அத்தியாயம்: 39, பாடம்: 26, ஹதீஸ் எண்: 4075

حَدَّثَنِي نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ قَالَ :‏

جَاءَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ فِي أَهْلِنَا وَرَجُلٌ يَشْتَكِي خُرَاجًا بِهِ أَوْ جِرَاحًا فَقَالَ مَا تَشْتَكِي قَالَ خُرَاجٌ بِي قَدْ شَقَّ عَلَىَّ ‏.‏ فَقَالَ يَا غُلاَمُ ائْتِنِي بِحَجَّامٍ ‏.‏ فَقَالَ لَهُ مَا تَصْنَعُ بِالْحَجَّامِ يَا أَبَا عَبْدِ اللَّهِ قَالَ أُرِيدُ أَنْ أُعَلِّقَ فِيهِ مِحْجَمًا ‏.‏ قَالَ وَاللَّهِ إِنَّ الذُّبَابَ لَيُصِيبُنِي أَوْ يُصِيبُنِي الثَّوْبُ فَيُؤْذِينِي وَيَشُقُّ عَلَىَّ ‏.‏ فَلَمَّا رَأَى تَبَرُّمَهُ مِنْ ذَلِكَ قَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏”‏ إِنْ كَانَ فِي شَىْءٍ مِنْ أَدْوِيَتِكُمْ خَيْرٌ فَفِي شَرْطَةِ مَحْجَمٍ أَوْ شَرْبَةٍ مِنْ عَسَلٍ أَوْ لَذْعَةٍ بِنَارٍ ‏” قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ وَمَا أُحِبُّ أَنْ أَكْتَوِيَ ‏” قَالَ فَجَاءَ بِحَجَّامٍ فَشَرَطَهُ فَذَهَبَ عَنْهُ مَا يَجِدُ ‏.‏

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) (ஒரு முறை) எங்கள் குடும்பத்தினரிடம் வந்தார்கள். அப்போது (எங்கள் வீட்டில்) ஒருவருக்குக் கொப்புளம் அல்லது காயம் ஏற்பட்டிருந்தது. ஜாபிர் (ரலி), “உமது உடம்புக்கு என்ன?” என்று கேட்டார்கள். அவர், “கொப்புளம் உண்டாகி, எனக்குக் கடுமையான சிரமம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

உடனே அவர்கள், “இளைஞரே! குருதி உறிஞ்சி எடுப்பவரை அழைத்துவருவீராக!” என்றார்கள். அதற்கு அவர், “அபூஅப்தில்லாஹ்! குருதி உறிஞ்சி எடுப்பவரை வைத்து என்ன செய்யப்போகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி), “குருதி உறிஞ்சும் கருவியை இ(ந்தக் கொப்புளத்)தில் பொருத்தப்போகிறேன்” என்றார்கள்.

அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! ஈக்கள் என்னைத் துன்புறுத்துகின்றன; அல்லது ஆடை அதில் பட்டு என்னை வேதனைப்படுத்துகிறது. அதுவே என்னைச் சிரமப்படுத்துகிறது. (இந்நிலையில் கூடுதல் வேதனையா?)” என்றார்.

அவர் சடைந்துகொள்வதைக் கண்ட ஜாபிர் (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “உங்கள் மருந்துகளில் ஒன்றில் நன்மை ஏதேனும் இருக்கிறதென்றால், (நோயின் தன்மைக்கு ஏற்றபடி) குருதி உறிஞ்சும் கருவியால் (உடலில்) கீறுவது, அல்லது தேன் அருந்துவது, அல்லது நெருப்பால் சூடு இடுவதில்தான் அது உள்ளது” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “(ஆயினும்) சூடு இடுவதை நான் விரும்பவில்லை” என்று கூறினார்கள் என்றார்கள்.

அவ்வாறே குருதி உறிஞ்சி எடுப்பவர் வந்து காயத்தைக் கீறி குருதி உறிஞ்சி எடுத்தார். அந்த இளைஞருக்கு ஏற்பட்டிருந்த வலி நீங்கியது.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக ஆஸிம் பின் உமர் பின் கத்தாதா (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment