அத்தியாயம்: 33, பாடம்: 8, ஹதீஸ் எண்: 3423

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ – وَتَقَارَبُوا فِي اللَّفْظِ – قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَلِيٍّ قَالَ :‏

بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَرِيَّةً وَاسْتَعْمَلَ عَلَيْهِمْ رَجُلاً مِنَ الأَنْصَارِ وَأَمَرَهُمْ أَنْ يَسْمَعُوا لَهُ وَيُطِيعُوا فَأَغْضَبُوهُ فِي شَىْءٍ فَقَالَ اجْمَعُوا لِي حَطَبًا ‏.‏ فَجَمَعُوا لَهُ ثُمَّ قَالَ أَوْقِدُوا نَارًا ‏.‏ فَأَوْقَدُوا ثُمَّ قَالَ أَلَمْ يَأْمُرْكُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ تَسْمَعُوا لِي وَتُطِيعُوا قَالُوا بَلَى ‏.‏ قَالَ فَادْخُلُوهَا ‏.‏ قَالَ فَنَظَرَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ فَقَالُوا إِنَّمَا فَرَرْنَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ النَّارِ ‏.‏ فَكَانُوا كَذَلِكَ وَسَكَنَ غَضَبُهُ وَطُفِئَتِ النَّارُ فَلَمَّا رَجَعُوا ذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ “‏ لَوْ دَخَلُوهَا مَا خَرَجُوا مِنْهَا إِنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوفِ ‏”‏


وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، وَأَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு படைப் பிரிவை அனுப்பி, அவர்களுக்கு அன்ஸாரிகளில் ஒருவரைத் தளபதியாக்கி, அவரது கட்டளையைச் செவியுற்றுக் கட்டுப்பட்டு நடக்கும்படி படை வீரர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்கள். ஏதோ ஒரு விஷயத்தில் படை வீரர்கள், தளபதியைக் கோபப்படுத்திவிட்டனர். அப்போது அவர், “விறகைச் சேகரியுங்கள்” என்று கூறினார். அவ்வாறே அவர்கள் விறகைச் சேகரித்ததும் “நெருப்பை மூட்டுங்கள்” என்று உத்தர விட்டார்.

அவ்வாறே அவர்கள் நெருப்பை மூட்டிய பின், “நீங்கள் எனது சொல்லைச் செவியுற்று, அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உங்களுக்குக் கட்டளையிடவில்லையா?” என்று கேட்டார். படை வீரர்கள், “ஆம்” என்றனர். “அவ்வாறாயின் நெருப்பில் குதியுங்கள்” என்று அவர் உத்தரவிட்டார்.

அப்போது படைவீரர்கள் ஒருவரையொருவர் பார்த்தபடி, “(நரக) நெருப்பிலிருந்து தப்பிக்கத்தானே நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வெருண்டோடி வந்தோம்!” என்று கூறினர். அவ்வாறே அவர்கள் (சிறிது நேரம்) இருந்துகொண்டிருக்க, அவருடைய கோபம் தணிந்தது; நெருப்பும் அணைந்தது.

பிறகு (மதீனாவுக்குத் திரும்பியதும்) நபி (ஸல்) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தனர். “அதில் (மட்டும்) அவர்கள் குதித்திருந்தால், அதிலிருந்து அவர்கள் (ஒருபோதும்) வெளியேறியிருக்கமாட்டார்கள். கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான்” என்று நபி (ஸல்) சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி)