்களைச் சாரும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : வாஇல் பின் ஹுஜ்ரு அல்ஹள்ரமீ (ரலி)


குறிப்பு :

ஷபாபா (ரஹ்) வழி அறிவிப்பில், அல்அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) ஸலமா (ரலி) அவர்களைப் பிடித்து இழுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(உங்கள் தலைமையின் கட்டளையைச்) செவியுற்று, (அதற்குக்) கீழ்ப்படியுங்கள். ஏனெனில், அவர்கள்மீது சுமத்தப்பட்டது அவர்களைச் சாரும். உங்கள்மீது சுமத்தப்பட்டது உங்களைச் சாரும்” என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 33, பாடம்: 11, ஹதீஸ் எண்: 3430

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أُسَيْدِ بْنِ حُضَيْرٍ :‏

أَنَّ رَجُلاً مِنَ الأَنْصَارِ خَلاَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ أَلاَ تَسْتَعْمِلُنِي كَمَا اسْتَعْمَلْتَ فُلاَنًا فَقَالَ ‏ “‏ إِنَّكُمْ سَتَلْقَوْنَ بَعْدِي أَثَرَةً فَاصْبِرُوا حَتَّى تَلْقَوْنِي عَلَى الْحَوْضِ ‏”‏ ‏


وَحَدَّثَنِي يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، حَدَّثَنَا خَالِدٌ – يَعْنِي ابْنَ الْحَارِثِ – حَدَّثَنَا شُعْبَةُ بْنُ الْحَجَّاجِ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يُحَدِّثُ عَنْ أُسَيْدِ بْنِ حُضَيْرٍ، أَنَّ رَجُلاً مِنَ الأَنْصَارِ خَلاَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِمِثْلِهِ ‏.‏ وَحَدَّثَنِيهِ عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الإِسْنَادِ وَلَمْ يَقُلْ خَلاَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏

அன்ஸாரிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தனியாகச் சந்தித்து, “நீங்கள் இன்னவரை அதிகாரியாக நியமித்ததைப் போன்று என்னையும் அதிகாரியாக நியமிக்கக் கூடாதா?” என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “எனக்குப் பிறகு ((அன்ஸாரிகளை விடுத்து) மற்றவர்களுக்கு (ஆட்சியதிகாரத்தில்) முன்னுரிமை வழங்கப்படுவதை நீங்கள் காண்பீர்கள். ஆகவே, (மறுமையில் எனக்குச் சிறப்புப் பரிசாக வழங்கப்படும் ‘ஹவ்ளுல் கவ்ஸர்’ எனும்) தடாகத்தின் அருகே என்னைச் சந்திக்கும் வரை நீங்கள் பொறுமையுடன் இருங்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : உஸைத் பின் ஹுளைர் (ரலி)


குறிப்பு :

உபைதுல்லாஹ் பின் முஆத் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தனியாகச் சந்தித்து …“ எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 33, பாடம்: 10, ஹதீஸ் எண்: 3429

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ زُهَيْرٌ حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ رَبِّ الْكَعْبَةِ قَالَ :‏

دَخَلْتُ الْمَسْجِدَ فَإِذَا عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ جَالِسٌ فِي ظِلِّ الْكَعْبَةِ وَالنَّاسُ مُجْتَمِعُونَ عَلَيْهِ فَأَتَيْتُهُمْ فَجَلَسْتُ إِلَيْهِ فَقَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَنَزَلْنَا مَنْزِلاً فَمِنَّا مَنْ يُصْلِحُ خِبَاءَهُ وَمِنَّا مَنْ يَنْتَضِلُ وَمِنَّا مَنْ هُوَ فِي جَشَرِهِ إِذْ نَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الصَّلاَةَ جَامِعَةً ‏.‏ فَاجْتَمَعْنَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏”‏ إِنَّهُ لَمْ يَكُنْ نَبِيٌّ قَبْلِي إِلاَّ كَانَ حَقًّا عَلَيْهِ أَنْ يَدُلَّ أُمَّتَهُ عَلَى خَيْرِ مَا يَعْلَمُهُ لَهُمْ وَيُنْذِرَهُمْ شَرَّ مَا يَعْلَمُهُ لَهُمْ وَإِنَّ أُمَّتَكُمْ هَذِهِ جُعِلَ عَافِيَتُهَا فِي أَوَّلِهَا وَسَيُصِيبُ آخِرَهَا بَلاَءٌ وَأُمُورٌ تُنْكِرُونَهَا وَتَجِيءُ فِتْنَةٌ فَيُرَقِّقُ بَعْضُهَا بَعْضًا وَتَجِيءُ الْفِتْنَةُ فَيَقُولُ الْمُؤْمِنُ هَذِهِ مُهْلِكَتِي ‏.‏ ثُمَّ تَنْكَشِفُ وَتَجِيءُ الْفِتْنَةُ فَيَقُولُ الْمُؤْمِنُ هَذِهِ هَذِهِ ‏.‏ فَمَنْ أَحَبَّ أَنْ يُزَحْزَحَ عَنِ النَّارِ وَيَدْخُلَ الْجَنَّةَ فَلْتَأْتِهِ مَنِيَّتُهُ وَهُوَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ وَلْيَأْتِ إِلَى النَّاسِ الَّذِي يُحِبُّ أَنْ يُؤْتَى إِلَيْهِ وَمَنْ بَايَعَ إِمَامًا فَأَعْطَاهُ صَفْقَةَ يَدِهِ وَثَمَرَةَ قَلْبِهِ فَلْيُطِعْهُ إِنِ اسْتَطَاعَ فَإِنْ جَاءَ آخَرُ يُنَازِعُهُ فَاضْرِبُوا عُنُقَ الآخَرِ ‏”‏ ‏.‏ فَدَنَوْتُ مِنْهُ فَقُلْتُ لَهُ أَنْشُدُكَ اللَّهَ آنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَهْوَى إِلَى أُذُنَيْهِ وَقَلْبِهِ بِيَدَيْهِ وَقَالَ سَمِعَتْهُ أُذُنَاىَ وَوَعَاهُ قَلْبِي ‏.‏ فَقُلْتُ لَهُ هَذَا ابْنُ عَمِّكَ مُعَاوِيَةُ يَأْمُرُنَا أَنْ نَأْكُلَ أَمْوَالَنَا بَيْنَنَا بِالْبَاطِلِ وَنَقْتُلَ أَنْفُسَنَا وَاللَّهُ يَقُولُ ‏{‏ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلاَّ أَنْ تَكُونَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِنْكُمْ وَلاَ تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا‏}‏ قَالَ فَسَكَتَ سَاعَةً ثُمَّ قَالَ أَطِعْهُ فِي طَاعَةِ اللَّهِ وَاعْصِهِ فِي مَعْصِيَةِ اللَّهِ ‏.‏


وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ نُمَيْرٍ وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، كِلاَهُمَا عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ ‏.‏

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا أَبُو الْمُنْذِرِ، إِسْمَاعِيلُ بْنُ عُمَرَ حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي السَّفَرِ، عَنْ عَامِرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ رَبِّ الْكَعْبَةِ الصَّائِدِيِّ قَالَ رَأَيْتُ جَمَاعَةً عِنْدَ الْكَعْبَةِ ‏.‏ فَذَكَرَ نَحْوَ حَدِيثِ الأَعْمَشِ ‏.‏

நான் இறையில்லம் கஅபாவுக்குச் சென்றேன். கஅபாவின் நிழலில் அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அமர்ந்திருந்தார்கள். அவர்களைச் சுற்றிலும் மக்கள் கூடியிருந்தனர். நான் அங்குச் சென்று அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அருகில் அமர்ந்துகொண்டேன். அப்போது அவர்கள் கூறினார்கள்:

“நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது ஓர் இடத்தில் இறங்கித் தங்கினோம். எங்களில் சிலர் தம் கூடாரங்களைச் சீரமைத்துக்கொண்டிருந்தனர். வேறுசிலர் அம்பெய்து (பயிற்சி எடுத்துக்)கொண்டிருந்தனர். மேலும் சிலர் தம் கால்நடைகள் மேயுமிடத்தில் இருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர்களுள் ஒருவர், ‘கூட்டுத் தொழுகை நடைபெறப்போகிறது!’ என அறிவித்தார்.

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒன்றுகூடினோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: “எனக்கு முன்னர் வாழ்ந்த ஒவ்வோர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாருக்கு எது நன்மை என்பதை அறிந்திருந்தாரோ அதை அவர்களுக்கு அறிவித்துவிடுவதும் அவர்களுக்கு எது தீமையென்பதை அறிந்திருந்தாரோ அது குறித்து அவர்களை எச்சரிப்பதும் அவர்மீது கடமையாக இருந்தது.

உங்களுடைய இந்தச் சமுதாயத்தின் நிம்மதியான வாழ்வு அதன் ஆரம்பக் காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சமுதாயத்தில் இறுதியானவர்களுக்குச் சோதனைகளும் நீங்கள் வெறுக்கின்ற பல விஷயங்களும் ஏற்படும். ஒரு குழப்பம் தோன்றும். அது முந்தைய குழப்பத்தை இலேசானதாக ஆக்கிவிடும்.

பிறகு மற்றோரு குழப்பம் தோன்றும். அப்போது இறைநம்பிக்கையாளர், ‘இதில்தான் என் அழிவு உள்ளது’ என்று கூறுவார். பிறகு அந்தக் குழப்பம் விலகிவிடும். பிறகு மற்றொரு குழப்பம் தோன்றும். அப்போது இறைநம்பிக்கையாளர், ‘இதுதான்; இதுவேதான்’ என்பார்.

ஆகவே, (நரக) நெருப்பிலிருந்து விலக்கப்பட்டு, சொர்க்கத்தில் அனுமதிக்கப்படுவதற்கு விரும்புகின்றவர் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கும் நிலையிலேயே இறப்பு அவரைத் தழுவட்டும். தமக்கு எது கிடைக்க வேண்டும் என்று விரும்புவாரோ அதையே மக்களுக்கும் அவர் விரும்பட்டும். ஓர் ஆட்சித் தலைவருக்கு வாக்குறுதிப் பிரமாணம் (பைஅத்) அளித்தவர், அவருடன் தமது கரத்தை இணைப்பதுடன் உளப்பூர்வமான ஆதரவையும் அவருக்கு வழங்கட்டும்; தம்மால் இயன்றவரை அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கட்டும். அவரு(டைய ஆட்சி)க்கெதிராக அவருடன் சண்டையிடுவதற்காக மற்றொருவர் வந்தால் அவருடைய கழுத்தை வெட்டிவிடுங்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

இவ்வாறு அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) கூறியதும் நான் அவர்களை நெருங்கி, அல்லாஹ்வின் பெயரால் நான் உங்களிடம் கேட்கிறேன். “இதைத் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அப்போது அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) தம் கரங்களால் தம் காதுகளையும் உள்ளத்தையும் நோக்கி சைகை செய்துகாட்டி, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை என் காதுகள் கேட்டன; என் உள்ளம் அதை மனனமிட்டது” என்று கூறினார்கள்.

நான் அவர்களிடம், “இதோ! உங்கள் தந்தையின் சகோதரர் மகன் முஆவியா (ரலி) (கலீஃபா அலீ (ரலி) அவர்களுக்கெதிராக நிதியும் படையும் திரட்டி) எங்கள் பொருட்களை எங்களுக்கிடையே தவறான முறையில் உண்ணும்படியும் நம்மவர்களை நாமே கொல்லும்படியும் எங்களுக்கு உத்தரவிடுகின்றார். ஆனால், அல்லாஹ்வோ, “இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களின் பரஸ்பரத் திருப்தியுடன் நடக்கும் வணிகமாக இருந்தால் தவிர, (வேறு வழிகளில்) உங்களுக்கிடையே உங்கள் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். உங்களை நீங்களே கொலை செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களிடம் மிகவும் கருணை உடையவனாக இருக்கின்றான் (4:29) என்று கூறுகின்றானே?” என்று கேட்டேன்.

அதற்கு (பதிலளிக்காமல்) அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள். பிறகு, “அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியும் விஷயத்தில் அவருக்கு நீ கட்டுப்படு! அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விஷயத்தில் அவருக்கு மாறுசெய்துவிடு” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி வழியாக அப்துர் ரஹ்மான் பின் அப்தி ரப்பில் கஅபா (ரஹ்)


குறிப்பு :

ஆமிர் (ரஹ்) வழி அறிவிப்பு, “நான் இறையில்லம் கஅபா அருகில் ஒரு கூட்டத்தைக் கண்டேன் …” என ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

அத்தியாயம்: 33, பாடம்: 10, ஹதீஸ் எண்: 3428

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، وَوَكِيعٌ، ح وَحَدَّثَنِي أَبُو سَعِيدٍ الأَشَجُّ حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَابْنُ نُمَيْرٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالاَ أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، كُلُّهُمْ عَنِ الأَعْمَشِ، ح وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ إِنَّهَا سَتَكُونُ بَعْدِي أَثَرَةٌ وَأُمُورٌ تُنْكِرُونَهَا ‏”‏ ‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَأْمُرُ مَنْ أَدْرَكَ مِنَّا ذَلِكَ قَالَ ‏”‏ تُؤَدُّونَ الْحَقَّ الَّذِي عَلَيْكُمْ وَتَسْأَلُونَ اللَّهَ الَّذِي لَكُمْ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “எனக்குப் பின் விரைவில் உங்களைவிடப் பிறருக்கு (அதிகாரப் பகிர்வில்) முன்னுரிமை வழங்கப்படுதலும் நீங்கள் வெறுக்கின்ற சில நிகழ்வுகளும் நடக்கும்” என்று கூறினார்கள். அன்ஸாரிகள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் அவற்றைச் சந்திக்கக்கூடியவர் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?” என்று கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(ஆட்சியாளர்களான) அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்து விடுங்கள். உங்கள் உரிமையை அல்லாஹ்விடம் கேளுங்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 33, பாடம்: 10, ஹதீஸ் எண்: 3427

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ فُرَاتٍ الْقَزَّازِ، عَنْ أَبِي حَازِمٍ قَالَ :‏

قَاعَدْتُ أَبَا هُرَيْرَةَ خَمْسَ سِنِينَ فَسَمِعْتُهُ يُحَدِّثُ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ كَانَتْ بَنُو إِسْرَائِيلَ تَسُوسُهُمُ الأَنْبِيَاءُ كُلَّمَا هَلَكَ نَبِيٌّ خَلَفَهُ نَبِيٌّ وَإِنَّهُ لاَ نَبِيَّ بَعْدِي وَسَتَكُونُ خُلَفَاءُ فَتَكْثُرُ ‏”‏ ‏.‏ قَالُوا فَمَا تَأْمُرُنَا قَالَ ‏”‏ فُوا بِبَيْعَةِ الأَوَّلِ فَالأَوَّلِ وَأَعْطُوهُمْ حَقَّهُمْ فَإِنَّ اللَّهَ سَائِلُهُمْ عَمَّا اسْتَرْعَاهُمْ ‏”‏ ‏


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَبْدُ اللَّهِ بْنُ بَرَّادٍ الأَشْعَرِيُّ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، بْنُ إِدْرِيسَ عَنِ الْحَسَنِ بْنِ فُرَاتٍ، عَنْ أَبِيهِ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ ‏.‏

நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் ஐந்தாண்டுகள் (கல்வி கற்பதற்காக) அமர்ந்திருந்தேன். அபூஹுரைரா (ரலி) (ஒரு முறை) கூறினார்கள்:

“பனூ இஸ்ராயீல் மக்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். ஓர் இறைத்தூதர் இறக்கும்போது மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். (ஆனால்,) எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை. ஆயினும், எனக்குப் பின் கலீஃபாக்கள் (பிரதிநிதிகள்) பலர் தோன்றுவார்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்” . “ நாங்கள் என்ன செய்ய வேண்டுமென நீங்கள் உத்தரவிடுகின்றீர்கள்?” என்று நபித்தோழர்கள் கேட்டனர்.

அதற்கு நபி (ஸல்), “அவர்களில் முதலாவதாக வருபவரிடம் உறுதிப் பிரமாணம் (அளித்து உங்கள் கடமையை) நிறைவேற்றுங்கள். பிறகு (முதலாமவருக்குப் பின்னர்) அடுத்து வருபவரிடம் (அந்தக் கடமையை நிறைவேற்றுங்கள்). அவர்களுக்கு அவர்களின் உரிமையைக் கொடுத்துவிடுங்கள். ஏனெனில், அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்களிடமே அல்லாஹ் கேட்கவிருக்கின்றான்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூஹாஸிம் (ரஹ்)

அத்தியாயம்: 33, பாடம்: 9, ஹதீஸ் எண்: 3426

حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ مُسْلِمٍ، حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنِي وَرْقَاءُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :‏

‏ “‏ إِنَّمَا الإِمَامُ جُنَّةٌ يُقَاتَلُ مِنْ وَرَائِهِ وَيُتَّقَى بِهِ فَإِنْ أَمَرَ بِتَقْوَى اللَّهِ عَزَّ وَجَلَّ وَعَدَلَ كَانَ لَهُ بِذَلِكَ أَجْرٌ وَإِنْ يَأْمُرْ بِغَيْرِهِ كَانَ عَلَيْهِ مِنْهُ ‏”‏‏

“ஆட்சித் தலைவர் ஒரு கேடயம் போன்றவர். போர் நடப்பது அவருடன்தான். பாதுகாப்புப் பெறப்படுவதும் அவர் மூலமே. அவர் (தமது தலைமையின் கீழுள்ள குடிமக்களுக்கு) இறையச்ச உணர்வைக் கைக்கொள்ளும்படிக் கட்டளையிட்டு நீதியுடன் நடந்துகொண்டால், அவருக்கு அதன் காரணமாக (பெரும்) நற்பலன் உண்டு. அதற்கு மாற்றமாக (தீமையானவற்றை) அவர் கட்டளை இட்டால் அதனால் ஏற்படும் பாவம் அவர்மீது(ம்) சாரும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 33, பாடம்: 8, ஹதீஸ் எண்: 3425

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَهْبِ بْنِ مُسْلِمٍ، حَدَّثَنَا عَمِّي عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ، حَدَّثَنِي بُكَيْرٌ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ جُنَادَةَ بْنِ أَبِي أُمَيَّةَ قَالَ :‏

دَخَلْنَا عَلَى عُبَادَةَ بْنِ الصَّامِتِ وَهُوَ مَرِيضٌ فَقُلْنَا حَدِّثْنَا أَصْلَحَكَ اللَّهُ، بِحَدِيثٍ يَنْفَعُ اللَّهُ بِهِ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَقَالَ دَعَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَبَايَعْنَاهُ فَكَانَ فِيمَا أَخَذَ عَلَيْنَا أَنْ بَايَعَنَا عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي مَنْشَطِنَا وَمَكْرَهِنَا وَعُسْرِنَا وَيُسْرِنَا وَأَثَرَةٍ عَلَيْنَا وَأَنْ لاَ نُنَازِعَ الأَمْرَ أَهْلَهُ قَالَ ‏ “‏ إِلاَّ أَنْ تَرَوْا كُفْرًا بَوَاحًا عِنْدَكُمْ مِنَ اللَّهِ فِيهِ بُرْهَانٌ ‏”‏

உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) நோய்வாய்ப்பட்டிருந்தபோது நாங்கள் அவர்களிடம் (உடல்நலம் விசாரிக்கச்) சென்றோம். நாங்கள், “அல்லாஹ் உங்களுக்குக் குணமளிக்கட்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்ட ஒரு ஹதீஸை எங்களுக்கு அறிவியுங்கள். அதனால் அல்லாஹ் பயன் அளிப்பான்” என்று சொன்னோம்.

அதற்கு உபாதா (ரலி) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களை அழைத்தார்கள். நாங்கள் அவர்களிடம் (சென்று இஸ்லாத்தில் நிலைத்திருப்பதாக) உறுதிமொழி அளித்தோம். எங்களுக்கு விருப்பமானவற்றிலும் எங்களுக்கு விருப்பமில்லாதவற்றிலும் நாங்கள் சிரமத்திலிருக்கும்போதும் வசதியாயிருக்கும்போதும் எங்களைவிட மற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்போதும்கூட (தலைமையின் கட்டளையைச்) செவியுற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம் என்றும், ஆட்சியதிகாரத்தில் இருப்போருடன் அவருடைய அதிகாரம் தொடர்பான விஷயத்தில் நாங்கள் சண்டையிடமாட்டோம் என்றும் உறுதிமொழி அளித்தோம்.

“பகிரங்கமான இறைமறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதை ஆட்சியாளர்களிடம் நீங்கள் கண்டாலே தவிர” என்று எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும்.

அறிவிப்பாளர் : உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) வழியாக ஜுனாதா பின் அபீஉமய்யா (ரஹ்)

அத்தியாயம்: 33, பாடம்: 8, ஹதீஸ் எண்: 3424

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، وَعُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ :‏

بَايَعْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي الْعُسْرِ وَالْيُسْرِ وَالْمَنْشَطِ وَالْمَكْرَهِ وَعَلَى أَثَرَةٍ عَلَيْنَا وَعَلَى أَنْ لاَ نُنَازِعَ الأَمْرَ أَهْلَهُ وَعَلَى أَنْ نَقُولَ بِالْحَقِّ أَيْنَمَا كُنَّا لاَ نَخَافُ فِي اللَّهِ لَوْمَةَ لاَئِمٍ ‏


وَحَدَّثَنَاهُ ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، – يَعْنِي ابْنَ إِدْرِيسَ – حَدَّثَنَا ابْنُ عَجْلاَنَ، وَعُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَيَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ، فِي هَذَا الإِسْنَادِ مِثْلَهُ ‏‏

وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، – يَعْنِي الدَّرَاوَرْدِيَّ – عَنْ يَزِيدَ، – وَهُوَ ابْنُ الْهَادِ – عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِيهِ، حَدَّثَنِي أَبِي قَالَ، بَايَعْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِمِثْلِ حَدِيثِ ابْنِ إِدْرِيسَ ‏‏

இன்பத்திலும் துன்பத்திலும் விருப்பிலும் வெறுப்பிலும் எங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்போதும் (தலைமையின் கட்டளையைச்) செவியுற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம் என்றும், அதிகாரத்திலிருப்போருடன் அவருடைய அதிகாரம் தொடர்பாகச் சண்டையிடமாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் உண்மையே பேசுவோம் என்றும், அல்லாஹ்வின் விஷயத்தில், பழிப்போரின் பழிப்புக்கு அஞ்சமாட்டோம் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாங்கள் உறுதிமொழி அளித்தோம்.

அறிவிப்பாளர் : உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)

அத்தியாயம்: 33, பாடம்: 8, ஹதீஸ் எண்: 3423

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ – وَتَقَارَبُوا فِي اللَّفْظِ – قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَلِيٍّ قَالَ :‏

بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَرِيَّةً وَاسْتَعْمَلَ عَلَيْهِمْ رَجُلاً مِنَ الأَنْصَارِ وَأَمَرَهُمْ أَنْ يَسْمَعُوا لَهُ وَيُطِيعُوا فَأَغْضَبُوهُ فِي شَىْءٍ فَقَالَ اجْمَعُوا لِي حَطَبًا ‏.‏ فَجَمَعُوا لَهُ ثُمَّ قَالَ أَوْقِدُوا نَارًا ‏.‏ فَأَوْقَدُوا ثُمَّ قَالَ أَلَمْ يَأْمُرْكُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ تَسْمَعُوا لِي وَتُطِيعُوا قَالُوا بَلَى ‏.‏ قَالَ فَادْخُلُوهَا ‏.‏ قَالَ فَنَظَرَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ فَقَالُوا إِنَّمَا فَرَرْنَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ النَّارِ ‏.‏ فَكَانُوا كَذَلِكَ وَسَكَنَ غَضَبُهُ وَطُفِئَتِ النَّارُ فَلَمَّا رَجَعُوا ذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ “‏ لَوْ دَخَلُوهَا مَا خَرَجُوا مِنْهَا إِنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوفِ ‏”‏


وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، وَأَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு படைப் பிரிவை அனுப்பி, அவர்களுக்கு அன்ஸாரிகளில் ஒருவரைத் தளபதியாக்கி, அவரது கட்டளையைச் செவியுற்றுக் கட்டுப்பட்டு நடக்கும்படி படை வீரர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்கள். ஏதோ ஒரு விஷயத்தில் படை வீரர்கள், தளபதியைக் கோபப்படுத்திவிட்டனர். அப்போது அவர், “விறகைச் சேகரியுங்கள்” என்று கூறினார். அவ்வாறே அவர்கள் விறகைச் சேகரித்ததும் “நெருப்பை மூட்டுங்கள்” என்று உத்தர விட்டார்.

அவ்வாறே அவர்கள் நெருப்பை மூட்டிய பின், “நீங்கள் எனது சொல்லைச் செவியுற்று, அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உங்களுக்குக் கட்டளையிடவில்லையா?” என்று கேட்டார். படை வீரர்கள், “ஆம்” என்றனர். “அவ்வாறாயின் நெருப்பில் குதியுங்கள்” என்று அவர் உத்தரவிட்டார்.

அப்போது படைவீரர்கள் ஒருவரையொருவர் பார்த்தபடி, “(நரக) நெருப்பிலிருந்து தப்பிக்கத்தானே நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வெருண்டோடி வந்தோம்!” என்று கூறினர். அவ்வாறே அவர்கள் (சிறிது நேரம்) இருந்துகொண்டிருக்க, அவருடைய கோபம் தணிந்தது; நெருப்பும் அணைந்தது.

பிறகு (மதீனாவுக்குத் திரும்பியதும்) நபி (ஸல்) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தனர். “அதில் (மட்டும்) அவர்கள் குதித்திருந்தால், அதிலிருந்து அவர்கள் (ஒருபோதும்) வெளியேறியிருக்கமாட்டார்கள். கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான்” என்று நபி (ஸல்) சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி)