அத்தியாயம்: 36, பாடம்: 32, ஹதீஸ் எண்: 3829

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا سَالِمُ بْنُ نُوحٍ الْعَطَّارُ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍقَالَ :‏

نَزَلَ عَلَيْنَا أَضْيَافٌ لَنَا – قَالَ – وَكَانَ أَبِي يَتَحَدَّثُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ اللَّيْلِ – قَالَ – فَانْطَلَقَ وَقَالَ يَا عَبْدَ الرَّحْمَنِ افْرُغْ مِنْ أَضْيَافِكَ ‏.‏ قَالَ فَلَمَّا أَمْسَيْتُ جِئْنَا بِقِرَاهُمْ – قَالَ – فَأَبَوْا فَقَالُوا حَتَّى يَجِيءَ أَبُو مَنْزِلِنَا فَيَطْعَمَ مَعَنَا – قَالَ – فَقُلْتُ لَهُمْ إِنَّهُ رَجُلٌ حَدِيدٌ وَإِنَّكُمْ إِنْ لَمْ تَفْعَلُوا خِفْتُ أَنْ يُصِيبَنِي مِنْهُ أَذًى – قَالَ – فَأَبَوْا فَلَمَّا جَاءَ لَمْ يَبْدَأْ بِشَىْءٍ أَوَّلَ مِنْهُمْ فَقَالَ أَفَرَغْتُمْ مِنْ أَضْيَافِكُمْ قَالَ قَالُوا لاَ وَاللَّهِ مَا فَرَغْنَا ‏.‏ قَالَ أَلَمْ آمُرْ عَبْدَ الرَّحْمَنِ قَالَ وَتَنَحَّيْتُ عَنْهُ فَقَالَ يَا عَبْدَ الرَّحْمَنِ ‏.‏ قَالَ فَتَنَحَّيْتُ – قَالَ – فَقَالَ يَا غُنْثَرُ أَقْسَمْتُ عَلَيْكَ إِنْ كُنْتَ تَسْمَعُ صَوْتِي إِلاَّ جِئْتَ – قَالَ – فَجِئْتُ فَقُلْتُ وَاللَّهِ مَا لِي ذَنْبٌ هَؤُلاَءِ أَضْيَافُكَ فَسَلْهُمْ قَدْ أَتَيْتُهُمْ بِقِرَاهُمْ فَأَبَوْا أَنْ يَطْعَمُوا حَتَّى تَجِيءَ – قَالَ – فَقَالَ مَا لَكُمْ أَلاَ تَقْبَلُوا عَنَّا قِرَاكُمْ – قَالَ – فَقَالَ أَبُو بَكْرٍ فَوَاللَّهِ لاَ أَطْعَمُهُ اللَّيْلَةَ – قَالَ – فَقَالُوا فَوَاللَّهِ لاَ نَطْعَمُهُ حَتَّى تَطْعَمَهُ ‏.‏ قَالَ فَمَا رَأَيْتُ كَالشَّرِّ كَاللَّيْلَةِ قَطُّ وَيْلَكُمْ مَا لَكُمْ أَنْ لاَ تَقْبَلُوا عَنَّا قِرَاكُمْ قَالَ ثُمَّ قَالَ أَمَّا الأُولَى فَمِنَ الشَّيْطَانِ هَلُمُّوا قِرَاكُمْ – قَالَ – فَجِيءَ بِالطَّعَامِ فَسَمَّى فَأَكَلَ وَأَكَلُوا – قَالَ – فَلَمَّا أَصْبَحَ غَدَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ بَرُّوا وَحَنِثْتُ – قَالَ – فَأَخْبَرَهُ فَقَالَ ‏ “‏ بَلْ أَنْتَ أَبَرُّهُمْ وَأَخْيَرُهُمْ ‏”‏ ‏.‏ قَالَ وَلَمْ تَبْلُغْنِي كَفَّارَةٌ ‏.‏

எங்கள் (வீட்டுக்கு) விருந்தாளிகள் சிலர் வந்தனர். அந்த இரவில் என் தந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பேசுவதற்காகச் சென்றுவிட்டார்கள். (அவர்கள் செல்வதற்கு முன் என்னிடம்,) “அப்துர் ரஹ்மானே! உன் விருந்தாளிகளை (இரவு உணவு கொடுத்து) கவனித்துக்கொள்!” என்று கூறினார்கள்.

மாலை நேரமானதும் நாங்கள் விருந்தாளிகளுக்கு உணவு கொண்டுவந்து கொடுத்தோம். ஆனால் அவர்கள், “குடும்பத் தலைவர் வந்து எங்களுடன் உண்ணாத வரை நாங்கள் உண்ண மாட்டோம்” என்று கூறி, மறுத்துவிட்டனர்.

அப்போது அவர்களிடம் நான், “அவர் (என் தந்தை) ஓர் இரும்பு மனிதர். நீங்கள் விருந்து உண்ணவில்லையானால், நான் அவரால் தண்டிக்கப்படுவேன் என அஞ்சுகின்றேன்” என்று சொன்னேன். அப்படியிருந்தும் அவர்கள் மறுத்துவிட்டனர்.

அபூபக்ரு (ரலி) வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக விருந்தாளிகளைப் பற்றியே “உங்கள் விருந்தாளிகளுக்கு உணவு கொடுத்துவிட்டீர்களா?” என்று (எங்களிடம்) கேட்டார்கள். வீட்டார், “இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களுக்கு இன்னும் நாங்கள் உணவு கொடுக்கவில்லை” என்று பதிலளித்தனர். அபூபக்ரு (ரலி), “நான் அப்துர் ரஹ்மானிடம் (அவர்களுக்கு உணவளிக்குமாறு) கட்டளையிடவில்லையா?” என்று கேட்டார்கள்.

உடனே நான் அங்கிருந்து நகர்ந்தேன். அப்போது அவர்கள், “அப்துர் ரஹ்மான்!“ என அழைத்தார்கள். நான் ஒளிந்துகொண்டேன். அவர்கள் “தடியா! உன்மீது அறுதியிட்டுச் சொல்கிறேன். என் குரல் உன் காதில் விழுந்தால் இங்கு வந்துவிடு” என்று கூறினார்கள். நான் வந்து, “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என்மீது எந்தக் குற்றமும் இல்லை. இதோ! உங்கள் விருந்தாளிகளிடமே கேட்டுப் பாருங்கள். நான் அவர்களிடம் உணவைக் கொண்டுவந்து வைத்தேன். நீங்கள் வரும்வரை நாங்கள் உண்ணமாட்டோம் என அவர்கள்தாம் மறுத்துவிட்டனர்” என்று சொன்னேன்.

அபூபக்ரு (ரலி), “எங்கள் விருந்தை ஏற்காமலிருக்க உங்களுக்கு என்ன வந்தது?” என்று கேட்டார்கள். மேலும் அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றிரவு இதை நான் உண்ணமாட்டேன்” என்று கூறிவிட்டார்கள். அதற்கு விருந்தாளிகளும், “அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் உண்ணாத வரை நாங்களும் இதை உண்ணமாட்டோம்” என்று கூறினர்.

அபூபக்ரு (ரலி), “இன்றிரவைப் போன்று நற்பேரற்ற ஓர் இரவை நான் ஒரு போதும் அடைந்ததில்லை” என்று கூறிவிட்டு, “உங்களுக்கு என்ன கேடு! உங்கள் விருந்தை எங்களிடமிருந்து ஏன் நீங்கள் மறுக்கின்றீர்கள்?” என்று கூறிவிட்டு, “(நான் உண்ணமாட்டேன் எனச் சத்தியம் செய்த) எனது முந்தைய நிலைப்பாடு ஷைத்தானால் விளைந்ததாகும்” என்றார்கள். பிறகு “உங்கள் உணவைக் கொண்டுவாருங்கள்” என்று கூறினார்கள். உணவு கொண்டுவரப்பட்டதும் அல்லாஹ்வின் பெயர் சொல்லி உண்டார்கள். விருந்தினரும் உண்டனர்.

காலையில் நபி (ஸல்) அவர்களிடம் அபூபக்ரு (ரலி) சென்று, “அல்லாஹ்வின் தூதரே! இவர்கள் (தமது சத்தியத்தில்) உறுதியாக இருந்தனர். நான்தான் சத்தியத்தை முறித்து விட்டேன்” என்று கூறி நடந்ததைத் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்), “இல்லை. அவர்களில் நீரே நன்மை புரிந்தவர். அவர்களில் நீரே சிறந்தவர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரு (ரலி)


குறிப்பு :

“அபூபக்ரு (ரலி), சத்திய முறிவுக்குப் பரிகாரம் செய்தார்களா என்பது பற்றிய தகவல் எனக்குக் கிடைக்கவில்லை” என்று அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஸயீத் பின் இயாஸ் அல் ஜுரைரீ (ரஹ்) கூறுகின்றார்.