அத்தியாயம்: 32, பாடம்: 28, ஹதீஸ் எண்: 3323

وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي كَثِيرُ بْنُ عَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، قَالَ قَالَ عَبَّاسٌ :‏

شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ حُنَيْنٍ فَلَزِمْتُ أَنَا وَأَبُو سُفْيَانَ بْنُ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمْ نُفَارِقْهُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى بَغْلَةٍ لَهُ بَيْضَاءَ أَهْدَاهَا لَهُ فَرْوَةُ بْنُ نُفَاثَةَ الْجُذَامِيُّ فَلَمَّا الْتَقَى الْمُسْلِمُونَ وَالْكُفَّارُ وَلَّى الْمُسْلِمُونَ مُدْبِرِينَ فَطَفِقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَرْكُضُ بَغْلَتَهُ قِبَلَ الْكُفَّارِ قَالَ عَبَّاسٌ وَ أَنَا آخِذٌ بِلِجَامِ بَغْلَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَكُفُّهَا إِرَادَةَ أَنْ لاَ تُسْرِعَ وَأَبُو سُفْيَانَ آخِذٌ بِرِكَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ أَىْ عَبَّاسُ نَادِ أَصْحَابَ السَّمُرَةِ ‏”‏ ‏.‏ فَقَالَ عَبَّاسٌ وَكَانَ رَجُلاً صَيِّتًا فَقُلْتُ بِأَعْلَى صَوْتِي أَيْنَ أَصْحَابُ السَّمُرَةِ قَالَ فَوَاللَّهِ لَكَأَنَّ عَطْفَتَهُمْ حِينَ سَمِعُوا صَوْتِي عَطْفَةُ الْبَقَرِ عَلَى أَوْلاَدِهَا ‏.‏ فَقَالُوا يَا لَبَّيْكَ يَا لَبَّيْكَ – قَالَ – فَاقْتَتَلُوا وَالْكُفَّارَ وَالدَّعْوَةُ فِي الأَنْصَارِ يَقُولُونَ يَا مَعْشَرَ الأَنْصَارِ يَا مَعْشَرَ الأَنْصَارِ قَالَ ثُمَّ قُصِرَتِ الدَّعْوَةُ عَلَى بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ فَقَالُوا يَا بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ يَا بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ ‏.‏ فَنَظَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ عَلَى بَغْلَتِهِ كَالْمُتَطَاوِلِ عَلَيْهَا إِلَى قِتَالِهِمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ هَذَا حِينَ حَمِيَ الْوَطِيسُ ‏”‏ ‏.‏ قَالَ ثُمَّ أَخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَصَيَاتٍ فَرَمَى بِهِنَّ وُجُوهَ الْكُفَّارِ ثُمَّ قَالَ ‏”‏ انْهَزَمُوا وَرَبِّ مُحَمَّدٍ ‏”‏ ‏.‏ قَالَ فَذَهَبْتُ أَنْظُرُ فَإِذَا الْقِتَالُ عَلَى هَيْئَتِهِ فِيمَا أَرَى – قَالَ – فَوَاللَّهِ مَا هُوَ إِلاَّ أَنْ رَمَاهُمْ بِحَصَيَاتِهِ فَمَا زِلْتُ أَرَى حَدَّهُمْ كَلِيلاً وَأَمْرَهُمْ مُدْبِرًا


وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، جَمِيعًا عَنْ عَبْدِ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ نَحْوَهُ غَيْرَ أَنَّهُ قَالَ فَرْوَةُ بْنُ نُعَامَةَ الْجُذَامِيُّ ‏‏ وَقَالَ ‏ “‏ انْهَزَمُوا وَرَبِّ الْكَعْبَةِ انْهَزَمُوا وَرَبِّ الْكَعْبَةِ ‏”‏ ‏.‏ وَزَادَ فِي الْحَدِيثِ حَتَّى هَزَمَهُمُ اللَّهُ قَالَ وَكَأَنِّي أَنْظُرُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَرْكُضُ خَلْفَهُمْ عَلَى بَغْلَتِهِ ‏.‏

وَحَدَّثَنَاهُ ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي كَثِيرُ بْنُ الْعَبَّاسِ عَنْ أَبِيهِ، قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ حُنَيْنٍ ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ ‏ غَيْرَ أَنَّ حَدِيثَ يُونُسَ وَحَدِيثَ مَعْمَرٍ أَكْثَرُ مِنْهُ وَأَتَمُّ ‏

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுனைன் போரில் கலந்துகொண் டேன். (போர் உக்கிரமாக நடந்தபோது) நானும் அபூஸுஃப்யான் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களும் மட்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட்டுப் பிரியாமல் அவர்களுடனேயே இருந்தோம்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமக்குரிய வெள்ளைக் கோவேறு கழுதையின் மீதிருந்தார்கள். அந்தக் கழுதையை ஃபர்வா பின் நுஃபாஸா அல்ஜுதாமீ என்பார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.

இறைமறுப்பாளர்களும் முஸ்லிம்களும் மோதிக்கொண்டபோது முஸ்லிம்கள் புறமுதுகிட்டு ஓடினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ (நிலைகுலையாமல்) தமது கோவேறு கழுதையை இறைமறுப்பாளர்களை நோக்கி விரட்டினார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கழுதையின் கடிவாளத்தைப் பிடித்து, அது கட்டுமீறிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அதைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தேன்.

அபூஸுஃப்யான் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாகனத்தின் சேணத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அப்பாஸ்! கருவேல மரத்தின் (கீழ் ரிள்வான் உடன்படிக்கை செய்த) தோழர்களைக் கூப்பிடுங்கள்” என்று கூறினார்கள்.

நான் உரத்த குரலில், “கருவேல மரத்தின் (கீழ் ‘ரிள்வான்’ ஒப்பந்தம் செய்த) நண்பர்கள் எங்கே?” என்று கூப்பிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (பிரிந்தோடிய) முஸ்லிம்கள், எனது குரலைக் கேட்டவுடன் பசு, தன் கன்றுகளை நோக்கித் தாவி வருவதைப் போன்று “இதோ வந்துவிட்டோம்; இதோ வந்துவிட்டோம்” என்று கூறியவாறு தாவி வந்து இறைமறுப்பாளர்களை எதிர்த்துப் போரிட்டனர்.

அன்ஸாரிகளுக்காக, “அன்ஸாரிகளே! அன்ஸாரிகளே!” என்று அழைப்பு விடுக்கப்பட்டது. பிறகு பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாருக்கு மட்டுமே அழைப்பு விடுக்க வேண்டி யிருந்தது. அப்போது அவர்கள், “பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரே! பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரே!” என்று அழைத்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது கோவேறு கழுதையில் அமர்ந்தவாறு தலையை உயர்த்தி சண்டையைக் கவனித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “கல் அடுப்பு கனன்றுகொண்டிருக்கும் நேரமிது” என்று (போரின் உக்கிரத்தைப் பற்றிக்) கூறினார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு கைப்பிடி பொடிக் கற்களை அள்ளி இறைமறுப்பாளர்களின் முகத்தில் எறிந்தார்கள். பிறகு “முஹம்மதின் இறைவன் மீதாணையாக! அவர்கள் தோற்றனர்” என்று கூறினார்கள்.

நான் பார்த்துக்கொண்டே போனேன். அப்போது போர் தனது போக்கில் (உக்கிரமாக) நடந்துகொண்டிருந்தது. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பொடிக் கற்களை எறிந்ததுதான் தாமதம்; இறைமறுப்பாளர்களின் பலம் குன்றிக்கொண்டே செல்வதையும் அவர்களின் கதை முடிவுக்கு வருவதையும் நான் காணலானேன்.

அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி)


குறிப்புகள் :

இந்த ஹதீஸில் குறிப்பிடப்படும் அபூஸுஃப்யான் (ரலி) என்பவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெரியப்பா அல்ஹாரிஸ் என்பாரின் மகனாவார்.

மஅமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “ ஃபர்வா பின் நுஆமா அல்ஜுதாமீ” என்பவர் அன்பளிப்பாக அளித்த கழுதையின் மீது …“ என்று இடம்பெற்றுள்ளது. (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பொடிக் கற்களை அள்ளி எறிந்துவிட்டு) “அவர்கள் தோற்றனர்; கஅபாவின் அதிபதி மீதாணையாக! அவர்கள் தோற்றனர்; கஅபாவின் அதிபதி மீதாணையாக! என்று கூறினார்கள்” என்றும் காணப்படுகிறது. மேலும், “முடிவில் அல்லாஹ் இறைமறுப்பாளர்களைத் தோற்கடித்தான்” என்று கூடுதலாகவும் இடம்பெற்றுள்ளது.

மேலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களுக்குப் பின்னால் தமது கோவேறு கழுதையிலிருந்தவாறு விரட்டிக்கொண்டிருந்ததை நான் இப்போதும் (மனக்கண்ணால்) பார்ப்பதைப் போன்றுள்ளது” என்றும் இடம்பெற்றுள்ளது.

யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பு, “நான் ஹுனைன் போரில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன் …“ என ஆரம்பமாகிறது.  மேற்காணும் ஹதீஸே அந்த அறிவிப்பைவிட அதிகத் தகவல் உள்ளதும் முழுமையானதும் ஆகும்.

Share this Hadith: