அத்தியாயம்: 32, பாடம்: 24, ஹதீஸ் எண்: 3317

وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :

‏لَمَّا قَدِمَ الْمُهَاجِرُونَ مِنْ مَكَّةَ الْمَدِينَةَ قَدِمُوا وَلَيْسَ بِأَيْدِيهِمْ شَىْءٌ وَكَانَ الأَنْصَارُ أَهْلَ الأَرْضِ وَالْعَقَارِ فَقَاسَمَهُمُ الأَنْصَارُ عَلَى أَنْ أَعْطَوْهُمْ أَنْصَافَ ثِمَارِ أَمْوَالِهِمْ كُلَّ عَامٍ وَيَكْفُونَهُمُ الْعَمَلَ وَالْمَئُونَةَ وَكَانَتْ أُمُّ أَنَسِ بْنِ مَالِكٍ وَهْىَ تُدْعَى أُمَّ سُلَيْمٍ  – وَكَانَتْ أُمَّ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ كَانَ أَخًا لأَنَسٍ لأُمِّهِ – وَكَانَتْ أَعْطَتْ أُمُّ أَنَسٍ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عِذَاقًا لَهَا فَأَعْطَاهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أُمَّ أَيْمَنَ مَوْلاَتَهُ أُمَّ أُسَامَةَ بْنِ زَيْدٍ ‏.‏ قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا فَرَغَ مِنْ قِتَالِ أَهْلِ خَيْبَرَ وَانْصَرَفَ إِلَى الْمَدِينَةِ رَدَّ الْمُهَاجِرُونَ إِلَى الأَنْصَارِ مَنَائِحَهُمُ الَّتِي كَانُوا مَنَحُوهُمْ مِنْ ثِمَارِهِمْ – قَالَ – فَرَدَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى أُمِّي عِذَاقَهَا وَأَعْطَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أُمَّ أَيْمَنَ مَكَانَهُنَّ مِنْ حَائِطِهِ 


قَالَ ابْنُ شِهَابٍ وَكَانَ مِنْ شَأْنِ أُمِّ أَيْمَنَ أُمِّ أُسَامَةَ بْنِ زَيْدٍ أَنَّهَا كَانَتْ وَصِيفَةً لِعَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ وَكَانَتْ مِنَ الْحَبَشَةِ فَلَمَّا وَلَدَتْ آمِنَةُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ مَا تُوُفِّيَ أَبُوهُ فَكَانَتْ أُمُّ أَيْمَنَ تَحْضُنُهُ حَتَّى كَبِرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَعْتَقَهَا ثُمَّ أَنْكَحَهَا زَيْدَ بْنَ حَارِثَةَ ثُمَّ تُوُفِّيَتْ بَعْدَ مَا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِخَمْسَةِ أَشْهُرٍ ‏.‏

முஹாஜிர்கள் மதீனாவுக்கு(ப் புலம்பெயர்ந்து) வந்தபோது, தங்களுடைய கரங்களில் (செல்வம்) எதுவும் இல்லாத நிலையிலேயே வந்தனர். (மதீனாவாசிகளான) அன்ஸாரிகளோ நிலங்களும் (பேரீச்சந் தோப்புகள் போன்ற) அசையாச் சொத்துகளும் உடையவர்களாக இருந்தார்கள்.

எனவே, ஒவ்வோர் ஆண்டும் தம் நிலங்களின் விளைச்சல்களில் (குறிப்பிட்ட) பாகங்களை முஹாஜிர்கள் தமக்குக் கொடுத்துவிட வேண்டும் என்றும், தம் பங்கிற்கு அவர்கள் பாடுபட்டு உழைக்க வேண்டும் என்றும் பேசி முஹாஜிர்களுக்கு அன்ஸாரிகள் தம் நிலங்களைப் பிரித்துக் கொடுத்தார்கள்.

என் தாயார் உம்மு ஸுலைம் (ரலி), என் தாய்வழிச் சகோதரர் அப்துல்லாஹ் பின் அபீதல்ஹாவின் தாயாராகவும் இருந்தார். என் தாயார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சில பேரீச்ச மரங்களை (அவற்றின் கனிகளை மட்டும் பயன்படுத்திக்கொள்ளும்படி அன்பளிப்பாகக்) கொடுத்திருந்தார்கள்.

அவற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தம் அடிமைப் பெண்ணாயிருந்த உம்மு ஐமனுக்கு(அன்பளிப்பாக)க் கொடுத்திருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கைபர்வாசிகள்மீது போர் தொடுத்து முடித்து மதீனாவுக்கு (வெற்றியோடு) திரும்பியபோது முஹாஜிர்கள், தங்களுக்கு அன்ஸாரிகள் இரவலாக வழங்கியிருந்த கனிக(ள் தரும் மரங்க)ளை அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் என் தாயாரிடம் அவருடைய பேரீச்ச மரங்களைத் திரும்பத் தந்துவிட்டார்கள். அவற்றுக்குப் பதிலாக உம்மு ஐமன் (ரலி) அவர்களுக்குத் தமது தோட்டத்திலிருந்து (சில மரங்களை அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறுகின்றார்கள்:

உம்மு ஐமன் (ரலி), உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் தாயார் ஆவார். அபிசீனியாவைச் சேர்ந்த அவர், (நபியவர்களின் தந்தை) அப்துல்லாஹ் பின் அப்துல் முத்தலிபின் அடிமையாக இருந்தவர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தந்தை இறந்த பிறகே ஆமினா, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பெற்றெடுத்தார்கள். இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை உம்மு ஐமன் அவர்களே வளர்த்துவந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வளர்ந்து பெரியவரானதும் உம்மு ஐமனை விடுதலை செய்துவிட்டார்கள். பின்னர் (தமது பொறுப்பில் வளர்ந்த) ஸைத் பின் ஹாரிஸாவுக்கு அவரைத் திருமணம் செய்துவைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறந்து ஐந்து மாதங்களுக்குப் பின்னர் உம்மு ஐமன் (ரலி) இறந்தார்கள். இதுவே உம்மு ஐமன் (ரலி) பற்றிய சில குறிப்புகளாகும்.

Share this Hadith: