அத்தியாயம்: 44, பாடம்: 32, ஹதீஸ் எண்: 4517

حَدَّثَنَا حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا عَارِمُ بْنُ الْفَضْلِ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏

أَسَرَّ إِلَىَّ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم سِرًّا فَمَا أَخْبَرْتُ بِهِ أَحَدًا بَعْدُ ‏.‏ وَلَقَدْ سَأَلَتْنِي عَنْهُ أُمُّ سُلَيْمٍ فَمَا أَخْبَرْتُهَا بِهِ

நபி (ஸல்) என்னிடம் ஓர் இரகசியம் சொன்னார்கள். அவர்களது இறப்புக்குப் பிறகும்கூட ஒருவரிடமும் அதை நான் தெரிவிக்கவில்லை. என்னிடம் (என் தாயார்) உம்மு ஸுலைம் (ரலி) அது குறித்துக் கேட்டார்கள். அதை நான் அவருக்கும் தெரிவிக்கவில்லை.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 32, ஹதீஸ் எண்: 4516

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ قَالَ :‏

أَتَى عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا أَلْعَبُ مَعَ الْغِلْمَانِ – قَالَ – فَسَلَّمَ عَلَيْنَا فَبَعَثَنِي إِلَى حَاجَةٍ فَأَبْطَأْتُ عَلَى أُمِّي فَلَمَّا جِئْتُ قَالَتْ مَا حَبَسَكَ قُلْتُ بَعَثَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِحَاجَةٍ ‏.‏ قَالَتْ مَا حَاجَتُهُ قُلْتُ إِنَّهَا سِرٌّ ‏.‏ قَالَتْ لاَ تُحَدِّثَنَّ بِسِرِّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَحَدًا ‏


قَالَ أَنَسٌ وَاللَّهِ لَوْ حَدَّثْتُ بِهِ أَحَدًا لَحَدَّثْتُكَ يَا ثَابِتُ ‏

நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பணியாளனாக இருந்தபோது) என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்தார்கள். அப்போது நான் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தேன். நபி (ஸல்) எங்களுக்கு முகமன் (ஸலாம்) சொன்னார்கள். பிறகு என்னை ஓர் அலுவல் நிமித்தம் (ஓரிடத்திற்கு) அனுப்பிவைத்தார்கள். நான் என் தாயாரிடம் தாமதமாகவே வந்தேன். நான் (வீட்டுக்கு) வந்தபோது என் தாயார், “உன் தாமதத்திற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஓர் அலுவலுக்காக என்னை அனுப்பிவைத்தார்கள்” என்று பதிலளித்தேன். அப்போது என் தாயார், “என்ன அலுவல்?” என்று கேட்டார்கள். நான், “அது இரகசியம்” என்று சொன்னேன். என் தாயார், “நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரகசியத்தை யாரிடமும் சொல்லாதே” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

(இதன் அறிவிப்பாளரான) ஸாபித் அல்புனானீ (ரஹ்) கூறுகின்றார்: (அனஸ் (ரலி) இந்த ஹதீஸை என்னிடம் அறிவித்தபோது) “அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த இரகசியத்தை நான் யாரிடமாவது சொல்வதாயிருந்தால் ஸாபித்தே! உங்களிடம் அதைச் சொல்லியிருப்பேன்” என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 44, பாடம்: 32, ஹதீஸ் எண்: 4515

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَعْفَرٌ، – يَعْنِي ابْنَ سُلَيْمَانَ – عَنِ الْجَعْدِ أَبِي عُثْمَانَ، قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ :‏

مَرَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَسَمِعَتْ أُمِّي أُمُّ سُلَيْمٍ صَوْتَهُ فَقَالَتْ بِأَبِي وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ أُنَيْسٌ ‏.‏ فَدَعَا لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثَ دَعَوَاتٍ قَدْ رَأَيْتُ مِنْهَا اثْنَتَيْنِ فِي الدُّنْيَا وَأَنَا أَرْجُو الثَّالِثَةَ فِي الآخِرَةِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு முறை) எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது என் தாயார் உம்மு ஸுலைம் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குரலைக் கேட்டார்கள். உடனே (அவர்களிடம் சென்று),  “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! (இதோ உங்கள் பணியாளன்) அனஸ்” என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்காக மூன்று பிரார்த்தனைகளைச் செய்தார்கள். அவற்றில் இரண்டை நான் இந்த உலகத்திலேயே பெற்றுவிட்டேன். மூன்றாவதை நான் மறுமையில் எதிர்பார்க்கின்றேன்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 32, ஹதீஸ் எண்: 4514

حَدَّثَنِي أَبُو مَعْنٍ الرَّقَاشِيُّ، حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عِكْرِمَةُ، حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا أَنَسٌ قَالَ :‏

جَاءَتْ بِي أُمِّي أُمُّ أَنَسٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدْ أَزَّرَتْنِي بِنِصْفِ خِمَارِهَا وَرَدَّتْنِي بِنِصْفِهِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ هَذَا أُنَيْسٌ ابْنِي أَتَيْتُكَ بِهِ يَخْدُمُكَ فَادْعُ اللَّهَ لَهُ ‏.‏ فَقَالَ ‏ “‏ اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ ‏”‏ ‏.‏ قَالَ أَنَسٌ فَوَاللَّهِ إِنَّ مَالِي لَكَثِيرٌ وَإِنَّ وَلَدِي وَوَلَدَ وَلَدِي لَيَتَعَادُّونَ عَلَى نَحْوِ الْمِائَةِ الْيَوْمَ ‏‏

என் தாயார் (சிறுவனாயிருந்த) என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். அப்போது தமது முக்காட்டுத் துணியில் ஒரு பகுதியை எனக்குக் கீழாடையாகவும் மற்றொரு பகுதியை எனக்கு மேல் துண்டாகவும் போர்த்திவிட்டிருந்தார்கள். என் தாயார், “அல்லாஹ்வின் தூதரே! இவன் என் (செல்ல) மகன் அனஸ். உங்களுக்குப் பணியாற்றுவதற்காக இவனை உங்களிடம் அழைத்துவந்துள்ளேன். இவனுக்காகப் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைவா! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றைய தினத்தில் என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. என் பிள்ளைகள் மற்றும் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் எண்ணிக்கை சுமார் நூறை எட்டியிருக்கிறது.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 32, ஹதீஸ் எண்: 4513

وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا سُلَيْمَانُ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ قَالَ :‏

دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَيْنَا وَمَا هُوَ إِلاَّ أَنَا وَأُمِّي وَأُمُّ حَرَامٍ خَالَتِي فَقَالَتْ أُمِّي يَا رَسُولَ اللَّهِ خُوَيْدِمُكَ ادْعُ اللَّهَ لَهُ – قَالَ – فَدَعَا لِي بِكُلِّ خَيْرٍ وَكَانَ فِي آخِرِ مَا دَعَا لِي بِهِ أَنْ قَالَ ‏ “‏ اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيهِ ‏”‏

நபி (ஸல்) எங்களிடம் (எங்கள் இல்லத்திற்கு ஒரு முறை) வந்தார்கள். அப்போது அங்கு நானும் என் தாயாரும் என் தாயின் சகோதரி உம்மு ஹராம் (ரலி) அவர்களுமே இருந்தோம். அப்போது என் தாயார், “அல்லாஹ்வின் தூதரே! (இதோ) உங்கள் அன்புச்  சேவகன் (அனஸ்). இவனுக்காகப் பிரார்த்தியுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது நபி (ஸல்) எனக்காக எல்லாவித நலன்களும் வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அவர்கள் தமது பிரார்த்தனையின் முடிவில், “இறைவா! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்கி, அ(வருக்கு நீ அளித்திருப்ப)தில் வளம் சேர்ப்பாயாக!” என்று எனக்காக வேண்டினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 32, ஹதீஸ் எண்: 4512

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسٍ :‏

عَنْ أُمِّ سُلَيْمٍ، أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ خَادِمُكَ أَنَسٌ ادْعُ اللَّهَ لَهُ فَقَالَ ‏ “‏ اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ ‏”‏ ‏


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، سَمِعْتُ أَنَسًا، يَقُولُ قَالَتْ أُمُّ سُلَيْمٍ يَا رَسُولَ اللَّهِ خَادِمُكَ أَنَسٌ ‏.‏ فَذَكَرَ نَحْوَهُ ‏‏

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ مِثْلَ ذَلِكَ

என் தாயார் உம்மு ஸுலைம் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! (இதோ) அனஸ்; (இனிமேல்) உங்கள் பணியாளன். இவனுக்காகப் பிரார்த்தியுங்கள்” என்றார்கள்.

நபி (ஸல்), “இறைவா! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! அவருக்கு நீ வழங்கியுள்ள(ஆயுள் முதலான)வற்றில் வளம் சேர்ப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

அபூதாவூத் (ரஹ்) வழி அறிவிப்பு, “(என் தாயார்) உம்மு ஸுலைம் (ரலி), அல்லாஹ்வின் தூதரே! (இதோ) உங்கள் பணியாளன் அனஸ்…” என்று கூறியதாக ஆரம்பமாகிறது.

அத்தியாயம்: 44, பாடம்: 31, ஹதீஸ் எண்: 4511

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، – وَاللَّفْظُ لِعَبْدٍ – قَالاَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ :‏

كَانَ الرَّجُلُ فِي حَيَاةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا رَأَى رُؤْيَا قَصَّهَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَتَمَنَّيْتُ أَنْ أَرَى رُؤْيَا أَقُصُّهَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ وَكُنْتُ غُلاَمًا شَابًّا عَزَبًا وَكُنْتُ أَنَامُ فِي الْمَسْجِدِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَرَأَيْتُ فِي النَّوْمِ كَأَنَّ مَلَكَيْنِ أَخَذَانِي فَذَهَبَا بِي إِلَى النَّارِ فَإِذَا هِيَ مَطْوِيَّةٌ كَطَىِّ الْبِئْرِ وَإِذَا لَهَا قَرْنَانِ كَقَرْنَىِ الْبِئْرِ وَإِذَا فِيهَا نَاسٌ قَدْ عَرَفْتُهُمْ فَجَعَلْتُ أَقُولُ أَعُوذُ بِاللَّهِ مِنَ النَّارِ أَعُوذُ بِاللَّهِ مِنَ النَّارِ أَعُوذُ بِاللَّهِ مِنَ النَّارِ – قَالَ – فَلَقِيَهُمَا مَلَكٌ فَقَالَ لِي لَمْ تُرَعْ ‏.‏ فَقَصَصْتُهَا عَلَى حَفْصَةَ فَقَصَّتْهَا حَفْصَةُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ “‏ نِعْمَ الرَّجُلُ عَبْدُ اللَّهِ لَوْ كَانَ يُصَلِّي مِنَ اللَّيْلِ ‏”‏


قَالَ سَالِمٌ فَكَانَ عَبْدُ اللَّهِ بَعْدَ ذَلِكَ لاَ يَنَامُ مِنَ اللَّيْلِ إِلاَّ قَلِيلاً ‏

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا مُوسَى بْنُ خَالِدٍ، خَتَنُ الْفِرْيَابِيِّ عَنْ أَبِي إِسْحَاقَ الْفَزَارِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كُنْتُ أَبِيتُ فِي الْمَسْجِدِ وَلَمْ يَكُنْ لِي أَهْلٌ فَرَأَيْتُ فِي الْمَنَامِ كَأَنَّمَا انْطُلِقَ بِي إِلَى بِئْرٍ ‏.‏ فَذَكَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَعْنَى حَدِيثِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உயிரோடிருந்த காலத்தில் ஒருவர் கனவொன்றைக் கண்டால், அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விவரித்துச் சொல்வார். அவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விவரித்துச் சொல்வதற்காக ஒரு கனவை நானும் காண வேண்டும் என்று ஆசைப்பட்டேன். (அப்போது) நான் மணமாகாத ஓர் இளைஞனாக இருந்தேன். அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் பள்ளிவாசலில் நான் உறங்குவது வழக்கம்.

கனவில் (ஒரு நாள்) கண்டேன்: வானவர்கள் இருவர் என்னைப் பிடித்து நரகத்தை நோக்கிக் கொண்டுசென்றார்கள். கிணற்றின் சுற்றுச் சுவரைப் போன்று அதற்குச் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. மேலும் கிணற்றின் இரு பக்கங்களிலுமுள்ள கல் தூண்களைப் போன்று இரு தூண்கள் அதற்கும் இருந்தன. அதனுள் எனக்குத் தெரிந்த மக்கள் சிலர் இருந்தனர்.

உடனே நான், “நரகத்திலிருந்து காக்கும்படி அல்லாஹ்விடம் கோருகின்றேன்; நரகத்திலிருந்து காக்கும்படி அல்லாஹ்விடம் கோருகின்றேன்; நரகத்திலிருந்து காக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டுகின்றேன்” என்று பிரார்த்திக்கலானேன். (அப்போது என்னைப் பிடித்துச் சென்ற) அவ்விரு வானவரையும் வேறொரு வானவர் சந்தித்தார். அவர் என்னிடம், “இனி ஒருபோதும் நீங்கள் பீதியடையமாட்டீர்கள்” என்று சொன்னார்.

நான் இதை (என் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் விவரித்தேன். ஹஃப்ஸா (ரலி), அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விவரித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அப்துல்லாஹ் (பின் உமர்) ஒரு நல்ல மனிதர்; அவர் இரவின் ஒரு பகுதியில் தொழுதால் (நன்றாயிருக்கும்)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்புகள் :

(இதை அறிவித்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் மகன்) ஸாலிம் (ரஹ்), “(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இப்படிச் சொன்னதிலிருந்து) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) இரவில் சிறிது நேரம் மட்டுமே உறங்குபவராயிருந்தார்கள்” என்று கூறுகிறார்கள்.

நாஃபிஉ (ரஹ்) வழி அறிவிப்பு, “நான் குடும்பம் (மனைவி, மக்கள்) இல்லாதவனாயிருந்தபோது இரவில் பள்ளி வாசலில் உறங்கிவந்தேன். (ஒரு நாள்) கனவில் ஒரு கிணற்றை நோக்கி நான் இழுத்துச் செல்லப்படுவதைப் போன்று கண்டேன்” என்று ஆரம்பமாகிறது.

அத்தியாயம்: 44, பாடம்: 31, ஹதீஸ் எண்: 4510

حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، وَخَلَفُ بْنُ هِشَامٍ، وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ كُلُّهُمْ عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ – قَالَ أَبُو الرَّبِيعِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، – حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ:‏

رَأَيْتُ فِي الْمَنَامِ كَأَنَّ فِي يَدِي قِطْعَةَ إِسْتَبْرَقٍ وَلَيْسَ مَكَانٌ أُرِيدُ مِنَ الْجَنَّةِ إِلاَّ طَارَتْ إِلَيْهِ – قَالَ – فَقَصَصْتُهُ عَلَى حَفْصَةَ فَقَصَّتْهُ حَفْصَةُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ “‏ أَرَى عَبْدَ اللَّهِ رَجُلاً صَالِحًا ‏”‏ ‏

நான் (நபியவர்களின் காலத்தில்), எனது கையில் பட்டுத் துண்டு இருப்பதைப் போன்றும் சொர்க்கத்தில் நான் விரும்புகின்ற இடத்திற்கெல்லாம் அது என்னைத் தூக்கிக்கொண்டு பறப்பதைப் போன்றும் கனவு கண்டேன். இது குறித்து நான்  (என் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் எடுத்துரைத்தேன். அது குறித்து ஹஃப்ஸா, நபி (ஸல்) அவர்களிடம் விவரித்தபோது நபி (ஸல்), “நானறிந்த வரையில் அப்துல்லாஹ் ஒரு நல்ல மனிதர்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 30, ஹதீஸ் எண்: 4509

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَأَبُو بَكْرِ بْنُ النَّضْرِ قَالاَ حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا وَرْقَاءُ بْنُ عُمَرَ الْيَشْكُرِيُّ، قَالَ سَمِعْتُ عُبَيْدَ اللَّهِ بْنَ أَبِي يَزِيدَ، يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ :‏

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَتَى الْخَلاَءَ فَوَضَعْتُ لَهُ وَضُوءًا فَلَمَّا خَرَجَ قَالَ ‏”‏ مَنْ وَضَعَ هَذَا ‏”‏ ‏.‏ فِي رِوَايَةِ زُهَيْرٍ قَالُوا ‏.‏ وَفِي رِوَايَةِ أَبِي بَكْرٍ قُلْتُ ابْنُ عَبَّاسٍ ‏.‏ قَالَ ‏”‏ اللَّهُمَّ فَقِّهْهُ ‏”‏ ‏

நபி (ஸல்) (ஒரு முறை) கழிப்பிடத்திற்குச் சென்றார்கள். நான் அவர்களுக்காக நீர் வைத்தேன். அவர்கள் வெளியே வந்ததும் “இதை வைத்தவர் யார்?” என்று கேட்டார்கள். மக்கள், “இப்னு அப்பாஸ்“ என்று கூறினர். நபி (ஸல்), “இறைவா! அவருக்கு மார்க்கத்தில் (நல்ல) விளக்கத்தை அளிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக ஸுஹைர் பின் ஹர்பு (ரஹ்)


குறிப்பு :

அபூபக்ரு பின் அந்நள்ரு (ரஹ்) வழி அறிவிப்பில், (மக்கள் என்பதற்குப் பதிலாக) “நான், இப்னு அப்பாஸ் (வைத்தேன்)” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 44, பாடம்: 29, ஹதீஸ் எண்: 4508

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ الْبَجَلِيِّ قَالَ :‏

قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ يَا جَرِيرُ أَلاَ تُرِيحُنِي مِنْ ذِي الْخَلَصَةِ ‏”‏ ‏.‏ بَيْتٍ لِخَثْعَمَ كَانَ يُدْعَى كَعْبَةَ الْيَمَانِيَةِ ‏.‏ قَالَ فَنَفَرْتُ فِي خَمْسِينَ وَمِائَةِ فَارِسٍ وَكُنْتُ لاَ أَثْبُتُ عَلَى الْخَيْلِ فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَضَرَبَ يَدَهُ فِي صَدْرِي فَقَالَ ‏”‏ اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا ‏”‏ ‏.‏ قَالَ فَانْطَلَقَ فَحَرَّقَهَا بِالنَّارِ ثُمَّ بَعَثَ جَرِيرٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلاً يُبَشِّرُهُ يُكْنَى أَبَا أَرْطَاةَ مِنَّا فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ مَا جِئْتُكَ حَتَّى تَرَكْنَاهَا كَأَنَّهَا جَمَلٌ أَجْرَبُ ‏.‏ فَبَرَّكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى خَيْلِ أَحْمَسَ وَرِجَالِهَا خَمْسَ مَرَّاتٍ ‏


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا سُفْيَانُ، ح وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا مَرْوَانُ، – يَعْنِي الْفَزَارِيَّ ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، كُلُّهُمْ عَنْ إِسْمَاعِيلَ، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ فِي حَدِيثِ مَرْوَانَ فَجَاءَ بَشِيرُ جَرِيرٍ أَبُو أَرْطَاةَ حُصَيْنُ بْنُ رَبِيعَةَ يُبَشِّرُ النَّبِيَّ صلى الله عليه وسلم ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம், “ஜரீரே! துல்கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். அது, ‘கஸ்அம்’ குலத்தாரின் ஓர் ஆலயமாக இருந்தது. அது ‘யமன் நாட்டு கஅபா’ என்றும் அழைக்கப்பட்டுவந்தது.

எனவே, நான் (‘அஹ்மஸ்’ குலத்தைச் சேர்ந்த) நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் விரைந்தேன். நான் குதிரையின் மீது (சரியாக) அமர முடியாதவனாக இருந்தேன். இது பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது கரத்தால் என் நெஞ்சில் அடித்து, “இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக! இவரை நல்வழி காட்டுபவராகவும் நல்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

உடனே நான் அங்குச் சென்று அதைத் தீயிட்டு எரித்துவிட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அந்த நற்செய்தியைச் சொல்வதற்காக எங்களில் ‘அபூஅர்த்தாத்’ என்பவரை அனுப்பினேன். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “அ(ந்த ஆலயத்)தைச் சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று ஆக்கிவிட்டுத்தான் உங்களிடம் வந்துள்ளேன்” என்று சொன்னார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அஹ்மஸ் குலத்தாரின் குதிரைகளுக்காகவும் அக்குலத்தாருக்காகவும் வளம் வேண்டி ஐந்து முறை பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

மர்வான் அல்ஃபஸாரீ (ரஹ்) வழி அறிவிப்பில், “ஜரீர் (ரலி) அவர்களிடமிருந்து நற்செய்தி சொல்லும் தூதுவராக அபூஅர்த்தாத் ஹுஸைன் பின் ரபீஆ (ரலி) வந்து நபி (ஸல்) அவர்களிடம் (அந்த) நற்செய்தியைச் சொன்னார்” என்று இடம்பெற்றுள்ளது.