அத்தியாயம்: 29, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3207

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ – وَتَقَارَبَا فِي لَفْظِ الْحَدِيثِ – حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا بَشِيرُ بْنُ الْمُهَاجِرِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ :‏

أَنَّ مَاعِزَ بْنَ مَالِكٍ الأَسْلَمِيَّ، أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ ظَلَمْتُ نَفْسِي وَزَنَيْتُ وَإِنِّي أُرِيدُ أَنْ تُطَهِّرَنِي ‏.‏ فَرَدَّهُ فَلَمَّا كَانَ مِنَ الْغَدِ أَتَاهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ زَنَيْتُ ‏.‏ فَرَدَّهُ الثَّانِيَةَ فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى قَوْمِهِ فَقَالَ ‏”‏ أَتَعْلَمُونَ بِعَقْلِهِ بَأْسًا تُنْكِرُونَ مِنْهُ شَيْئًا ‏”‏ ‏.‏ فَقَالُوا مَا نَعْلَمُهُ إِلاَّ وَفِيَّ الْعَقْلِ مِنْ صَالِحِينَا فِيمَا نُرَى فَأَتَاهُ الثَّالِثَةَ فَأَرْسَلَ إِلَيْهِمْ أَيْضًا فَسَأَلَ عَنْهُ فَأَخْبَرُوهُ أَنَّهُ لاَ بَأْسَ بِهِ وَلاَ بِعَقْلِهِ فَلَمَّا كَانَ الرَّابِعَةَ حَفَرَ لَهُ حُفْرَةً ثُمَّ أَمَرَ بِهِ فَرُجِمَ ‏.‏ قَالَ فَجَاءَتِ الْغَامِدِيَّةُ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ زَنَيْتُ فَطَهِّرْنِي ‏.‏ وَإِنَّهُ رَدَّهَا فَلَمَّا كَانَ الْغَدُ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ لِمَ تَرُدُّنِي لَعَلَّكَ أَنْ تَرُدَّنِي كَمَا رَدَدْتَ مَاعِزًا فَوَاللَّهِ إِنِّي لَحُبْلَى ‏.‏ قَالَ ‏”‏ إِمَّا لاَ فَاذْهَبِي حَتَّى تَلِدِي ‏”‏ ‏.‏ فَلَمَّا وَلَدَتْ أَتَتْهُ بِالصَّبِيِّ فِي خِرْقَةٍ قَالَتْ هَذَا قَدْ وَلَدْتُهُ ‏.‏ قَالَ ‏”‏ اذْهَبِي فَأَرْضِعِيهِ حَتَّى تَفْطِمِيهِ ‏”‏ ‏.‏ فَلَمَّا فَطَمَتْهُ أَتَتْهُ بِالصَّبِيِّ فِي يَدِهِ كِسْرَةُ خُبْزٍ فَقَالَتْ هَذَا يَا نَبِيَّ اللَّهِ قَدْ فَطَمْتُهُ وَقَدْ أَكَلَ الطَّعَامَ ‏.‏ فَدَفَعَ الصَّبِيَّ إِلَى رَجُلٍ مِنَ الْمُسْلِمِينَ ثُمَّ أَمَرَ بِهَا فَحُفِرَ لَهَا إِلَى صَدْرِهَا وَأَمَرَ النَّاسَ فَرَجَمُوهَا فَيُقْبِلُ خَالِدُ بْنُ الْوَلِيدِ بِحَجَرٍ فَرَمَى رَأْسَهَا فَتَنَضَّحَ الدَّمُ عَلَى وَجْهِ خَالِدٍ فَسَبَّهَا فَسَمِعَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم سَبَّهُ إِيَّاهَا فَقَالَ ‏”‏ مَهْلاً يَا خَالِدُ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ تَابَتْ تَوْبَةً لَوْ تَابَهَا صَاحِبُ مَكْسٍ لَغُفِرَ لَهُ ‏”‏ ‏.‏ ثُمَّ أَمَرَ بِهَا فَصَلَّى عَلَيْهَا وَدُفِنَتْ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மாஇஸ் பின் மாலிக் அல்அஸ்லமீ (ரலி) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு நானே அநீதி இழைத்துக்கொண்டேன். நான் விபச்சாரம் செய்துவிட்டேன். என்னை நீங்கள் தூய்மைப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறினார். (அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) திருப்பி அனுப்பிவிட்டார்கள்) மறுநாளும் அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்துவிட்டேன்” என்று கூறினார். அப்போதும் அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) திருப்பியனுப்பிவிட்டார்கள்.

பிறகு அவருடைய குலத்தாரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஆளனுப்பி, “அவருடைய புத்தியில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டுள்ளதாக நீங்கள் அறிகின்றீர்களா? அவரிடம் ஏதேனும் ஆட்சேபகரமான நடவடிக்கையைக் காணுகின்றீர்களா?” என்று விசாரித்தார்கள். அதற்கு அம்மக்கள், தெளிந்த அறிவோடுதான் அவர் உள்ளார் என்றே நாங்கள் அறிகிறோம். எங்களைப் பொருத்தவரை அவர் எங்களில் நல்லவர்களில் ஒருவராக உள்ளார்” என்று கூறினர்.

பிறகு மூன்றாவது முறையாக அவர் வந்தபோதும் அவருடைய குலத்தாரிடம் மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஆளனுப்பி அவரைப் பற்றி விசாரித்தார்கள். அப்போதும் அவர்கள், “அவருக்கு எந்தக் கோளாறுமில்லை. அவரது புத்தியில் எந்தக் குறையுமில்லை” என்று தெரிவித்தனர். நான்காவது முறை அவர் வந்து முன்பு போன்றே கூறியபோது, அவருக்காகக் குழியொன்றைத் தோண்டும்படி பணித்தார்கள். பிறகு அவரைக் கொண்டுசென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அடுத்து, ‘ஃகாமிதிய்யா’ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்துவிட்டேன். (உரிய தண்டனையை நிறைவேற்றி) என்னைத் தூய்மைப்படுத்துங்கள்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அப்பெண்ணைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். அப்பெண் மறுநாள் (வந்து), “அல்லாஹ்வின் தூதரே! ஏன் என்னைத் திருப்பியனுப்புகின்றீர்கள்? மாஇஸ் அவர்களைத் திருப்பி அனுப்பியதைப் போன்று என்னையும் தாங்கள் திருப்பியனுப்புகின்றீர்கள் போலும். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (தகாத உறவில் ஈடுபட்டு) கருவுற்றிருக்கின்றேன்” என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ சென்று குழந்தை பெற்றெடு, (பிறகு திரும்பி வா)” என்று சொன்னார்கள். குழந்தை பெற்றெடுத்த பின் அந்தப் பெண் ஒரு துணியில் குழந்தையை எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “இது நான் பெற்றெடுத்த குழந்தை” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ சென்று குழந்தைக்குப் பாலூட்டு! பிள்ளை பால்குடி மறந்த பின் திரும்பி வா” என்றார்கள்.

பால்குடி மறக்கடித்த பின், அப்பெண் அச்சிறுவனுடன் வந்தார். அவனது கையில் ரொட்டித் துண்டு ஒன்று இருந்தது. அப்பெண், “அல்லாஹ்வின் தூதரே! இவனுக்குப் பால்குடி மறக்கடித்து விட்டேன். இப்போது உணவு உட்கொள்கின்றான்” என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அச்சிறுவனை முஸ்லிம்களில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள். பிறகு அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். ஆகவே, அவருக்காக நெஞ்சளவு குழி தோண்டப்பட்டது. (பின்னர் அக்குழிக்குள் அப்பெண்ணை நிறுத்திய பின்) மக்களுக்குக் கட்டளையிட, அவருக்குக் கல்லெறி தண்டனையை மக்கள் நிறைவேற்றினார்கள். காலித் பின் அல்வலீத் (ரலி), கல் ஒன்றை எடுத்துக் கொண்டுவந்து, அப்பெண்ணின் தலைமீது எறிந்தார்கள். இரத்தம் காலித் (ரலி) முகத்தில் தெறித்தது.

அப்போது அவரை காலித் ஏசினார்கள். காலித் (ரலி) ஏசியதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றபோது, “காலிதே! நிறுத்துங்கள். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அப்பெண் அழகிய முறையில் பாவமன்னிப்புத் தேடிக்கொண்டார். பொது நிதியை மோசடி செய்த ஒருவன் இப்படி பாவமன்னிப்புக் கோரினால் அவனுக்கும்கூட பாவமன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும்” என்று கூறினார்கள். பிறகு அப்பெண்ணுக்கு இறுதித் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யுமாறு பணித்து, அவருக்காகத் தொழுகை நடத்தினார்கள். பின்னர் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

அறிவிப்பாளர் : புரைதா பின் அல்ஹஸீப் (ரலி)

Share this Hadith: