حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مَالِكٍ، ح وَحَدَّثَنِيهِ أَبُو الطَّاهِرِ – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنِ الْفُضَيْلِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ نِيَارٍ الأَسْلَمِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ :
خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قِبَلَ بَدْرٍ فَلَمَّا كَانَ بِحَرَّةِ الْوَبَرَةِ أَدْرَكَهُ رَجُلٌ قَدْ كَانَ يُذْكَرُ مِنْهُ جُرْأَةٌ وَنَجْدَةٌ فَفَرِحَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ رَأَوْهُ فَلَمَّا أَدْرَكَهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم جِئْتُ لأَتَّبِعَكَ وَأُصِيبَ مَعَكَ قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” تُؤْمِنُ بِاللَّهِ وَرَسُولِهِ ” . قَالَ لاَ قَالَ ” فَارْجِعْ فَلَنْ أَسْتَعِينَ بِمُشْرِكٍ ” . قَالَتْ ثُمَّ مَضَى حَتَّى إِذَا كُنَّا بِالشَّجَرَةِ أَدْرَكَهُ الرَّجُلُ فَقَالَ لَهُ كَمَا قَالَ أَوَّلَ مَرَّةٍ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم كَمَا قَالَ أَوَّلَ مَرَّةٍ قَالَ ” فَارْجِعْ فَلَنْ أَسْتَعِينَ بِمُشْرِكٍ ” . قَالَ ثُمَّ رَجَعَ فَأَدْرَكَهُ بِالْبَيْدَاءِ فَقَالَ لَهُ كَمَا قَالَ أَوَّلَ مَرَّةٍ ” تُؤْمِنُ بِاللَّهِ وَرَسُولِهِ ” . قَالَ نَعَمْ . فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” فَانْطَلِقْ ” .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பத்ருப் போருக்குப் புறப்பட்டார்கள். (மதீனாவுக்கு அருகில்) ‘ஹர்ரத்துல் வபரா’ எனும் இடத்தில் இருந்தபோது, அவர்களை வீரதீரமும் விவேகமும் (மக்களால் பெரிதும்) பேசப்பட்டு வந்த ஒருவர் அணுகினார். அவரைப் பார்த்ததும் நபித்தோழர்கள் மகிழ்ச்சியுற்றனர்.
அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அணுகி, “உம்மைப் பின்பற்றி, உம்முடன் சேர்ந்து (எதிரிகளோடு) போரிட நான் வந்துள்ளேன்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புகிறாயா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை“ என்றார். “அப்படியானால் நீ திரும்பிச் செல். ஓர் இணைவைப்பாளரிடம் நான் உதவி கோரமாட்டேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிவிட்டார்கள்.
பிறகு சிறிது தூரம் சென்று, நாங்கள் ‘அஷ்ஷஜரா’ எனும் இடத்தில் இருந்தபோது, அவர் மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அணுகி, முன்பு கூறியதைப் போன்றே கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முன்பு கேட்டதைப் போன்றே கேட்டுவிட்டு, “நீ திரும்பிச் சென்றுவிடு. நான் இணைவைப்பாளரிடம் உதவி கோர மாட்டேன்” என்று கூறினார்கள்.
பிறகு அவர் திரும்பிச் சென்றுவிட்டு, ‘அல்பைதா’ எனும் இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அணுகியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), முன்பு கேட்டதைப் போன்றே “நீ அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “ஆம்“ என்றார்.
ஆகவே, அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அப்படியானால், நீர் (நம்முடன்) வரலாம்” என்றார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)