و حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ كُلُّهُمْ عَنْ جَرِيرٍ قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ :
فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا نَزَلَ عَلَيْهِ جِبْرِيلُ بِالْوَحْيِ كَانَ مِمَّا يُحَرِّكُ بِهِ لِسَانَهُ وَشَفَتَيْهِ فَيَشْتَدُّ عَلَيْهِ فَكَانَ ذَلِكَ يُعْرَفُ مِنْهُ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ أَخْذَهُ إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ إِنَّ عَلَيْنَا أَنْ نَجْمَعَهُ فِي صَدْرِكَ وَقُرْآنَهُ فَتَقْرَؤُهُ فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ قَالَ أَنْزَلْنَاهُ فَاسْتَمِعْ لَهُ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ أَنْ نُبَيِّنَهُ بِلِسَانِكَ فَكَانَ إِذَا أَتَاهُ جِبْرِيلُ أَطْرَقَ فَإِذَا ذَهَبَ قَرَأَهُ كَمَا وَعَدَهُ اللَّه
“(நபியே!) இந்த வேதஅறிவிப்பை மனனம் செய்வதற்காக அவசரப்பட்டு உங்கள் நாவை அசைக்காதீர்கள்” எனும் (75:16ஆவது) வசனம் பற்றிய விளக்கம் என்னவெனில்,
தம்மிடம் வேத அறிவிப்பை (வஹீயை) (வானவர்) ஜிப்ரீல் (அலை) கொண்டுவரும்போது, நபி (ஸல்) தம் நாவையும் இரு உதடுகளையும் (மனனமிடுவதற்காக) அசைத்துக் கொண்டிருப்பார்கள். அது அவர்களுக்குச் சிரமமாகவும் இருந்தது. அவர்களது முகபாவத்திலும் அந்தச் சிரமம் தெரிந்தது. ஆகவே அல்லாஹ், “(நபியே!) இந்த வேதஅறிவிப்பை மனனம் செய்வதற்காக அவசரப்பட்டு உங்கள் நாவை அசைக்காதீர்கள். அதை (உங்கள் மனத்தில்) இருத்தி, (நீங்கள்) ஓதும்படி செய்வது எமது பொறுப்பாகும்” எனும் (75:16,17) வசனங்களை அல்லாஹ் அருளினான்.
அதாவது “உங்கள் நெஞ்சத்தில் பதியச் செய்வதும் அதை உங்கள் நாவால் ஓதும்படி செய்வதும் எமது பொறுப்பாகும்” என்று இறைவன் கூறினான். மேலும் “நாம் இதனை ஓதும்போது, நீங்கள் பின்தொடர்ந்து ஓதுங்கள்” எனும் (75:18ஆவது) வசனத்தையும் அருளினான். அதாவது “நாம் (வானவர் மூலம் வேதவசனங்களை) அருளும்போது, அதைக் கவனத்துடன் கேளுங்கள்” என்று கூறினான். பின்னர் “அதை விளக்குவதும் எமது பொறுப்பாகும்” எனும் (75:19ஆவது) வசனத்தையும் அருளினான். அதாவது “உங்கள் நாவினால் அதை(ப் பிறருக்கு) விளக்கித் தரும்படி உங்களை (ஆயத்தம்) செய்வது நமது பொறுப்பாகும்” என்று கூறினான்.
(இந்த வசனங்கள் அருளப்பெற்ற) பின்னர் தம்மிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் (வஹீ கொண்டு) வரும்போது நபி (ஸல்) தலையைத் தாழ்த்தி (அருளப்படுவதை அமைதியாகக்) கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஜிப்ரீல் (அலை) சென்ற பின்னர் அல்லாஹ் வாக்களித்தபடி நபி (ஸல்) அவற்றை ஓதினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)